புதுப்பட்டிச் செப்பேடு

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

எஸ். இராமச்சந்திரன்


திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள சமூகரெங்கபுரம் என்ற ஊரில் வசிக்கும் கோட்டைப் பாண்டியன் என்பவரிடம் செப்பேடு ஒன்று இருப்பதாகத் தகவ கிடைத்ததையடுத்து, திரு. கோட்டைப்பாண்டியன் அவர்களைச் சந்தித்தபோது, அவர் தம் வசமிருக்கும் செப்பேட்டினைக் காண்பித்ததோடு, அச்செப்பேடு ஏற்கனவே சென்னையிலுள்ள தொல்லியல்துறைப் பதிவு அலுவலர் திரு. மா. சந்திரமூர்த்தி அவர்களிடம் எடுத்துச் சென்று காண்பிக்கப்பட்டு அவரால் வாசிக்கப்பட்டுவிட்டது என்ற விவரத்தையும் தெரிவித்தார்.1 மேலும், தமது மூதாதையர்கள், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்திலுள்ள செக்காரக்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தையும், அனுப்பக்கவுண்டர் குலத்தைச் சேர்ந்த தமது முன்னோர்களால் கம்பளத்து நாயக்கர் குலத்தவர்க்கு வழங்கப்பட்ட செப்பேடு ஒன்று செக்காரக்குடியிலிருந்தது என்றும், அச்செப்பேட்டுக்குரியோர் தற்போது தெய்வச் செயல் புரத்துக்கு அருகிலுள்ள புதுப்பட்டியில் வசிக்கின்றனர் என்ற விவரத்தையும் தெரிவித்தார். இவ்விவரங்களின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தெய்வச் செயல்புரத்தையடுத்துள்ள புதுப்பட்டிக்குச் சென்று விசாரித்ததில் தமிழ்நாடு அரசு வனத்துறையில் பணிபுரியும் திரு. முத்துராச நாயக்கர் என்பவர் வசம் அச்செப்பேடு இருப்பது அறியப்பட்டது. இவ்விசாரணையில் உதவி புரிந்தவர் திரு. நெல்லை நெடுமாறன்.

செப்பேட்டின் அமைப்பு

17 செ.மீ. நீளமும் 10 செ.மீ அகலமும் கொண்ட இச்செப்பேட்டின் இருபுறங்களிலும் தமிழில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேட்டின் முன்பக்கத்தின் தலைப்பகுதியில் மயில் தோகைகளின் சின்னம் வரையப்பட்டுள்ளது. செப்பேட்டின் உரிமையாளர்கள், இப்பகுதியிலுள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் சாதிப் பிரிவாகிய “தோகலவார்” பிரிவைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர் ஆவர். “தோகல” என்ற தெலுங்குச் சொல், தோகை, வால் என்ற பொருளுடையது. எனவே இவர்கள், மயில் தோகையைக் குலச் சின்னமாகக் கொண்டவர்கள் எனத் தெரிகிறது.2

காலமும் செய்தியும்

செப்பேட்டில் குறிப்பிடப்படும் சாலிவாகன ஆண்டு முதலிய குறிப்புகள், கி.பி.1140-க்குப் பொருந்தி வருகின்றன. ஆனால் செப்பேட்டின் வாசகங்கள், கி.பி.18-ஆம் நூற்றாண்டைய தமிழ் நடையில் அமைந்துள்ளன. எனவே, கி.பி.18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ, 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி இப்பகுதியின் நிலவருவாய் நிர்வாகத்தை ஏற்றபோது, இச்செப்பேடு போலியாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நெல்லைச் சீமையில் இவ்வாறு பல ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டன எனத் தெரிகிறது.3 இருப்பினும், இச்செப்பேடு முற்றிலும் புறக்கணிக்கத்தக்கதன்று. இச்செப்பேடு வழங்கப்படக் காரணமாக இருந்த அனுப்பக் கவுண்டர் குலத்தவர்கள், கி.பி.1645-இல் செக்காரக்குடி, பேரூரணி ஆகிய ஊர்களில் அதிகாரம் செலுத்திவந்தனர் என்றும், நற்குடி வேளாளர்களுக்கும் அனுப்பக் கவுண்டர்களுக்குமிடையே இது தொடர்பாக வழக்கு ஏற்பட்டபோது திருமலைநாயக்கரின் ஆணைப்படி வழக்கு தீர்த்துவைக்கப்பட்டது என்றும் பிற செப்பேட்டு ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவருகிறது.4 17-ஆம் நூற்றாண்டில், தோகலவார் பிரிவைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர்கள், அனுப்பக் கவுண்டர்களின் ஆதரவுடன் இப்பகுதியில் குடியேறியிருக்க வேண்டும்.

