பிறந்தநாள் பரிசு

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

ஜோசப்


ஸ்வீட் பெட்டியை டேபிள் மேல் எறிந்துவிட்டு இருக்கையில் வெறுப்புடன் அமர்ந்தாள் அமலா. ‘சே! இன்றைக்கி ஒண்ணும் உருப்படியா நடக்கப் போறதில்ல. ‘ ஆத்திரம், ஆத்திரமாய் வந்தது அவளுக்கு. ‘கிழத்துக்கு எத்தனை நாளா இந்த நெனப்போ தெரியலையே ? அதோட வயசென்ன, என்னோட வயசென்ன ? பாஸ் கிட்ட சொல்லி அதோட சீட்ட கிழிச்சா தான் சரி வரும் ‘ என்று மனதுக்குள் கருவினாள்.

அவள் அந்த தனியார் அலுவலகத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதம் தான் ஆகிறது. இன்னும் வேலை கூட நிரந்தரம் ஆகவில்லை. அதற்காகத்தான் தயங்கினாள். இல்லையென்றால் இப்போதே கிழத்தின் வேலைக்கு வத்தி வைத்துவிடுவாள். வக்கிரம் பிடிச்ச கிழம். என்ன ஒரு நெஞ்சழுத்தம் ? இப்படி ஒரு கேவலமான எண்ணத்துடன் தான் தன்னை இந்த வேலைக்கு சிபாரிசு செய்திருக்குமோ.

இருக்கையிலிருந்து எழுந்திருக்காமலேயே தலையை மட்டும் லேசாய் திருப்பி மானேஜர் கிழத்தின் அறையின் பக்கம் பார்த்தாள். அது யாருடனோ போனில் மும்முரமாய் பேசிக்கொண்டிருக்க எம்.டியின் பி.ஏ. மரியாதையுடன் அவரையே பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது.

என்ன செய்யலாம் ? யோசிக்க ஆரம்பித்தாள். அன்றைக்கு அவளுடைய பிறந்தநாள். அலுவலகத்திற்கு கிளம்பும்போது எவ்வளவு ஜாலியாய் புறப்பட்டாள் ? முதல் மாதம் சம்பளம் வாங்கியவுடன் தந்துவிடுவாள் என்று சொல்லி அம்மா பக்கத்து வீட்டு தவணை மாமாவிடமிருந்து (அவர் புடவைகளை மொத்தமாய் பஜாரில் இருந்து வாங்கி வந்து அக்கம்பக்கத்து குடித்தனக்காரர்களிடம் தவணையில் விற்பார். அதனால்தான் ‘தவணை மாமா ‘ என்ற பட்டப் பேர்) வாங்கி தந்த நைலக்ஸ் புடவையை கட்டிக்கொண்டு அம்மா தினச் செலவுக்கு கொடுக்கும் பணத்திலிருந்து சேமித்து வைத்திருந்ததிலிருந்து வாங்கிய ஸ்வீட் பெட்டியுடன் கூட்டமாய் இருக்கிறதென்று இரண்டு வண்டியைத் தவற விட்டு முடிந்த அளவுக்கு புது சேலை கசங்காமல் ஆபீஸ் வந்து சேர்ந்து… சே! எல்லாம் வேஸ்ட். ‘முதலில் மானேஜர் கேபினுக்கு போயிருக்கவே கூடாது ‘. அவரைத் தன் அப்பா ஸ்தானத்தில் வைத்திருந்ததால் தான் முதலில் அவரைப் பார்த்து வாழ்த்து பெறலாம் என்ற எண்ணத்தில் வந்தவுடன் அவர் கேபினை நோக்கி போனாள்.

அவருடைய பி.ஏ. அவளுடைய புதுச் சேலையைப் பார்த்துவிட்டு ‘எனிதிங் ஸ்பெஷல் டுடே ‘ என்ற பாவத்தில் தன் அழகாய் திருத்திய புருவத்தை உயர்த்தினாள். “வந்து சொல்கிறேன், மானேஜர் சார் ஃப்ரியா ?” என்றாள்.

“யெஸ், பட் மேக் இட் ஃபாஸ்ட். எம். டி மே கம் அட் எனி டைம்”

‘சரி ‘ என்று பதிலுக்கு புன்னகைத்து விட்டு கேபின் கதவைத் திறந்து “குட் மார்னிங் சார்” என்றவாறு உள்ளே நுழைந்து டேபிளருகே சென்று ‘இன்றைக்கு என்னோட பேர்த்டே சார் ‘ என்றவாறு ஸ்வீட் பெட்டியை நீட்டினாள்.

ஒரு நிமிடம் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவர் எழுந்து டேபிளைச் சுற்றி அவளருகே வந்து அவள் நெற்றியில் அலைந்து கிடந்த முடிக்கற்றையை ஒதுக்கி விட்டு அவள் கன்னத்தில் செல்லமாய் கிள்ளி விரலை தன் வாயில் வைத்து முத்தம் செய்ததும் அவள் அதிர்ந்து அவளையுமறியாமல் பின்வாங்கினாள். அவரோ அவளுடைய செய்கையைப் பொருட்படுத்தாதவராய் ஒரு ஸ்வீட் எடுத்துக்கொண்டு தன்னுடைய இருக்கைக்கு திரும்பி அருகிலிருந்த தொலைப்பேசியை எடுத்து டயல் செய்யலானார்.

என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் திகைத்து நின்ற அமலா சுதாரித்துக்கொண்டு வெளியேறினாள். ‘அம்மாவைக் கேட்டதா சொல்லுமா ‘ என்று மானேஜர் சொல்வது கேட்டும் மறுபடி ஒன்றும் சொல்லவில்லை. ஆத்திரத்தில் அவள் உதடு துடித்தது. ஏதாவது பேசினால் அழுதுவிடுவோமோ என்ற பயத்துடன் ‘வந்து சொல்கிறேன் என்று போனவள் ஒன்றும் சொல்லாமல் போகிறாளே ‘ என்ற வியப்புடன் பார்க்கும் பி.ஏவை பொருட்படுத்தாதவளாய் விரைந்து சென்று தன் சீட்டில் அமர்ந்தாள்.

வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து ஒரு வாய் தண்ணீர் குடித்தாள். மானேஜர் சாரை எவ்வளவு மதிப்பாய் நினைத்திருந்தாள் ? எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் குட்டிச்சுவராக்கிவிட்ட அவருடைய இன்றைய செயல்… சே! வக்கிரம் பிடிச்ச கிழம். கேட்பாரற்று திறந்துகிடந்த ஸ்வீட் பெட்டியை மூடி டிராயரில் வைத்தாள். இப்போதைய மூடில் யாரிடமும் சென்று இனிப்பை பரிமாறிக்கொள்ள அவள் தயாராயில்லை.

