புரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

பாவண்ணன்


‘என் பொண்டாட்டியை நான் அடிக்கறத தட்டிக்கேக்க நீ யாரு ? ‘ என்கிற குரல் ஒலிக்காத தெரு இந்தியாவில் இருக்குமா என்பது சந்தேகம். இக்குரலைக் கேட்கும்போதெல்லாம் அக்குரலுக்குரியவர்கள் மனசாரத் தம்மை நம்பி வரக்கூடிய பெண்ணை மனைவி என்கிற ஒரே எண்ணத்தின் அடிப்படையில் கைநீட்டி அடிப்பதைத் தம் அடிப்படை உரிமை என்று நினைப்பதைப்போலத் தோன்றும். இப்படி நிகழும் பல சண்டைகளைத் தீர்க்கப் பல இடங்களில் முயற்சி செய்திருக்கிறேன். அவமானமும் அடைந்திருக்கிறேன். ‘அவளுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டியே, நீ என்ன அவள வச்சிருக்கியா ? ‘ என்று வந்துவிழும் நெருப்பைப்போன்ற சொற்களைக் காது கொடுத்துக் கேட்க இயல்வதில்லை. அக்கணத்தில் மிகப்பெரிய அசிங்கமொன்று உடல்மீது வந்து விழுந்ததைப்போல இருக்கும்.

நானும் அமுதாவும் திருமணமானவுடன் ஹோஸ்பெட்டில் குடியேறினோம். அதிகாலையில் எழுந்து நான் மட்டும் புறநகரிலிருந்து நகரின் உட்பகுதியை நோக்கி நடந்து சென்று பால் வாங்கி வருவேன். நாலைந்து நாள்கள் கழித்து நான் பாலுக்காகக் கிளம்ப இருந்த நேரத்தில் இளம்பெண்ணொருத்தி பால் குடத்துடன் வந்து நின்றாள். எதிர்வரிசையில் இருந்த வீடொன்றைக் காட்டி அங்கிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்டாள். காலையில் பால் வணிகம் தன் தொழில் என்றும் தன்னிடம் பால் வாங்கினால் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சொன்னாள். எங்கள் இருவருக்குமே அவளைப் பார்க்க இரக்கமாக இருந்தது. உடனே சம்மதம் தெரிவித்துவிட்டோம்.

ஒன்றிரண்டு வாரங்களுக்குள் அவளும் அமுதாவும் நல்ல தோழிகளாகிவிட்டார்கள். சின்னச்சின்னக் கன்னட வார்த்தைகளை அவளுக்குச் சொல்லித் தருவதில் பால்காரி வெற்றி கண்டுவிட்டாள். பால்காரியின் சோகக் கதையை அமுதாவும் தெரிந்துகொண்டாள். அவள் கணவன் மகாமுரடன். திருமணமாகி ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தைகள் இல்லை. எந்த வேலைக்கும் போவதில்லை. மிரட்டி மிரட்டியே இவளிடமிருந்து பணத்தையெல்லாம் பிடுங்கிக் குடித்துவிடுவான். போதையில் இரவுநேரத்தில் திரும்பியதும் அவளை அடிப்பதும் வசைபாடுவதும் குறைந்தது ஒன்றிரண்டு மணிநேரமாவது நடக் கும். பணம் தராவிட்டால் பசுக்களுக்கு விஷம் வைத்துவிடுவதாகப் பயமுறுத்துவான். இதையெல்லாம் கேட்கக் கேட்க வருத்தமாக இருந்தது. பால்காரியின் கணவன்மீது கோபம் கோபமாகவும் இருந்தது.

அவர்களுடைய சண்டைக்காட்சியை ஒருநாள் பார்க்க நேர்ந்தது. காதுகொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு வசைவார்த்தைகள். ஆனால் அப்படி ஒரு சண்டை அங்கே நடக்கவே இல்லை என்பதைப்போல தெருவில் இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் தத்தம் வேலைகளில் மூழ்கியிருந்தார்கள். பொறுத்துக்கொள்ள முடியாத ஒர் எல்லையைத் தாண்டியதும் நான் அவர்கள் முன்னால் போய் நின்றேன். அவன் கைப்பிடிக்குள் சிக்கியிருந்த அவள் தலைமுடியை விடுவித்தேன். ஒரு மிருகத்தின் எலும்பைப்போல அவன் கை இருந்தது. அவன் கையைப் பிடித்து இழுத்து உதறிய உதறலில் அவன் நாலைந்து அடி துாரத்துக்குத் தள்ளாடிப் போய் விழுந்தான். ரோஷத்தோடு அவன் வெகுண்டெழுந்து என் பக்கம் வந்தான். நான் எதற்கும் தயாரான மனநிலையில் இருந்தேன்.

