‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


கமலஹாசன் என்கிற நடிகரின் ‘அன்பே சிவம் ‘ திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு வடமாநிலத்தில் வெள்ளத்தில் தொழிற்சங்கவாதியான கதாநாயகனும், அவனுடன் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் இளம் வர்த்தக அதிகாரியும் (மாதவன்- படத்தில் அவர் பெயர் மறந்துவிட்டது) மாட்டிக்கொள்வார்கள். அந்த நகரத்தின் ஊடே அவர்கள் செல்கையில் காமிரா வெள்ளத்தின் காட்சிகளை காட்டியபடி செல்லும். அதில் ஒரு சிலநொடிகள் ஒரு காவி உடையணிந்த துறவி ஒடுங்கி அமர்ந்து வெள்ளத்தை எவ்வித உணர்ச்சியுமின்றி பார்த்தபடி இருப்பதை காட்டிச்செல்லும். பின்னர் ‘தென்னாடுடைய சிவனே போற்றி ‘ எனச் சொல்லி தினமும் சாளக்கிராம வழிபாடு செய்பவர் வில்லனாக வருவார். அதே நேரத்தில் கேரளா முதல் ஒரிஸா வரை எங்கே விபத்தென்றாலும் அங்கெல்லாம் பிரசன்னமாகும் ஒரு கத்தோலிக்க ‘நன் ‘. அவர்தான் இளம் வர்த்தக அதிகாரிக்கு இரத்ததானம் குறித்து ஞானம் நல்குவார்…இத்யாதி. அண்மையில் நக்ஸலைட் பயங்கரவாதிகள் ஹிந்துதர்மத்தை ‘நில உடைமை சமுதாய அமைப்பினையுடைய எங்களது எதிரி ‘ என பிரகடனம் செய்தார்கள். அதே பிரகடனத்தை இன்னமும் விஷமாக, நக்ஸலைட்களின் வெளிப்படைத்தன்மை இல்லாமல் கோழைத்தனமாக திரையில் செய்தவர் கமலஹாசன் என்கிற போலி அறிவுஜீவி நடிகர். பாலுணர்வைக் கிளப்பும் படங்களில் நடித்துப் பிழைக்கும் இந்த நபரின் ‘முற்போக்குவாதம் ‘ போன்றதே பெரும்பாலான ஏசி ரூம்-செமினார் வாலாக்களின் முற்போக்குத்தனம். இந்த முற்போக்கு வாதங்களில் நாம் காணும் பொதுவானதோர் அம்சம் ஹிந்து மதத்தை தாக்குவது. ஏதோ ஹிந்து மதம் சமூக பிரக்ஞை அற்றதோர் ஒரு மதம் அல்லது ‘இண்டியாவிலே ‘ இந்த மேம்போக்கு அறிவுஜீவிகள் காணும் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஏதோ ஹிந்துமதம்தான் காரணம் என்பது போலவும் ஒரு பம்மாத்து நிலைபாட்டை எடுத்து விட்டால் போதும் – நீங்கள் அக்மார்க் முற்போக்கு அறிவுஜீவிதான் போங்கள்! போன வார திண்ணையில் வாசந்தி என்கிற மேற்படி குழாமைச் சார்ந்த அம்மணி எழுதியிருந்த முற்போக்கு லாவணியிலிருந்து: ‘சுனாமியின் பயங்கரம் பற்றின தகவல்கள் செய்தியை ஆக்கிரமித்தபோதும் சென்னையில் சங்கீதக் கச்சேரிகளும் நாடகங்களும் புத்தக வெளியீட்டு விழாக்களும் நடந்தவண்ணம் இருந்தன. மத்திய மேல் வர்க்க மெத்தனம் மட்டும் அதற்குக் காரணமில்லை. இந்திய மனோபாவமும் காரணம்.நமக்கு பிறப்பும் மரணமும் சமம். புனரபி மரணம் , புனரபி ஜனனம், புனரபி ஜனனீ ஜடரே சயனம். பிறப்பும் மரணமும் ஒரு சுழற்சி. மரணம் ஒரு அசம்பாவிதம் அல்ல. ‘