“மேடம்” என்ற பியூனின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“எம்.டி. உங்களைக் கூப்பிடுறார்மா”

“இதோ வர்றேன், நீங்க போங்க.” லேடாஸ் ரூமுக்கு போய் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். முகத்தில் கலக்கம் தெரிந்தது. கழுவி துடைத்தாள். சீப்பை எடுத்து முடியை ஒதுக்கினாள். சற்று முன்பு முடியை உரிமையுடன் ஒதுக்கிவிட்ட மானேஜர் கிழத்தின் செயல் கண் முன் விரிய அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு விருவிருவென்று எம்.டி அறைக்கு விரைந்தாள். போகும் வழியிலேயே ஒரு முடிவுக்கு வந்தாள்.

எம்.டி யின் கேபின் கதவைத் திறந்ததும் அவரே எழுந்து “மெனி, மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே, அமலா” என்றவாறு அவளைப் பார்த்து புன்னகைக்க, சமாளித்துக்கொண்டு “தாங்க் யூ சார்” என்றாள்.

“என்ன அமலா ? ஸ்வீட் மானேஜர் சாருக்கு மட்டும் தானா ? எங்களுக்கெல்லாம் இல்லையா ?”

அவர் குரலில் தொனித்தது நக்கலோ ? “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். நீங்க கூப்பிட்ட அவசரத்தில கொண்டுவர மறந்துவிட்டேன்” என்று சமாளித்தாள்.

“இட் ஈஸ் ஓகே. சும்மாதான் கேட்டேன். சிட் டெளன்”

“பரவாயில்லை சார். சொல்லுங்க” எம்.டியின் ரூமுக்கு எத்தனையோ முறை வந்திருக்கிறாள். ஒரு முறை கூட சீட்டில் அமரச் சொன்னதில்லை.

“சிட் டெளன் ஃபர்ஸ்ட். ஒரு சந்தோஷமான விஷயம். டுடே மஸ்ட் பி யுவர் லக்கி டே. மானேஜர் சார் இப்பத்தான் சஜெஸ்ட் செய்தார். உங்க வேலையை இன்னைக்கு நிரந்தரமாக்கறது மட்டுமல்லாமல் உங்களை மானேஜரோட பி.ஏவா பிரமோட் பண்ணியிருக்கிறோம். சந்தோஷம் தானே.”

“சார்!” என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் வாயடைத்துப் போனாள் அமலா. நாம் நினைத்து வந்ததென்ன, இங்கே நடப்பதென்ன ? மூன்றே மாதத்தில் வேலை நிரந்தரமென்றால் சந்தோஷம் தான். வேலைக்கு சேர்ந்த புதிதில் குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்று ஆர்டரில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். ஆனால் இன்றைய சம்பவத்திற்கு பிறகு மானேஜருக்கு பி.ஏ. என்பதை நினைத்து பார்க்கவே பயமாயிருந்தது.

“என்னாச்சு அமலா ? ஷாக் ஆயிட்டிங்களா ? சீட்டுக்கு போங்க. ஆர்டர் வரும். ஆல் தி பெஸ்ட்” எம்.டி. எழுந்து நின்றார்.

அவளும் எழுந்து நின்றாள். ஆனால் வெளியேறவில்லை.

“யெஸ், அமலா. ஏதாவது சொல்லணுமா ? ஏதாவது இருந்தா சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு வேற வேலை இருக்கு.” எம்.டி ஒரு கையில் தொலைப்பேசியை எடுத்தாவாறு அவளைப் பார்த்தார்.

சொல்லிடவேண்டியதுதான். இனியும் தயங்கி பிரயோஜனமில்லை. காலையில் நடந்த சம்பவத்தை சுருக்கமாக நடுங்கிய குரலில் அமலா சொல்லி முடித்தாள்.

அவள் சொல்லி முடிக்கும்வரை ஒன்றும் பேசாமல் கேட்ட எம்.டி அவளையே ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தார். “ஓகே. ஐ வில் திங்க் அபெளட் வாட் யூ செட். நீங்க மானேஜர் சார் வீட்டுக்கு இன்றைக்கு ஈவினிங் போய் பாருங்க, நாளைக்கு உங்க முடிவைச் சொல்லுங்க. இப்போ சீட்டுக்கு போய் வேலையைப் பாருங்க.” பேச்சை மேலும் வளர்க்க விரும்பாதவராய் தொலைப்பேசியை எடுத்து டயல் செய்யாலானார்.

எம்.டி யின் அறையை விட்டு வெளியேறய அமலா குழப்பத்துடன் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

‘நான் எதுக்கு அந்த கிழத்தோட வீட்டுக்குப் போய் பாக்கணும் ? எம்.டி சொன்னதுக்கு என்ன அர்த்தம் ? அலுவலகத்தில் யாரையாவது கேட்கலாமென்றால்… இந்த மூன்று மாதத்தில் யாருடனும் நெருங்கி பழகாமல் இருந்துவிட்டது எத்தனைப் பெரிய மடத்தனம் என்று இப்போதுதான் தெரிந்தது.

யோசனையில் இருந்த அமலா எம்.டியின் பியூன் அருகில் வந்து நின்றதை கவனிக்கவில்லை, அவன் “மேடம்” என்று கூப்பிடும் வரை.

திடுக்கிட்டு நிமிர்ந்து, “என்ன மணி ?” என்றாள்.

“இந்த கவரை எம்.டி உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார் மேடம்” என்றவாறு ஒரு வெள்ளைக் கவரை அவளிடம் நீட்டினான்.

ஒன்றும் புரியாமல் கவரை வாங்கியவள் அது ஒட்டியிருப்பதைப் பார்த்து பிரிக்கப் போனாள்.

“மேடம், அதை நீங்க உங்க வீட்டுக்கு போனப்புறம்தான் பிரிக்கணும்னு எம்.டி சொல்லச் சொன்னார்.”

“ஏன் ?”

“தெரியலை மேடம். நீங்க வேணும்னா வீட்டுக்கு இப்பவே போலாம்னுன்னும் சொல்ல சொன்னார்.” என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் திரும்பிப் போய்விட்டான்.

ஒன்றும் புரியாமல் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள் சிறிது நேரம். பிறகு சுதாரித்துக்கொண்டு அடுத்த கேபினிலிருந்த டெலிபோன் ஆபரேட்டரிடம் எம்.டி ஒரு வேலையாய் வெளியே போகச் சொன்னார் என்று சொல்லிவிட்டு எம்.டி தந்த கவரை கைப்பையில் வைத்துக்கொண்டு கிளம்பி பஸ்சுக்கு காத்திருக்க பொறுமையில்லாமல் ஆட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்.

அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது மணி பகல் 12.00 மணி. அந்த நேரத்தில் அவளை எதிர்பார்க்காத அவளுடைய தாய் கமலம்மாள் பதறிப்போய் “என்னடி இந்த நேரத்தில ?” என்றவாறு அவளை நோக்கி ஓடி வந்தாள். “உடம்புக்கு கிடம்புக்கு முடியலையா ?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என்று தலையை அசைத்தவள் அவள் கையைப் பிடித்து உட்கார வைத்து தானும் அவளருகிலேயே அமர்ந்து எம்.டி கொடுத்த கவரை பிரிக்காமல் அவளிடம் கொடுத்தாள்.

“என்னடியிது ? ஏதாச்சும் பிறந்தநாள் பரிசா ? யார் கொடுத்தா ?”

“தெரியலைமா. எம்.டி வீட்டுக்கு போய் பிரிச்சி பார்னு கொடுத்தார். உடனே வீட்டுக்கு வேணும்னாலும் போன்னு சொன்னதா அவரோட பியூன் சொன்னான். அதான் உடனே வந்துட்டேன்.”

கமலம்மாள் ஒன்றும் புரியாமல் கவரை திருப்பி, திருப்பி பார்த்தாள், பிரிக்காமல்.

“அய்யோ அம்மா. பிரியேன். என்னதான் இருக்குன்னு பார்க்கலாம்.” அமலா படபடத்தாள்.

கமலம்மாள் கவரைப் பிரித்து அதிலிருந்த ஒரேயொரு போட்டோவை எடுத்து பார்த்தவள் உறைந்து போய் பின்னாலிருந்த சுவரில் சாய்ந்துவிட்டாள். அவள் கண்ணிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தோடியது.

அமலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்னதான் இருக்கு அந்த போட்டோவில் ?

அம்மாவைப் பிடித்து உலுக்கினாள். “என்னாச்சிம்மா. என்ன போட்டோ இது ? இங்கே காண்பி.”

அம்மாவின் கையிலிருந்த போட்டோவை பிடுங்கியவள் அதை பார்த்து திகைத்துப் போனாள். போட்டோவில் மானேஜர், அவர் மனைவி மற்றும் ஒரு இளம் பெண் – அச்சாய் தன்னைப் போலவே. தன் கண்ணையே நம்ப முடியாமல் அருகில் சிலையாய் சமைந்திருந்த அம்மாவைப் பார்த்தாள்.

“யார்மா இது ? நீ ஏன் அழுவறே ?”

கமலம்மாள் கண்ணீரைத் துடைத்தவாறு அமலாவைத் திருப்பிப் பார்த்தாள். ஒரு நீண்ட பெருமூச்சுடன் பேசவாரம்மித்தாள்.

“அமலா. நான் இப்ப சொல்லப் போறதை உன்னால ஜீரணிக்க முடியுமான்னு தெரியலை. இருந்தாலும் சொல்றேன். கேட்டுட்டு இந்த அம்மாவைப் பத்தி நீ என்ன முடிவெடுத்தாலும் சரி.” என்ற பீடிகையுடன் ஆரம்பித்த தன்னை ஒன்றும் புரியாமல் அமலா பார்ப்பதை உணர்ந்த கமலம்மாள் அவளைப் பார்த்து சோகத்துடன் புன்னகைத்துவிட்டு தொடர்ந்தாள்.

“அந்த போட்டோவில் இருப்பது யார்னு உனக்கு தெரியுதா ?”

“இது எங்க மானேஜர் குடும்பம்னு நினைக்கிறேன். எம்.டி இன்னைக்கி சாயந்திரம் மானேஜர் வீட்டுக்கு போய் பாருன்னு சொன்னதுக்குக் காரணம் இப்பத்தான் புரியுது.” என்றவள் இன்று காலையில் ஆபீசில் நடந்ததை சுருக்கமாக ஆனால் ஒன்றும் விட்டுப் போகாமல் – மானேஜரைப் பத்தி எம்.டியிடம் சொன்னதுவரை தாயிடம் கூறினாள்.

“அடிபாவி, என்ன காரியம் செஞ்சிப்போட்ட ?” என்ற கமலம்மாள் தன் கை ஓயும் வரை அடித்துத் தள்ளினாள். ஓய்ந்துப் போய் சுவரில் சாய்ந்தவாறு மீண்டும் அழத்தொடங்கினாள்.

தன் தாயின் ஆவேசத்திற்கு காரணம் புரியாமல் அதிர்ந்து போன அமலா அவளைப் பிடித்து உலுக்கினாள். “ ஏம்மா. ஏன் இப்படி டென்ஷன் ஆவரே ? அப்படியென்ன நான் தப்பு பண்ணிட்டேன் ? மானேஜர் மாதிரியா நடந்துக்கிட்டாரு ? அவர் வயசென்ன, என் வயசென்ன ?”

கமலம்மாள் எரிச்சலுடல் அவளைப் பார்த்தாள் “அவரு உங்க அப்பாடி. அவர போயி..”

தொடர்ந்து பேசமுடியாமல் அழும் தாயையே பார்த்தவாறு சிறிது நேரம் சிலையாய் உறைந்து போனாள் அமலா.

என்ன சொல்கிறாள் அம்மா ? இதெப்படி முடியும் ? தரையில் கிடந்த போட்டோவை எடுத்து மீண்டும் ஒரு முறை கூர்ந்து பார்த்தாள். மானேஜருக்கருகிலிருக்கும் பெண்கள் இருவரையும் பார்க்கையில் அவளுடைய குழப்பம் அதிகரித்தது. இது தான் என் குடும்பமா ? அப்படியானால் இதோ அழுதுக் கொண்டிருக்கும் அம்மா, இவளுக்கும் எனக்கும் என்ன உறவு ?

அமலா சிறிது நகர்ந்து அழுதுக்கொண்டிருக்கும் தன் தாயை ஆதரவாய் தொட்டாள். கமலம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டு அவளைப் பார்த்து சோகத்துடன் தலையை அசைத்தாள்.

“அமலா, இவ்வளவு நாள் என் மனசுல கிடந்து அழுத்திக்கிட்டிருந்த விஷயத்தை உன்கிட்ட சொல்ற நேரம் வந்திருச்சின்னு நினைக்கிறேன்.” என்று ஆரம்பித்த கமலம்மாள், “நான் உன் அம்மா இல்ல அமலா.” என்றாள் அவளைப் பார்த்து.

“என்னம்மா சொல்றே.” என்று அதிர்ச்சியுடன் இடைமறித்த அமலாவை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்தாள் கமலம்மாள்.

