புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

என்.செல்வராஜா,நூலகவியலாளர், லண்டன்.


மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் –
இது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் வரிகள். இதை ஆண்டாண்டு காலமாக மேடைகளிலும், கட்டுரைகளிலும் கேட்டும் வாசித்தும் பழகிவிட்டோம். இக்குரல் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து உலகின் பல்வேறு திசைகளுக்கும் பறந்துவிட்ட பின்னர் சற்றே ஓங்கி ஒலிப்பதாக உணரமுடிகின்றது. புலம்பெயர்ந்து சென்ற பறவைகளை நாடிவரும் ஊர்க்குருவிகள் கூடுதிரும்பியதும் அவர்களின் வாயிலும் பாரதியின் இவ்வரிகளே எளிதில் பதிவாகி விடுகின்றது.

பாரதி உண்மையில் தமிழ் சாகும் என்றுதான் சொன்னானா? இல்லையே. யாரோ ஒரு பேதை சொன்னவொரு பொல்லாத வார்த்தையை அல்லவா தன் கவிதை வரிகளுக்கிடையில் கோபத்துடன் குறிப்பிடுகின்றான்! கவிதையின் விரிவைப் பாருங்கள்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் -இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்தவசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

இது பாரதியின் பாடலின் விரிவு. மெல்லத் தமிழ் இனிச் சாகுமா வாழுமா என்ற பட்டி மன்றம் நடத்துவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற பாரதியின் மேற்குறிப்பிட்ட பாடலின் இறுதி இரு வரிகளை மெய்ப்பிக்கும்வண்ணம் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை ஓரளவாவது வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதே கட்டுரையாளரின் நோக்கமாகும்.

புலம்பெயர்ந்த முதற்கட்ட ஈழத் தமிழர்களின் வரலாற்றை 1870களில் இருந்து கணிக்கிறார்கள். அது மலாயாப் புலப்பெயர்வுக்கான காலம். யாழ்ப்பாணத்திலிருந்து மலேயாவுக்குப் பொருளாதார நோக்கில் புலம்பெயர்ந்த நிகழ்வினையே நாம் ஈழத்தமிழரின் முதலாவது புலப்பெயர்வாகக் கருதுகின்றோம். 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்புலப்பெயர்வு இரண்டாவது உலகமகா யுத்தத்துடன் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகின்றது. அங்கு சென்று வாழ்ந்த எம்மவர்களின் இலக்கியப் பணிபற்றித் தனியானதொரு கட்டுரையில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

(பார்க்க: மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு. வல்லினம்;, ஜுன், 2007. இதழ் 1, முயயயெட Pரடிடiஉயவழைnஇ 16இ துயடயn 7ஃ5இ வுயஅயn ளுசi புழஅடியமஇ 68100 டீயவர ஊயஎநளஇ ளுநடயபெழசஇ ஆயடயலளயை, ப. 22-27. ஆசிரியர்;: ம.நவீன், துணை ஆசிரியர்: பா.அ.சிவம்.
மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு. தமிழர் தகவல் 14ஆவது ஆண்டு மலர்;, P.ழு.டீழஒ 3இ ளுவயவழைn கு.வுழசழவெழஇ ழுவெயசழைஇ ஆ4லு 2டுயுஇ ஊயயெனய) பெப்ரவரி 2005, ப.124-129. ஆசிரியர்: எஸ். திருச்செல்வம்;;.)

இலங்கையில் இனப்படுகொலையின் விரிவாக்கத்தின்போதும் அதைத் தொடர்ந்து நிலவிய போர்க்காலச் சூழலிலும் புலம்பெயர்ந்த இரண்டாம் கட்ட ஈழத் தமிழர்களின் வரலாற்றை 1980களில் இருந்து கணிக்கிறார்கள். இக்கட்டுரையின் விரிவஞ்சி, இரண்டாம் கட்டப் புலப்பெயர்வின்போது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் தமிழியல் பங்களிப்பினையே இக்கட்டுரை கவனத்துக்கெடுத்துள்ளது.

அகராதிகள் ஒரு மொழியின் செழுமையையும் வளமையையும் வேற்றுமொழியாளர்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம் தாய்மொழியை உலகளாவிப் பரவ வழிசெய்கின்றது. தமிழ்மொழியை பரந்த அளவில் உலகிற்கு அறிமுகப்படுத்திய முதலாவது ஒப்பீட்டு மொழியியல் அகராதி என்ற வகையில் 1741-1811 காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த ஜேர்மனியரான Pநவநச ளுலஅழn Pயடடயள பீட்டர் சைமன் பலாஸ் அவர்கள் ரஷ்யப் பேரரசியான 2வது கத்தரீனின் ஆணைக்குட்பட்டுத் தயாரித்த பன்மொழி ஒப்பீட்டு அகராதியைக் குறிப்பிடலாம். 1786இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் வெளியான இந்த உலக மொழிகளின் ஒப்பீட்டு அகராதியின் முதலாவது தொகுதியில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் 1505-1656 காலப்பகுதியில் போர்த்துக்கேயரின் வருகையுடன் தமிழ் சிங்கள மக்களுடனான அவர்களது நிர்வாகத்தொடர்பிற்கும் மதப்பரப்புகைக்கும் மொழி இடைஞ்சலாக இருந்துள்ளது. இதை நிவர்த்தி செய்ய அவர்கள் பிராந்திய மொழிகளைக் கற்க வேண்டிய தேவை இருந்தது. கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இக்காலகட்டத்தில் சேவையாற்றிய இக்னேஷியோ புரூநோ என்ற மொழியியலாளர் 1666இல் யாழ்ப்பாணத்தில் தமிழ் சொற்றொகுதி என்ற வுயஅடை எழஉயடிரடயசல யினை வெளியிட்டிருந்தார்.

யுடயளவயசை கநசபரளழn என்பவர் 1878இல் கொழும்பில் வெளியிட்ட ஒரு தமிழ் சொற்றொகுதி இங்கே வா என்பதாகும். இதன் ஆங்கில உபதலைப்பு வுhந ளுinயெனரசயi’ள Pழஉமநவ வயஅடை பரனைந என்பதாகும். பெரும்பாலும் போர்த்துக்கேய வழியாக தமிழில் புகுந்த சொற்களுடன் வெளிவந்த இந்தச் சிறுநூலில் கடதாசி, பேனா, தீந்தை போன்ற சொற்கள் உள்நுழைந்திருந்தன.

1656-1802க்கு இடைப்பட்ட டச்சுக் காரரின் ஆதிக்கத்திலும் தமிழ்ச்சொற்தொகுதிகள் வளர்ந்தன.துயஉழஅந புழnஉயடஎநள என்ற மிசனரிப் போதகரால் எழுதப்பட்ட Pழசவரபரநளந வயஅடை யனெ ளinhயடய எழஉயடிரடயசல என்ற அகராதிநூலும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1802க்கும் 1948க்கும் இடைப்பட்ட பிரிட்டிஷ் காலகட்டத்தில் தான் இலங்கையில் தமிழ் அகராதிகள் செழித்து வளர்ந்தன என்பது மொழியியலாளரின் ஏகோபித்த கருத்தாகும். பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை ஆங்கிலம் பேசும் மிசனரிகளுக்குத் திறந்து விட்ப்பட்டது. 1812இல் பப்டிஸ்ட் மிசன் தன் மா போதனைகளை ஆரம்பித்தது. அதையடுத்து வெஸ்லியன் மிஷன் 1814இலும் அமெரிக்க மிஷன் 1818இலும் தம் மதப்பரப்பலை ஆரம்பித்தன. இவற்றின் தேவைகளுக்காக 1820இல் யாழ்ப்பாணத்தில் தமிழ் அச்சகம் தாபிக்கப்பட்டது. அதையடுத்து தமிழ் அகராதிகள் பரவலாகப் பிரசுரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

இலங்கைக்கு அப்பால் மலேஷியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா, பர்மா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, ரஷ்யா, சுவீடன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் தமிழ் மொழி அகராதிகள் அவ்வந் நாட்டு மொழியுடன் இணைந்து வெளியிடப்பட்டுவந்துள்ளன. இவற்றில் ஐரோப்பிய நாடுகளில் வெளிவந்த அகராதிகளில் பெரும்பான்மையானவை, ஈழத்தமிழரின் இடப்பெயர்வின் பின்னர் செழித்த வந்ததை இந்த அகராதிகளின் வெளியீட்டு வருடங்களின் மூலம் அறிய முடிகின்றது. இப்படியாக புகலிடங்களில் வெளிவந்த அகராதிகளில், குறிப்பாக ஜேர்மனியில் வெளிவந்த சில அகராதிகள் பற்றி முதலில் பார்ப்போம்;.