பேஷ்! இதைவிட தெளிவாக இந்த மனோபாவத்தை தோலுரித்து காட்டமுடியாது என்பதை கூறியேயாக வேண்டும். சுநாமியை தொடர்ந்து பல கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுவதில் எந்த தோய்வும் இருக்கவில்லை. அப்போது அவர்களும் இதே ‘புனரபி மரணம் , புனரபி ஜனனம், புனரபி ஜனனீ ஜடரே சயனம். பிறப்பும் மரணமும் ஒரு சுழற்சி. ‘ தான் இருக்கிறார்கள் போலும். அம்மணியார் கண்டறிந்திருக்கிறார். தமிழ்நாட்டில் பஜகோவிந்தம் மிகவும் பிரபலமாக எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் முக்கிய காரணம். ‘ஸ்தாபகாய சதர்மஸ்ய சர்வ தர்ம ஸ்வரூபிணே ‘ என பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரை வந்தனம் செய்யும் ஸ்லோகத்துடன் ஆரம்பித்து பஜகோவிந்த பாடல் காலை ஐந்து மணிக்கெல்லாம் எங்கள் ஊர் முத்தாரம்மன் கோவிலிருந்து கேட்கும். வேதாந்த கேசரியான சுவாமி விவேகானந்தரின் குரு வணக்கத்துடன் பஜகோவிந்தம் ஒலிக்கும். அப்புனித பாடல் நம்முள் எழுப்பும் மதிப்பீடுகள் அழகானவை. அவற்றின் தளம் வேறு. அதன் குரலிலிருந்து சக மானுடனின் துயரத்தை உதாசீனப்படுத்தி தமது சுகவாழ்வில் மூழ்கும் மதிப்பீடை எவரும் பெற்றதில்லை. அத்வைத வேதாந்தத்தின் கேசரியான சுவாமி விவேகானந்தரை போல சகபாரதீயனின் துயரத்தில் மூழ்கி அவனை கரையேற்ற களமிறங்கியவர் யார் ? ஏன் ஆதி சங்கர பகவத் பாதரையே எடுத்துக்கொள்ளலாம். அவரென்ன சகமனிதனின் மரணம் மரத்துப்போகவா இதை பாடினார் ? அவர் பாடிய தளம் எது ? இந்த பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து வெளிவர கோவிந்த நாமத்தை பாடச் சொன்னார். தமது அன்னையின் மரணத்திற்கு முழு உணர்ச்சி பிரவாகமாக வந்தவர் அவர். மானுட வேடம் தரித்தாயா அதன் அனைத்து உணர்ச்சிகளுக்கும் உறவுகளுக்கும் உரிய மதிப்பை கொடுத்து ஆட்டத்தை ஆடவேண்டும் என்பதற்கு அவரே உதாரணமாக திகழ்ந்தவர். அத்வைத பேரொளியாக திகழ்ந்த பகவான் ரமண மகரிஷி கொடும் வெயிலில் வயலில் வேலைபார்த்த பெண்களுக்கு சேவகனாக சேவை செய்ததை தெரிந்து கொள்ள முற்போக்குக்கு ஏது நேரம் ?

அம்மணியாரின் கருத்துப்படி இதே நியாயத்தை நீடித்துப் பார்ப்போமே. அதே பஜகோவிந்தத்தில் ‘நஹி நஹி ரஷதி டுக்ரங்கரணே ‘ என பகவத்பாதர் கூறியதும் புனரபி ஜனனம் அளவு பரவியுள்ள விஷயம்தான். எனவே அடுத்தமுறை இலக்கணத்தில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை என ஒரு கணக்குகூறி அதற்கு காரணமாகவும் ஆதிசங்கர பகவத்பாதரின் வார்த்தைகளை கூறலாமே. ஏனெனில் இரண்டும் ஒரே அளவான மடத்தனங்கள்தாம்.