‘புருஷன் பொண்டாட்டி விஷயத்துல தலையிடறதுக்கு நீ யாரு ? ‘ என்று என்னைப் பார்த்துக் கேட்டான். ‘நாலுபேரு பாக்கற மாதிரி பொது இடத்துல வந்து அடிச்சி சண்டைபோட்டா யார் வேணுமின்னாலும் நியாயத்த கேக்கலாம் ‘ என்றேன் நான். என் குரல் அவன் தலைக்குள் பதிவே இல்லை. ‘நீ யாரு நீ யாரு ? ‘ என்று என்னை மறுபடியும் மறுபடியும் மடக்குவதிலேயே குறியாக இருந்தான். தொடர்ந்து ‘என் பொண்டாட்டிய வீட்டுக்குள்ளயும் அடிப்பேன், தெருவிலியும் அடிப்பேன், அதைக்கேக்க நீ யாரு ? ‘ என்று மீண்டும் கத்தினான். நான் மெளனமாக இருந்த ஒரு கணத்தில் சட்டென குனிந்து ‘அவமேல கைபட்டா ஒனக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருதே, நீ என்ன அவள வச்சிட்டிருக்கியா ? ‘ என்று கூச்சமே இல்லாமல் கேட்டான். ஒருகணம் நான் அப்படியே அதிர்ந்துபோனேன். இப்படியும் ஒரு மனிதன் கேட்பானா என்று ஒடுங்கி நின்றேன். மறுகணம் எனக்குள் ஒருவித நெருப்பு படர்வதை உணர்ந்தேன். அதற்குள் அமுதாவும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் வந்து என்னை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்துத் திருப்பி அழைத்துச் சென்றவிட்டனர். அந்தக் குரல் என் மனத்தில் எழுப்பிய வேதனையைப் பல ஆண்டுகளானாலும் மறக்கவே முடியவில்லை.

பால்காரியைப்போன்ற பெண்கள் இந்தியாவில் ஏராளமாக உள்ளார்கள். அவர்கள் வாழ்வில் விடிவை உண்டாக்கித்தர முடியவில்லை என்றாலும் அவர்களைப்பற்றிய ஆதங்கங்களைப் படைப்பாளிகள் தம் படைப்புகளில் முன்வைக்கத் தவறியதில்லை. அவ்வகைத் தமிழ்க்கதைகளில் முக்கியமான ஒரு சிறுகதை ஜெயந்தனுடைய ‘அவள் ‘. இக்கதையில் இடம்பெறும் அவளுக்கு எந்தப் பெயரும் இல்லை. பொதுவாகவே அவள் என்றே குறிப்பிடப்படுகிறாள். இந்திய அடித்தட்டுப் பெண்களின் அடையாளமாக அவளைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். அமைச்சுப் பணியென்றும் களப்பணியென்றும் ஏறத்தாழ நுாறு பேருக்குக் குறையாமல் வேலை பார்க்கிற பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தொடங்குகிறது கதை.

அன்று சம்பளநாள். அந்த அலுவலகத்தில் வேலை செய்கிற கண்ணுச்சாமி என்கிற ஊழியனுடைய மனைவி எலும்பும் தோலுமான தன் குழந்தைகளுடன் மேனேஜரைச் சந்தித்து கண்ணுச்சாமிக்குரிய சம்பளத்தைத் தன்னிடம் தருமாறு கெஞ்சுகிறாள். மனைவி மக்களைப்பற்றித் துளியும் அக்கறையில்லாத கண்ணுச்சாமி குடித்தும் பிரயாணியும் கோழிக்கறியும் தின்று சம்பளப்பணத்தையெல்லாம் அழித்துவிடுவதாகவும் வீட்டுக்குப் பணமே தருவதில்லையென்றும் புகார்சொல்கிறாள். பட்டினி கிடக்கிற பிள்ளைகளின் முகங்களைப் பார்த்தாவது இந்த மாதச் சம்பளத்தைத் தன்னிடம் தந்துவிடுமாறு மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்கிறாள்.