ஜேர்மனியில் வெளிவந்த முதல் தமிழ்மொழி அகராதியாக மொழி வழிகாட்டியும் ஜேர்மன்-தமிழ் அகராதியும் என்ற நூலைக் குறிப்பிடலாம். இது பொன் நகரில் 1988இல் வெளியிடப்பட்டள்ளது. ஜேர்மன் தொழிலாளர் நலன்புரிச் சங்கத்தின் வாயிலாக இது வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக மார்ட்டின் ஹென்னிங் அவர்கள் 1989இல் பொன் நகரில் வெளியிட்ட தமிழ் ஆங்கிலம் ஜேர்மன், ஜேர்மன் ஆங்கிலம் தமிழ் சொல்லகராதியைக் குறிப்பிடலாம். இது ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம், சுவிஸ் செஞ்சிலுவைச்சங்கத்தின் ஆதரவுடன் வெளியிடப்பட்டது. மூன்றாவதாக ஜென்ஸ் நெல்சன் அவர்களின் புநசஅயn கழச யடட ழஉஉயளழைளெ என்ற ஜேர்மன் தமிழ் மொழிநூலைக் குறிப்பிடலாம். இது புரஅஅநச டியஉh என்ற இடத்திலிருந்து 1993இல் வெளியிடப்பட்டது. இவை ஈழத்தமிழர்களின் படைப்புக்களல்ல. புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக – தமிழுக்காக ஜேர்மானியர்கள் வெளியிட்டவை.

அகராதிக்கலையில் புகலிடத்தில் வாழும் ஈழத்தமிழரின் பங்களிப்பைப் பற்றிய தேடலில் ஈடுபடுவோரால் தவிர்க்கப்படமுடியாதவர் நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் ஈழத்துத் தமிழரான கனகசபாபதி சரவணபவான் அவர்கள். தனிஒருவராக நின்று 1992 முதல் இன்று வரை ஐந்து மொழியியல் அகராதிகளை இவர் தமிழியல் உலகுக்குத் தந்துள்ளார். உயிரிலும் உணர்விலும் அகராதிக்கலையையே மூச்சாகக் கொண்டிருக்கும் ஒருவராலேயே இத்தகைய மிகப்பெரும் பங்களிப்பினை மொழியியலுக்கு வழங்க முடியும். கனகசபாபதி சரவணபவன் 1980களில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். 1992இல் முதலாவது அகராதியை 12 வருடகாலத்துக்குள் அம்மொழியில் தேர்ச்சி பெற்று வெளியிட்டுள்ளார். இதற்கு உதவியாக இவர் கற்றுத்தேறிய பேராதனை பல்கலைக்கழக வளாகத்தின் விரிவுரையாளர்களும், இவர் ஜேர்மனியில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய கிளிவ் நகர எல்லைப் பாதுகாப்பு குற்றத்தடுப்புப் பணியகத்தின் ஊழியர்களும் இருந்துள்ளனர்.

1992 இல் இவரது முதலாவது அகராதியான ஜேர்மன் தமிழ் அகராதி தமிழகத்தில் காந்தளகத்தின் மூலம் அச்சிடப்பட்டு திருக்கோணமலை வெளியீட்டாளர்கள் என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது பதிப்பு 1995இல் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1994இல் தமிழ்-தமிழ் ஜேர்மன் அகராதி அதே வெளியீட்டகத்தினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாவது அகராதி நூல் டச்சு தமிழ் தமிழ் டச்சு அகராதியாகும். டச்சு மொழி ஆங்கில ஜேர்மன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததும் நெதர்லாந்து, வட பெல்ஜியம் தென்னாப்பிரிக்க நாடுகளில் பரவலாகப் பேசப்படுபவை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கந்தோர் கேத்தல் போஞ்சி போன்ற சொற்கள் டச்சுச் சொற்களே. தமிழகத்திலிருந்து குமரன் பதிப்பக உரிமையாளர் செ.கணேசலிங்கம் அவர்களின் பொறுப்பில் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தது. இவரது நான்காவது நூலான ஜேர்மன் தமிழ் அகராதி 1008 பக்கங்களில் 2000ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. முன்னைய மூன்று நூல்களையும் விட இருமடங்கு பக்கங்களுடன், கலைஞர் மு.கருணாநிதியின் அணிந்துரையுடன் இது வெளியாகியுள்ளது.

சரவணபவனின் அகராதிப் பணிகளுள் உச்சத்தைத் தொடுவதாக நான் கருதுவது மிக அண்மைக்காலத்தில் வெளிவந்த அவரது பாரிய ஜேர்மன் அகராதியாகும். இது 2302 பக்கம் கொண்ட பாரியதொரு தொகுப்பு. சுமார் ஒரு லட்சம் சொற்களுக்கான பொருள் விளக்கங்கள், 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்க வாக்கியங்கள் மாணவர்களுக்கான பயனுள்ள பின்னிணைப்புகள் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இந்தப் பாரிய அகராதியை திருக்கோணமலை வெளியீட்டாளர்கள் என்ற தனது வெளியீட்டு நிறுவனத்தின்மூலம் வெளியிட்டுள்ளார். 10 சென்ரிமீட்டர் தடிப்புள்ள இந்த நூல் திரு சரவணபவான் இதுவரை வெளியிட்ட அகராதிகளுள் பெரும்படைப்பாக உள்ளது.

டெனிஷ்-தமிழ், தமிழ்-டெனிஷ் சிறு அகராதி (னுயளெம-வுயஅடைளமஇ வுயஅடைளம-னுயளெம அini ழுசனடிழப. டுழபெ குழப) ஒன்றினையும் அண்மையில் டென்மார்க் நாட்டில் நான் பார்வையிட முடிந்தது. கிருஷ்ணநிதி கிருஷ்ணபிள்ளை, நற்குணராஜா குழந்தை, Pநச Pடைநமதயநசஇ கண்ணதாஸ் இராமலிங்கம், றுடைட ளுரவவநசஇ சிவபாதசுந்தரம் வேலுப்பிள்ளை என்று பலர் சேர்ந்து இதைத் தயாரித்திருந்தார்கள்.

ஸ்கன்டிநேவிய நாடுகளுள் ஒன்றான டென்மார்க் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்பவர் எழுத்தாளர் பாலமனோகரன். 1973இல் நிலக்கிளியைத் தந்த இவர் தொடர்ந்து 1974இல் குமரபுரம் மற்றும் கனவுகள் கலைந்த போது என்ற இரு நாவல்களையும் வீரகேசரிப் பிரசரங்களின் வழியாகத் தந்திருந்தார். பின்னர் நந்தாவதி என்ற நாவலை 1985இல் சென்னை சோமு புத்தக நிலையத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். பாலமனோகரனின் தீபத் தோரணம் என்ற சிறுகதைத் தொகுதி 1977இல் சாவகச்சேரியில் மட்டுவில் திருக்கணித அச்சகத்தில் வெளியிடப்பட்;டிருந்தது. இவருக்கு சாகித்திய மண்டலப் பரிசை பெற்றுத்தந்த நூல் இதுவாகும்.