இச்செப்பேட்டில், சீவலமாற பராக்கிரம பாண்டியன் ஆணைப்படி, செக்காலைக்குடியின் அதிகாரியான ஒள்ளிக் கவுண்டர், மயிலம் பராக்ரம பாண்டிய நாயக்கருக்குச் செக்காலைக் குடியின் உள்காவல் அதிகாரத்தை வழங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. உள்காவல் என்பது பாடி காவல் எனக் கொள்ளலாம். பாண்டிய மன்னர், அனுப்பக் கவுண்டர், கம்பளத்து நாயக்கர் – மூன்று சாதியினரும் காதில் பனையோலை அணியும் வகுப்பினர்4அ ஆதலாலும், பேரூரணியிலுள்ள “வீரமல்லம்மன் தேவி”5 எனப்படும் தெர்ய்வத்துக்குத் தாமும் அடியாதலாலும் அத்தெய்வத்தின் பூசாரியாகிய மயிலம் பராக்கிரம பாண்டிய நாயக்கருக்குத் தமது பெயரான பராக்கிரம பாண்டியன் என்ற பெயரைச் சூட்டியிருப்பதாலும், செக்காலைக்குடி உள்காவல் அதிகாரம் அவருக்கு வழங்க வேண்டுமென்று ஒள்ளிக் கவுண்டருக்குப் பாண்டிய மன்னர் சன்னது அனுப்பியுள்ளார். ஒள்ளிக் கவுண்டரும், தமது சாதி மரபை உருவாக்கியவர் வீரமல்ல தேவரானதால், வீரமல்ல தேவி வழியில் தமது தாயாதிகளான கம்பளத்து நாயக்கர்கள், தமக்கு ரத்தசம்பந்தம் உள்ளவர்களாக நிர்வாகம் செய்வார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, பாண்டிய மன்னன் ஆணை சரியென்று ஒத்துக் கொள்கிறார். அதன்படி, மயிலம் பராக்கிரம பாண்டிய நாயக்கர் மற்றும் அவருக்குச் சம்பந்தம் உள்ல மயிற்சின்னமராசு, தொப்பநாயக்கர் உள்ளிட்டாருக்கு ஒள்ளிக்கவுண்டர் பட்டயம் வழங்குகிறார். வீரமல்லதேவி பூசை, எட்டுநாள் நோன்பு ஆகியவற்றில் பராக்கிரம பாண்டிய நாயக்கருக்கு உள்ள உரிமை முதலியவற்றையும் வரையறுத்துள்ளார்.

