பூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


இப்புறம் அல்லது

அப்புறம்

ஓரளவு சாய்ந்து போகும்,

தாரணியின் அச்சு!

சூரியனைச் சுற்றும்

நீள்வட்டப் பாதை சுருங்கி

சீர்வட்டம் ஆகும்!

காலநிலை அலங் கோலமாகி

கனல் வீங்கி

கடல்தடாகம் பெருகி எழும்! அன்றி

பனிமயம் மூண்டு

கடல்மட்டம் தணிந்துவிடும்!

‘பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறை அரிப்பும், பனிமலைச் சரிப்பும் பூதளத்தின் மேனியைப் பேராற்றலுடன் கோரமாக்கி அழியாத வரலாற்றுச் சான்றுகளாய்க் கற்பாறைகளில் செதுக்கி வைத்திருக்கின்றன! பூகோளத்தில் தோன்றிய பனியுகத்தின் ஆட்சியின் போது பனித்தட்டுகள் [Ice Sheets] பூதளக் கண்டங்களில் பதித்து விட்டுப் போன, பூர்வீக அடையாளச் சின்னங்கள் அவை ‘.

பால் ஃபிரிக்கென்ஸ்

1997 இல் சைபீரியாவில் வாழும் டோல்கன் மான் வேட்டையாடிகள் [Dolgan Reindeer Herders] பூமியில் துருத்திக் கொண்டிருந்த இரட்டைக் கொம்புகளைக் கண்டுபிடித்துப் பிரென்ச் பூதளத் தேடுநர், பெர்னார்டு பியூகிஸ் [Explorer, Bernard Buigues] அவர்களிடம் காட்டினர். பூர்வீக மாம்மத் முழு உடம்பைக் காணப் பாடுபட்ட பெர்னார்டு, டோல்கன் இனத்தவர் உதவியால் 1999 ஆண்டில் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜர்காவ் மாம்மத்தைப் [Jarkov Mammoth] பனிக்காட்டில் தோண்டி எடுத்து அகில நாட்டுக் காட்சியை ஏற்பாடு செய்தார்.

முன்னுரை: படகு செல்லும் கடல்போல், மூச்சுவிடும் காற்றுபோல் பனிமயமும் (Glaciers) மனிதரின் எதிர்காலத்துக்கு வேண்டிய முக்கிய இயற்கை அமைப்புகளில் ஒன்றே! 10,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்ததுபோல், பூகோளத்தின் சூழ்வெளிக் காலநிலை உஷ்ணம் பெருமளவு தணிந்தால், அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகிய கண்டங்களின் பனிமண்டலம் பேரளவு நீட்சியாகிக் கடல்மட்டம் குன்றி, கோர விளைவுகள் உண்டாகும்! அல்லது எதிர்மறையாக அந்த பனிபாறைகள் வெப்பத்தால் நீராக உருகினால், கடல்மட்டம் உயர்ந்து உலகக் கண்டங்களின் கடற்கரைப் பகுதிகள் மூழ்கிப் பெருஞ் சேதங்கள் விளையும். பேரழிவு தரவல்ல பனிமயச் சூழ்வெளியால், நலமடையும் பயன்களும் உள்ளன. உலகின் பெருநதிகளான அமேஸான், ரோன், கொலம்பியா, கங்கை, பிரமபுத்திரா, சிந்து அனைத்தும் பனிமயச் சிகரத்திலிருந்தே உற்பத்தியாகின்றன. உலகின் முக்கால் பங்கு தூயச் சுவைநீர் [சுமார் 7 மில்லியன் கியூபிக் மைல் கொள்ளளவு] பனிப்பாறைகளில்தான் சேமித்து வைக்கப்பட்டுள்ளன! இந்த சேமிப்புத் தேக்கம் சுமார் 60 வருட மழைப் பொழிவை உலகமெங்கும் பெய்யும் அளவுக்குச் சமமானது என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள்.