இன்று தான் வாழும் டென்மார்க் நாட்டுச்சூழலி;லும் அங்கு வாழும் டேனிஷ் மக்களின் மொழியை நன்கு கற்று, அவர்களது மொழியிலேயே தனது படைப்புக்களைச் சிருஷ்டித்து வருகின்ற அளவுக்கு மொழி ஆளுமை பெற்றவராகத் திகழும் திரு பாலமனோகரன் டேனிஷ் தமிழ் இலக்கியகர்த்தாக்களுக்கிடையே ஆரவாரமற்ற ஒரு இலக்கியப் பாலமாக இயங்கிவருகின்றார். அவுஸ்திரேலியாவிலுள்ள கலாநிதி முருகர் குணசிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியவர் இவர். தான் ஆங்கிலத்தில் எழுதிய சில சிறுகதைகளை டேனிஷ் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்து 1991இல் ஒரு நூலாகவும் இவர் வெளியிட்டிருக்கின்றார். 1993இல் டேனிஷ் தமிழ் அகராதியொன்றையும் இவர் தொகுத்திருக்கின்றார். இது டேனிஷ் மண்ணின் 11வது பிறமொழி அகராதியாக டேனிஷ் அரசினால் மதிக்கப்பெற்று அவர்களாலேயே நூலாகப் பதிப்பிக்கவும் பெற்றுள்ளது.
அகராதிகளின் உருவாக்கத்துக்கு, அந்த மொழியின் தொடர்பு மாத்திரம் காரணமாக இருந்துவிடுவதில்லை. மொழியின் தேவையும், அதனைப் பயன்படுத்தும் அந்நியரின் சமூகவியல் கண்ணோட்டமும், அந்தச் சூழலில் அந்நிய மொழியொன்றைப் பயன்படுத்த வேண்டிய தேவையின் அழுத்தமும் இதற்கான பல காரணிகளுள் சிலவாகும். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை மொழிவழி உணர்வு எம்மிடையே அதிகம் என்பது என் கருத்தாகும். எமது மொழியைப் புலம்பெயர்ந்து சென்ற நாட்டில் பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது போகும் வேளையில் பிற மொழியொன்றின் தேவை தவிர்க்க அங்கு முடியாததாகி விடுகின்றது. காலனித்துவவாதிகள் எப்படி எமது தமிழை அகராதிகளாக்கினார்களோ, அதே வழியில் இன்று நாம் அவர்களது மொழியை அகராதிகளாக்குகின்றோம் என்பது தனி ஒரு ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல முழுத்தமிழ் இனத்திற்கும் பெருமைதரும் விடயமாகும்.

டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழும் மற்றொரு ஈழத்து எழுத்தாளர் திரு த. தர்மகுலசிங்கம் அவர்களும் இங்கு குறிப்பிடப்படவேண்டியவர். இவர் டேனிஷ் மொழியிலிருந்து அனசனின் சிறுகதைகளைத் தொகுத்து தாய், பாட்டி என்று இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தாய் 1996இல் அனசனின் 17 கதைகளைக் கொண்டதாக வெளிவந்திருந்தது. ஐந்தாண்டுகளின் பின்னர் 2001இல் பாட்டி என்ற தலைப்பில் மேலும் 14 கதைகளுடன் அடுத்த கதைத்தொகுதியை இவர் வெளியிட்டிருந்தார். கடந்த ஓகஸ்ட் 2007இல் தர்மகுலசிங்கத்தின் மேலும் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. அவை ர்.ஊ.யுனெநசளழn எழுதிய எனது வாழ்க்கை ஓர் அழகான கதை என்ற சுய வரலாற்று நூலும், டேனிஷ் மொழியிலிருந்து அவர் நேரடியாகத் தமிழாக்கம் செய்துள்ள அனசனின் கதைகள் என்ற பாரிய சிறுகதைத் தொகுப்புமாகும்.

ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியில் பிறநாட்டு இலக்கியங்களை தமிழில் கொண்டுவரும் முயற்சியிலேயே இதுவரை காலமும் தாயகத்திலும் தமிழகத்திலும் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். நேரடியாக அந்த வேற்றுமொழியின் ஆளுமையை உள்வாங்கி, அந்த இலக்கியம் உருவாகிய மண்ணின் மணத்தையும், இலக்கியச் சுவையையும் குன்றவிடாமல் பேணி அதைத் தமிழில் அப்படியே தரும்போது முன்னைய மொழிமாற்றம்பெற்ற இலக்கியங்களின் வாசிப்புச் சுவையிலிருந்து பின்னையவை பாரிய வேறுபாடுகளைக் காண்பதை வாசகர்களால் உணர முடிகின்றது. இதுவே அனசன் கதைகளின் வாயிலாக தர்மகுலசிங்கம் அவர்களுக்குக் கிடைத்துள்ள வெற்றியாகக் கருதுகின்றேன்.

ஹன்ஸ் கிரிஸ்தியன் அனசன், டேனிஷ் மக்களின் தேசிய இலக்கியகர்த்தா என்று வர்ணிக்கப்படுபவர். டென்மார்க்கில் உள்ள ஒடென்ஸே என்ற ஊரில் 02.04.1805இல் பிறந்தவர். தந்தை சப்பாத்துத் தைக்கும் ஒரு ஏழைத் தொழிலாளி. ஆயினும் கல்வி அறிவு மிக்கவர். அவரது வளர்ப்பில் அனசன் வறுமையிலும் செம்மையாக வளர்க்கப்பட்டார். வடமொழிக்கு காளிதாசன் போல், தமிழுக்கு வளளுவர்; போல், ஆங்கிலத்துக்கு ஷேக்ஸ்பியர் போல் டேனிஷ் மொழிக்கு ஓர் அருட்கொடையாக அனசன் கிட்டியுள்ளார். அவரது கதைகள் குழந்தைகளுக்காகப் புனையப்பட்டவை போலத் தோன்றினாலும் அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் பயன்தரும் ஆழமான சிந்தனைளையும் சமூக நீதிகளையும் தளமாகக் கொண்டவை.

இறுகிப்போன யதார்த்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வழிசொல்லும் பல கருத்துக்களை அனசன் கதைகள் என்ற தர்மகுலசிங்கத்தின் நூலில் தேர்ந்த 42 கதைகளில் நாம் தாராளமாக் காணலாம். இதிலுள்ள பல கதைகளுடன் நாம் ஏற்கெனவே பரிச்சயமாகிவிட்டிருப்பது போன்ற உணர்வு நமக்கு அவ்வப்போது ஏற்படுகின்றது. உதாரணமாக சக்கரவர்த்தியின் புதிய ஆடைகளைக் குறிப்பிடலாம். தமிழில் சிறுவர் நாடகமாக இது ஏற்கெனவே பல இடங்களில் மேடையேற்றம் கண்டுள்ளது. நாம் சிறுவராகப் பாடிப்பழகிய “பருத்தித்துறையில் முட்டை விற்ற பவளக்கொடியின் கதையும்” அனசனின் படைப்பொன்றின் தழுவலே என்று அறியமுடிகின்ற போது வியப்பேற்படுகின்றது. அவரது “சிகப்புச் சப்பாத்துக்கள்” போன்ற கருத்தாழம் மிக்க கதைகள் நவீன வணிகமய உலகின் நன்னடத்தைக்குப் பாடம் புகட்டவல்லவை என்பதால் புதிய முகாமைத்துவப் பயிற்சி நூல்களிலும் இவை இடம்பெறுகின்றன என்று கூறியிருக்கின்றார் தர்மகுலசிங்கத்தின் பாட்டி என்ற அனசன் மொழிபெயர்ப்பு நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் கோபன்ஹேகன் விவசாயப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி ந. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.

கடற்கன்னி இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு கதை. டென்மார்க் நாட்டின் தலைநகரான கொபன்ஹேகன் துறைமுகத்தின் சிறப்புச் சிற்பமாக – டுயனெ அயசம ஆக வீற்றிருக்கும் பாறையில் அமர்ந்துள்ள கடற்கன்னியின் சிலை அனசனின் கனவுலகப் பாத்திரமாகும். இலக்கியத்தினால் உயிர்ப்பும் சாகாவரமும் பெற்ற கலைவடிவம் இது. மேற்பாதி மனித உருவத்திலும், கீழ்ப்பாதி மீன் உருவத்திலும் உள்ள மச்சகன்னிகையே அந்தத் துறைமுகத்தில் கடற்கன்னியின் உருவில் சிலையாகிக் காத்துநிற்கிறாள்.

தர்மகுலசிங்கத்தின் அனசன் கதைகள் அனைத்தும் டேனிஷ் மொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். ஈழத்தமிழரின் புலப்;பெயர்வின் காரணமாக ஏற்பட்ட நன்மைகளில் இந்த வகைப்பட்ட இலக்கிய வளர்ச்சியும் ஒன்றாகும். ஒரு அந்நிய படைப்பிலக்கியம் உருவாகிய மண்ணிலிருந்துகொண்டே அதன் வாழிடச் சூழலுக்குத் தம்மையும் உட்படுத்திக்கொண்டு அவ்விலக்கியங்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்த வழங்குவதன் மூலம், தமிழ் மொழியின் உலகளாவிய தன்மைக்குப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் புதிய பரிமாணம் ஒன்றைத் தந்து வருகிறார்கள். இதுவரை ஆங்கில வழி மூலமான மொழிமாற்றங்களையே தரிசித்து வந்த எமக்கு, திரு தர்மகுலசிங்கம் போன்றோரின் வாயிலாக நேரடியான மொழிபெயர்ப்பில் பன்னாட்டு இலக்கியங்களைத் தமிழுக்குப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இந்த வகையில் எமது புகலிடத்து படைப்பிலக்கிய கர்த்தாக்கள் உலகத் தமிழ் இலக்கியப் பரப்பை விரிவாக்கி இருக்கிறார்கள் என்று துணிந்து கூறலாம்.

