புண்ணும் மீன்களும்

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

சாரங்கா தயாநந்தன்


புண் ஓரம் வெடித்துச் சிதறியிருந்தது. ஒரு சேற்று நிலத்தின் வெடிப்புக்களாய் அதன் கரைத் தோற்றம்.ஓரங் காய்ந்திருப்பினும் உட்படை நொய்மையாய். ‘தொடு விரல் புதைப்பேன் ‘ என மெளன மொழி பேசியது. தொடுந்துணிவில்லை எவருக்கும். இடது காலின் கணுக்காலுக்கு மேலாகவும் முழங்காலுக்குக் கீழாகவும் அதன் பிரதேசத்தை தேர்ந்திருந்தது. கூர்மையான நோக்குகள் மஞ்சள் நிறச் சீழ்ப்படலத்தினதும் நுண்மையான மூக்குகள் மென்துர்நாற்றத்தினதும் வசப்பட்டு முகம் சுளிக்கக் கூடும்.இது உரிமையாயிருந்த அவன் இதுவரை முப்பத்தெட்டு வருடங்களை வாழ்ந்து பார்த்திருந்தான். தொழில் தந்தையான மீனவன். ஜோசப் நாமம்.

பெனடிக்ரா சோர்ந்திருந்தாள். தாயில்லாப் பிள்ளை அவள். அவன் தந்தையாய் இருந்ததில் அவனது கால்ப்புண் இவளது இதயத்தில் ஏறியிருந்தது. நேற்றைய நிலாஇரவு. தாத்தா மடியில் இவள். அப்போதுதான் அறிந்திருந்தாள். புண்களை மீன்கள் தின்னுமாம். ‘நாங்கள் மீனுடல் பிய்த்து உண்பது போலவா ? ‘ ‘அப்பாவின் கால்ப்புண் வாயொற்றி அதன் காய்ந்த ஓரம் பற்றி மீன் இழுக்குமா ? ‘ ‘புண் கிழிந்து ரத்தம் கொட்டுமா ? ‘ தொடர் கேள்விகள். தாத்தா பதிலற்று தலையாட்டினார். தூக்கம் வருவதாகச் சொன்னார். படுத்தார்கள்.

மீன் பிடிக்கும் போது அப்பவின் கால்களை அலை தழுவும். தண்ணீருக்குள் கால்களைத் தூக்கி வைக்க முடியாது. வழுக்கும் நீரைக் கூறாக்கி காலை இழுத்து இழுத்து நடப்பது ஒருவகைச் சுகம். சுகங்கள் சொற்களுக்குரியவல்ல. அனுபவங்களுக்கே. இவளுக்கு அது புரியும். ‘அப்பான்ரை புண்ணுக்கு மருந்து கட்டச் சொல்ல வேணும். நித்திரையில் முணுமுணுத்தாள். ‘பாவம் அவர்…. ‘ இரவு முழுவதும் கனவு. பிரகாசமான பலவர்ண மீன்கள். துள்ளி விளையாடின. நீரோட்ட ஜொலிப்போடு போட்டியிட்டு ஜொலித்தன. நீருள் புதைந்த கால்களை இழுத்து இழுத்து அப்பா நடக்கிறார். மீண்டும் மீண்டும் கால்சுற்றும் மீன்கள். காலைச் சுற்றின பாம்புகள் போலப் பயங்கரமாய். இப்போது மீன்களின் வர்ணங்கள் எதுவுமே தெரியவில்லை. பயந்திருந்தாள். அலறி எழுந்தாள். விடியல் கேள்வியில் புலர்ந்தது. ‘ ‘தாத்தா அப்பா எங்கை…. ? ‘ ‘ ‘ ‘கடலுக்குப் போட்டார் ‘.

காலை போயிற்று. அப்பா வரவில்லை. இரவு நகர்ந்து மறுநாளுக்கு இடம் தந்தது. அப்பா வரவே இல்லை. ‘மாறி அங்காலை போட்டான் போலை…அவ்வளாந்தான்… ‘ ‘எங்காலை. ? ‘ என்பதும் ‘எவ்வளவுந்தான் ? ‘ என்பதும் விளங்கவில்லை. ஒரே கேள்விதான் . ‘தாத்தா அப்பா எங்கை ? ‘ ‘கடலுக்குப் போட்டார்.. ‘ ‘கடலுக்குப் போட்டாரா ? ‘கடலுக்கை போட்டாரா ? ‘ அவளுக்குக் கேட்கத் தெரியாது. ஜலசமாதி புரியாது. ஐயையோ!. ‘அப்பான்ரை கால்ப்புண்ணை மீன் தின்னுமோ தாத்தா ? ‘ 95% அழுகை. கண்கள் குளம் அல்ல. கடல். அழுகையில் குரல் தழுதழுத்தது.

அதே கணத்தில்…. ஆழக் கடலில் மீன்களில் கும்மாளம். சல்லடையிடப்பட்டதாய் மிதந்து கொண்டிருந்த அவனது ஏதோவொரு உடற்பாகத்தை இழுத்தபடி….

nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்