கல்விக் கனவுகள் : தமிழ் நாடு பொறியியல் கல்வி

This entry is part [part not set] of 6 in the series 20000827_Issue

சின்னக் கருப்பன்


தமிழ் நாட்டில் கிட்டத் தட்ட 150 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பெரிதும் சுய நிதிக் கல்லூரிகள் என்று அறியப் படுகிற வியாபாரக் கல்வி நிறுவனங்கள் தாம். இதை நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. வியாபாரம் எனில் விற்கப் படுகிற பொருள் தரமானதாக இருந்தால், அதன் பயன் உணரப் படுதாய் இருந்தால் , விற்பவன் வாங்குபவன் இருவருக்குமே திருப்தி. கல்வி வியாபாரத்தில் அப்படி இருப்பதாய்த் தெரியவில்லை. நிர்வாகத்திற்கான ஒதுக்கீடு என்று தரப்படும் இடங்களில் பல் விதமாய்ப் பேரங்கள் நடப்பதும், அதன் வழியாக பல ஊழல்கள் நடப்பதும் பற்றியதல்ல இந்தக் கட்டுரை . மாறாக கணிப் பொறியியல் நம் கல்லூரிகளில் பெற்றுள்ள இடமும் அதன் விளைவுகளும் பற்றியது இது.

கிட்டத்தட்ட 32,000 பொறியியல் மாணவர்களுக்கு இடம் உள்ளது. இதில் பெரும்பான்மையும் (கிட்டத் தட்ட 24,000) கணிப் பொறியியல் பயில்விக்கலாம் என்று தொழிற்கல்வி அனுமதியளிக்கும் அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது, மின்னணுவியல் போன்றவை பயில்பவர்களும் கணிப்பொறியியலுக்குள் நுழைகின்றனர். பெரும்பாலோர் வெளிநாட்டுக்குப் போகிற ஆவலுடன் இதில் சேர்கிறார்கள், தவறாக ஆசை காட்டப்பட்டு இதில் சேர்பவர்களும் உண்டு. எனினும், கடந்த 8 வருடங்களில் கணிப் பொறியியல் பலருக்குச் சிறந்த வாய்ப்பினை நல்கியுள்ளது. இதன் மூலம் பெரும் தொழில் முன்னேற்றம் தமிழ் நாட்டில் நடந்துள்ளது. வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் மட்டுமில்லாமல், உள்ளூரிலேயே வேலைவாய்ப்புப் பெருகியுள்ளது.

கணிப்பொறியியல் நோக்கி அனைவரும் படையெடுப்பதால் மற்ற துறைகளில் ஆள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என்று ஒர் அச்சம் இருந்தது உண்மை தான். ஆனால், அப்படியில்லாமல், கணிப் பொறித்துறையில் பெற்ற சம்பள ஏற்றமும் கூட மற்றத் துறையினருக்கு ஏற்றம் அளித்துள்ளது என்று பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். கணிப் பொறிமயமாக்குதல் இந்தியாவில் இன்னமும் முதிர்ச்சிப் பருவத்தை எய்தி விடவில்லை என்பதால், இந்தத் தேவைகள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருக்கும் என்று தான் செய்தி அலசல்கள் தெரிவிக்கின்றன.

கணிப் பொறியினால் வேலை வாய்ப்புகள் பறிக்கப் பட்டு விடும் என்கிற பார்வையும் கூடப் பலருக்கு , நல்ல வேளையாக , இப்போது இல்லை. தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தை எதிர்த்து நிற்பது வியர்த்தமான செயல் என்று அவர்கள் புரிந்துள்ளார்கள்.

கணிப்பொறிப்படிப்பு என்பது, மற்ற சிவில், மெகானிகல் துறைகளைப் போலல்லாமல், மற்றதுறைகளையும் வெகுவாகப் பாதித்து மாற்றங்கள் செய்யவல்லது என்பது மற்ற முன்னேறிய நாடுகளில் நிகழ்ந்த மாற்றங்களை நோக்கும் போது தெரிய வரும். எனவே பொறியியல் துறைகள் மட்டுமின்றி , நில அளவை தொடங்கி நிர்வாகம் வரை, சமூகவியல் தொடங்கி மளிகைக் கடை வரை வாழ்வினை எளிதாக்கவல்லதும், ஆய்வுகளின் விஞ்ஞான மதிப்பீடுகளை நிறுவவல்லதுமான ஒரு துறை கணிப் பொறியியல். அதை வெறும் வேலை வாய்ப்புச் சாதனம் என்று குறுக்கிவிடலாகாது.