பூகோளத்தின் பத்தில் ஒரு பகுதிப் பரப்பை, பனிமயப் பாறைகள் மூடியுள்ளன! ஆயினும் சமீப காலத்திய பனிமய யுகத்தின் போது, பனித்தட்டுகள் (Ice Sheets) பூமியின் பேரளவுப் பகுதியை ஆக்கிரமித்திருந்தன. தற்காலத்தின் பாறைச் சிற்பங்களையும், நிலங்களின் கோலத்தையும் செதுக்கியவை, சமீபத்திய பனியுகத்தின் அரிப்பு, சரிப்பு விளைவுகளே! முக்கியமாக மூன்றுவிதப் பனிமயப் பாறைகள் இருப்பதாக, பூதள நூல்கள் கூறுகின்றன. முதலாவது: பள்ளத்தாக்குப் பனிமயப் பாறைகள் (Valley Glaciers). மலைப் பகுதிகளில் பனிப் படுகைமேல் படரும் பள்ளத்தாக்குப் பனிமண்டலங்கள் இவை. இரண்டாவது: மலையடிவாரப் பனிமயப் பாறைகள் (Piedmont Glaciers). பல்வேறு பனிமயப் பகுதிகள் இணைந்து, மலை அடிவாரத்தில் படியும் கீழ்த்தள பனிமண்டலம். மூன்றாவது: பனிமூடிகள் அல்லது பனித்தட்டுகள் (Ice Caps or Sheets). பனிமயச் சுரப்பியிலிருந்து பனிமண்டலம் தட்டுத் தட்டாய் பரவிப் பக்கவாட்டில் நீட்சியடைவது. பனிக் கட்டிகளில் அகப்படும் கடூரமான அரிப்பாற்றல் கொண்ட துணுக்குகள், U-வடிவுள்ள பள்ளத்தாக்குகளை உண்டாக்குபவை.

அங்குமிங்கும் திசை சாயும் பூகோளத்தின் அச்சு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மீண்டும், மீண்டும் மாறிச் சீரொழுங்கில் நிலவாத பூமியின் காலநிலை படிப்படியாக வேறுபட்டு வருகிறது. 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பரிதியை வலம்வரும் பூமியின் சுற்றுவீதி [Earth ‘s Orbit] ஏறக்குறைய வட்ட வீதிக்கும், சற்று நீள்வட்ட வீதிக்கும் [Nearly Perfect Circle & Pronounced Ellipse] இடைப்பட்ட வீதியாக மாறுபடுகிறது. சுற்றுவீதி நீள்வட்டமாகும் போது, பூகோளக் காலநிலை ஒருபுறத்தில் மிகக் குளிராகவும், மறுபுறத்தில் மிகக் கனலாகவும் உச்சநிலைக்கு மாறுபடும். அத்துடன் பூகோளத்தின் சுற்று அச்சு [Earth ‘s Axis] மீளும் மாற்றத்தில் [Cyclic Changes] உச்சத் திரிவு 24.4 டிகிரிக் கோணம், அதமத் திரிவு 21.8 டிகிரிக் கோணம் [Maximum & Minimum Tilts] ஆகிய அளவுகளில் இப்புறம் அன்றி அப்புறம் சாய்ந்து வருகிறது. ஒவ்வொரு 22,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியின் அச்சு உச்சச் சரிவுக் கோணத்தில் சாய்ந்து, துருவப் பிரதேசங்கள் கூதல் காலத்தில் பரிதிக்கு அப்பால் நகர்ந்து தட்ப, வெப்பக் காலநிலைகள் உச்ச எல்லைக்கு மாறுகின்றன. அத்தகைய உச்ச விளைவுகள் சேர்ந்து கொண்டு, 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சமீபத்திய பனியுகம் உண்டாகிக் கோர முடிவுகளை ஏற்பத்தியுள்ளது!

பயங்கரப் பனியுகம் தோன்றிய பிளைஸ்டோசீன் காலம்!