“ஆமாம்மா. உங்கம்மா பிரவசத்துக்கு அட்மிட்டான ஆஸ்பிட்டல்ல உங்கம்மாவுக்கு பிரசவம் பார்த்த ஆயாதான் நான். உங்கம்மாவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள்ள உன்னை ஒரு பணக்கார வீட்டுக்காரங்கக்கிட்ட நான்தாம்மா திருட்டுத்தனமா எடுத்துக் கொடுத்தேன். உங்கம்மாவுக்கு அடுத்த கட்டில்ல பிரசவத்திலேயே குழந்தைய பறிகுடுத்துட்டு நின்ன அந்த சின்னப்பொண்ணும் அவபுருஷனும் கெஞ்சிக் கேட்டப்போ என்னால ஒண்ணும் செய்யமுடியல. உங்கம்மா பிரசவ மயக்கத்தில இருந்ததாலும் உங்கப்பா பிரசவ சமயத்துல ஊர்ல இல்லாததாலும் குழந்தைய எடுத்துக் குடுக்கறது ஈசியா நடந்தது. நான் செய்த காரியம் அவங்க ரெண்டு பேருக்குமே தெரியாது.”

அமலாவுக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை. இத்தனைக் காலம் தன்னை வளர்த்து ஆளாக்கியவள் ஒரு திருடியா ? பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு பச்சிளம் குழந்தையை பெற்றவளுக்குத் தெரியாமல் எடுத்து விற்றவளா ?

அமலாவின் பார்வையில் இருந்த கோபத்தை உணர்ந்த கமலம்மாள் அவளைக் கெஞ்சினாள், “என்ன அப்படி பார்க்காத அமலா. நான் பணத்துக்கு ஆசைப் பட்டு அப்படி செய்யலை. அவங்க இரண்டுப் பேரையும் பார்த்தப்ப ரொம்ப வசதியானவங்களா தெரிஞ்சுது. உன்னைப் பெத்தவங்க அப்போ அவ்வளவு வசதியானவங்களா தெரியலை. இரட்டைப் பிள்ளைகளை, அதுவும் பெண் பிள்ளைகளை வளர்த்து கட்டிக்குடுக்கக் கூடிய வசதி உள்ளவங்களா எனக்கு படலை. அதனாலதான் உன்ன அவங்க கேட்டப்ப உன் வாழ்க்கை அவங்க வீட்டுல நல்லபடியா அமையும்னு நெனச்சி எடுத்துக் கொடுத்தேன். ஆனா அதுவும் தப்பா போயிருச்சி.”

அமலா ஒன்றும் சொல்லாமல் கண்களில் ஒரு கேள்விக் குறியுடன் தன் தாயைப் பார்த்தாள்.

கமலம்மாள் சோகத்துடன் அவளைப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள். “உன்னைக் கொண்டு போய் இரண்டு வாரமிருக்கும். ஒரு நாள் அந்தப் பெண் மட்டும் உன்னை தூக்கிக்கிட்டு என் வீட்டுக்கு ஓடி வந்தாள். அவள் கணவன் ஒரு விபத்துல படுகாயம் அடைஞ்சி ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும் நீ பொறந்த ராசிதான் இப்படி ஆயிருச்சி இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோன்னு அவ மாமியார் தினமும் உன்னைக் கரிச்சி கொட்டுறதாவும் சொல்லி அழுதா. ஆஸ்பத்திரியிலிருக்கும் தன் கணவன் வீடு வந்து சேரும் வரை இவளை உங்கக்கிட்டே வச்சிக்கிறீங்களான்னு கெஞ்சினா. நானும் ஒத்துக்கிட்டு உன்னை வாங்கிக்கிட்டேன். அம்மா இறந்துபோய் நான் தனியா யார் துணையுமில்லாம இருந்ததுனால உன்னை வச்சிக்கிறது பெரிய கஷ்டமாயிருக்கல. பக்கத்து வீட்டுல இருந்த ஒரு பொண்ணு நான் ஆஸ்பத்திரியில இருக்கும்போது உன்ன பாத்துக்கும். இப்படியே ரெண்டு மூணு மாசம் போச்சி. உன்னைத் தத்து எடுத்த பொண்ணு வரவேயில்லை. அவ வீட்டு விலாசத்தை ஆஸ்பத்திரி புத்தகத்துலருந்து எடுத்துக்கிட்டு போய் பார்த்தப்பத்தான் தெருஞ்சுது அவங்க ஊரை விட்டே போன விஷயம். அடுத்த வீட்டுல விசாரிச்சேன். அந்தப் பெண்ணோட கணவன் ஆஸ்பத்திரியிலேயே இறந்து விட்டதாகவும். மருமகளை அவளோட தாய் தகப்பன் வீட்டுக்கு விரட்டி விட்டுட்டு மாமியார் அந்த பங்களாவை வித்துட்டு தன் மகள் வீட்டோடு போய்விட்டதாகவும் தெரிந்தது. உங்க வீட்டு விலாசம் தேடிப் போய் விஷயத்தைச் சொல்லிடலாம்னு நெனச்சேன். ஆனா எனக்கு திருட்டுப் பட்டம் கட்டி போலீஸ்ல பிடிச்சி குடுத்துடுவாங்கன்னு அக்கம்பக்கத்திலிருந்தவங்க சொன்னதால உன்ன நானே என் சொந்த மகளா வளர்க்குறதுன்னு முடிவு பண்ணேன். சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி விதவையான எனக்கு துணையா, என் மகளா, என் வாழ்க்கைக்கு நீதாம்மா ஒரு அர்த்தத்தை குடுத்தே.”

நீண்ட நாள் பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியுடன் தன் மகளைப் பார்த்தாள் கமலம்மாள்.

அமலா அவளை அணைத்துக்கொண்டு, “நீ செஞ்சது தப்பேயில்லம்மா.” என்றாள். “இவ்வளவு கஷ்டத்துக்கிடையிலும் என்ன நல்லமாதிரி வளர்த்து படிக்க வச்சிருக்கியே. உனக்கு மகளா பிறக்கலனாலும் என்ன, நான் உன் மகளாவேதான் இருக்கப் போறேன். இன்னைக்கி சாயங்காலம் நாம ரெண்டு பேரும் மானேஜர் சார் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்திடலாம். என்ன ?”

“நாம உங்க அப்பா வீட்டுக்கு போகணுமா ? நீ என்னை விட்டு போயிடுவியோன்னு பயமாயிருக்கு அமலா”

“என்னம்மா சொல்றே. நாளைக்கு எம்.டிகிட்ட என்ன சொல்றது ?”

“இந்த வேலையே வேண்டாம்மா. எனக்கு ரிட்டயர் ஆவறதுக்கு இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு. அதுக்கப்புறம் நாம இந்த ஊர்லயே இருக்கவேண்டாம் அமலா.”

“என்னம்மா நீ. பிறந்து வளர்ந்த ஊரை விட்டுட்டு நாம எங்க போயி… அதெல்லாம் வேண்டாம். மேனேஜர் வீட்டுல என்ன சொன்னாலும் நான் உன்னை விட்டுட்டு போகமாட்டேன். என்ன நம்பும்மா.”