இதேபோன்று பாரிசில் வாழும் ஈழத்;துக் கவிஞர் கலாமோகன் அவர்களின் தமிழ்க் கவிதைகள் சிலவும் டேனிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளன.

டேனிஷ் மக்களுக்கும் அவர்களின் மொழிக்கும் தமிழர்கள் புதியவர்கள் அல்லர். தென் தமிழ்நாட்டிலுள்ள தரங்கம்பாடியிலே டேனிஷ்காரர் வணிகக் கோட்டை ஒன்றினை சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே நிறுவியிருந்தனர். கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டேனிஷ் கடலோடிகள் அச்சுக்கலையையும் பரந்தளவில் எம்மிடையே அறிமுகப்படுத்தினார்கள். அக்காலத்திலேயே தமிழுடன் டேனிஷ் உறவு பல்வேறு காரணங்களக்காக முகிழ்ந்துவந்துள்ளது. தமிழகத்திற்கான அவர்களின் பிரதான ஏற்றுமதி இரும்பாகும். அதை pபை ஐசழn என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த pபை ஐசழn தமிழில் தேனிரும்பு என்று குறிப்பிடப்படுகின்றது. டேனிஷ்காரரின் தொடர்பினாலேயே இப்பெயர் வந்ததென்பது மொழியியல் வரலாறு. தமிழ்நாட்டில் நிலைகொண்டிருந்த இவர்கள் பின்னர் இலங்கையிலும் தமது இருப்பினை விரிவுபடுத்த 17ம் நூற்றாண்டில் முனைந்திருந்த போதிலும் இலங்கையில் அப்போதிருந்த ஒல்லாந்தருடன் போட்டியிட்டு வெல்ல முடியவில்லை. இருப்பினும் திருக்கோணமலையில் டேனிஷ் கடலோடிகள் காலூன்றிச் சிறிதுகாலம் இருந்தமைக்கான வரலாறுண்டு.

தமிழ்மொழியில் அச்சான முதல்நூலை உருவாக்கியவர்களுள் டென்மார்க் நாட்டிலிருந்து கிறிஸ்தவ மதபோதனைக்காகத் தமிழகம் சென்ற பாதிரியார்களும் அடங்குகின்றனர். இத்தகைய தமிழ்- டேனிஷ் தொடர்பு பின்னாளில் வலுவற்றதாகி வரலாறாகிவிட்ட நிலையில் கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அரசியல் பொருளாதாரக் காரணிகளால் புகலிடம்தேடி ஸ்கன்டிநேவிய நாடுகளுக்குச் சென்ற ஈழத் தமிழர்கள்- குறிப்பாக டென்மார்க்கில் வாழத் தலைப்பட்ட எம்மவர்கள் அவ்வுறவை பத்தெழுச்சியுடன் உலகத்தமிழரிடையே புதுப்பிக்க முனைந்திருப்பது பெருமைக்குரிய மற்றொரு விடயமாகும்.

கலேவலா என்பது மற்றொரு ஸ்கன்டிநேவிய நாடான பின்லாந்தின் தேசிய காவியமாக மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. மூன்று வருடகால ஆய்வின் வெளிப்பாடாக தமிழில் இது 480 பக்கங்களில் ஐம்பது பாடல்களின் 22,795 அடிகளைக் கொண்டதாக பின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இக்காவியம் 29 மொழிகளில் இதுவரை முழுமையாக மொழிபெயர்க்கப் பெற்றும் 15 மொழிகளில் சுருக்கமாக மொழிபெயர்க்கப் பெற்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழில் முழுமையான மொழிபெயர்ப்பை ஆக்கிய பெருமைக்குரியவர், ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் உதயணன் என்ற பெயரில் தனது தமிழ் சிறுகதைகள் மூலமும் தமிழ் நாவல்களின் மூலமும் அறிமுகமான திரு இராமலிங்கம் சிவலிங்கம் ஆவார். பின்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் உதயணனின் இத்தமிழாக்க முயற்சியின்பயனாக செய்யுள் நடையில் அமைந்த முழுமையான மொழிபெயர்ப்பு 1994 இலும் இலகு தமிழில் அமைந்;த உரைநடையில் கலேவலா என்ற நூல் 1999இலும் வெளிவந்துள்ளன.

நாட்டாரிலக்கியமான கலேவலா (முயடநஎயடய) பின்லாந்தின் கிராமங்களில் வாய்மொழிப் பாடல்களாக வழக்கில் இருந்து வந்தது. இக்காவியத்தின் மூல ஆசிரியர் ஏலியாஸ் லொண்ரொத் (நுடயைள டுழnசெழவஇ 1802-1884) என்பவராவார். கிறீஸ்துவுக்குப் பின் முதல் ஆயிரம் ஆண்டுப்பகுதியில் நிகழ்ந்த ஸ்கன்டினேவியக் கடல் வீரர்களின் தாக்குதல்களினால் ஏற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கலேவலாவின் போர்நடவடிக்கைகள் இப்பாடல்களின் பகைப்புலமாக அமைந்திருந்த போதிலும் இப்பாடல்கள் போர்க் கருப்பொருளை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. பண்டைய தமிழர்களின் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களையும் சிலப்பதிகாரம் காட்டுவது போன்று, பின்னிஷ் மக்களின் பண்டைய கலாச்சாரத்தின் விரிவான வர்ணனைகளை கலேவலாவில் நாங்கள் காணலாம். இவை பல இடங்களில் தமிழ் இலக்கியங்களில் காட்டிச்சென்ற எமது பண்டைய பாரம்பரிய கலாச்சாரங்களை மீளவும் எமக்கு நினைவுபடுத்துகின்றன.

குமாரசுவாமி ஜெயக்குமார் என்ற இயற்பெயர் கொண்ட கவிவேளம் பாரதிபாலன், தாயகத்தில் நல்லூரைப் பிறப்பிடமாக்க கொண்டவர். திருகோணமலையைப் புகுந்த வீடாக்கி இப்போது டென்மார்க்கைத் தன் புகலிடமாக்கிக் கொண்டிருக்கின்றார். சென்னை
பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி வ.தெ.மாணிக்கனார் அவர்களால் இவருக்குக் கிடைத்த கவிவேழம் என்ற பட்டத்தை தன் பெயரி;ன் முன்னால் பெருமையுடன் விரும்பித் தாங்கிவரும் பாரதிபாலன், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக உதவித் தலைவர்களுள் ஒருவராகவும் மேற்படி தமிழியல் இயக்கத்தின் ஸ்கன்டிநேவிய நாடுகளின் அமைப்பாளருமாகத் தன் சேவையை ஆற்றி வருகின்றார். கவிதைக் கனவுகள் என்ற இவரது கவிதைத் தொகுதி 1992இல் இலங்கையில் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றிருக்கின்றது.

டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழும் கவிவேழம் பாரதிபாலனின் கடற்கன்னி காவியம் என்ற நூலையும் இங்கு குறிப்பிடவேண்டும். எச் சி அனசனின் ஒரு சின்னக் கடற்பெண் என்ற காவியத்தை இவரும் தமிழாக்கித் தந்திருக்கின்றார். இது சென்னை மணிமேகலைப் பிரசுரமாக 2002இல் வெளிவந்திருக்கின்றது. டென்மார்க் நாட்டின் தேசிய சின்னமாகக் கொள்ளப்படும் கடற்கன்னிகை பற்றியதான பாரம்பரிய மரபுவழிக் கதை இதுவாகும். இந்நூல் டென்மார்க் நாட்டின் தேசிய சின்னமான மீன்வாலுடன் கூடிய மனிதப் பெண் பற்றிய பிரபல்யமான நாட்டாரியல் கதையொன்றாகும். கடல் அரசனின் மகளான அவள் ஆழ்கடல் நகரத்திலிருந்து மனிதகுலத்தின் மீது தேடல்; நடத்தியவள். அந்தத் தேடலே அவள் மனதில் ஏக்கமாக எழுந்தது. ஒரு மானிடனை விரும்பி, மனிதருள் இருக்கும் உயர் சிறப்புகளைத் தானும் அடைய எத்தனித்துத் தோற்றுப்போய் பின்னர் உயிர்த்தியாகம் செய்து அமரத்துவம் அடைகின்றாள்.