ஒருத்தியால் இவ்வளவுதான் இளைக்க முடியும், இவ்வளவுதான் கறுக்க முடியும் இவ்வளவு குறைவாகத்தான் உடுக்க முடியும் என்னும் தோற்றத்துடன் தன் முன்னிலையில் நிற்கும் பெண் சதாகாலமும் தும்பைப்பூ நிறத்தில் வெள்ளைவெளேரென்று உடுத்திக்கொண்டு அலுவலகத்துக்கு வரும் கண்ணுச்சாமியின் மனைவி என்பதையே நம்ப முடியாத மேனேஜர் ஒருவர் சம்பளத்தை இன்னொருவருக்குத் தரச் சட்டத்தில் இடமில்லை என்றும் வேண்டுமென்றால் அவன் சம்பளம் வாங்கும்போது ஒருவார்த்தை இதைப்பற்றிச் சொல்லிப் பார்க்கலாம் என்றும் சொல்லிவிட்டு உள்ளே போய்விடுகிறார். ஏமாற்றத்தில் முகம் துவளும் அவளுக்கு ஆறுதல்சொல்லி சுவரோரமாக நிழலில் உட்காருமாறு சொல்கிறான் சேவகனான சபாபதி.

ஏராளமான அளவில் வருவதும் போவதுமாக இருக்கிற கூட்டத்தைப் பார்க்கும்போது அவளுக்கு வெட்கமாக இருக்கிறது. வந்துபோகிற எல்லாருக்கும் தான் தாழ்ந்து கிடப்பதைப்போல உணர்கிறாள். அன்று காலையில் நடந்த சண்டையை மறுபடியும் நினைத்துக்கொள்கிறாள். அச்சண்டையின் முடிவில்தான் ‘இன்னிக்கு ஒன் ஆபீஸ்க்கே வந்து ஒன் யோக்கியத எல்லாத்தயும் எடுத்து வூடலே நான் பெரியசாமி மக இல்ல ‘ என்று சவால் விடும் அளவுக்கு பேச்சுவார்த்தை முற்றிவிடுகிறது. சிறிது நேரத்தில் இடுப்பிலிருந்த குழந்தை அழுகிறது. அதைத் துாக்கி வைத்திருக்கும் மூத்த பெண் சோர்வோடு தாயின் முகத்தைப் பார்க்கிறது. முந்தானையில் முடிந்து வைத்திருக்கிற எட்டாணாவில் பிள்ளைக்கு ஒரு காப்பி வாங்கித்தர எண்ணும்போது தனக்கும் காப்பி வேண்டும் என்று மூத்தபெண் சிணுங்குகிறாள். அதைக்கேட்டு அவளுக்குக் கோபம் வருகிறது. குழந்தையைத் திட்டுகிறாள்.

அப்போது வாசலில் கண்ணுச்சாமி தென்படுகிறான். அவன் நண்பனொருவன் ஜாடை காட்டியதில் தன் மனைவி வந்திருக்கும் செய்தியை நொடியில் புரிந்துகொள்கிறான். வேகமாக அவளை நெருங்கித் தணிந்த குரிலில் ‘மரியாதியா இங்கேயிருந்து போயிடு.. இல்ல, ஒனக்கு இங்கயே சமாதி கட்டிப்பிடுவேன் ‘ என்று அதட்டுகிறான். அவள் மறுக்கமறுக்க அவனுடைய சீற்றம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்போது கண்ணுச்சாமிக்கு மானேஜரின் அழைப்பு சபாபதி மூலம் வருகிறது. மூணுமாதமாக குடும்பத்துக்குப் பணம் தராமையைப்பற்றி விசாரிக்கிறார் மானேஜர். அவருடைய கேள்விகளுக்கு விவாதிக்கும் தொனியில் பதில் தருகிறான் கண்ணுச்சாமி. இறுதியில் அவனிடம் ‘பணத்த இன்னிக்கு என் முன்னால கொடு ‘ என்று சொல்கிறார் மானேஜர். அவன் பட்டென்று நிர்தாட்சண்யமான குரலில் ‘அப்படியொன்னும் எங்குடும்பத்துக்கு நான் குடுக்கறதுக்கு இன்னொருத்தர சாட்சி வச்சிக்கணுமின்னு அவசியமில்ல சார் ‘ என்று எகத்தாளமாகப் பேசிவிடுகிறான் கண்ணுச்சாமி.