கலங்கி நின்ற தன் தாயை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள் அமலா.

“நீ உக்காரு. நான் போய் சாப்பாடு போட்டு கொண்டுவரேன். சாப்பிடலாம். எனக்கு பசி வயித்த கிள்ளுது.” கிச்சனை நோக்கி நகர்ந்த அமலாவை தடுத்து நிறுத்தினாள் கமலம்மாள்.

“வேண்டாம். நீ கையை கழுவிக்கிட்டு வா. வெறும் பழைய சோறும் ஊறுகாயும் தான் இருக்கு. நீ சாயங்காலம்தான் வருவேன்னு நான் ஒன்னும் செய்யல. ரெண்டு அப்பளமாவது பொரிச்சி எடுத்துட்டு வரேன்.”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உன் கையால பழையதும் அமிர்தம்மா. கொண்டா ஒரு பிடி பிடிக்கிறேன்.”

அமலா கை கழுவிக் கொண்டு வந்து அமர்ந்து தரையில் கிடந்த அந்த போட்டோவை எடுத்து மீண்டும் ஒருமுறை பார்த்தாள்.

போட்டோவில் இருந்த பெண்ணையும் தன்னையும் ஒப்பிட்டு பார்த்தாள். செல்வச் செழிப்பில் உப்பியிருந்த கன்னங்களும், கையிலும், கழுத்திலும் மின்னிய நகைகளும் அந்தப் பெண் எங்கே, நான் எங்கே. தவணை மாமா புண்ணியத்தில் அவளிடம் ஒரு நாலைந்து நல்ல புடைவகள் இருந்தன. அதில் ஏதாவது ஒன்றைக் கட்டிக்கொண்டுதான் மானேஜர் வீட்டுக்குப் போகவேண்டும்.

“அம்மா சாயங்காலம் என்னோட சாரியில ஒன்னை உடுத்திக்கிறயா ?”

கிச்சனில் இருந்து சாப்பாட்டு பாத்திரங்களுடன் வந்தவள் ஒன்றும் மறுபடி சொல்லாமல் பழைய சாதத்தை அமலாவுக்கு பரிமாறிவிட்டு எதிரே அமர்ந்து சாப்பிட தொடங்கினாள். அம்மாவின் முகத்தில் தெரிந்த கலக்கம் அவளை என்னவோ செய்தது. தட்டைத் தள்ளிவிட்டு நகர்ந்து போய் அவளருகில் அமர்ந்து அணைத்துக் கொண்டாள்.

“என்னம்மா. இன்னும் எம்மேல நம்பிக்கையில்லையா.”

கண்களில் துளித்து நின்ற கண்ணீருடன் மகளைப் பார்த்த கமலம்மாள் தலையை அசைத்தாள். “உன்னை நம்பாமல் நான் யாரை நம்பறதுமா ? நான் அன்றைக்கு செய்த தப்பினால நல்லா, சந்தோஷமா இருக்கவேண்டிய உன் வாழ்க்கைய நாசப் படுத்திட்டேன்னு நெனக்கும்போது எனக்கு தாளலம்மா.” தன் தாயின் குரல் நடுங்குவதை உணர்ந்த அமலா அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

“சே என்னம்மா நீ. நான் நல்லாயிருக்கணும்னு தானே நீ இப்படி செய்தே. நான் உன்கிட்டேயே திரும்பி வந்துடுவேன்னு நீ எதிர்பார்க்கலே இல்லையா ?” அமலா தாயின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி அவள் கண்களைத் துடைத்துவிட்டாள். “இங்கே பாரும்மா, உனக்கு விருப்பமில்லேன்னா நாம யாரும் அங்கே போகவேண்டாம். என்ன சொல்றே ?”

கமலம்மாள் முகத்தைத் துடைத்துக்கொண்டு மகளின் தலையை பாசத்துடன் தடவினாள். “இல்லடா. அது நல்லாயிருக்காது. நாம ரெண்டு பேருமே போவோம். எனக்கும் அவங்களைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும்னு ஆசையாயிருக்கு. அப்பத்தான் எனக்கு நிம்மதி. நீ சாப்பிடு. ரெண்டு பேரும் ஒரு தூக்கம் போடுவோம். உங்கப்பா வர எப்படியும் ஆறு மணியாயிடும்.”

தாயும் மகளும் மேலே ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு முடித்தவுடன் “நீ படும்மா. நான் பாத்திரங்களை கழுவி வச்சுட்டு கிச்சனை ஒதுங்க வச்சிடறேன். எனக்கு படுத்தாலும் தூக்கம் வராது.” என்று கூறியவாறு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கிச்சன் பக்கம் விரைந்தாள் அமலா.

பாத்திரங்களைக் கழுவி அடுக்கிவிட்டு வெளியே வந்தாள். அம்மா சுவரோரம் திரும்பி படுத்திருந்ததைப் பார்த்தாள். தூங்குவதைப் போல் நடிப்பது தெரிந்தது. பாவம் அம்மா. தனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் ? இவளை விட்டு விட்டு தன்னால் போகமுடியுமா ? இவளுக்குத்தான் தன்னை விட்டால் யார் இருக்கிறார்கள் ?

மாலையில் மானேஜர் வீட்டில் – இன்னும் அவரை தன்னால் அப்பா என்று நினைக்க முடியவில்லையே – என்ன நடந்தாலும் இவளை விட்டு தன்னால் பிரிய முடியாது, பிரியக்கூடாது என்பதில் அவள் உறுதியாயிருந்தாள்.

வாசற்கதவை மூடிவிட்டு சுவரோரம் சாய்ந்து உக்கார்ந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள்.

அடுத்த வீட்டு தவணை மாமா சைக்கிள் மணியோசை கேட்டு திடுக்கிட்டு கண் விழித்த அமலா தன் தாய் படுத்திருந்த இடம் காலியாயிருந்ததைக் கண்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். லேசாய் திறந்திருந்த வாசற்கதவை அகலத்திறந்துக் கொண்டு வெளியே எட்டிப்பார்த்தாள். அம்மா எதிர்த்த வீட்டு டாச்சர் மாமியோடு பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வாசலில் இருந்தவாறு, “அம்மா நேரமாச்சு இப்போ போனாத்தான் சீக்கிரம் திரும்பலாம்.” தன் தாயைக் கூப்பிட்டாள்.

“ஏய் அமலா. ஸ்வீட் எங்களுக்கில்லையா.” டாச்சரின் தன் வயதொத்த டாச்சரின் மகளின் குரல் கேட்டு எட்டிப்பார்த்தாள்.

“எதுக்கு ?”

“காலையில நீ ஸ்வீட் கடையில் நின்னத நான் பார்த்தேன். ஏதாவது விசேஷம்னு நினைச்சேன்.”