விலங்குப் பண்ணை என்ற நூல் ஜோர்ஜ் ஓர்வல் எழுதிய யுniஅயட குயசஅ எனற ஆங்கில மூலநூலின் தமிழாக்கமாகும். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் நல்லைக்குமரன் குமாரசாமி அவர்கள் உதயம் வெளியீடாக இந்நூலை 2005இல் வெளியிட்டிருக்கிறார். மேலை நாடுகளில் உயர்வகுப்புகளின் பாடநூலாகவும், பின்னர் ஆங்கிலத் திரைப்படமாகவும் இந்நாவல் ஏற்கெனவே வெளிவந்து பிரபல்யமாகியிருந்தது. இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தில் உலக அரசியல் பற்றி அங்கதச் சுவையுடன் பிரிட்டனில் எழுதப்பட்ட நாவல் இதுவாகும். இக்கதையின் மூலக்கரு 1937இல் ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தின்போது மூலநூலாசிரியர் இணைந்து போரிட்டவேளை ஸ்பானிய இடதுசாரிகளான கம்யுனிஸ்டுகள் பூண்டோடு சுத்திகரிக்கப்பட்டதைக் கண்கண்ட காட்சிகளால் மனதில் உருவானதாகும். ஹீரோஷிமா அணுக்குண்டு வீச்சையடுத்து ஜப்பான் சரணடைந்த மாதத்தில் வெளியாகிய நாவல் இது. ஓர்வேல் இந்நூலில் அரச பயங்கரவாதம், பிரச்சாரம், புரட்சிப் பாதையில் சந்திக்கும் துரோகத்தனங்கள் ஆகியவற்றின் அராஜகங்கள் பற்றி அனுபவரீதியாகக் குறிப்பிடுகின்றார். பேசுவதற்கும், சிந்திப்பதற்குமான பூரண சுதந்திரம், மேற்குலகின் வளர்ச்சிக்கு மூலாதாரமாக இருப்பதை இந்நூலில் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுகின்றார்.

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் மற்றொரு ஈழத்துப் படைப்பாளியான எஸ்பொன்னுத்துரை என்னும் எஸ்பொ புலம்பெயர்ந்த வாழ்விலும் எழுத்துத் துறையிலும் பதிப்புத்துறையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுபவர். தனது மித்ர வெளியீட்டகத்தின் வாயிலாக ஈழத்தவரின் நூல்களை மாத்திரமல்லாது தமிழ் இலக்கிய உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் எழுத்தாளர்களை இனம்கண்டு தன் பதிப்பகத்தின் வாயிலாக அவர்களது படைப்பிலக்கியங்களுக்கு நூல் வடிவம் வழங்கி வருபவர். இவர் ஹால என்ற பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு நாவலை எழுதியிருக்கிறார். செம்பென் ஒஸ்மான் ஆபிரிக்க மூலநூலாக எழுதிய ஹால, எஸ்.பொவின் கைவண்ணத்தில் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிட்டியிருக்கிறது. சென்னை: தமிழினி பதிப்பகம், 1999இல் இதை வெளியிட்டிருந்தது.

மூல நூலாசிரியர் செம்பென் ஒஸ்மான் ஒரு எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமாவார். மீனவராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் யுத்தத்தின் பின்னர் கப்பல் திருத்தும் தொழிலாளியாகி, தொழிற்சங்க ஈடுபாட்டில் அந்த அனுபவங்களைத் திரட்டி நாவலாக எழுதத் தொடங்கியவர். ஹால (ஓயடய- ஆண்மையற்ற) இவர் எழுதி இயக்கிய திரைப்படமாகவும் நியு யோர்க்கில் வெளிவந்தது. ஆபிரிக்க சமுதாயத்தில் ஏகாதிபத்தியத்தின் வாரிசுகளாக முகிழ்த்துள்ள மத்தியதர வர்க்கத்தின் ஆடம்பரத்தையும், பாரம்பரியமான ஆபிரிக்க நம்பிக்கைகளையும் மிகச் சாமர்த்தியமாக இந்நாவலில் அவர் இழைத்துள்ளார். ஆபிரிக்கச் சமூகத்தில் நிலவும் ஆண்-பெண் உறவுகள் பற்றி யதார்த்தமாகவும் ஆழமாகவும் இந்நாவல் பேசுகின்றது. ஆபிரிக்க மொழியிலிருந்து நேரடியான தமிழ் வாசகருக்கு ஹால வந்தடைந்திருக்கின்றது.

Series Navigation

புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.


கில்கமேஷ் காவியம் உலகில் தோன்றிய முதல் இலக்கியம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் வைத்திய கலாநிதி எஸ்.தியாகராஜா, சென்னை இராமநாதன் பதிப்பகத்தின் வாயிலாக 2002இல் இந்நூலை வெளியிட்டிருக்கிறார். உலகில் முதன்முதலாக மனித கரங்களால் எழுதப்பட்ட இலக்கியம் என்று கருதப்படும் இந்த சுமேரிய இலக்கியம் கலாநிதி தியாகராஜாவினால் ஆங்கில மொழிமூலமாகத் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பெற்றுள்ளது. 4700 ஆண்டுகளுக்கு முன்னர் சுமேரிய நாட்டில் உருக் என்ற நகரை தாபித்து ஆண்ட மன்னன் கில்கமேஷ். அவனது வரலாறு அவனது ஆட்சிக்காலத்திலேயே இதிகாசக் கதைகளாக சுமேரிய மொழியில் களிமண் வில்லைகளில் எழுதிவைக்கப்பட்டிருந்தன. பின்னர் எழுந்த அக்காடியர்களால் கி.மு.2200-1800 காலப்பகுதியில் கில்கமேஷ் காவியம் அக்காடிய மொழியில் பெயர்க்கப்பட்டு களிமண் சாசனங்களில் எழுதிப் பேணப்பட்டது. 19ம் நூற்றாண்டில் அகழ்வாராய்;ச்சியாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் புதையுண்டு கிடந்த நகரங்களை அகழ்ந்து வெளிக்கொண்டுவரும் வேளை, இந்தக் களிமண் சாசனங்கள் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டன. கில்கமேஷ் காவியத்தை ஒரு வீரசாகசக் கதையாக, அறநிலை உணர்த்தும் கதையாக, துன்பியல் நாடகமாக பல்வேறு மட்டங்களில் மதிப்பிடப்படலாம். சாதாரணமான அன்றாட வாழ்வுக்கு அப்பால் வித்தியாசமான அனுபவங்களைச் சந்திக்க விரையும் மனிதசுபாவம், அறிவை விரிவாக்கிக் கொள்ள விழையும் உந்துதல், இறவாமல் என்றுமே நிரந்தரமாக வாழக்கூடிய வழியைத் தேடும் ஆர்வம், இறுதியில் மனிதவாழ்வின் நிலையாமையை உணரும்போது ஏற்படும் ஏமாற்றம் இவற்றின் அடிப்படையில் அமைந்ததே கில்கமேஷ் காவியம்.

ஈழத்தமிழருக்குப் பிறந்த மண்ணிலே கிட்டாத பல வாய்ப்புக்கள் புகுந்த மண்ணிலே கிட்டியுள்ளன. தொழில் பெறச் சுதந்திரமும், அடுத்த தலைமுறையினருக்கு வளமான உயர்கல்வி வாய்ப்புக்களை எவ்விதத் தரப்படுத்தலும் சமூகக் கட்டுப்பாடுகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இன்றி உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் வழங்க வாய்ப்புக்கிட்டியது. புகுந்த நாட்டின் தேசிய மொழியைக் கற்று அதன் பலத்துடன் தொழில்வாய்ப்புப் பெற்றுக்கொள்வதுடன் மட்டுமல்லாது அந்தத் தேசிய இனத்துடன் சில எல்லைகள் வரையாவது சென்று கலந்துறவாடும் புதிய அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன. இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளிலே தாம் கற்ற அந்நாட்டுத் தேசிய மொழிகளுக்கூடாக அவர்களது இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் மொழிபெயர்ப்பாளர் என்ற இடைத்தரகரின்றி நுகரும் வாய்ப்பினையும் புலம்பெயர்ந்த தமிழர் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினர் பெற்றிருக்கிறார்கள். அதன் வழியாக புகலிட நாட்டின் வளமான புதிய இலக்கிய உலகுக்குள் சாவதானமாகச் சஞ்சரிக்க அவர்களால் முடிகின்றது.