4.6 பில்லியன் ஆண்டுகளாக பூகோளம் அடுத்தடுத்து மாபெரும் மாறுதல்களைப் பல முறைகள் அடைந்து வந்துள்ளது. நெடுங்காலமாகத் துருவப் பிரதேசங்கள் கூட பனிமண்டலம் சிறிதும் படியாமல், கனல் தளங்களாக இருந்திருக்கின்றன! சில சமயங்களில் பூகோளத்தின் மூன்றில் ஒரு பகுதிப் பரப்பில் பனிமயம் மேவி யிருந்தது! சமீபத்திய பனியுகம் 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி, சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் முடிந்திருக்கிறது! இந்தப் பனியுகம் ‘பிளைஸ்டோசீன் காலம் ‘ [Pleistocene Epoch] என்று பூதளவாதிகளால் குறிப்பிடப்படுகிறது. 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பனிமயத்தின் உச்சக் கட்டத்தில் ஐரோப்பா, வட அமெரிக்கா இரண்டின் பெரும்பான்மையான பகுதிகள் பனிமயம் கொண்டதாக இருந்தன. வட அமெரிக்காவில் தற்போதிருக்கும் மிஸ்ஸெளரி நதித்தீரம் வரை, அக்காலப் பனிமண்டலம் சூழ்ந்திருந்தது!

2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘மாம்மத் ‘ [Mammoth] எனப்படும் பண்டை காலத்து யானைகள் முதன்முதலில் எளிய குளிர்ப் பகுதியான ஐரோப்பாவை வந்தடைந்தன. பிறகு அடுத்த மில்லியன் ஆண்டுகளில் உஷ்ணம் படிப்படியாகக் குன்றி, கூதற்காலம் நீண்டு குளிர் கடூரமடைந்து பனிமயச் சூழ்நிலை மேவியது. ஆஃப்பிரிக்கா கண்டமும் அக்காலப் பனிமயச் சூழ்நிலையில் சிக்கிக் கொண்டது. அப்போது ஐரோப்பா, ஆஃப்பிரிக்கா கண்டங்களின் கடுங்குளிரைத் தாங்கிக் கொண்ட மாம்மத்துகள், மாறும் காலநிலைக்கு ஏற்ப தடித்த உல்லன் உரோமத் தோலைப் பெற்றுத் தம்மைத் தகுதியாக்கிப் பிழைத்துக் கொண்டன. ஆனால் மிகவும் கடுமையான பிளைஸ்டோசீன் காலத்தில் தடித்த உல் படைத்த மாம்மத்துகள் கூட பிழைத்து வாழ முடியவில்லை! மிக்க உல்லன் கொண்ட ரைனோசெராஸ் [Woolly Rhinoceroses] மற்றும் பிளைஸ்டோசீன் காலத்துப் பூத விலங்கினம் எதுவும் பிழைத்திருக்க முடியவில்லை. அவை யாவும் பனிமண்டலப் பிரதேசத்திற்குத் தெற்கே உள்ள பச்சைப் புல்லும், பயிரினமும் நிரம்பிய சமவெளிப் பகுதிகளுக்கு ஓடிவிட்டன.

மீண்டும் மீண்டும் தோன்றிய பனியுகங்கள்

பில்லியன் ஆண்டுகளாக பூகம்பம், எரிமலை, கடற்தட்டுப் பிறழ்ச்சி [Plate Tectonics] போன்ற சூழ்வெளி மாறுதல்களால் பூமியில் உண்டான கடூரமான தளப்பரப்புகளை அரமாய் அறுக்கும் பனிப்பாறை, மழை, நீரோட்டம், வாயு ஆகிய அரிப்பு விசைகளும் சிற்பிபோல் செதுக்கி மகத்தான தோற்றமுள்ள மலைச் சிற்பங்களை ஆக்கியுள்ளன. பனிமயத் திரட்சிகள் [Glaciers] அரைத்துப் பெரும் பள்ளத்தாக்குகளைத் தோண்டியுள்ளன. அமெரிக்காவின் மகத்தான செங்குத்துப் பாறைத் துளைப்புகள் போல [Grand Canyon], நதி ஓட்டங்கள் ஆழமான குழிப்பிளவுகளை [Gorges] ஏற்படுத்தி விட்டன. அதே சமயத்தில் கடல் அலைகளும், சுனாமிகளும், சூறாவளிகளும் அடித்து, அடித்து கடற்கரைகளை உருமாற்றியும் வந்துள்ளன.

