புத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

ஆசாரகீனன்


காலீத் அபு எல் ஃபாதல் (Khaled Abou El Fadl), லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டப் பேராசிரியராக பணிபுரிபவர். மேலும், இவர் அமெரிக்காவின் பன்னாட்டு மத சுதந்திர ஆணையத்தின் உறுப்பினரும், உலகிலுள்ள மிதவாத முஸ்லிம்களின் சார்பில் குரல் கொடுக்கும் கல்வியாளரும் ஆவார். காலீதின் நம்பகத் தன்மையும், சிந்தித்துச் செயல்படும் போக்கும் இவரை ஒத்தவர்களிடையே தனித்தன்மை கொண்டவராக இவரை அடையாளம் காட்டுகின்றன.

The Place of Tolerance in Islam (2002) என்ற இவருடைய புத்தகம் குறிப்பிடத்தக்கது. இவர் எழுதியுள்ள இதர நூல்களின் விவரம்:

The Authoritative and Authoritarian in Islamic Discourses (1997)
Speaking in God ‘s Name: Islamic Law, Authority and Women (2001)
Rebellion and Violence in Islamic Law (2001)
The Search for Beauty in Islam (2001)
Reasoning with God: Rationality and Thought in Islam (2002)
The Justice of Islam: Comparative Perspectives on Islamic Law and Society (2002)
Democracy and Islam in the New Constitution of Afghanistan (2003)
Islam and the Challenge of Democracy: A ‘Boston Review ‘ Book (2004).

இவர் சமீபத்தில் எழுதியுள்ள புத்தகம் ‘பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல் ‘ (The Great Theft: Wrestling Islam from the Extremists). 320 பக்கங்களுடன் கடின அட்டை (Hardcover) பதிப்பாக வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தை HarperSanFrancisco பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரில் இந்த ஆண்டு மார்ச் மாதம் பெண்கள் தலைமையில் தொழுகை நடத்திய எழுத்தாளர் ஆஸ்ரா நொமானியின் தன்னம் தனியாய் மெக்காவில் (Standing Alone in Mecca : An American Woman ‘s Struggle for the Soul of Islam) என்ற புத்தகத்தை வெளியிட்டதும் இந்தப் பதிப்பகமே என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தின் தீவிரவாதப் பிரிவுகள், முக்கியமாக வஹாபியம் எவ்வளவு மூர்க்கமாக இஸ்லாத்தின் உண்மையான மதிப்பீடுகளை மறுதலிக்கின்றன என்பதை காலீத் இந்தப் புத்தகத்தில் தெளிவாக்குகிறார். எந்த வித செல்வாக்கும் இல்லாமல், விளிம்பு நிலை மதப் பிரிவாக மட்டுமே ஒரு காலகட்டத்தில் இருந்து வந்த வஹாபியம், சவுதி அரச குடும்பத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வளர்ந்த விதம் பற்றியும் சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் இந்த சிந்தனை வளர்ச்சியற்ற மூடப் பழமைவாதத்தை உலகில் பரப்ப ஏராளமான பெட்ரோ-டாலர்கள் பாய்ச்சப்பட்டது பற்றியும் காலீத் இந்தப் புத்தகத்தில் விரிவாகச் சொல்லியுள்ளார்.

‘இப்போது இருப்பதைப் போன்ற நடைமுறை முஸ்லிம் சிந்தனை ‘யை வறையறுப்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்கிறார் காலீத். இஸ்லாமிய தீவிரவாதிகளின் ‘தூய்மைவாதப் ‘ பார்வையைப் பற்றி இந்தப் புத்தகத்தில் ஆராய்ந்துள்ள காலீத், தீவிரவாதிகள் முன்வைக்கும் ‘கற்பனையான இஸ்லாத்தில் ‘ காணப்படும் இரட்டை வேடத்தையும், முன்னுக்குப் பின் முரணான போக்கையும் அம்பலப்படுத்தியுள்ளார். பிரச்சினைகளுக்கான எந்த ஒரு தீர்வையும் அவர் இந்தப் புத்தகத்தில் கொடுக்கவில்லை என்றாலும் பிரச்சினைகள் என்ன என்பதை எச்சரிக்கையுடனும், தெளிவாகவும் முன்வைக்கிறார்.

புத்தகத்தின் சில பகுதிகள் பண்டிதத்தனமாக இருந்தாலும், பழமைவாத இஸ்லாமியத் தலைமை பற்றிக் கவலைப்படும் நடுநிலையான முஸ்லிம்களும், இஸ்லாமிய தீவிரவாதிகள் எப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது. குறிப்பாக, பழமைவாத வஹாபியத்தை ‘இடதுசாரி இஸ்லாம் ‘ அல்லது ‘முற்போக்கு இஸ்லாம் ‘ அல்லது ‘புரட்சி இஸ்லாம் ‘ என்று தம் போக்கில் நம்பிக்கொண்டு, வரலாற்று உணர்வற்ற தான்தோன்றிகளாகத் திரியும் நம்மூர் இடதுசாரிப் பல-பண்பாட்டியப் பட்டறைகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

இஸ்லாம் ஏதோ தன்னால்தான் பாதுகாக்கப் படவேண்டும் என்று நம்பிக் கொண்டு, இஸ்லாத்துக்கு எதிரான பொய்களைத் தான் உடைத்துச் சுக்கு நூறாக்குவதாக நம்பிக் கொண்டு தமிழகத்தில் திரியும் முஸ்லிம் அல்லாத ‘பேரறிஞர்கள்’ இந்தப் புத்தகத்தைப் படித்தால் இஸ்லாமிய உலகில் தற்போது நடந்துவரும் பெரும் விவாதங்களைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அதற்குப் பிறகாவது, தாம்தான் இஸ்லாத்தின் காவலர்கள் என்று கிறிஸ்தவர்களும் இதர மதத்தவர்களும் மதர்ப்பாகத் திரியும் தேவை இருக்காது. முஸ்லிம்களில் இருந்தே நுண்ணுணர்வும், தீர்க்கமான சிந்தனையும், உலக மனிதர் மீது நேயமும் உள்ள சிந்தனையாளர்கள் எழுந்து இன்று தம் மார்க்கம் ஒரு கொலைவெறியர் கூட்டத்தின் கையில் சிக்கிச் சீரழிவதை எதிர்க்கும் ஆளூமையோடு களத்தில் இறங்கியிருப்பதை அறிய முடியும்.

ஆனால், உலக இடதோ இந்திய இடதோ – எந்த இடதாக இருந்தாலும், கொலை வெறியர்களைத்தானே மகத்தான சிந்தனையாளர்களாகக் காண்பதைத் தம் மரபாகக் கொண்டுள்ளனர். ஆகவே, இந்தப் புத்தகத்தின் அமைதி வழிப் பார்வை அவர்களுக்குப் பிடிபடும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை. எனினும், ஊதுகிற சங்கை ஊதி வைப்போமே என்றுதான் இந்த அறிமுகத்தை எழுதுகிறேன்.

தம் மடத்துப் புத்தகங்களை மட்டுமே குருட்டுத்தனமாகப் படித்துக் கொண்டிருப்பதை விடுத்து, உண்மையிலேயே பரவலாகப் படிக்க முடிபவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்