பிரான்சில் வாழும் ஒரு தமிழ் படைப்பாளியால் விக்டர் ஹியூகோ, அலெக்சாண்டர் டூமாஸ், மாப்பசான், போல் சார்த்தர் ஆகியோருடைய இலக்கிய மேதமைக்குள் மொழிபெயர்ப்புகளுடாகவன்றி நேரடியாகவே நுழைந்து பார்க்க முடிகின்றது. இதனால் மற்றையோருக்கு தாயகத்தில் எட்டாக்கனியான சுவையான பல இலக்கிய உணர்வுகளையும் சுகானுபவங்களையும் கண்டு உணர்ந்து தமது படைப்புக்களுள் புகுத்தவும் புலம்பெயர்ந்தோரால் முடிகின்றது. இன்னும் ஒரு படி மேலே போய் அந்த அழியா இலக்கியங்களையும் இலக்கிய மேதைகளையும் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற முதுமொழிக்கேற்ப தமிழிலும் பதிந்துவைக்க முடிகின்றது. இந்த அதி உன்னதமான வாய்ப்பினை புலம்பெயர்ந்த அனைவரும் பெற்றிருந்தபோதிலும், எம்மவரில் ஒருசிலரே அதனை உணர்ந்து உள்வாங்கி, பதிவாக்கி வரலாறாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

அ.முத்துலிங்கம் கனடாவில் தற்போது வாழ்ந்துவரும் ஈழத்துப் படைப்பாளி. உலகத்தமிழ் இலக்கியங்களையும் எமது கவனஈர்ப்பைப் பெறவெண்டிய படைப்பாளிகளையும் தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பாரிய பணியை அவர் ஆரவாரமில்லாமல் அமைதியாகச் செய்துவருகின்றார். கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது. என்ற இவரது நூல் சென்னை, உயிர்மை பதிப்பக வெளியீடாக 2006இல் வெளிவந்திருக்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் உலகத்து இலக்கியம் பற்றிய கருத்துக்களைப் பதிவுசெய்யும் இந்நூலில், தன் எழுத்தாள நண்பர்களிடம் சமீபத்தில் அவர்களைக் கவர்ந்த புத்தகம் என்ன, அது ஏன் கவர்ந்தது என்று கேட்டு அவர்களது பகிர்தலை இங்கு நூலாக்கியிருக்கிறார். இதில் அம்பை, சாரு நிவேதிதா, இரா.முருகன், காஞ்சனா தாமோதரன், பி.ஏ.கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா, வாசந்தி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், பொ.கருணாகரமூர்த்தி, மாலன், அ.முத்துலிங்கம், பாவண்ணன், ஷோபாசக்தி, சுகுமாரன், வெங்கட்சாமிநாதன் ஆகிய 20 படைப்பாளிகள் தத்தமது விருப்பத்துக்குரிய உலக இலக்கிய நூல்களைப் பற்றிய உணர்வுகளைப் பதிவுசெய்திருக்கின்றனர்.

வியத்தலும் இலமே என்பது அ.முத்துலிங்கம் எழுதிய மற்றுமொரு நூல். நாகர்கோவில்: காலச் சுவடு பதிப்பகம், 2006இல் இந்நூலை வெளியிட்டிருந்தது. தமிழ் இலக்கியத்துக்கு உலகத்துப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் முயற்சி இது. இது ஒரு நேர்காணல்களின் தொகுப்பு. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள், எளிதில் அகப்படாத புகழ்பெற்ற இவர்கள் தமிழர்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர்கள். மிகச்சுவாரஸ்யமான இவர்களது நேர்காணல்கள் வாசகர்களை பரந்ததொரு உலகவாசிப்பிற்கு இட்டுச்செல்கின்றது. அமினாட்டா ஃபோர்னா, அகில் சர்மா, டேவிட் செடாரிஸ், டேவிட் பெஸ்மோஸ்கிஸ், கிறிஸ் ஃபிலார்டி, மொகமட் சஸீகு அலி, ஷ்யாம் செல்வதுரை, ஜெனி வீவ், ஜோர்ஜ் எல்ஹார்ட், வார்ரென் கரியோ, டேவிட் ஓவன், டீன் கில்மோர், மேரி ஆன் மோகன்ராஜ், மார்கிரட் அட்வூட், டேவிட் செடாரிஸ், ரோபையாஸ் வூல்ஃப், ஃபிராங்க் மக்கொர்ட், பிரிஸ்கி காஃவ்மன், எலெய்ன் பெய்லீன், அலிஸ் மன்றோ ஆகிய இருபது பேரின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளன. புலம்பெயர் வாழ்வியலில் தான் சந்தித்த இவர்களைத் தமிழ் வாசகனுக்கும் அறிமுகமாக்கும் பணி புலம்பெயர் வாழ்வியலின் வழியாகவே இவருக்கு எளிதில் கைகூடியது எனலாம்.

புகலிட வாழ்வில், எம்மில் பலர் இன்னமும் தாயக நினைவுகளில் முற்றாக மூழ்கி அந்த உலகிலேயே 25 வருடங்கள் கழிந்த நிலையிலும் விடாப்பிடியாகச் சஞ்சரித்துக்கொண்டும் இலக்கியம் படைத்துக்கொண்டும் வாழ்கின்றார்கள். தமது அந்நிய மொழியறிவை தொழில்வாய்ப்புக்காக மாத்திரமன்றி, இலக்கிய நுகர்விற்காகவும் விருத்தியாக்கி ஈழத்து சமகாலத் தமிழ் இலக்கியங்களை புகலிட மொழிகளில் கொண்டுசென்று சேர்க்க முயலவேண்டும். அதே போல புகலிட இலக்கியங்களையும் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்த வேண்டும். எம்மால் இது முடியாது போகுமிடத்து அடுத்த தலைமுறையினருக்காவது இதற்கான பயிற்சியையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

புகலிடத்தில் தற்போதுள்ள வாழ்வியல் சூழலில் பன்னாட்டு இலக்கியங்கள் தமிழில் வெளிவருவதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகின்றன. புகலிடத் தமிழ்க் குழந்தைகள் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினர் தத்தம் வதிவிட நாடுகளில் தேசிய மொழிகளில் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளதனால், அவர்கள் பல புகலிட இலக்கியங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுகின்றார்கள். இதுவரை காலமும் தாயகத்தில் கிடைத்திராத ஒரு இனிய அனுபவத்தை இந்த இரண்டாம் தலைமுறைத் தமிழ்க் குழந்தைகள் உலகெங்கிலும் இருந்து பெற்று வருகின்றார்கள்.

ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, டேனிஷ் என்ற பல்வேறு மொழிகளிலும் வழங்கும் இலக்கியங்களை அவர்கள் நேரடியாகச் சுவைக்கும் வாய்ப்புக் கிட்டுகின்றது. ஓரளவு தமிழிலும் அவர்கள் புலமை பெற்றவர்களாக இருந்தால், அவற்றைத் தமிழாக்கும் வாய்ப்பையும், தமிழில் உள்ள இலக்கியங்களை அந்தந்த மொழிகளில் மொழிபெயர்க்கும் ஞானத்தையும் அவர்கள் காலக்கிரமத்தில் பெறுவார்கள் என்பது உண்மை. இத்தகைய சிறுவர்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஆதரிக்கும் வகையில் புகலிடத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகள் பட்டறைகளை ஒழுங்கு செய்து வருவதாகவும் செய்திகள் கிட்டுகின்றன. இது ஒரு ஆக்கபூர்வமான விடயமாகும்.