“அவளுக்கு இன்னைக்கு பிறந்த நாள் கோகி.” என்று மகளுக்கு பதிலளித்த டீச்சர், “என்ன அமலா, வயசு இருபத்தி நாலாயிட்டுது. என்னைக்கி கல்யாண சாப்பாடு போடப்போறே. என்ன கமலாம்மா, ஏதாவது பார்க்கிறிங்களா ?” என்றாள்.

“ஆமாம்மா. பாக்கணும். இப்பத்தானே வேலை கிடைச்சிருக்கு. என் ரிடையர்ட்மென்ட் பணம் வந்ததும் முதல்ல அவ கல்யாணம்தான்.” கமலம்மாள் பதில் கூறியவாறே அமலாவைப் பார்த்து லேசாய் புன்னகைத்தாள்.

தூர தள்ளியிருந்த்து பார்க்கும்போதுதான் தன் மகளின் வளர்ந்து கல்யாணத்துக்கு தயாராய் இருப்பது தெரிந்தது. இவளுக்கு தன்னால் என்ன பெரிதாய் செய்துவிட முடியும் ? ஒரு பத்து பவுண் நகை ? பத்து பவுண் நகை, சேலைச் சட்டை, பாத்திரங்கள், கல்யாணச் செலவு என பார்த்தாலேயே ஒரு லட்சமாவது ஆகும். தன்னால் முடியுமா ? நாளைக்கு ஆஸ்பத்திரி மாடத்துக்கிட்ட ரிடையர்ட் ஆனா எவ்வளவு பணம் கிடைக்கும்னு கேக்கணும்.

தன் தாயின் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்வதைக் கவனித்த அமலா அவளை நோக்கி விரைந்தாள். “என்னம்மா யோசிச்சிக்கிட்டு நிக்கற ? வா போயிட்டு வந்திரலாம்.”

“வரேன் டாச்சர். ஒவ்வொரு வருஷமும் இவ பிறந்தநாள் அன்னைக்கு பெரிய டாக்டர் வீட்டுக்கு போய் ஆசீர்வாதம் வாங்குறது வழக்கம். அதான்..” கேள்விக் குறியுடன் தன்னைப் பார்த்தவளுக்கு ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு தன் வீட்டு வாசல் பக்கம் நகர்ந்தாள் கமலம்மாள்.

டாச்சர் மாமிக்கு ‘ஆல் இன்டியா ரேடியோ ‘ என்று பட்டப்பெயர் அந்த குட்டிக்காலனியில் உள்ளவர்களால் வைக்கப்பட்டிருப்பது அவளுக்குத் தெரியும். ஒரு விஷயம் அவள் காதில் விழுந்தால் அடுத்த நிமிடம் காலனி முழுவதும் தெரிந்துவிடும்.

தன் தாயின் சமயோசிதமான பதில் அமலாவின் புகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்தது. வீட்டினுள் நுழைந்ததும் “பயங்கரமான ஆளுமா நீ. ஒரு நிமிஷம் எனக்கே ஒண்ணும் புரியலே.” என்றாள்.

“ஆமா அமலா. நான் நீ சொல்லாட்டாலும் பயங்கரமான ஆளுதான். இல்லன்னா இருபத்தஞ்சு வருஷமா ஒரு பொய்யை மனசுக்குள்ளேயே வச்சிருக்க என்ன விட வேற யாரால முடியும்.”

பீரோவிலிருந்து தனக்கும் தன் தாய்க்கும் சேலை சட்டைகளை எடுத்துக் கொண்டிருந்த அமலா திடுக்கிட்டு தன் தாயின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். “என்னம்மா நீ. நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசறே ? நான் சும்மா ஒரு தமாஷா சொன்னா… சரி, சரி இந்தா இந்த சேலையக் கட்டிக்கிட்டு புறப்படு.” என்றவாறு வாசற் கதவைத் தாளிட்டுவிட்டு சுவர் பக்கம் திரும்பி சேலையை மாற்றத் துவங்கினாள்.

அந்த ஒரே ரூம்தான் அவர்களிருவருக்கும் படுக்கையறை, பெட்ரூம் எல்லாம். ஆனாலும் துடைத்து பளிச்சென்று வைத்திருப்பதில் இருவரும் தேர்ந்தவர்கள். எல்லாம் அது அது வைத்த இடத்தில் இருக்கும். இருப்பது ஓரிரண்டு சேலை சட்டைதான் என்றாலும் பளிச்சென்று உடுத்திக் கொண்டு தாயும் மகளும் புறப்பட்டு போவதைப் பார்த்து அந்த காலனியிலுள்ளவர்கள் வியர்ந்து போவர். ‘நான் விக்கற சேலைக்கு இந்தப் பொண்ணுதான் நல்ல விளம்பரம். நீயும் உடுத்தறயே ‘ என்று தவணை மாமாவும் தன் மனைவியை கிண்டல் செய்வதை அமலா கேட்டதுண்டு.

இருவரும் மெளனமாய் உடுத்திக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு புறப்படும்போது மணி 5.30.

திநகரிலிருந்த மானேஜர் சார் வீட்டைத் தேடிப்பிடிக்க ஒரு மணி நேரம் பிடித்தது.

சின்ன, ஆனால் அழகான வீடு. வீட்டின் முன் மிகச் சிறிய ரோஜாத் தோட்டம். கேட்டிலிருந்து வீட்டு வாசல்வரை இரண்டு பக்கத்திலும் வரிசையாய் பூத்தொட்டிகளில் பூச்செடிகள் என வீடு பார்க்க அழகாயிருந்தது அமலாவை வெகுவாய் கவர்ந்தது. வலதுபுற ஷெட்டில் நின்ற கார் மானேஜர் சார் வீட்டிலிருப்பதை உணர்த்தியது. வாசலருகே பொருத்தியிருந்த பித்தளை போர்டு ‘சுந்தரராமன் எம்.ஏ. ‘ என்று பளபளத்தது.

கேட்டைத் திறந்து தன் தாயின் கையைப் பிடித்தவாறு உள்ளே அமலா நுழையவும் சுந்தரராமன் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வரவும் சரியாயிருந்தது. “வாங்கம்மா, வாம்மா.”

“வணக்கம் சார்.” என்று பதிலளித்த அமலா, “மேடம் இல்லையா சார் ?” என்றவாறு வீட்டினுள் நுழைந்து இங்கும் அங்கும் தேடினாள்.

நிமிர்ந்து பார்க்கவும் தைரியமில்லாமல் குனிந்தவாறு நுழைந்த கமலம்மாள் அமலாவின் தாய் தன்னை அடையாளம் கண்டுவிடுவார்களோ என்று அஞ்சினாள்.