செப்பேடு வாசகங்கள் முன்புறம்

1. உ சாலிவாகன சகார்த்தம் ௲௬௱௰௨
2. க்கு மேல்ச் செல்லா நின்ற கொல்
3. லம் ௱௩௰௬ வரு ரவுத்திரி வைகாசி
4. மீ ௰௭ உ திரயோதெசியும் குருவா
5. ரமும் ரோகணி நட்செத்திரமுஞ் சி
6. ங்க லக்கணமும் துருவனாம யோக
7. முங்கூடின சுபதினத்தில்ச் செக்க
8. ¡லை ஒள்ளிக் கவுண்டர் மயிலம் பிர
9. ¡க்கிறம் பாண்டிய நாயக்கருக்கு செக்
10. காலை உள்க்காவலுக்கு பட்டைய
11. மெளுதிக் குடுத்தபடி உள்க்காவல்
12. நிலமையாவது சீவலமாறா பராக்கிற
13. ம பாண்டிய ராசா வய்யனவர்கள் அனு
14. ப்பிவிச்ச சன்னதுப் படிக்கு நாமும் அய்
15. யா பேரூறனிக் கோட்டைக் கெம்ப
16. க் கவுண்டரையும்6 நாலு சமூசாரிகளை
17. யும் சேகரித்துக் கொண்டு போய்த்
18. தம்பிரானை கண்டு திருவுளம் பற்றினது
19. கலியுகத்திலக கண் கண்ட தெய்வமா
20. ய் ஓலையிடுஞ் சாதியில்ச் சகலரையு
21.ம் லட்சிக்க வென்றும் வெல்ல மலைத்
22. தெய்வம்7 எளுந்தருளி நமக்கு மூன்
23. று வகுப்பாயும் பஞ்ச வற்ன்னமாய்
24. சுதாசுரூபத்தைக் குடிவில்த் தெ
25. ரிசனை கண்டதாலும்8 நாமுஞ் செ
26. க் காலைக் கவண்டர் பேரூரணிக்க
27. வண்டர் தேவியடுமை9 யானதாலு
28. ம் தேவி பூசாரிக்கு மயிலம் பிராக்
29. கிறம பாண்டிய நாயக்க ரெண்டு ந
30. ம்முடைய பேர் கொடுத்திருப்பதாலு
31. ம் நம்முடைய அபிமானமாய்த் தாங்
32. கள் அபிமானித்து உள்க் காவலுக்
33. குப் பட்டைய மெளுதிக் குடுக்கச் சொ
34. ல்லித் திருவிளம்10 பற்றினதால் நான்
35. சமூகத்தில் விண்ணப்பஞ் செய்தது யெ
36. ங்களுக்குச் சாதியில் மரவு பண்ணி
37. னதும் வீரமல்ல தேவரானதால்ச்சு
38. யம்பாய் வீரமல்ல தேவி எளுந்தரு
39. ளி நம்முடைய தாயதி மன்னைவான11
40. ம்முடைய லெற்ற கலப்பாய் நெறுவாக
41. ம் பண்ணுவார்களென்றும்12 குடி பொரு
42. ந்தி னதாக நடத்துவிச்சது சமூக விஷே
43. சமே13 சரியென்று சொல்ல அப்போது
44. உத்தரவானது நம்மையும் நாயக்கரை
45. யுமளைத்து யின்று முதல் தலைமுறை வளி பா
46. டாய்ச் சீவனுந் தேகமுமா யிருங்கோ ¦
47. வன்றும் பிறருக் கிடங்கொடுத்தால் தேவி
48. கண்டு வாயளென்றும்14 சத்தியமாயி
49. ருபேரும் வந்தனை வளி பாடாய் நடந்து
50. கொளச் சொல்லித் திருவிளம் பற்றி
51. னதால் வீரமல்ல தேவியும் தீர்த்த
52. மலை அய்யனுஞ்15 சாட்சியாய்த் தேவி
53. நோம்புக்கு உள்க் காவலுக்கு உட்பட்