ஐந்து நிமிட அளவில் கண்ணுச்சாமி சம்பளம் வாங்கிக்கொண்டு படியில் இறங்குகிறான். இவள் ஓடிப்போய் இரண்டு கைகளையும் விரித்து மறிக்காத குறையாக அவன் முன்னால் நிற்கிறாள். வீட்டுக்கு வந்து தருவதாளக முதலில் சாக்குப்போக்கு சொல்கிறான். பிறகு வீட்டுக்குச் செல்லுமாறு மிரட்டுகிறான். இறுதியில் அவளை அடிக்கிறான். ஆத்திரத்தோடு முழுப்பலத்தையும் திரட்டி அவள் மூக்கில் ஒரு குத்து விடுகிறான். அந்த அடியில் துவண்டு கதிகலங்கிப் போகிறாள் அவள். மூக்கிலிருந்து கொடகொடவென்று ரத்தம் கொட்டுகிறது. குழந்தைகள் பயந்து அலறுகிறார்கள். தடுக்க வரும் சக ஊழியர்களைக் கெட்ட வார்த்தைகளைச் சொல்லி விலக்கிவிடுகிறான். மீறித் தடுக்க வருகிறவர்களிடம் ‘நான் என்ன ஒன் பொஞ்சாதியயா போட்டு அடிக்கறேன் ? ‘ என்று எகிறுகிறான்.

மூக்கில் ரத்தம் ஒழுக நின்றிருப்பவளைப் பார்த்து ‘தெரியுதா, ஜாக்கிரதயா இரு ‘ என்று சொல்லிவிட்டு வெற்றி நடையுடன் புறப்படுகிறான் கண்ணுச்சாமி. யாரும் எதிர்பாராதபடி அவள் சட்டென அவன் பின்பக்கம் பாய்ந்து அவனுடைய ஜிப்பாவைப் பற்றுகிறாள். ‘என்னையும் என் புள்ளயயும் கொன்னு போட்டுட்டுப் போயிடு ‘ என்று அழுகிறாள். அவனும் சற்றும் தயங்காமல் ‘சாவுங்கடி ‘ என்றபடி வயிற்றில் குத்துகிறான். ஆனாலும் அவள் ஜிப்பாவின் பிடியைத் தளரத்தவில்லை. மரணப்பிடியாக இறுக்குகிறாள். அவன் இன்னொரு குத்துக்காகக் கையைப் பின்னுக்கு இழுத்தபோது அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்காதபடி ஒரு பலமான அடி பிடறியில் விழுகிறது. யாரென்று பார்ப்பதற்குள் முகத்திலும் அடி விழுகிறது.

அவனுடைய அட்டகாசங்களைப் பார்த்துத் தாங்கிக்கொள்ள முடியாமல் கிராம சேவகரான சிதம்பரம்தான் அவனை எதிர்கொள்ளத் தயாராகிறார். ‘ராஸ்கல், தாலி கட்டிட்டா கொன்னுடலாம்ன்னு நெனப்பாடா ‘ என்றபடி மற்றொரு அடி கொடுக்கிறார். ‘நீ யாருய்யா ? ‘ என்று முடிப்பதற்குள் காதோடு விழுகிறது மற்றொன்று. விடுபடுகிற அவள் ஆங்காரத்துடன் ‘அப்படிப் போடுங்க சாமி, மவராசன் நீங்க நல்லா இருக்கணும். சாவட்டும், கொலகாரப் பாவி ‘ என்று சொல்கிறாள். அடித்தபடி அவனை உள்ளே அழைத்துச் செல்கிற சிதம்பரம் மேனேஜர் எதிரில் அவனை உட்கார வைத்துவிட்டுப் போலீஸ் ஸ்டேஷனைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்கிறார். தொடர்பு கிடைத்துப் பேச முற்படும் தருணத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கூட்டத்தை விலக்கியபடி இரண்டு கைகளையும் விரித்து ஏந்தியபடி ‘ஐயோ சாமி ‘ என்று தடதடவென்று ஓடிவந்து தடுக்கிறாள். போலீஸ் ஸ்டேஷனில் அவனை அடித்தே கொன்று விடுவார்கள் என்றும் ஏற்கனவே குடிபோதையில் அவர்களோடு வம்பு செய்திருப்பதாகவும் அலுவலகத்தில் வேலை செய்பவன் என்பதால் அவர்கள் விட்டுவைத்திருப்பதாகவும் பிடித்துக்கொடுத்தால் கட்டித் தோலை உரித்துவிடுவார்கள் என்றும் சொல்கிறாள்.

‘அடிக்கட்டுமே, அப்பவாவது புத்தி வருமில்ல ‘ என்று சொல்கிறார் சிதம்பரம். ‘உசுரு இருந்தாத்தானே சாமி புத்தி வரும். ஜெயில்ல போட்டா நாலு நாள்ள செத்துப்போயிடும் சாமி ‘ என்று அழுகிறாள் அவள். முதலில் இரண்டு மனசாக நிற்கிறார் சிதம்பரம். பிறகு அவளுடைய கோரிக்கைக்கு இணங்கி எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறார். தடுமாறியபடி எழுகிற கண்ணுச்சாமி நிமிர்ந்து நிதானமாக அவளைப் பார்த்து ‘ஆளு வச்சா அடிக்கற ? இரு. வீட்டுக்குத்தான்டி வருவே, வா, அங்க வந்து இந்தக் கண்ணுச்சாமி யாருன்னு பாரு ‘ என்றபடி வெளியே நடக்கிறான். குமுறிக்கொண்டு வரும் துயரத்தை அடக்கியபடி தோல்வியும் ஏமாற்றமும் விரக்தியும் கலந்த மனநிலையில் ‘ம் நடங்க ‘ என்றபடி குழந்தைகளுடன் அலவலகத்தைவிட்டு வெளியேறுகிறாள். கதை அத்துடன் முடிகிறது.

ஆண்மனமும் பெண்மனமும் இயங்கும் விதங்களின் விசித்திரத்தை இங்கே நாம் பார்க்கலாம். அலுவலகத்துக்கு மனைவியின் வருகையை எதிர்பார்க்காத கண்ணுச்சாமி மனைவியை அங்கிருந்து விரட்டுவதைத் தன் உரிமையாக நினைக்கிறான். அதற்காக அவளை அத்தனைப்பேர் கூடியுள்ள ஒரு பொது இடத்தில் திட்டுவதற்கும் உதைப்பதற்கும் அவன் சிறிதும் தயக்கம் காட்டுவதே இல்லை. பணத்துக்காக அவள் முன்வைக்கும் கெஞ்சுதல்களை அவன் கிஞ்சித்தம் பொருட்படுத்துவதில்லை. அடிபட்டு எதிர்க்கவியலாத ஓர் இக்கட்டான சூழலில் அகப்பட்டு மீண்ட நிலையிலும் அவன் எதையும் பொருட்படுத்தாதவானாகவே காணப்படுகிறான். இறுதியில் தற்செயலாக நிகழ்ந்த சம்பவத்துக்கு அவளே காரணம் என்று பழிசொல்லவும் அவள்மீது பெருகும் சினத்தைத் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்காகக் காத்திருப்பவனுமாகவே காணப்படுகிறான். மாறாக, தொடக்கத்திலிருந்து பணத்துக்காக கெஞ்சுகிற மனைவி அவன் காவல்நிலையத்தில் அகப்படப்போகிறான் என்றதும் தன் தேவையையும் உதறி அவனை விடுவிக்கிறவளாக மாறிவிடுகிறாள். ஒரு விளிம்பிலிருந்த மனம் ஒரே நொடியில் வேறொரு விளிம்புக்குத் தாவிவிடுகிறது. ஆண் மனத்தில் எந்தப் புறச்சூழல்களாலும் உருவாகாத மாற்றம் பெண் மனத்தில் உடனடியாக உருவாகிவிடுகிறது.

புறச்சூழலால் மாற்றமுறும் ஆண்மனமாக சிதம்பரத்தின் மனத்தைக் குறிப்பிடலாம். தலையிடக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை ஒருகணத்தில் உதறி கண்ணுச்சாமியை அறைந்து வழிக்குக்கொண்டுவருவது வரை சரியாகவே இயங்குகிறது. ‘எங்க கண்ணுமுன்னாலயே ஒன் பொஞ்சாதிகிட்ட குடுறா பணத்தை ‘ என்று சொல்லியிருக்கவேண்டிய சிதம்பரம் காவல்நிலையத்துக்குத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்யும்போது பிசகிவிடுகிறது. அவர் கண்ணுச்சாமியை அடித்ததும் வழிக்குக் கொண்டுவந்ததும் அவள்மீது உள்ள இரக்கத்துக்காக அல்ல, தன்னை எதிர்க்கும் துணிச்சல் எவனுக்கும் இல்லை என்பதைப்போல இயங்கிய கண்ணுச்சாமியின் சுதந்தரமான மிருகத்தனத்தை அடக்குவதை அவர் மனம் ஒரு சவாலாக ஏற்றுக்கொள்வதால்தான் என்று தோன்றுகிறது. காவல்நிலையத்தில் அவனை ஒப்படைப்பதன் வழியாகவே தன் ஆண்மை நிறுவப்படும் என்று அவர் நினைத்திருக்கலாம். மனத்தின் புதிர்முடிச்சை அவிழ்ப்பது மிகப்பெரிய சவால் என்பது மிகையான கூற்றில்லை.

நெருக்கடியான சூழலில் பெண்களின் மனம் நேர்எதிரான ஒரு முடிவை அடைவதற்கான சரியான காரணத்தையும் கண்டறிய முடிவதே இல்லை. காலமெல்லாம் தன்னை அடித்து இம்சைப்படுத்துகிற ஒருவன் மற்றொருவன் கையால் அடிபடுவதைக் காண இயலாத தன்மையா ? பயனற்ற ஒருவனாக இருந்தாலும் தமக்கும் தம் பிள்ளைகளுக்கும் கிடைக்கக்கூடிய ச்முகப் பாதுகாப்பு இல்லாமல் போகும் என்கிற அச்சமா ? புல்லானாலும் புருஷன் கல்லானாலும் கணவன் என்கிற பழைய எண்ணமா ? தன் கணவன் வழங்கும் அடிகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு உண்டு என்கிற நம்பிக்கையா ? தம்மைத் தாமே பலியிட்டுக்கொள்ள உருவாகும் துணிச்சலா ? அடியோ வலியோ தாளவியலாத சூழலில் அபயக்குரல் எழுப்புகிற பெண் உதவிக்கு நீளும் கரங்களையும் தடுத்துவிடுகிற நிலையில் தொடரும் தன் துக்கத்தை எதன்மூலம் துடைத்தெறிவாள் ? எந்தக் காரணத்தையும் மறுப்பதற்கில்லை. அதே சமயத்தில் எதையும் முழுமுழுக்க ஏற்பதற்குமில்லை. விடுவிக்க முடியாத பெரும்புதிராகவே பெண்களின் மனம் இயங்குகிறது.

*

எண்ணற்ற சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியவர். கால்நடை மருத்துவத்துறையில் பணியாற்றியவர். ‘கோடு ‘ என்கிற சிற்றிதழைச் சிறிது காலம் நடத்தி வந்தார். ‘அவள் ‘ என்னும் சிறுகதை ஆகஸ்டு மாத ஆனந்த விகடன் இதழில் 1981 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1981 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதைகளில் சிறந்த ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1982 ஆம்ஆண்டில் வானதிப் பதிப்பக வெளியீடாக வந்த ‘அவள் ‘ என்னும் சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

paavannan@hotmail.com

Series Navigation

author

பாவண்ணன்

பாவண்ணன்

Similar Posts