புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள்

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

இரா. வேங்கடாசலபதி


1. வேதசகாய குமாரின் ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்தி கொண்டபோது அவற்றை நான் பதிவு செய்யவில்லை என்று சொல்வது பொய். ‘அன்னை இட்ட தீ ‘ நூல் முன்னுரையில், இரண்டு முறை, தனியே பதிவு செய்துள்ளேன். அம்முன்னுரையில் நபர்களும் நிறுவனங்களுமாக 60க்கும் மேற்பட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்ட விரும்புகிறேன். ‘பு. பி. கதைகள் ‘ நூலிலும் வேதசகாய குமார் கண்டெடுத்த கதைகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2. ‘ ‘புதிய விஷயங்களை – அதுவரை பலரும் கண்ணை மூடிக்கொண்ட விவகாரங்களை – எழுதுவோர் அக்காலத்தில் திராவிட இயக்கத்தவராகவே பரவலாகக் கருதப்பட்டனர். புதுமைப்பித்தனின் கதைகளைப் படித்த ஒரு ‘கலை நுணுக்கவாதி ‘, ‘இவர் என்ன சூனாமானாவா ? ‘ என்று கேட்டதை இப்பின்னணியில் புரிந்துகொள்ளலாம். ‘ ‘

இதுவே நான் எழுதியது. இதில் உள்ள ‘இவர் என்ன சூனாமானாவா ? ‘ என்ற கூற்று செவிவழிச் செய்தியன்று; புதுமைப்பித்தனே தம் கட்டுரையில் ( ‘என் கதைகளும் நானும் ‘ புதுமைப்பித்தன் கட்டுரைகள் மற்றும் கலைமகள், ஆகஸ்டு 1942) கூறியது!

புதுமைப்பித்தன் திராவிட இயக்க ஆதரவாளர் என்ற பொருள் என் கூற்றில் தொக்கியாவது இருக்கிறதா ? வேண்டுமென்றே என் கருத்தை வேதசகாய குமார் திரிக்கிறார் என்று கொள்வதில் தவறிருக்க முடியுமா ? என் திராவிட இயக்கச் சார்பைப் புதுமைப்பித்தனின்மீது ஏற்றவேண்டிய தேவை எனக்கில்லை.

வேதசகாய குமாரின் கண்மூடித்தனமான திராவிட இயக்க எதிர்ப்புக்குப் புதுமைப்பித்தனை இரையாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட இயக்கச் சார்பாளரான முல்லை முத்தையாவால் வெளியிடப்பட்டு, பாரதிதாசனைச் சிறப்பாசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட முல்லை யின் முதல் இதழிலிருந்து பு. பி. அதில் பங்காற்றியிருப்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ‘அவதாரம் ‘ கதை இதில் தான் வந்தது; மெளனியைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலராக இனங்கண்ட பு. பி. யின் கட்டுரையும் இதில் தான் வந்தது; மீ.ப. சோமுவின் கவிதைகள் பற்றிய பு. பி.யின் கடித மதிப்பீடும் இதில் தான் வந்தது; ‘புரட்சி மனப்பான்மை ‘யும், ‘விபரீத ஆசை ‘யும் இதில்தான் பு.பி. உயிருடனிருக்கும்போதே மறுபிரசுரம் செய்யப்பட்டன.

எனக்கும் கருத்தியல் சார்பு உண்டு. ஆனால் பதிப்பு நேர்மையில் இதைக் குறுக்கிட விட்டதில்லை. முல்லை யில் வெளியான ‘அவதாரம் ‘ கதையைக் கலைமக ளில் (புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், ப. 147) வெளியானதாகக் குமார் ஏன் சொல்லவேண்டும் ? இதற்குக் காரணம் : அறியாமையா ? யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற அலட்சியத்தில் இட்டுக்கட்டியதா ? திராவிட இயக்க எதிர்ப்பா ? குமார் தான் பதில் சொல்ல வேண்டும்.

3. ‘பாரதியின் கருத்துப்படங்கள் ‘ நூலுக்கு மூன்று முன்னுரைகள் எழுதியுள்ளேன். கருத்துப்படங்களின் பின்னணியை அதில் விரிவாகப் பேசியுள்ளேன். இக்கருத்துப்படங்கள் பாரதியே தம் கைப்பட வரைந்தவையல்லவென்றாலும், அவர் சம காலத்தில் வாழ்ந்த எஸ். ஜி. இராமானுஜலு நாயுடு, பாரதிதாசன், டி. எஸ். சொக்கலிங்கம் முதல் ரா. அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன் போன்ற பாரதி ஆய்வாளர்கள் வரை அவற்றை பாரதியுடையதாகவே கருதிவந்துள்ளனர். காரணம், அவை பாரதியின் கருத்துக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட ‘ஓவியர்கள் ‘ வரைந்தவை. (இவர்கள் பெயர்கூடத் தெரியாது.)

இவற்றில் ஓவியரின் பங்கு – பாரதி ஆய்வு என்ற எல்லைக்குள் – ஒன்றுமில்லை. எனவே, பாரதியின் கருத்துப்படங்கள் என்று அவற்றைச் சுட்டுவது பொருத்தமே. ‘தாஜ்மகாலை ஷாஜஹான் கட்டினார் ‘ என்பதைவிட இதிலுள்ள தர்க்கம் வலுவானது. நான் செய்தது ஆய்வு நெறிப்படி பிழையென்றால், இதுவரை நடந்த பாரதி ஆய்வுகள் அனைத்தும் பிழை என்றாகும்.

மேலும், இது தொடர்பான வேறொரு கேள்விகளையும் எழுப்புகிறேன். இந்தியா பத்திரிகைக்குப் பாரதி சட்டபூர்வமான, அறிவிக்கப்பட்ட ஆசிரியர் அல்லர். ஆனால், அது பாரதியின் பொறுப்பில் வந்ததென்பது அனைவரும் ஒப்ப முடிந்த உண்மை. இதன் அடிப்படையிலேயே பாரதி பற்றிய மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகின்றன; ‘பாரதி புதையல் ‘களும், ‘பாரதி தரிசன ‘ங்களும் வெளியாகியுள்ளன. இதைத் தவறு என்று சொல்வது வக்கீலின் வாதமாக இருக்கலாம்; ஆனால் ஆய்வு நெறியாகாது.

‘மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலியறுக்க வேண்டும் ‘ என்போருக்கு என்னிடம் எதிர்வாதம் இல்லை.

வேதசகாய குமார் என்மீது சுமத்தியுள்ள அவதூறுகள் – வாய்மொழியாகவும் அச்சிலும் – கொஞ்சநஞ்சமல்ல. எனக்குத் தகுதியும் ஆற்றலும் நேர்மையும் இல்லையென்று சொல்லியிருக்கிறார்; திருட்டுப் பட்டம் கட்டியுள்ளார்; இலக்கிய நுண்ணுணர்வு அற்றவர் என்றிருக்கிறார்; பண்டிதர் என்றும் சொல்லுகிறார். குமார் பெரியவர். நுட்பமான வாசகர். நுண்ணுணர்வுள்ள விமர்சகர். கள ஆய்வு வல்லுநர். அவர் சொல்பவை உண்மையாகவே இருக்கலாம்.

பானை என்னவோ ஓட்டைதான். ஆனால் கொழுக்கட்டை வெந்திருக்கிறதே!

***

ஆ. இரா. வேங்கடாசலபதி – காலச்சுவடு பதிப்பகத்தின் புதுமைப்பித்தன் படைப்புகள் தொகுப்புத் திட்டத்தின் பதிப்பாசிரியர்

Series Navigation