பண்டைக் காலநிலை மாறுபாடுகளைப் பற்றி ஆராயும் போது, பூகோளம் சீரான கால இடைவெளியில் பனிமய மாறுதல் [Periodic Ice Ages] அடைந்து, ஆஃப்பிரிக்கா கண்டம் போன்ற பூமத்திய ரேகை அரங்குகளின் [Equatorial Regions] வேனிற் தளங்களிலும் பனித்தொப்பிகள் மூடின. அந்தக் காலநிலைக் கோளாறுகளே, நாம் இன்று வாழும் பூமியாக மாற்றப் பட்டுள்ளது. சமீபத்திய பனியுகம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கா, வட ஐரோப்பியா, ஆசியா ஆகிய கண்டங்களில் தோன்றியது! பல்வேறு பனியுகங்கள் தோன்றிய காலத்தின் வயதுகளைத் தெரிந்து கொள்ள, துருவப் பனித்தொப்பியைப் [Polar Ice Cap] பல அடுக்கு ஆழங்களில் மாதிரிகளைத் தோண்டி எடுக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் துருவப் பிரதேசங்களில் புத்தடுக்குப் பனித்தளம் உண்டாகி, ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கடுக்காகப் படிகிறது. பல்வேறு காலப் பனியுகங்களில் படிந்த அவ்விதப் பனித்தளங்கள் மிகவும் கடினமாகவும், தடிப்பாகவும் இறுகிப் புதைக்கப் பட்டுள்ளன. பூகோளத்தில் கடந்த 4 பில்லியன் ஆண்டுகளில் அடுத்தடுத்துத் தோன்றிய பனியுகங்களே, இடையில் வந்த வெப்ப யுகங்களை விட நீண்ட காலம் தங்கி ஆக்கிரமித்திருந்ததாக அறியப்படுகிறது.

பூகோளத்தின் தட்ப, வெப்ப நிலை மாறுபாடுகளுக்குப் பரிதியைச் சுற்றிவரும் நீள்வட்டச் சுழல்வீதி நீண்டு, சுருங்கி அடுத்தடுத்து மாறுவது ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. அந்த பூகோள மாடலைப் பின்பற்றினால், பூமியின் சராசரி உஷ்ணம் தற்போது மிகுந்து செல்லும் போக்கு தெரிகின்றது. பூகோள வெப்ப வீக்கமும் [Global Warming], கண்ணாடி மாளிகை விளைவும் [Greenhouse Effect] சூழ்வெளி உஷ்ண வீக்கத்திற்குக் காரணங்களாகக் கருதப் பட்டாலும், மெய்யான இயற்கைக் காரணமும் ஒன்று இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

பனிமயச் சூழ்வெளியை எந்நிகழ்ச்சி படைக்கிறது ?

பூகோளத்தின் வடிவத்தை மீண்டும், மீண்டும் மாற்றிய பனியுகத் தோற்றங்கள் எவ்விதம் நிகழ்கின்றன என்பது பூதளவாதிகளுக்குப் புதிராகவும், சிக்கலான விஞ்ஞானமாகவும் உள்ளது. ஆனால் பரிதியைச் சுற்றி வரும் பூமியின் சுழல்வீதியில் [Earth ‘s Orbits] ஏற்படும் மாறுதல்கள் அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்பது மட்டும் விஞ்ஞானிகளுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. கடந்த 100,000 ஆண்டுகளாக, பூமியின் சுற்றுவீதி மாறுபட்டு, ஒருபாதிக் கோளத்தில் மறுபாதியை விட வெப்பம் தணிந்து, கூதற் காலத்தில் உஷ்ணம் மிகவும் குளிர்ந்து போனது. மேலும் பூமியின் அச்சும் [Earth ‘s Axis] இங்குமங்கும் சற்று சாய்ந்து வருகிறது என்றும் அறியப்படுகிறது. அதனால் பூதளத்தின் ஒரு பகுதி சில சமயங்களில் பரிதியை விட்டு அப்பால் நகர்கிறது. குளிர்காலப் பனிமண்டலம் சில பகுதிகளில் தடிப்பான போர்வையாகப் படிந்து, வேனிற் காலம் வந்தபின் அது முழுவதும் உருகி விடுவதில்லை. மேலும் பூதளத்தில் படிந்த பனித்தட்டுகள் அடுத்து நீண்டு பரவி, நெடுங்காலம் தங்கி விடுகின்றன. அதற்குக் காரணம்: பனித்தட்டுகள் மீது படும் வேனிற்காலப் பரிதியின் ஒளிக்கனல், வெற்றுநிலம் போல் உறிஞ்சப் படாமல் பிரதிபலித்து மீண்டும் விண்வெளியில் அனுப்பப் படுகிறது. அத்துடன் பனிக்கட்டிகள் பிரதிபலிக்கும் வெப்பமும், பூமியின் சூழ்வெளியைச் சூடாக்க முடிவதில்லை!