வரவேற்பரை சிறியதாயிருந்தாலும் மிக நேர்த்தியாயிருந்தது. அளவாய் திட்டமிடப்பட்டு எல்லா பர்னிச்சர்களும் அழகாய் அமைக்கப்பட்டு ‘பியூட்டி ஃபுல் ‘ என்று மனதில் சொல்லிக்கொண்டாள் அமலா.

“அம்மா இல்லீங்களா ஐயா ?” என்ற கமலம்மாளைப் பார்த்து புன்னகைத்த சுந்தரராமன் வரவேற்பரையின் வலதுபுறமிருந்த சிறிய பூஜை அறையை நோக்கி கையைக் காண்பித்தார். “உள்ளேதான் அம்மாவும் பொண்ணும் இருக்காங்க. போய் பாருங்க.”

அமலா தன் தாயை நோக்கி திரும்பினாள் கண்களில் கேள்வியுடன். பூஜை அறையிலிருந்துக்கொண்டு ஏன் அவர்களை வரவேற்க வெளியே வரவில்லை ? என்ற கேள்வி தன் தாயின் கண்களிலும் காண்பதை கண்ட அமலா, அவரை நோக்கி, “சார்..” என்றாள் என்றாள் தயக்கத்துடன்.

“தயங்காதீங்க. போய் பாருங்க. அமலா, அம்மாவைக் கூட்டிக் கொண்டு போ. நான் குடிக்க ஏதாவது ஏற்பாடு பண்றேன்.” என்றவாறு அவர் உள்ளே போக அமலா தயங்கி நின்ற தன் தாயைக் கையைப் பிடித்து பூஜை அறையினுள் அழைத்துச் சென்றாள்.

பூஜை அறையில் நடுநாயகமாய் இருந்த அந்த பெரிய போட்டோ இருவரையும் திகைக்கச் செய்தது. மானேஜர் சாரின் மனைவியும் அவர் மகளும்.. மாலையுடன்.. நெற்றியில் பெரிதாய் குங்குமப் பொட்டுடன்..

இருவரும் திகைத்துப் போய் ஒருவர் ஒருவரைப் பார்க்க இருவர் கண்களிலும் கண்ணீர் பெருகி வர அதற்கு மேல் நிற்க முடியாமல் வெளியே ஒடி வந்தனர்.

கையில் காப்பி கோப்பைகளுடன் கிச்சனிலிருந்து வெளியே வந்த சுந்தரராமன் காப்பி டிரேயை டாப்பாயில் வைத்துவிட்டு அமர்ந்தார்.

கண்களில் பெருகிவரும் கண்ணீருடன் நின்ற தாயையும் மகளையும் மாறி மாறி பார்த்தவர் ஒரு நிமிடம் அமலாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.

‘இந்தப் பெண்ணுக்கும் நமக்கும் என்ன உறவு ? இவளைப் பார்க்கும்போதெல்லாம் மனதை என்னவோ செய்கிறதே. ‘ என்று மனதில் தோன்றிய நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அமலாவையும் தலை குனிந்தவாறு நிற்கும் அவள் தாயையும் “வாங்க உக்காருங்க.” என்று சோபாவை நோக்கி கை காண்பித்தார்.

“ஐயா.. அம்மாவும் பாப்பாவும்..” என்ற கமலம்மாளை ஏறிட்டுப் பார்த்த சுந்தரராமன், “முதல்ல காப்பியைக் குடிங்க அப்புறம் பேசலாம்.” என்றவர் அவர்கள் இருவரும் காப்பி கோப்பைகளை எடுத்தவுடன் தானும் ஒரு கோப்பையை எடுத்து உறிஞ்ச துவங்கினார்.

மெளனமாய் காப்பியை பருகிக்கொண்டிருந்த அமலாவும் அவள் தாயும் “பார்வதியும் ஸ்வர்ணாவும் கார் ஆக்ஸிடென்டில் இறந்து ஒரு வருடம் ஆகப்போகிறது.” என்ற சுந்தரராமன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுடன் அவரைத் திரும்பிப் பார்த்தனர்.

“எப்படிங்கய்யா ?” என்ற கமலம்மாளைப் பார்த்த சுந்தரராமன், “அது ஒரு சோகக்கதை. மூனு பேரும்தான் சேர்ந்து போனோம். டிரைவரும் ஸ்வர்ணாவும் அவ அம்மாவும் ஆக்ஸிடன்ட் ஸ்பாட்டிலேயே இறந்து போக நான் மட்டும் சின்ன காயங்களோட தப்பிச்சிட்டேன்.” பேச்சினிடையில் அமலாவை நோக்கி ஒரு முறை பார்த்துவிட்டு தொடர்ந்தார்.

“அமலாவை, முதல் முறையா எங்க கம்பெனி வேலைக்கு அப்ளை பண்ணியிருந்த அப்ளிகேஷனில் இருந்த போட்டோவில் பார்த்தபோது நானும் எங்க எம்.டியும் திகைச்சி போயிட்டோம். அதுக்கப்புறம் அமலாவை நேரில் பார்த்தபோதும் எங்க கண்களையே எங்களால நம்ப முடியலை. ஏன்னா அமலா அச்சா அப்படியே ஸ்வர்ணா மாதிரியே இருந்தா. வேலைக்கு வேண்டிய தகுதி முழுசா இல்லேன்னாலும் என் மகளை மாதிரியே இருக்கிற அமலாவைத் திருப்பி அனுப்ப எனக்கும் எம்.டிக்கும் மனசு வரலே. இந்த மூனு மாசமாத்தான் ஸ்வர்ணாவைக் கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிருக்கேன். இன்னைக்கு ஸ்வர்ணாவோட பிறந்த நாள். அமலாவும் பிறந்த நாள்னு காலைல ஸ்வீட் கொடுக்க வந்தப்போ நான் திகைச்சிப் போய்விட்டேன். அந்த பாதிப்பிலேதான் இன்னைக்கு அமலா என் கேபினுக்கு வந்தபோது என்னையும் அறியாம கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு அமலா என்னைத் தவறா புரிஞ்சிக்குறா மாதிரி ஆயிப்போயிருச்சு. என்னை தப்பா நெனச்சிக்காதம்மா.”

“ஐயோ சார். நான் தான் சார் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கணும். நான் தான் உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டு மடத்தனமா நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சிருங்க சார்.” என்று கண்களில் கண்ணீர் ததும்ப தன்னை நெருங்கி வந்து கையைப் பிடித்த சுந்தரராமனின் கரங்களைப் பற்றிக் கொண்டாள் அமலா.