பன்னாட்டு இலக்கியங்களில் செழுமைபெற்ற படைப்புகளை மூல மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குச் சுவைகுன்றாது கொண்டுவந்து சேர்த்த புலம்பெயர்ந்து சென்ற எம்மவரைப் பற்றியே அதிகம் இங்கு பேசியுள்ளோம். தமிழரின் வரலாற்று மூலங்களைத் தேடி உலகில் மூலை முடுக்குகளில் தேடல் தாகத்துடன் வலம்வரும் எம்மவர் பலரைப்பற்றியும் இங்கு ஒரு பதிவுக்காகக் குறிப்பிடலாம். அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் ஆய்வுப்ப்பணியாற்றும் கலாநிதி முருகர் குணசிங்கம் உலகெங்கினும் உள்ள ஆய்வு நூலகங்களுக்குள் நுழைந்து அங்கு பேணப்பட்டுவரும் ஈழத்தமிழரின் வரலாற்று மூலாதாரங்களைத் தேடிக்கண்டறிந்து அவற்றை மீளவும் எமக்குப் படையலாக்கி வருவதை அவரது அண்மைக்கால நூல்களிலிருந்து அனைவரும் அறியக்கூடியதாக உள்ளது.

முன்னர் ஒரு காலத்தில் தவத்திரு தனிநாயகம் அடிகள் தனது வுயஅடை ஊரடவரசந என்ற தமிழியல் ஆய்வு இதழில், நியூசிலாந்தில் தமிழ் பெயர் பொறித்த கப்பலில் பயன்படுத்தப்படும் பெரிய மணியொன்றினைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தத் தகவலை அடிப்படையாகக்கொண்டு நியுசிலந்தின் வெலிங்டன் மாநிலத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரான ஆ.தா.ஆறுமுகம் விரிவான ஆய்வினைத் தொடங்கினார். நியுசிலாந்தின் மௌரியர்கள் எனப்படும் பழங்குடியினர் வாழும் பிரதேசமொன்றிலிருந்து கிழங்கு அவிப்பதற்கான ஏதனமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மணியை – அந்தத் தமிழ்மணி பற்றியும் (வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த மணிக்கும் வுயஅடை டீநடட என்றுதான் பெயரிட்டுள்ளார்கள்). அதனோடு ஒட்டியதாக 15ம் நூற்றாண்டில் அங்கு சுயபடயn பகுதியில் புதையுண்ட மரக்கலம் ஒன்று பற்றியும், அதிலிருந்த பிரித்தெடுக்கப்பட்ட தமிழ்ப் பட்டயமொன்று ஆய்வாளர்களால் அங்கு தொலைக்கப்பட்டது பற்றியும் பல சுவையான தகவல்களைத் தன் தேடலின்போது பெற்றுக்கொண்டார். இத்தகவல்களையெல்லாம் நியுசிலந்தில் தமிழன் பதித்த சுவடுகள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலாகவும் தந்திருக்கிறார். இந்த மணியும் இந்த மரக்கலத்திற்கு உரியதென்பதே ஆய்வாளரின் கருத்தாகும். நியுசிலாந்தின் ஊhசளைவ ஊhரசஉh என்ற இடத்தில் காணப்படும் றுநமய Pயளள குகை ஓவியங்களையும் தமிழர் சார்ந்ததாக நிறுவ முனையும் திரு ஆ.தா.ஆறுமுகம்;, அதற்கு ஆதாரமாக அவ்வோவியங்களில் செறிந்து காணப்படும் திரிசூலக் குறியையும், கவனத்திற்கெடுத்துள்ளார். நியுசிலந்தில் தமிழன் பதித்த சுவடுகள் என்ற இந்நூல் ஜனவரி 2007இல் நியுசிலாந்தின், வெலிங்டன் தமிழ்ச்சங்க வெளியீடாக மலர்ந்துள்ளது. யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பிறந்து தெல்லிப்பளை மேற்கில் வளர்ந்து. இளவாலையில் திருமணம் செய்த தமிழாசிரியரான பண்டிதர் ஆறுமுகம், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மு-ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய 1985இல் ஓய்வுபெற்றவர். தற்போது நியுசிலாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகின்றார்.

முதலாம் தலைமுறையினரின் தமிழ்சார்ந்த பணிகளுக்குத் தாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் என்று இரண்டாம் தலைமுறையினரும் இன்று புலம்பெயர் நாடுகளில் புறப்பட்டுவிட்டார்கள். சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ச் சங்கங்களை அமைப்பதிலிருந்து, தமிழின் பெருமையையும் அதன் ஆழமான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தமது பள்ளித் தோழர்களான பிறமொழியினருக்குத் தெரிவிப்பதுவரை அவர்கள் களமிறங்கிவிட்டார்கள் என்று தெரிகின்றது. இதற்கு புகலிடத்தில் இயங்கிவரும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் மேலும் சுதந்திரமான களம் அமைத்துக் கொடுத்து வருகின்றன.

மலரும் மொட்டுக்கள் என்ற தலைப்பில் 2005இல் ஒரு நூல் வெளியிடப்பட்டிருந்தது. நடாமோகன் நடாத்தும் லண்டன் தமிழ் வானொலி நிகழ்வுகளில் பங்குகொண்ட சிறுவர்கள் இணைந்து படைத்த 125 பக்கம் கொண்ட நூல் இதுவாகும். இதில் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்களால் தத்தம் புகலிட நாட்டுத் தேசிய மொழிகளில் வழக்கிலிருந்த குட்டிக்கதைகள் உள்வாங்கப்பட்டு தமிழில் அவை லண்டன் தமிழ் வானொலியில் மலரும் மொட்டுக்கள் என்ற சிறுவர் நிகழ்ச்சியின்போது வாசிக்கப்பட்டன. ஐரோப்பிய ஸ்கன்டிநேவிய பாடசாலைகளில் பயிலும் ஈழத்துத் தமிழ்ச் சிறுவர் சிறுமியர் இந்நிகழ்ச்சியில் ஆவலுடன் இணைந்து தத்தம் கதைகளை வானொலியின் வாயிலாக வழங்கினார்கள். உலகத்து நாட்டார் கதைகளும், தமிழில் அதுவரை அறியப்படாத பல நீதிக்கதைகளும் இவ்வகையில் தமிழில் நுழைய வாய்ப்பினை லண்டன் தமிழ் வானொலி வழங்கியிருந்தது. இப்படி படிக்கப்பட்ட 92 குட்டிக்கதைகள் இந்நூலில் நிகழ்ச்சித் தலைப்பையே நூலின் தலைப்பாகக்கொண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. ஜேர்மனி உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பரம. விசுவலிங்கம் அவர்களின் விதப்புரையுடன்கூடிய இந்நூல் கொழும்பில் அச்சிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இளைய தலைமுறையினரின் படைப்புக்களில் மற்றுமொரு மைல்கல்லாக அமைவது ஜேர்மனியிலிருந்து முற்று முழுதாக ஜேர்மன் மொழியில் வெளிவந்திருக்கும் னுநை டநஉமநசந வயஅடைளைஉhந முரஉhந டீ லெக்கர தமிழிஷ குஷ்ஷ்ஷ என்ற தலைப்பிலான ஒரு அழகான படைப்பு. தமிழில் சுவையான தமிழ் உணவுகள் என்றும் இந்நூலுக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பிலும், முகவுரையிலும், சமையல் குறிப்பின் தலைப்புகளிலும் மாத்திரமே தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. முற்று முழுதாக ஜேர்மன் வாசகரையும், ஜேர்மன் மொழி தெரிந்த தமிழ் இளந்தலைமுறையினரையும் கருத்திற்கொண்டே இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை எழுதியவர் ஜோர்ஜ் டயஸ் என்ற இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த புகலிடத் தமிழ் இளைஞர் ஒருவர். தாயார் புஷ்பராணி ஜோர்ஜ் ஏற்கெனவே ஈழத்து ஆக்க இலக்கியத்துறையில் அறிமுகமானவர். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பராணி ஜோர்ஜ் 1988இல் தன் குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்து வாழ்ந்து வருகின்றார்.