சைபீரியாவில் தோண்டி எடுத்த மாம்மத் யானை

1997 இல் சைபீரியாவில் வாழும் டோல்கன் மான் வேட்டையாடிகள் [Dolgan Reindeer Herders] பூமியில் துருத்திக் கொண்டிருந்த இரட்டைக் கொம்புகளைக் கண்டுபிடித்துப் பிரென்ச் பூதளத் தேடுநர், பெர்னார்டு பியூகிஸ் [Explorer, Bernard Buigues] என்பவரிடம் காட்டினர்கள். பூர்வீக மாம்மத் முழு உடம்பைக் காணப் பாடுபட்ட பெர்னார்டு, டோல்கன் இனத்தவர் உதவியால் 1999 ஆண்டில் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜர்காவ் மாம்மத்தைப் [Jarkov Mammoth] பனிக்காட்டில் தோண்டி எடுத்து அகில நாட்டுக் காட்சிக்கு ஏற்பாடு செய்தார். வட சைபீரியாவில் வாழும் டோல்கன் இனத்தவர் ரெயின்டார் மான் மந்தைகளை வேட்டை யாடி உண்ணும் பனிமண்டல வாசிகள். அவர்களது பனிச் சறுக்கிகளை இழுத்துச் செல்லவும், ரெயின்டார் மான்களே பயன்படுகின்றன. சைபீரியா பனிக்காடுகளில் மாம்மத்தின் கொம்புகள் பல கிடைக்கின்றன. அவர்கள் மாம்மத்தின் தந்தங்களில் [Mammoth Ivory] கருவிகள், பொத்தான்கள், பொம்மைகள் ஆகியவை செய்தும், தந்தங்களைப் பிறருக்கு விற்றும் பணம் திரட்டி, தமக்கு வேண்டிய மருந்து, கெரோசின் ஆகியவற்றை வாங்கி வருகிறார்கள்.

1999 இல் பனிப்பாறை ஆழத்தில் தோண்டி எடுக்கப்பட்ட ஜர்காவ் மாம்மத் யானையை ஹெலிக்காப்டர் மூலம் தூக்கி, கடங்கா நகரின் பனிக் குகைக்குக் [Khatanga Town Cave] கொண்டு வந்தார்கள். அப்பணிக்கு இரும்புத் துளைக் கருவிகளைக் [Jackhammers] கொண்டு 23 டன் கடின பனிப்பாறையைப் பிளக்க வேண்டியதாயிற்று! பிறகு குழிக்குள் இரும்புத் தொட்டி ஒன்றைக் கட்டி, பனிமூடிய மாம்மத் யானை எடுக்கப்பட்டு, சுமார் 185 மைல் தூரத்தில் உள்ள கடங்கா நகருக்கு ஹெலிக்காப்டர் தூக்கி வந்தது! 2000 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் விஞ்ஞானிகள் பல கூந்தல் உலர்த்திகளைப் [Hair Dryers] பயன்படுத்தி, ஏறக்குறைய ஓராண்டு காலமாக மாம்மத் இருக்கும் பனிக்கட்டியை உருக்கினார்கள். 20,000 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாம்மத் யானையின் உடற்தோல் மீண்டும் காற்று வெளிக்குக் காட்சி யானது!