கலிபோர்னிய நிலநடுக்கத்தின் போது லாஸ்வெகாஸ் சூதாட்ட கிளப்புகள் மூடினவா என்பதை குறித்து அம்மையார் பேசமாட்டார். அதனை அதே நேரத்தில் இந்த மேம்போக்கு அம்மணி கண்ணை மூடிக்கொள்ளும் மற்றொரு விஷயத்தை பார்ப்போம். இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிகமான அளவு பணபலத்துடன் மதமாற்ற வர்த்தகத்தில் (ஆன்ம அறுவடை வர்த்தகம் என்றும் சொல்லலாம்) ஈடுபட்டிருக்கும் ஒரு ஆசாமி மோகன்.சி.லாசரஸ். தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபை கிறிஸ்தவர்களிடம் இந்த ஆளுக்கு இருக்கும் செல்வாக்கு மகத்தானது. இந்த ஆசாமி ஒரு பத்திரிகை நடத்துகிறார். இவரது ஊழியத்தின் பெயர் ‘Jesus Redeems ‘. இந்த பத்திரிகையில் ஏன் இந்த சுநாமி பேரழிவு என ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தியாவில் விபச்சாரமும் விக்கிர ஆராதனையும் இருப்பதால்தான் மக்களை தண்டிக்க கருணையுள்ள கர்த்தர் இந்த சுநாமியை அனுப்பியுள்ளாராம். ஒரு மக்கள் கூட்டத்தில் கணிசமான ஆதரவும் பணபலமும் மாநிலமெங்கும் பிரச்சார கிளைகளும் உள்ள ஒரு கிறிஸ்தவ தலைவர் கூறியுள்ளது இது. இதை குறித்தெல்லாம் அம்மணியாருக்கு எவ்வித உறுத்தலும் ஏற்படாது. ஆனால் ‘சென்னையில் சங்கீதக் கச்சேரிகளும் நாடகங்களும் புத்தக வெளியீட்டு விழாக்களும் நடந்தவண்ணம் இருந்ததற்கு ‘ புனரபி ஜனனம் புனரபி மரணம் என்கிற வாசகத்தை இழுத்துப்போட்டு அதில் இந்திய மனோபாவத்தை குறை சொல்லி ஏதோ ஒருவிதத்தில் ஹிந்து தர்மத்தின் ஏதாவது ஒரு அம்சத்தை குற்றவாளி ஆக்கிவிட்டால் பூசிய முற்போக்கு அரிதாரம் பூர்த்தியாகிவிடுகிறது. இந்த வெறுப்பியல் அரங்கேற்றத்தில் மனிதநேய ஜதிஸ்வரம் வேறு வாழுகிறது. கடந்த சிலமாதங்களாக தமிழக ஊடகங்களும் சில அறிவுஜீவி வக்கிரங்களும் அரசு இயந்திரமுமாக ஒரு தனிமனிதர் மீது அவிழ்த்துவிட்ட அவதூறுகள் கரை கடந்திருந்தன. பெட்டிக்கடைகள் முதல் தொலைபேசி பெட்டிகள் வரை அவரைக் குறித்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் போல பேசப்பட்டு தமிழ்நாடே அதை ஒருவித வக்கிர மனோபாவத்துடன் ரசித்தபடி இருந்தது. அவரைத் திட்டி அறிக்கை விடுவதில் அறிவுஜீவிகளும் இன்னபிற சமுதாய மனச்சாட்சிகளாக தங்களை பிரகடனம் செய்துகொண்ட முற்போக்கு சன்னிதானங்களும் அவர்களது இளைய சன்னிதானங்களும் போட்டியே போட்டனர். இந்நிலையில் சுநாமி பேரழிவு ஏற்பட்ட செய்தி கேட்டபோது அந்த தனிமனிதர் ‘ஆகா என்னை கைது செய்தீர்களே என்னைப்பற்றி மோசமாக பேசினீர்களே கடவுளே தண்டித்துவிட்டார் பார்த்தீர்களா ‘ என்றெல்லாம் குதிக்கவில்லை. (குஜராத் இயற்கை பேரழிவின் போது ஏறக்குறைய அனைத்து மிசிநரிகளும் அதை செய்து குதூகலித்தனர். இந்த மனோபாவத்திற்கெல்லாம் பின்னாலிருக்கும் கருத்தியலைக் குறித்து அம்மணியார் தம் புலன்களை செயலற்றதாக்கிவிடுவார்.) மாறாக தாம் மிகுந்த வேதனை அடைந்ததை வெளிப்படுத்தினார். இறந்த ஆன்மாக்களுக்காக உபவாசம் இருந்தார். மோட்சதீபம் ஏற்றச்சொன்னார். ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ என்று சொன்னவர் வழி வந்தவர் அவர். ஆனால் அம்மணி போன நூற்றாண்டில் மூன்றாந்தர மிஷிநரிகள் தூக்கிப்போட்ட வாதங்களை துடைத்தெடுத்து அறிவுஜீவித்தன அலாரிப்பு நடத்துவார். ஒருவேளை ‘புனரபி ஜனனம்-புனரபி மரணம் ‘ என்பது பொருந்துவது மலின பிரச்சாரங்களுக்கும் கூடத்தான் போலும்.

-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


infidel_hindu@rediffmail.com

Series Navigation