ஜோர்ஜ் டயசின் நூலின் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ முற்று முழுதான சமையல் கலை நூல் என்ற உணர்வினை ஏற்படுத்திவிடக்கூடும். ஆனால் இந்த நூலை ஆழமாக உள்வாங்கும்போது, ஈழத்துத் தமிழரின் சுவையான சமையல் கலையை மாத்திரம் ஜேர்மனியர்களுக்குப் புரிய வைக்கும் நூல் இது அல்ல என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. அதற்கும் பல படிகள் மேலாகச் சென்று, ஈழத்தமிழரின் வரலாறு, பண்பாடு, குழழன உரடவரசந என்று கூறப்படும் உணவுக் கலாச்சாரத்தை புகலிடமொன்றின் அந்நியருக்கு அதுவும் – அவர்களின் தாய்மொழியில் வழங்குவதனூடாக – ஈழத்தமிழரின் விழுமியங்களை பெருமைமிகு வாழ்வியல் வழிமுறைகளை, பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வரும் உணவுப் பழக்கவழக்கங்களை இந்நூல் புரியவைக்கின்றது.

இந்நூலின் முன்னுரையில் ஜோர்ஜ் டயஸ் குறிப்பிட்டுள்ள வாசகம் என்னைக் கவர்ந்தது.

“பிற பண்பாட்டைச் சேர்ந்தவர்களுடன் சரிக்குச் சமமாகத் தலைநிமிர்ந்து அவர்களுக்கு எம் மரபுப் பண்புகளையும் சம்பிரதாயங்களையும் எங்கள் கண்டுபிடிப்புகளையும் எம் வெற்றிகளையும் அறிமுகப்படுத்துவது பிறநாட்டவர்களுக்கும் நன்மை பயப்பதுடன் எமக்கும் ஆத்மதிருப்தியையும் பெரு மகிழ்வையும் தருமென்பது திண்ணம்”
என்று குறிப்பிடும் ஜோர்ஜ் டயஸினது அறிமுக வாசகம் – அது ஒரு புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்க் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை இளைஞன் ஒருவனிடமிருந்து வெளிவருவதால்- மிகுந்த அவதானத்தையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றது.

இலங்கைத் தமிழரின் வாழிடமும் பண்பாடும் எனத் தொடங்கும் நூலின் அறிமுகப் பக்கம் ஜேர்மன் வாசகருக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் தாயகத்தின் நிலவமைப்பையும் தாவர வளத்தையும் அவர்கள் விட்டு வந்துள்ள செழுமையான பண்பாட்டையும் வரலாற்றையும் வண்ணப் படங்களுடன் சுருக்கமாக விளக்குகின்றது. அதையடுத்து சிங்களத்தையும் சிங்களவரின் பண்பாட்டையும் சிறிது கூறி, தமிழரின் மொழியை அதன் வரிவடிவங்களை கோடிட்டுக்காட்டி, அவர்களது வாழ்வியல் அறிமுகத்திற்கு வருகின்றது. அதையடுத்து இலங்கையும் அதில் தமிழரின் வாழிடப் பிரதேசமும் என்ற பகுதி வரைபட, புகைப்பட உதவியுடன்; இரத்தினச் சுருக்கமாக, தமிழரின் தாயகத்தை விளக்கி விரிகின்றது. ஈழத்தின் தாவர வளம், விலங்கு வளம் பற்றிய புகைப்படத் தொகுப்புடன் தொடரும் இந்நூல் தொடர்ந்து தமிழர் கலாச்சாரம் பற்றி அவர்களது மரத்தடி வழிபாடு பற்றி, கிடுகு வேலிப் பாரம்பரியம் பற்றி, திருமணத்தில் தாலி பற்றி ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு அந்நிய தேசமொன்றின் வாசகரை தான் முற்றும் அறிந்திராத தமிழரின் தாயகத்தின் கிராமமொன்றுக்கு மானசீகமாக அழைத்துச் செல்கின்றது.

இப்படியாக பல்வேறு யுத்திகளினூடாக, படிப்படியாக வாசகரை சமையலறை வரை நகர்த்திச் செல்லும் ஜோர்ஜ் டயஸ் இப்பொழுது தமிழரின் நளபாகத்தின் முக்கிய அங்கமான வாசனைத் திரவியங்கள், சுவையூட்டும் தானியங்கள் பற்றிக் குறிப்பிட வருகிறார். ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனி வாசனைத் திரவியங்களுக்கு வழங்கி தெளிவாக அவற்றை விளக்கிச் செல்கிறார். மிளகாய் என்ற பக்கத்தில் செத்தல் மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை பசுமைமிகு புகைப்படங்களாகத் தந்திருப்பதுடன் பழுத்துக் குலுங்கும் மிளகாய்ச்செடிகளையும் படம்பிடித்து அதன் மூலத்தையும் வாசகருக்கு அறிவிக்கிறார். இப்படியே இஞ்சி, மஞ்சள், வெந்தயம், மிளகு, மரக்கறிகள், தேங்காய், வாழை, பனை, பழங்கள் என்று தான் பின்னர் தனது உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்போகும் பதார்த்த வகைகளுக்கான மூலப்பொருட்களை அதன் பிறப்பிடத்திலிருந்து வாசகருக்கு விளக்கிவைத்திருக்கும் ஜோர்ஜ் டயஸின் இந்தச் சுவையான தமிழ் உணவுகள் என்ற நூலை வெறும் சமையல் கலை நூல் என்று மாத்திரம் குறிப்பிடவே முடியாதுள்ளது. ஜோர்ஜ் டயஸ் இந்நூலை உருவாக்கியதற்கான காரணத்தையும் தன் முன்னரையில் தெளிவாக முன் வைக்கிறார். இந்நூலின் உருவாக்கத்தின் நோக்கம், எம் தமிழ்ப் பாரம்பரியத்தின், உன்னத சமையற் கலையையும், அதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் குறிப்பாக, எமது பிராந்தியங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ குணாம்சம் பொருந்திய பலசரக்கு வகைகள், தானியங்கள், பல்வேறு கீழைத்தேய மரக்கறி வகைகள், கிழங்கு வகைகள், கீரை வகைகள் முதலியவற்றையும், பாரம்பரிய தமிழர் சமையற்கலையின் சிறப்பையும் மேம்பாட்டையும் பிறநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன் அதன் மூலம் அவர்களுக்கு எமது முன்னோர்கள் தேடி வைத்த ஆரோக்கிய வாழ்வின் வழிமுறைகளையும் புதிய சக்தியையும் மகிழ்ச்சியையும் எற்படுத்துவதே இந்நூலின் படைப்பாளி ஜோர்ஜ் டயஸ், இப்பாரிய பணியை முன்நின்று நடத்தி முடித்தமைக்குக் காரணம் என்கிறார். உலகில் மிக நாகரிகமான உணவுப் பழக்கங்களை மேலை நாட்டவரே கொண்டுள்ளனர் என்ற மாயையை இந்நூல் குறைந்த பட்சம் ஜேர்மனியரிடையேயாவது அவர்களது மொழியிலேயே விளக்கி அதை நீக்கி வைக்கும் வலுவைப் பெற்றிருக்கிறது. ஜேர்மனியர்களின் பார்வையில் தமது நாட்டில் அகதிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர் என்ற ஒரு இனம் பற்றிய விரிவான பார்வையை இந்நூல் புகலிடத்தில் உருவாக்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முருகர் குணசிங்கம், நியுசிலாந்தின் ஆ.தா.ஆறுமுகம்;, டென்மார்க்கின் தர்மகுலசிங்கம், ஜேர்மனியின் சரவணபவான், லண்டனின் என்.செல்வராஜா, பின்லாந்தின் உதயணன் போன்று இன்னும் பலர் தத்தம் புகலிட தேசங்களில் இருந்துகொண்டு மட்டுப்படுத்தப்பட்ட சுய நிதிவளத்துடன், தனி மனித முயற்சிகளாகப் பல தமிழியல் ஆய்வுகளையும், இலக்கியத் தேடல்களையும், வரலாற்றுப் பதிவுகளையும் இன்றும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரினதும் பணிகள் விரிவான பதிவுக்குள்ளாக்கப்படவேண்டியவையாகும். நாளை அவர்களது வழித்தோன்றல்களும் தமது முன்னோரின் பாதையில் அதையே செய்வார்கள். அதே வேளை நம்மில் ஒருசாரார் இலக்கிய மேடைகளிலும், கைக்கெட்டும் சஞ்சிகைகளிலும் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று பாரதி தானாகச் சொல்லாத வார்த்தைகளை அவனே சொன்னதாக முழங்கிக்கொண்டுதான் இருப்பார்கள்;- இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு.

முற்றும்

Series Navigation