பின்புறம்

1. டையமெளுதிக் குடுத்தது சுதந்தர
2. ம் அளவு குடிக்கெல்லாம் குடிக்கு எட்
3. டுங்காலுக்குத் தவசம்16 ௫ மீ ௨௰ தொ
4. ளுவுக்17 கொரு பணமும் புள்ளடை
5. க்18 கரைப் பணமும் கரிசலில் உம்ப
6. ளங் கட்டவுகஇ யும் நஞ்சையில்க்க
7. ரையடி வயல் மேலக் குளத்தில் நம்
8. முடைய தம்பி வுடையக் கவண்டர் உ
9. ழவு உரு கவம் கிறாம வளியில் உள்ள
10. நாலு சுதந்திரமும் விட்டு யிந்தப்படி
11. க்குச் செக்காலை நான்கு எல்கைக்
12. குள்ப்பட்ட நிதி நிற்செயம்19 உழ்க்காவ
13. லுக்கு பட்டையெமெளுதிக் குடுத்தோ
14. ம் மயிலம் பிராக்கிறம பாண்டிய நா
15. யக்கருக்குஞ் சம்மந்த மயிற்ச் சின்னம
16.ராசு தொப்ப னாயக்க உழ்ழிட்டாருக்
17. கு(ம்) ஒள்ளிக்கவண்டர். தேவி நோம்புக்கு
18. பொதுச் சிலவு நீக்கி மற்ற ஆதாயம் உ
19. ழ்க்காவலுள்ளது ஆள் வீதம் பங்கல்
20. லாமல்ப் பிறிக்கத் தேவையில்லை
21. யென்றும் யாதமொரு(த)தர் பிசகு ப
22. ண்ணினால் தேவியறியப் பங்கிளந்
23. து நாம் சொன்ன படி கேட்டு நடந்து
24. கொள்வராகவும் நம்முடைய அங்
25. கிஷத்துக்கு20 த் தம்முடைய அங்கிஷம்
26. பட்டையத்தின் படிக்குந் அடவாத போ
27. னால் ராச அபிமானியந் தப்பித் தரித்திரி
28. யவானாகவும் அப்படி வாராமல் உ
29. த்தரவின் படிக்கு மகமகனாய்ச் சந்திர
30. ¡தித்தவரைக்கும் ஆண்டனுபவித்து
31. வருவானகாவும் நாயக்கரவர்கள் செ
32. ¡ல் படிக்கு நோம்புக்கு எட்டு நாளை
33. ப் போதிய(த)¡னதால் முன்னவன் ம
34. யிலம் பிறாக்கிறம பாண்டிய னாயக
35. கர் வெல்ல நாயக்கர் மாசு வாடனா
36. யக்கர் தாசமனாயக்கர் யிந்த வீட்டு
37. வீதம்வனவன் சம்மந்தமா சகல
38. ருமற்றக் குடிகளுஞ் சாதியிலொத்து
39. மவனுட சேகரஞ்21 சம்மந்தவர் மு¨
40. றப்படிக்குக் கும்பிடுங்கண்டு யிந்
41. தவளி பாடாய்ச் சிறப்புங் குடுக்கவு
42. ம் விளுந்த காணிக்கை முன்னவனா
43. ன பூசாரிக்கு இப்படிக்கு ஒள்ளி
44. க் கவுண்டர் உ தேவி அறிய உ
45. உருக வரிசை ஒரு பண வீதம் சி
46. சுவதை செய்வதன் போன§
47. தாசத்திலே போகாமல்க் குடுத்து
48. விடவும் யிந்தப் பட்டையெமெ
49. ளுதினேன் சங்கரன் உ

அடிக்குறிப்புகள்

1. இருபுறங்களிலுமாக, மொத்தம் 102 வரிகளில் எழுதப்பட்டுள்ள அச்செப்பேட்டில், கி.பி.1166-க்குச் சமமான ஆண்டுக் குறிப்புகள் உள்ளன. ஆயினும் 17-18-ஆம் நூற்றாண்டைய தமிழ் நடையிலேயே செப்பேடு அமைந்துள்ளது. சீவலமாற குலசேகர ராசா, செக்காலைக்குடி ஒள்ளிக் கவண்டன் மகன், கோட்டைக் கெம்பக் கவண்டனௌக்குப் பாஞ்சாலை மாகாணமான பேரூரணி வணிதசேகரக் கிராமத்தை நாட்டாண்மை, நிலைமை எல்லைக்காணி, காவல் ஆகியவற்றுக்காக வழங்கிய செய்தி அச்செப்பேட்டில் குறிப்பிடப்படுகிறது.

2. தோகலவார் என்றால், “பசுமந்தைகளை உடையவர்கள்” என்று சில அறிஞர்கள் பொருள் கொண்டுள்ளனர். அக்கருத்து சரியானதாகத் தெரியவில்லை.

