புதிய தானியம்
சேவியர்

0
என் வயலில்
பொறாமைக் களைகளே
நிறைய விளைகின்றன.
அவ்வப்போது
பிடுங்கி எறியும்
களைகளும் கரையிலே
காயாமல் காத்திருக்கின்றன.
ஏதேனும் ஓர்
வாய்ப்பு வரும் போது
வரப்புகளை விட்டு
மீண்டும் அவை
வயலுக்குள் விழுகின்றன.
எனக்குப்
பொறாமை இல்லை என
நான்
பறைசாற்றும் போதெல்லாம்
எனக்குள் இரண்டு களைகள்
வேர் விடுகின்றன.
‘பொறாமையால் சொல்லவில்லை ‘
என
நான் வாய்திறக்கும் போதெல்லாம்
எனக்குள்
நான்கு வேர்கள்
களை விடுகின்றன.
தவறாமல் பிடுங்கி வருகிறேன்
ஆனாலும்
இன்னும் தீர்ந்தபாடில்லை.
தானியங்களை
அதிகமாய் விதைத்து
களைகளைத் துரத்த நினைத்தேன்
முடியவில்லை.
முடிவு செய்து விட்டேன்,
இனிமேல்
களைகளைக் களையப் போவதில்லை.
களைகளையும் தின்னும்
கலை கற்கப் போகிறேன்.
0