ஆனால் இந்தப் பரந்து பட்ட பார்வையை வேலையற்ற இளைஞர்களிடம் எதிர்பார்க்க முடியாது. குறுகிய காலக் கண்ணோட்டத்தில் தான் தனிமனிதர்கள் செயல் பட முடியும். வேலையற்றவர்களிடம் , கல்வித்திட்டம் வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மாறுதல் செய்தாக வேண்டும் என்றெல்லாம் – அது சரியான வாதம் என்றாலும் – பேசுவதில் பயனில்லை. ஆனால் நம் கல்வித் திட்டம் இதனை மனதில் கொண்டு செயல் பட்டால், கணிப் பொறியியலின் சமூகப் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக இருக்கும். உதாரணமாக கிராமத்துப் பருவ நிலை மாறுதல்கள் பதிவு, எந்த நேரம் எந்த விதை என்கிற ஆலோசனைகள் என்று சரியான திசையில் கிராமிய இண்டெர்நெட் மையங்கள் செயல் படும் என்றார்கள். ஆனால், அது பற்றி இப்போது யாருமே பேசக் காணோம்.

கல்வி வியாபாரிகள் இந்தப் பெருகி வரும் வாய்ப்புக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள் என்று சொல்வதைவிட, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டவர்களில் முதன்மையானவர்கள் என்று புரிந்து கொள்வது தான் சரி. இவர்களின் பேராசையைக் கட்டுக்குள் வைத்திருக்க சரியான வழி ஒன்று உள்ளது. அது அரசு கொள்கைகளும், வழிமுறைப் படுத்தும் திட்டங்களும், அங்கீகாரம் வழங்குவதில் சரியான அளவுகோல்களும் கொண்டு கல்வியை முறைப் படுத்துவது. அப்படிப் பட்ட கொள்கையளவிலான அளவுகோல்களில் முக்கியமாய்க் கீழ்க் கண்டவற்றை இவர்கள் மேற்கொள்ள வேண்டும் :

1. அனுமதி அளிக்கும் போது, ஆரம்பக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் இந்தக் கல்வி நிறுவனங்கள் தரும் பங்களிப்பு முக்கிய தகுதியாகக் கருதப் பட வேண்டும். பொறியியல் கல்லூரியில் 400 பேர் சேர்ந்தால், இந்த நிறுவனம் 800 பேர்களுக்காவது ஆரம்பக் கல்வி தரமான முறையில் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட வேண்டும். இந்தப் பணிக்கு பொறியியல் கல்லூரி மாணவர்களின் உழைப்பயும் பயன் படுத்துவதில் தவறில்லை.

2. கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குத் தரும் நடைமுறைப் பயிற்சித் திட்டங்கள் உள்ளூரில் மக்களுக்குப் பயன் படுவதாக இருக்க வேண்டும். உதாரணமாய் கிராமத்துப் பணிகளை கணிணி மயமாக்குவதில் இவர்களின் கவனம் செலுத்தப் பட வேண்டும்.

3. தரமான ஆசிரியர்களை நியமிப்பதிலும் அவர்களுக்கு வருடாவருடம் வளர்ச்சியுறும் தொழில் நுட்பம் பற்றிய அறிவை ஊட்டுவதிலும் கவனம் செலுத்தப் பட வேண்டும்.

4. வேலை தேடுவதை மையப் படுத்திய கல்வி ஒன்றையே குறிக்கோளாய்க்கொண்டு, பொருளாதாரம், வரலாறு , மொழி இவற்றைப் பயில்விக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எம்.ஜி.ஆர் காலத்தில் ஒரு வாதம் முன்வைக்கப் பட்டது நினைவிற்கு வருகிறது. இந்தப் பார்வை ஓர் இமாலயத் தவறாகும். கணிப் பொறியியல் , மற்ற பாடத்திட்டங்களுக்குப் பயன் படும் வகையில் முயற்சி எடுக்கப் பட வேண்டும். கணிப்பொறி மாணவர்களுக்கு மற்ற பாடங்களையும் – மொழி, மற்றும் மானுடவியல்- சமூகம் சார்ந்த துறைகள் – பயிற்றுவிக்க வேண்டும்.

 

 

  Thinnai 2000 August 27

திண்ணை

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்