3. P.9, Land and Castes in South India, by Dharmakumar, Cambridge, 1965.

4. “நன்குடி” என்ற நூலில், பக்கம் 28இல், இச்செப்பேட்டின் வாசகங்கள் பதிக்கப்பட்டுள்ளன. (ஆசிரியர்:சிவகளை எஸ். பாலசுப்பிரமணிய பிள்ளை, 1920)

4அ. பாம்படம் அணிவிப்பதற்காகக் காதுத் துளையைப் பனையோலையைச் சுருட்டிச் செருகிப் பெரிதாக்குவர். (Pages 58-59, Land of Charity by Samuel Mateer, Asian Educational Services, Chennai, 1991.)

5. தூத்துக்குடி வட்டத்திலமைந்துள்ள பேரூரணியில் வீரமல்லம்மன் கோயில் உள்ளது. “வீரமல்லுதேவி” எனக் கட்டபொம்மன் சண்டைக்கும்மி குறிப்பிடுகிறது. (கட்டபொம்மன் வரலாறு அல்லது சண்டைக்கும்மி – அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பு, 1960)

6. சமூக ரெங்கபுரம் பட்டையத்தில், பேரூரணி கோட்டைக் கெம்பக் கவண்டர், செக்காலைக் குடி ஒள்ளிக் கவுண்டரின் மகனாகக் குறிப்பிடப்படுகிறார். மேலும் அச்செப்பேட்டின் காலக் குறிப்புகளின் படிபார்த்தால், புதுப்பட்டிச் செப்பேடு வழங்கப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த பின்னரே கோட்டைக் கெம்பக் கவண்டருக்குப் பேரூரணி ஊர். காணியாட்சியாக வழங்கப்பட்டுள்ளது எனக் கொள்ள வேண்டியதிருக்கிறது. எனவே “அய்யா பேரூரணி கோட்டைக் கெம்பக்கவண்டர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது முரண்பாடாக உள்ளது.

7. “வல்ல மலைத் தெய்வம்” எனக் கொள்ளலாம். வல்ல நாடு மலை இப்பகுதியிலுள்ளது.

8. “சதாசிவ ரூபத்தைக் குடியில் தரிசனை கண்டதாலும்” எனக் கொள்ளலாம்.

9. அடிமை

10. திருவுளம்

11. தாயாதி, மனவாடு(தெலுங்கு) எனக் கொள்ளலாம்.

12. “ரத்தக் கலப்பாய் நிர்வாகம் பண்ணுயவார்களென்றும்”

13. “சமூக” விசேஷம் என்பது, “பாண்டிய அரசரின் சிறப்பான நடவடிக்கை” எனப் பொருள்படக்கூடும்.

14. “கண்டு வாளாவிருக்க மாட்டாள்” எனப் பொருள்படும்.

15. பொதிகை மலையில், பாணதீர்த்தம் உள்ள பகுதியிலிருக்கும் ஐயனார் கோயில் இந்த ஐயனார். “முத்துப்பட்டன் கதை” எனப்படும் வரலாற்றுக் கதைப்பாடலில் இடம் பெறும் ஐயனார் ஆவார். முத்துப்பட்டன், சமூக ரெங்கபுரம் பட்டையத்தில் “சக்கிலியப்பட்டன்” எனக் குறிப்பிடப்படுகிறான்.

16. தானியம்

17. மாட்டுத் தொழுவம்

18. மயில்கள், செய்தியனுப்பப் பயன்படும் புறாக்கள், சண்டைக் கோழிகள் போன்றவற்றை வளர்ப்பது தொடர்பான வழக்காக இருக்கலாம்.

19. நிட்சேபம் – புதையல் எனப் பொருள்படும்

20. அம்சம் – உரிமையில் அவரவர்க்குரிய பங்கு எனப் பொருள்படலாம்.

21. உடன்கூட்டத்தார் எனப் பொருள்படும்.

(நன்றி: பழங்காசு, நாணயவியல் வரலாற்றியல் காலாண்டிதழ், இதழ் 13, நிறுவனர்: ப. சீனிவாசன், 1/385, சீதக்காதி தெரு, காட்டூர் (தெற்கு), திருச்சி-620019, தொலைபேசி: +91-431-2532043, ஓரிதழ் நன்கொடை ரூ. 25/- ஓராண்டு நன்கொடை ரூ. 80/-)

maanilavan@gmail.com

Series Navigation