புலன்கள் துருத்தும் உணர்வுகள்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

சுவாதி



சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான்
இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்…!

எனக்கான சரியான இடம்
எங்கோ ஒரு புள்ளியில் புலமாய்,
பயணப்பட வேண்டிய அகதியாய்
நான் !
தவிர்க்கவியலாத , அவசியமான
நீண்ட தூரப் பயணம்
சென்றடையவென்று இன்னமும்
மீந்திருக்கிறது.
சாவிகள் தொலைந்து போன
துருப்பிடித்த இரும்புக் கதவுகளின் பின்னால்
நான் தேடிய என் வாழ்கையின் தீர்வுகளும்
தேர்வுகளின் தகமைகளும்
அடைந்து போனதை
உணர்த்தப்பட்ட நிஜத்தின் வலி
மீண்டு …வெளிக் கொணர திராணியில்லை..
முயற்சிகளின் தோல்விகளில்
வெகு விரைவில் களைத்துப் போகிறேன்.

விளக்கங்கள் சொல்லவியலாத
கனத்த மனம்
எதனுள்ளோ நான் சிறைபட்டதை
எனக்கு உணர்த்துகிறது.
ஆனாலும் …அப்பால்
பயணிக்கவென்று எதிரில்
வெறிச்சோடிய
தனித்துப் போன வாழ்கைச்சாலை!
தடைகள் தகர்த்தி
நட்க்க வேண்டிய கட்டாயங்கள் எனக்கு!
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு,
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!

நினைவுகள் சுமந்து களைத்துவிட்ட இதயத்துடன்
நரகங்களுக்கூடாகச் செல்லும்
புதர்கள் மண்டிய முட் பாதைகளில்
எனக்கான சுவர்க்கத்தின் புலத்தை தேடியபடி..
மூச்சிரைக்கிறது..!
இளைப்பாறவும்,
சற்றே சுமை இறக்கவும்
ஏதாவது இடம் தேடுகிறேன்…
மயானங்கள் இறைந்த பூமியில்
சமாதிக் கற்களா சுமை தாங்கியாக?

ஆனாலும்..அப்பாலும்…
நான்
எனக்கான மனிதர்களின்
இதயங்கள் வைக்க வேண்டிய இடத்தில்
பாறாங்கற்கள் புகுந்திருப்பதை
கவனிக்க விரும்பவில்லை,
நிரந்தரமாய்
முகங்களுக்கு மேல்
முகமூடிகள் பூட்டிய வேடதாரிகளை
பார்க்க வேண்டாம்,
என்னை நானே
இறக்கைகள் இழந்த பட்சியாய்
பச்சாதபப் பட வேண்டாம்…
ஆதலால்
பயணப்பட வேண்டும்..
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!


mswathi1025@gmail.com

Series Navigation