முதன்முதலில் முழுவடிவ சைபீரிய ஜர்காவ் மாம்மத் யானை 2000 ஆண்டில் விஞ்ஞானிகளின் ஆய்வுக்குக் கைவசப் பட்டது. யானையுடன் ஒட்டியுள்ள பண்டை காலத்திய புல், பூண்டு, புழு, பூச்சிகள் எவையேனும் உள்ளனவா என்று சோதிக்கப் பட்டது! சைபீரிய கடுங்குளிரில் பாதுகாப்பாகப் புதைந்திருந்த பண்டை காலத்து மாம்மத்தின் இரத்த செல்கள் [Blood Cells] உளவுக்குக் கிடைத்தன. யானையின் தசையோடு, எலும்பும் கிடைத்து அதன் ‘டியென்னே ‘ மாதிரிகளும் [DNA Samples] ஆய்வுக்குப் பயன்பட்டன. மாம்மத்தின் ரோமங்கள் ரெயின்டார் மான்கள் பெற்றுள்ளது போல், ஒவ்வொரு உடற்பகுதியிலும் வெவ்வேறு வித ரோமங்கள் உள்ளனவா வென்று சோதிக்கப் பட்டது! தசைப் பாகங்கள், அதன் இருதயம், இரத்தக் குழாய்கள், உள்ளுடம்புப் பாகங்கள் எவ்வித ஆரோக்கியத்தில் இருந்தன வென்றும், மாம்மத் எவ்விதம் வாழ்ந்தது என்றும் அறியப்பட்டன. மாம்மத் தின்ற இறுதி உணவுப் பயிர்கள் என்ன, எத்தனை விதமான பயிர்களை உண்டது, பாரஸைட்ஸ் [Parasites] எவையேனும் இருக்கச் சான்றுகள் உள்ளனவா போன்றவை சோதிக்கப் பட்டன. மாம்மத்தின் பற்களை ஆராய்ந்த போது, அதன் வயது 47 என்று அறியப்பட்டது! புல்லைத் தேடித் தேடி, மாம்மத்தின் கொம்புகளின் முனை மொட்டையாகத் தேய்ந்து போயிருந்தது. மாம்மத் பனிப் பாறைகளைக் கொம்புகளால் கீறி, உட்குழிகளைக் கண்டுபிடித்து, தங்கியுள்ள நீரைக் குடிக்க முயன்றதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

(தொடரும்)

தகவல்கள்

1. Atlantic: Driving Continents Apart. Pacific The Vanishing Ocean -Reader ‘s Digest Atlas of the World [1987]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

8. Continental Drift, Geology & Oceanography. [Several Internet Articles]

9. Everyday Geography By: Kevin McKinney (1993)

10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

16 Physical Earth By: National Geographic Society [1998]

17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

18 National Geographic Picture Atlas of our World [1990]

19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

20 The Evolution of the Sumatran Earthquake Fault System By: Andy McCarthy. [July 9, 2002]

21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

25 Reader ‘s Digest Publication: The Living Earth Book of Deserts By: Susan Arritt [1993]

26 Physical Earth, By: National Geographic Society, Millennium in Maps [1998]

27 Birth of the Himalaya By: Roger Bilham. [NOVA PBS Home (Nov 2000)]

28 Rodinia Web Site: http://www.peripatus.gen.nz/paleontology/Rodinia.html (Jan 27, 2005)

29 Historical Geology Rodinia & Pannotia By: Erin McKenna (Spring 2005)

30 Rodinia & Pannotia By: Christopher Scotese (2000)

31 The Origin of Life -Plants & Animals By The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

32 The New American Desk Encyclopedia (1989)

33 Geographical Atlas of the World, Tiger Books International [1993]

34 Ice Age Mammoth By: Barbara Hehner [2001]

(Mammoth Picture Credits: Mark Hallet)

35 Atlas of the World, Helicon Publication [2001]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 30, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா