புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி

This entry is part [part not set] of 6 in the series 20000827_Issue

– கு. அழகிரிசாமி


ராமநாதனுக்குப் பட்டண வாழ்க்கை அலுத்துவிட்டதாகச் சொல்ல முடியாது. வெறுத்து விட்டது. அதுதான் உண்மை. அவன் சென்னைக்கு வந்து அதிகமாய்ப் போனால் நாலு வருஷங்கள்தான் ஆகியிருக்கும். இப்போது அவன் குடியிருப்பது இரண்டாவது வாடகை வீடுதான். ஆபீஸில் பற்றாக்குறைச் சம்பளம் என்றும் சொல்வதற்கில்லை. இத்தனையும் இருந்தும் சென்னை நகரை அவன் விஷமாக வெறுத்தான். ‘ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் விழுந்த அணுகுண்டுகள் இந்தப் பாழாய்ப்போன பட்டணத்தில் விழுந்து ஊரைத் தரை மட்டமாக்கியிருந்தால் வேறு எங்காவது தலைநகரை மாற்றியிருப்பார்கள் அல்லவா ? மாற்றாவிட்டாலும் சுடுகாட்டிலாவது நிம்மதியாகக் குடியிருந்திருக்கலாமே ‘ இப்பொழுது சென்னையில் அல்லவா குடியிருக்கவேண்டியிருக்கிறது ? ‘ –இப்படி ஒரே வெறுப்பு. நண்பர்களிடம் பலதடவை தன் வெறுப்பைக் கொட்டி மனக் கொதிப்பை ஆற்றியிருக்கிறான். அவர்களுக்கு ராமநாதனுடைய பேச்சையும் ஆவேசத்தையும் பார்க்க வியப்பாக இருந்தது. ‘யாரையும் எதையும் வெறுத்துப் பேசுகிறவன் அல்லவே ‘ சிரித்த முகத்துடன் சுமுகமாகப் பழகுபவன்; உல்லாசப் போக்குடையவன்; அப்படிபட்டவன் இந்த மாதிரி பேசுகிறானே ‘ ‘ என்று அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

ராமநாதனுக்கு இப்படி வெறுப்பும் கசப்பும் சிரசு முட்டிப் போனதற்குக் காரணம் அற்பமான ஒரு விஷயம்தான். சொன்னால் நம்புவது கூடக் கஷ்டமாக இருக்கும். பட்டணம் அல்லவா ? உண்மையை நம்பத் தோன்றுமா ? அவன் குடியிருந்த மாடிவீடுதான் இத்தனைக்கும் காரணம். மனித குணங்களை, குடியிருக்கும் வீடும் உருவாக்குகிறது என்று பிரெஞ்சு நாவலாசிரியர் பால்ஸாக் ஓரிடத்தில் சொன்னது சரியோ தப்போ, இவன் விஷயத்தில் முற்றிலும் சரியாகவே இருந்தது.

அந்த மாடி வீட்டுக்கு அவன் குடித்தனம் வந்து ஒரு வருஷம் ஆகிறது. அதற்கு முன் போதிய காற்றும் வெளிச்சமும் இல்லாத ஒரு சிறு வீட்டில் மனைவியோடும் மைத்துனனோடும் பெற்றோர்களோடும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். கல்யாணமான புதிதில் அந்த இருட்டுக் கொட்டடியில் முன்று வருஷங்களைத் தள்ளினான். பிறகு இந்த மாடி வீட்டுக்குக் குடியேறினான். இந்த வீட்டில் காற்று இருந்தது; வெளிச்சம் இருந்தது; இடவசதி இருந்தது. வீடு பிடிக்கும் சமயத்தில் வீட்டுக்காரனின் பேச்சில் கற்கண்டும் இருந்தது. கேட்கவா வேண்டும் ? குடிவந்து விட்டான். அப்போது அவனுக்கு ஒரு கைக் குழந்தை இருந்ததுடன் மனைவி கர்ப்பிணியாகவும் இருந்தாள்.

இந்த மாடி வீட்டில் ஒரு பெரிய அசெளகரியம்; அதாவது தண்ணீர்க் கஷ்டம். தண்ணீரை வரவழைப்பது. உதைக்கிற மாட்டில் பால் கறக்கும் கதைதான். ‘பம்ப் ‘ அடிக்க வேண்டும். கீழே ஐந்தாறு குடித்தனங்கள்; குடும்பங்கள். காலை நாலரை மணியிலிருந்து, தண்ணீர் சப்ளை நிற்கும்வரை –அதாவது பத்தரை மணிவரை — ஒருவர் மாற்றி ஒருவர் குழாயடியிலேயே காரியம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களே ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுத்தான் காலா காலத்தில் குளிக்கவேண்டி யிருந்தது. இந்த நிலையில் குழாயை மூடுவதற்கு எங்கே சமயம் வாய்க்கும் ? மூடாவிட்டால், மேலே எவ்வளவு அடித்தாலும் தண்ணீர் வராது என்பது வெளிப்படை. எனவே ஒரு வாளித் தண்ணீருக்கும், கீழே குழாயை மூடச்சொல்லி மாடியிலிருந்து கெஞ்ச வேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தும், ராமநாதன் ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்கள் வரை அவற்றை அவ்வளவாக உணராமல் இருந்ததற்குக் காரணம், அவனுடைய மைத்துனன் நடராஜனின் உதவிதான். அவன் வேலைத் தேடிப் பட்டணத்துக்கு வந்து அக்காள் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்தான். ராமநாதன் காலையில் ஒன்பது மணிக்கே அவசர அவசரமாகக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுத் தன் காரியாலயத்துக்கு வேலைக்கு போய்விடுவான். அதிலிருந்து நடராஜன் பம்ப் அருகில் ஒற்றைக் காலில் நின்று, சமயம் வாய்க்கும்போதெல்லாம் தண்ணீர் அடித்து வைத்துவிடுவான். வீட்டுத் தண்ணீர் தேவை பூர்த்தியாகிவிடும். சாயங்காலமும் இதே கதைதான்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு நடராஜனுக்கு சேலத்தில் வேலை கிடைத்துவிட்டது. உடனே அவன் புறப்பட்டுப் போய்விட்டான். அப்பொழுதுதான் ராமநாதன் தண்ணீர்க் கஷ்டத்தை உணர ஆரம்பித்தான். ஒன்று ஆபீசுக்குப் போக வேண்டும்; இல்லையென்றால் தண்ணீர் அடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையும் செய்வது என்பது விடுமுறை நாட்களில் மட்டுமே சாத்தியமாக இருந்தது. என்ன செய்வது ?

‘வீட்டில் பண்ட பாத்திரங்களைத் தேய்த்து வைத்து, துணி துவைத்துப் போடும் வேலைக்காரியைத் தண்ணீர் அடிக்கும்படி சொல்லி, அவளுக்கு மேற்கொண்டு இரண்டோ மூன்றோ கொடுக்கலாம்; அவளும் பிள்ளைகுட்டிகாரி; பிழைத்துப் போவாள்; வேறொருத்தியை வேலைக்கு வைத்து அவளுக்கு பணத்தைத் தூக்கிக் கொடுப்பானேன் ? ‘ என்று நினைத்து, ராமநாதன், கமலாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கமலா என்பவள் வேலைக்காரி. அன்றைய தினம் அவள் குறித்த காலத்திஒல் வராமல் அரை மணி நேரம் தாமதித்து வந்தாள். வந்தவள் விறுவிறு என்று சமையலறையை நோக்கி நடந்து சென்றாள். மீனாவை –ராமநாதனின் மனைவியை –அழைத்தாள். அப்புறம் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அது இந்தப் பக்கத்திலிருந்த ராமநாதனின் காதில் சரியாக விழவில்லை. ஐந்து நிமிஷத்துக்குப் பிறகு மீனா நேரே ராமநாதனிடம் வந்தாள். வந்து ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள். ராமநாதன் அதிர்ச்சியினால் அப்படியே நாற்காலியில் சாய்ந்து விட்டான்.

‘கமலா வேலையைவிட்டு நின்றுகொள்கிறாளாம். ‘

‘ஏன் ? ‘

‘அவளால் தண்ணீர் அடிக்க முடியாதாம். இந்த இரண்டு நாள் தண்ணீர் அடித்ததிலேயே கையும் நெஞ்சும் நோகிறதாம். அதனால் வேலைக்கு வரமுடியாதாம். ‘

‘இத்தனை நாளும் எப்படி தண்ணீர் அடிக்க முடிந்ததாம் ? இதுவரையிலும் நோகாத கை இப்பொழுது நோவானேன் ? ‘

‘அவள் எங்கே தண்ணீர் அடித்தாள் ? நடராஜன் அடித்து வைப்பான். அந்தத் தண்ணீரில் அவள் பத்துத் தேய்த்து, துணிகளையும் அலசிப் போட்டு விட்டுப் போவாள். ‘

‘அப்படியா சமாச்சாரம் ? சரி சரி; கமலாவை இப்படிக் கூப்பிடு ‘ என்றான் ராமநாதன். ‘அதிகச் சம்பளத்துக்குத்தான் இந்த விதமாகக் கிராக்கி பண்ணி அடிப் போடுகிறாள்; நாம்தான் இரண்டோ மூன்றோ சேர்த்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறோமே ‘ என்ற எக்களிப்போடு கமலாவைப் பார்த்து, ‘நீ என்ன இப்படிச் சொல்றே ? இரண்டு வாளித் தண்ணீர் அடிப்பது அவ்வளவு கஷ்டமா ? ‘ என்று அவன் ஆரம்பித்தான்.

வேலைக்காரி பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டும், ஒரு நகத்தை மற்றொரு நகத்தால் சுரண்டிக் கொண்டும் சுவரை ஒட்டி நின்றாள்.

‘என்ன கமலா, என்ன சொல்றே ? என்னிடத்தில் விஷயத்தைச் சொல்லேன் ‘ என்றான் ராமநாதன்.

‘என்னாலே முடியாதுங்க. வேறே யாரையாவது வச்சிக்கோங்கோ ‘ என்று தலையைக் குலுக்கினாள் கமலா.

வீட்டுத் தேவை முழுவதற்குமே தண்ணீர் அடிக்க அவளை ஏற்பாடு செய்ய– அதிலும் கருணையுள்ளத்தோடு ஏற்பாடு செய்ய— நினைக்கப் போய், அவள் மாமூல் வேலையையே செய்ய முடியாது என்று மறுத்துவிட்டாள்.

ராமநாதன் என்னன்னவோ சொல்லிப் பார்த்தான். அவனுடைய மனைவியும் தாங்கினாள். ராமநாதனின் வயது முதிர்ந்த பெற்றோர்களும் கேட்டுப் பார்த்தார்கள். பருப்பு வேகவில்லை. கடைசியில், ‘இரண்டு ரூபாய் கூடத் தருகிறேன். வீட்டுக்குத் தண்ணீர் அடித்து வைத்துவிடு; நித்யப்படி வேலையையும் செய் ‘ என்று ராமநாதன் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்துப் பார்த்தான்.

‘நூறு ரூபா கொடுத்தாலும் சரி, தண்ணீர் அடிக்க முடியாதுங்க. ‘

இதுவே கமலாவின் பதில்; ஆணித்தரமான கடைசிப் பதில்.

அதற்குமேல் அவளைக் கட்டாயப் படுத்துவதில் கெளரவமில்லை என்று, கொடுக்கவேண்டிய பாக்கியைக் கொடுத்து அனுப்பிவைத்தான் ராமநாதன்.

‘இப்படிப் பிடிவாதமாக முடியாது என்று சொல்லி விட்டுப் போய் விட்டாளே ‘ இனி தண்ணீருக்கு என்ன செய்வது ? ‘ என்று தன் கவலையை வெளியிட்டாள் மீனா. தன் நோஞ்சான் உடம்பையும் கைக்குழந்தையையும், வயிற்றுப் பிள்ளையையும் வைத்துக் கொண்டு, ஒரு செம்புத் தண்ணீர்கூட அடிக்க முடியாதே என்ற கவலை அவளுக்கு.

‘நீ ஒரு பைத்தியக்காரி, மீனா ‘ ஒரு நேரக் கஞ்சிக்கு வழி இல்லாமல் எத்தனையோ பேர் தெருதெருவாய் அலையிறாங்க. நீ பேசாமல் இரு. நாளையே வேறு ஒரு வேலைக்காரியைக் கொண்டு வந்து நிறுத்துறேன், பார் ‘ என்று மனப்பூர்வமாகவே சொன்னான் ராமநாதன். அதிலிருந்து இரண்டு மூன்று நாள் நண்பர்களின் வீடுகளில் சொல்லி, ஒரு வேலைக்காரியை வலை போட்டுப் பிடித்துக் கொண்டு வந்தான்.

புது வேலைக்காரியின் பெயர் மங்களம். நல்ல வாலிப வயது. அவளுக்கு நாலு வயதில் ஒரு பெண் குழந்தை. தோற்றத்தில் ஒரு மாதிரி அழகாகவே இருந்தாள். நல்ல நிறம். கட்டுறுதி கொண்ட உடம்பு. எந்த வேலையையும் சளைக்காமல் செய்யக்கூடியவள் என்று பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடலாம். அவளுடைய புருஷன் அவளை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டானாம். மூன்று வருஷங்களாகத் தன் குழந்தையோடு கஷ்ட ஜீவனம் செய்து வருகிறாளாம். இதை அவளே சொன்னாள்.

‘ஐயோ பாவம் ‘ இந்தக் காலத்து ஆண் பிள்ளைகளுக்கு மனசு கல்மனசு ‘ என்று தன் அனுதாபத்தை தெரிவித்தாள் ராமநாதனின் தாயார்.

‘இந்த இளம் வயதில், இவ்வளவு அழகான மனைவியையும், லக்ஷணமான குழந்தையையும் விட்டுவிட்டு எப்படித்தான் அவன் போனானோ ‘ என்று ஆச்சரியப்பட்டான் ராமநாதன்.

எப்படி போனானோ ? போய்விட்டான். இவளும் வேலைக்கு வந்துவிட்டாள்.

அன்று ராமநாதன் நிம்மதியோடு ஆபீசுக்குப் போனான்.

* * *

மங்களம் சுமார் ஒரு வாரம் வரையிலும் எல்லோரும் மெச்சும்படியாக மிகவும் சூட்டிகையாக வேலை செய்து வந்தாள். கீழே குடித்தனம் இருப்பவர்களில் ஆண்கள்— வயது முதிர்ந்தவர்கள், வாலிபர்கள், எல்லோருமே— அவள் பம்ப் அடிக்க வரும்போது, கீழே குழாயைத் திறப்பதில்லை. மேலே அவள் பம்ப் அடிப்பதை அவ்வப்போது ஏறிட்டுப் பார்த்துக் கொள்ளுவதும், அதைக் தத்தம் மனைவிமார் கவனிக்கிறார்களோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்ளுவதுமாகக் கீழே குழாயடியில் உலாவிக்கொண்டிருப்பார்கள். மங்களம் மேலே தண்ணீர் அடித்து முடித்த பிறகுதான் கீழே குழாயைத் திறப்பார்கள். எனவே ராமநாதன் வீட்டில் தண்ணீர்த் தரித்திரம் நீங்கிவிட்டது. இந்தச் சந்தோஷத்தில் மங்களத்துக்கு ஒரு கிழியாத பழைய புடவையையும், அவளுடைய நாலு வயதுப் பெண்ணுக்கு புதுப் பாவாடை, சட்டையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.

இந்தச் சமயத்தில் மங்களத்துக்கு எப்படியோ ‘ஞானோதயம் ‘ ஆகிவிட்டது. பட்டணத்து வேலைக்காரிகள், ஆயிரம் கொடுத்தாலும் செய்யாத — ‘செய்யக்கூடாத ‘ —- வேலையைத் தான் மட்டும் செய்துவரும் விபரீதம் எப்படியோ அவள் மனசுக்குப் புலனாயிற்று. அவ்வளவுதான். மாடு சண்டித்தனத்துக்குத் தயாராகிவிட்டது. பழைய வேலைக்காரியைப்போல இவளும் ஓடிவிடக்கூடாதே என்று, சாப்பாடு போடுவதிலிருந்து சகல் விஷயத்திலும் மீனா தாராளமாக நடந்துகொண்டு வந்தாள். இதைக் கண்டு வேலைக்காரி ஏமாந்து விடுவாளா, என்ன ?

ராமநாதன் பார்த்தான். சம்பளத்தைக் கூட்டித் தருவதாகச் சொன்னான். மங்களம் உடனடியாகச் சம்மதிக்கவில்லை. கடைசியில் மூன்று ரூபாயை அதிகப்படியாகக் கொடுப்பதாக அவன் திட்டவட்டமாகச் சொல்லவே, அவள் வேண்டா விருப்புடன் சம்மதித்தாள்.

இந்த மூன்று ரூபாய்க் கவர்ச்சியும் ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கவில்லை. ஒரு நாள் பழைய வேலைக்காரி கமலா அவளைத் தெருவில் சந்தித்து, வலிய வந்து பேசி, ‘நீ என்ன இந்த வேலையெல்லாம் செய்யிறே ? உன்னைப் போலப் பொம்மனாட்டிங்க இருக்கப் போய்த்தானே எங்களையும் கண்ட கண்ட வேலையெல்லாம் செய்யச் சொல்லி உசிரை வாங்குறாங்க. நீ தண்ணி அடிக்கிறயே, எத்தனை நாளைக்கு அடிப்பே ? எத்தனை நாளைக்கு உன் ஒடம்பு தாங்கும் ? அப்படி உனக்கு எவ்வளவுதான் அள்ளிக் கொடுக்கிறாங்களாம் ‘ ‘ என்று மனசைக் கலைத்தாள். அவ்வளவில் மங்களம் விழித்துக் கொண்டாள். மறுநாளே ராமநாதனின் மனைவியிடம் வந்து, ‘தண்ணீர் அடிக்க முடியாது ‘ என்று அந்த பட்டணத்துப் பல்லவியைப் பாடினாள்.

பழையபடியும் ராமநாதன் அதிர்ச்சிக்குள்ளானான். மங்களத்தின் காலில் விழுந்து கும்பிடாத குறையாக வீட்டோடு எல்லோரும் கெஞ்சிப் பார்த்தார்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா ? வேலைக்காரி தண்ணீர் அடிப்பாளா ?

பாக்கி சாக்கியை கணக்குப் பண்ணி வாங்கிக் கொண்டு மங்களமும் போய்விட்டாள்.

அவள் போய், அதற்குப் பிறகு குப்பம்மாள் என்ற வேலைக்காரி வந்து சேரும் வரையில், அந்த இரண்டு வார இடைக்காலத்தில் ராமநாதன் பட்ட துன்பம் சொல்லும் தரத்ததல்ல. நான்கு நாட்கள் அவன் குளிக்கவில்லை. இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு தண்ணீர் அடித்தான். இரண்டு நாள் ஆபீசுக்கு காலதாமதமாகப் போய், மேலதிகாரியால் கடுமையாக எச்சரிக்கப் பட்டான். ஒரு நாள் கீழே குடித்தனம் இருந்த ஒரு குடும்பத்துடன் சண்டையும் போட்டு விட்டான்.

தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும் என்பார்கள். ராமநாதனோ தண்ணீருக்காக மூன்று பிழை பொறுப்பது என்று மூன்றாவது வேலைக்காரியை ஏற்பாடு செய்தான். இவளும் கிராக்கி பண்ணினாள், வீட்டை மாற்றி மாட்டுத் தொழுவுக்காவது போய்க் குடியேறுவது என்று முடிவு கட்டிக்கொண்டான்.

குப்பம்மாள் என்கிற பெயரைப் பார்த்து அவளைக் கிழவி என்று நினைத்து விடக்கூடாது. அதிகமாகப் போனால் நாற்பது வயதுதான் இருக்கும். பரம ஏழை. முக்கால்வாசி நாள் கந்தலைக் கட்டிக்கொண்டே வேலைக்கு வருவாள். அப்படிப்பட்டவளும் எண்ணி இரண்டு மாதங்களே வேலை செய்தாள்; மூன்றாவது மாதம் இரண்டாம் தேதி சம்பளம் வாங்கியதும், அன்றோடு நின்று கொள்வதாக அறிவிப்புக் கொடுத்துவிட்டாள். காரணம், அதே காரணம்தான். ‘தண்ணீர் அடிக்க முடியாது. ‘ அத்துடன் வேறொரு சாக்கையும் சொன்னாள். அவள் தண்ணீர் அடிப்பது அவள் புருஷனுக்கும் பிடிக்கவில்லையாம்; கோபித்து கொள்ளுகிறானாம்; அடிக்கிறானாம்; பிடிக்கிறானாம்; ‘தண்ணீர் அடிப்பதாயிருந்தால் வீட்டை விட்டே போய்விடு ‘ என்றே துரத்துகிறானாம் ‘

ராமநாதனுக்கு உள்ளுக்குள் ஒரே எரிச்சல். அவள் பேச்சைக் கேட்கக் கேட்க ஆத்திரம் பொங்கியது. ‘இந்தா, அதையும் இதையும் சொல்லிக்கொண்டு நிற்காதே. இஷ்டமிருந்தால் வேலை செய்; கஷ்டமிருந்தால் போய் விடு ‘ என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகச் சொன்னான்.

குப்பம்மாள் மேற்கொண்டு அங்கே நிற்கவில்லை.

‘புருஷனுக்கு பிடிக்கவில்லையாமே ‘ வேண்டியதுதான் ‘ இவள் இங்கே வாங்கிக்கொண்டு போகும் பழஞ்சோற்றை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு ஜீவனம் பண்ணுகிற அழகில் இவனுக்கு இந்த ஜம்பம் வேறு கேடா ? ‘குடிக்கிறது கூழ்; கொப்பளிக்கிறது பன்னீர் ‘ ‘ என்று தெரியாமலா சொன்னார்கள் ? ‘

அன்று முழுவதும் ராமநாதனுக்கு எதைக் கண்டாலும் ஆத்திரம் பொங்கியது. பட்டணத்தையே சுட்டு எரித்துக் கரிக்கோட்டையாக்கிப் பார்க்கவேண்டும்போல ருத்ராவேசம் பிறந்து வீட்டைவிட்டே வெளியே போய் விட்டான். நல்ல வெயில் நேரம். எங்கே போவது என்ற குறிக்கோள் எதுவுமின்றிப் போய்க்கொண்டிருந்தான்.

‘பட்டணத்துக்கு உத்தியோகம் பார்க்க வந்ததற்குப் பதில். கிராமத்திலேயே பிச்சை எடுத்துப் பிழைத்திருக்கலாம். இன்னும் முப்பது வருஷம் உத்தியோகம் பார்த்தாலும் கூட, என்னத்தை அள்ளிக் குவித்துவிடப் போகிறோம் ? காசு செலவாகியும் நிம்மதியான வாழ்க்கையைக் காணோம். கேவலம், வேலைக்காரிக்கு உள்ள மனத்திராணிகூட நமக்கு இல்லை. தனக்கு அசெளகரியம் என்றால் ஒரே நிமிஷத்தில் ஓடிவிடுகிறாள். நாமோ தினந்தினமும் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இந்த உத்தியோகத்தையும், இந்தப் பட்டணத்தையும் கட்டி அழுகிறோம். மகா மானங்கெட்ட பிழைப்பு… ‘ என்று மனம் கசந்து கொண்டே கண்ணில் தட்டுப்பட்ட ஒரு சினிமாக் கொட்டகைக்குள் நுழைந்தான். கவலையைக் கொஞ்ச நேரமாவது மறந்திருக்கலாம் என்று உத்தேசம். இரண்டு மணிநேர ஆங்கிலப் படம். பார்த்து முடித்து வெளியே வந்ததும், நேரே ஒரு ஹோட்டலுக்குப் போய் வயிறாரச் சாப்பிட்டுக் காபி குடித்தான். நிலாக் காலமானதால் அரை மணி நேரமாவது கடற்கரையில் உட்கார்ந்திருந்துவிட்டு வரலாம் என்று பஸ்ஸில் ஏறினான்.

கடற்கரை மணலில் உட்கார்ந்து சுகமான காற்றை அனுபவித்தான். எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி வரும்போது, பக்கத்திலேயே தன் நண்பர் ஒருவருடைய வீடு இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அங்கே போய்ச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வரலாம், அந்தப் பக்கத்தில் தண்ணீர் வசதியுடன் வீடு ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்து விட்டும் வரலாம் என்று எண்ணிப் போனான் ராமநாதன். நல்ல வேளையாக இவன் போய்ச் சேர்ந்த நேரத்தில் நண்பர் இருந்தார். அந்த நண்பர்தான் புரட்சிகரமாக எழுதும் பார்த்தசாரதி; பிரபல நாவலாசிரியர்; சிறு கதைகளும் எழுதுவார். ‘பார்த்தன், ‘ ‘தேரோட்டி ‘ என்ற புனைப்பெயர்களும் அவருக்கு உண்டு.

ராமநாதன் போய் உட்கார்ந்ததும், முதலில் சம்பிரதாயமாக ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக ‘என்ன ஸார், இப்போது ஏதாவது நாவல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா ? ‘ என்று கேட்டான்.

‘ஆம ‘ என்றார் பார்த்தசாரதி.

‘என்ன நாவல் ? ‘ என்று அர்த்தமில்லாமல் கேட்டான் ராமநாதன்.

‘எல்லாம் நம் வாழ்க்கையில் தினம் தினமும் காணும் நாவல்தான் ‘ என்று பதிலளித்தார் எழுத்தாளர்.

‘எப்படி ஸார் உங்களுக்கு கதை தோன்றுகிறது ? எங்களுக்கெல்லாம் ஒரு கதைகூடத் தோன்றுவதில்லையே ‘ ‘

‘கதை தோன்றுவதாவது ? தானே எப்படித் தோன்றும் ? நெருப்பில்லாமல் புகையுமா ? நாம் வாழ்க்கையில் கண்ணாரக் காணும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிதான் கருவாக இருக்கும். அதுதான் சிறு கதையாக, நாவலாக உருவாகும். என்னைப் பொறுத்த மட்டிலும் நான் எதார்த்த வாழ்க்கையை அப்படி அப்படியே சித்தரிப்பவன் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ? பாருங்கள், இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலுக்குக்கூட இந்தத் தெருவிலேயே விஷயம் கிடைத்தது. ஏறக்குறைய கதை முழுவதுமே உண்மையாக நடைபெற்றுக்கொண்டிருப்பதுதான். அந்தக் கதைக்கு உருவம் கொடுத்து, சுவாரஸ்யம் குன்றாமல் சித்தரிப்பதுதான் என் வேலை. ‘

‘அப்படி இந்தத் தெருவில் என்ன நடக்கிறது ? ‘ என்று ராமநாதன் கேட்க, பார்த்தசாரதி நாவலையே சுருக்கமாகச் சொல்லத் தொடங்கி விட்டார்.

அது ஒரு சோகக் கதை. உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு மாதின் கதை. அதனால்தான் நாவலுக்கு ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘ என்று பெயர் கொடுத்திருந்தார்.

கதாநாயகியான அந்த ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘க்கு ஒரு பெண் குழந்தை. தாயையும் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டான் காதலித்துக் கைவிட்ட காதகன். யாருமற்ற அனாதையாக உலகில் தத்தளிக்கிறாள் அபலை. ஊரெல்லாம் சுற்றியும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. தாயும் குழந்தையும் பல நாள் பட்டினி கிடக்கிறார்கள். கடைசியில் குழந்தையின் பொருட்டு உடலை விற்றே சம்பாதிக்கத் துணிகிறாள். சம்பாத்தியத்திற்காக அவள் வெளியே போய்விடும்போதெல்லாம் தனியாக விடப்பட்ட குழந்தை, தாயைக் காணாமலும் பசிக்கொடுமை தாங்க முடியாமலும் அழுது துடிக்கிறாள்…..

இப்படியே அவர் கதையைச் சொல்லிக்கொண்டு வரும்போது ராமநாதனுக்கு மூளையில் ஏதோ தட்டுப் பட்டதுபோல் இருந்தது. உடனே ‘சட் ‘டென்று, ‘உங்கள் கதாநாயகி இந்தத் தெருவில்தான் இருக்கிறாளா ? ‘ என்று கேட்டான்.

‘இந்தத் தெருவில்தான், அதுவும் எதிர் வீட்டிலேயே இருக்கிறாள். ‘

‘அப்படியா ‘ எவ்வளவு நாளாக இங்கே இருக்கிறாள் ? ‘

‘வந்து ஒரு மாதமாகியிருக்கும். ‘

‘அவளுடைய பெயர் தெரியுமோ ? ‘

‘தெரியாது. ‘

‘ஆள் எப்படி இருப்பாள் ? ‘

பார்த்தசாரதி வர்ணித்தார். வர்ணனை முடிந்தது.

‘சரி சரி ‘ என்றான் ராமநாதன்.

‘ஏன், என்ன விஷயம் ? நீங்கள் இப்படியெல்லாம் பேசுவதைப் பார்த்தால், அவளைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் போல் அல்லவா தோன்றுகிறது ? ‘

‘அது இருக்கட்டும், அவளை நான் பார்க்கவேண்டுமென்றால் எப்படிப் பார்ப்பது ? ‘

ராமநாதனுக்குத் திகைப்பாகவும் இருந்தது; சிரிப்பாகவும் இருந்தது.

‘அவளிடத்தில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ? ‘ என்று எழுத்தாளர் கேட்டார்.

‘அதை அப்புறம் சொல்லுகிறேன். நீங்கள் மீதிக் கதையையும் சொல்லுங்கள் ‘ என்றான் ராமநாதன்.

எழுத்தாளருக்கு மேற்கொண்டு கதையைச் சொல்லுவதற்கு உற்சாகமில்லாமல் போய்விட்டது. எனவே ராமநாதனை சாப்பிட அழைத்துக்கொண்டு போனார். இருவரும் சாப்பிட்டுவிட்டு வந்து பழையபடியும் மாடியறையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும்போது, நிமிஷத்துக்கு ஒரு தடவை ஜன்னல் வழியாகத் தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் பார்த்தசாரதி.

ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். தனக்கு ஒரு வீடு தேவை என்று ராமநாதன் சொன்னதும் ‘ஏன், இப்போது இருக்கும் வீட்டில் என்ன அசெளகரியம் ? ‘ என்று கேட்டார் எழுத்தாளர்.

அவன் தன் துன்பக் கதையைச் சொல்லத் தொடங்கினான். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஒரு வேலைக்காரி அகப்படாத கஷ்டத்தைச் சொன்னான். ஒவ்வொரு வேலைக்காரியும் கிராக்கி பண்ணியதையும், உடம்பை வளைத்து வேலை செய்ய இஷ்டமில்லாமல் ஓடிவிட்டதையும் விவரித்துக்கொண்டு வந்தான். பார்த்தசாரதிக்கும் அந்த வேலைக்காரிகள் மேல் கடுங்கோபம் வந்தது. இருந்தாலும், ‘எல்லா வேலைக்காரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். வேலை செய்யாமல் சாப்பிடத்தான் எல்லோருக்கும் ஆசை. அவர்கள் காலமும் ஓடிவிடுகிறது ‘ என்றார்.

ராமநாதன் சொந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பார்த்தசாரதி குறுக்கிட்டு, ‘அதோ, அங்கே பாருங்கள், ரிக்ஷாவிலிருந்து இறங்குகிறாளே, அவள்தான்…. ‘ என்றார்.

எட்டிப் பார்த்த ராமநாதனுக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. தான் நினைத்தது சரியாக இருந்துவிட்டதை எண்ணி அவனுக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவளை ரோடு விளக்கின் வெளிச்சத்தில் நன்றாகக் கவனித்துப் பார்த்தான். அவளேதான்.

‘இவளைப் பற்றித்தான் நாவல் எழுதுகிறீர்களா ? ‘ என்று ராமநாதன் கேட்டதற்கு, ‘ஆம் ‘ என்று எழுத்தாளர் ஒப்புக்கொண்டார்.

‘உங்கள் கதாநாயகி யார் தெரியுமா ? என் இரண்டாவது வேலைக்காரி மங்களம் ‘ இவள்தான் ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘ ‘ இவளுக்காகத்தான் கண்ணீர் விட்டுக் கரைகிறீர்கள் ‘ அரை மணி நேரம் தண்ணீர் அடிப்பதற்கு மாட்டேன் என்று நல்ல சம்பளத்தையும், சாப்பாட்டையும் உதறிவிட்டு வந்து, குழந்தையையும் தனியாகக் கதற விட்டுவிட்டுச் சம்பாத்தியத்துக்குப் போய்விடுகிறாளே, இவளுக்கு நாவலும் எழுதவேண்டியதுதான்; நாடகமும் எழுதவேண்டியதுதான் ‘ ‘ என்று ராமநாதன் ஒரு போடு போட்டான்.

எழுத்தாளர் பார்த்தசாரதி என்ன சொல்லுவதென்று புரியாமல், ‘அப்படியா ? ‘ ‘நிஜம்தானா ? ‘ ‘இவள்தானா ? ‘ என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.

ராமநாதன் பேச்சை முறித்து, ‘ஏன் சும்மா அங்கலாய்க்கிறீர்கள் ? அது எப்படியும் போகட்டும், நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்; எனக்கு ஒரு வீடு பிடித்துத் தருகிறீர்களா ? இல்லை, இந்த நாவலைக் கிழித்துத் தூரப் போடுகிறீர்களா ? இந்த இரண்டில் நீங்கள் எதைச் செய்தாலும் அந்த உதவியை மறக்க மாட்டேன் ‘ என்றான். உடனே ‘கடகட ‘வென்று சிரித்தான்.

புரட்சி எழுத்தாளரும் சேர்ந்து சிரித்தார்.

 

 

  Thinnai 2000 August 27

திண்ணை

Series Navigation

Scroll to Top