“நீ என்னம்மா தப்பு பண்ணினே. உன் நிலைமையிலே யாராயிருந்தாலும் அப்படித்தான் ரியாக்ட் பண்ணியிருப்பாங்க. எம்.டி என்னைக் கூப்பிட்டு உன்னுடைய ரியாக்ஷனைப் பத்தி எங்கிட்ட சொன்னதுக்கப்புறம் தான் என் தவறு எனக்கு புரிஞ்சது. அப்பவே உன்னைக் கூப்பிட்டு மன்னிப்பு கேட்கணும், உனக்கு பிரியமில்லேன்னா என் பி.ஏவா இருக்க வேண்டாம்னு சொல்லலாம்னு நெனச்சேன். நீ அதுக்குள்ளே வீட்டுக்கு கிளம்பி போயிட்டே. அப்புறம்தான் உன்னை என் வீட்டுக்கு போகச் சொல்லியிருக்கேன்னு எம்.டி சொன்னார். அதனாலதான் இவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு வீட்டுக்கு வந்தேன். பார்வதியும் ஸ்வர்ணாவும் போனதுக்கப்புறம் நான் வீட்டுக்கு 12.00 மணிக்கு முன்னால வந்ததேயில்லை. எனக்குன்னு இனிமே யார் இருக்கா ? சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்னத்த பண்ண ?”

இதுவரை தலைக் கவிழ்ந்து அமர்ந்திருந்த கமலம்மாள் அவர் குரலில் இருந்த வேதனையை சகிக்க முடியாமல் தலை நிமிர்ந்து அமலாவையும் அவரையும் கண்களில் ததும்பும் கண்ணீருடன் மாறி மாறி பார்த்தாள். ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவிப்பது போல் தடுமாறுவதைப் பார்த்த அமலா அவள் கரங்களைப் பிடித்து ஆறுதலாய் அழுத்தினாள்.

அவள் கைகளை உதறிய கமலம்மாள், “நான் செஞ்ச பாவத்துக்கு எனக்கு மன்னிப்பே இல்லையா ?” என்றவாறு கதறினாள்.

சுந்தரராமன் ஒன்றும் புரியாமல் திகைத்து சோபாவில் இருந்து எழுந்து நின்றார். “என்னாச்சு அமலா, அம்மா ஏன் அழறாங்க ?”

“அம்மா என்னாச்சு ? ஏன் அழறே.” அவளுக்கு எங்கே உண்மையை சொல்லிவிடுவாளோ என்ற பயம்.

“ஐயா, நான் பெரிய பாவி. உங்களுக்கும் அம்மாவுக்கும் நான் பெரிய துரோகம் செஞ்சிட்டேன். என்னை மன்னிச்சிருங்கய்யா, என்னை மன்னிச்சிருங்க.” தன் காலில் விழவந்த கமலம்மாள் தன் காலைத் தொடுவதற்குமுன் அவர் விலகிப்போய், “என்னம்மா இது ? ஏன் என் காலில் ஏன் விழறீங்க ?” என்றார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அமலாவைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார்.

“சாரி சார். அம்மா ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அப்படி பண்ணிட்டாங்க. மன்னிச்சிருங்க சார்.” என்ற அமலா தரையில் கவிந்து கிடந்த தாயை தூக்க முயற்சித்தாள்.“ஐயோ அம்மா. எழுந்திரு. என்ன இது ?”

ஆனால் கமலம்மாள் முரண்டு பிடித்தாள். “என்னை விடுடி. இப்பவும் நான் சொல்லாம இருந்தா எனக்கு விமோசனமேயில்லை. நீ தள்ளி போ.” என்றவாறு எழுந்தவள் அவரைப் “ஐயா அமலா உங்க மக தான்யா, உங்க மக தான்.” என்று முகத்தை மூடிக் கொண்டு அழத் துவங்கினாள். “நான்தான்யா அவளைப் பிறந்தவுடனே எடுத்துக் குடுத்துட்டேன். உங்க மகள உங்கக்கிட்ட இருந்து பிரிச்ச பாவி ஐயா, நான் பாவி.”

சுந்தரராமன் திடுக்கிட்டு அமலாவைப் பார்க்க அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள். தனக்கு இதெல்லாம் தெரியும் என்று காட்டலாமா வேண்டாமா என்று தெரியாமல் குழம்பி ‘இந்தம்மாவுக்கு என்ன வந்தது ? வரும் வழியில் இந்த உண்மை மானேஜர் சாருக்கு தெரிய வேண்டாமென்று எத்தனை தடவை சொல்லியிருந்தோம் என்று சிந்தித்தாள். அவளும்தான் என்ன செய்வாள் ? மானேஜர் சாருடைய மனைவியும் மகளும் அல்பாயுசில் இறந்து போயிருப்பார்கள் என்று அம்மா நினைத்து பார்த்திருக்கமாட்டாள். அந்த எதிர்பாராத செய்திதான் அம்மாவை நிலைக்குலைய செய்துவிட்டது.

கமலம்மாள் அழுது முடியும்வரை காத்திருந்த சுந்தடரராமன் “என்னம்மா சொல்றீங்க ? அமலா என் மகளா ? அப்படின்னா நீங்க யாரு ?” என்றார் அவளைப் பார்த்து.

கண்களை துடைத்துக் கொண்டு எழுந்த கமலம்மாள் ஹாலில் ஓரமாய் இருந்த வாஷ் பேசினில் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து தரையில் அமர்ந்து அன்று பகல் அமலாவிடம் சொன்னதை சுருக்கமாய் சொல்லி முடித்தாள். அங்கு சிறிது நேரம் சுவர்க்கடிகாரத்தின் ஓசையைத் தவிர ஒரு ஆழ்ந்த மவுனம் நிலவியது.

யார் மீண்டும் பேச்சைத் துவங்குவது என்று மூவருமே திகைத்துப் போய் அமர்ந்திருந்தனர்.

அமலா ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் தாயைப் பார்த்து கோபத்துடன் கத்தினாள், “என்னம்மா உளர்றே ? புத்தி கித்தி பிசகிப் போச்சா. வா வீட்டுக்கு போகலாம்.” தனக்கு இந்த உண்மை இன்று காலையில் தான் தெரியும் என்று சொன்னால் மானேஜர் நம்புவாரோ என்ற பயம் அமலாவுக்கு.

“ஐயா இந்த பொண்ணுக்குக்கூட இன்னைக்கி வரை இதை சொல்லலை இந்தப் பாவி. எல்லாம் என்னோட சுயநலம். எங்கே நான் போலீசுல மாட்டிக்குவேனோங்குற பயம். செல்லமாய் வாழ வேண்டிய இவளோட வாழ்க்கையை நானே நாசமாக்கிட்டேன். இனிமேலும் இந்த தப்பை நான் தொடரமாட்டேன். உங்க மகளை உங்கக்கிட்டே ஒப்படைச்சுட்டு நான் போறேன் சாமி. என்னை மன்னிச்சிடேன்னு ஒரு வார்த்தை.. அது போதும் இந்த பாவிக்கு.” பேசிக் கொண்டே வாசலை நோக்கி நகர்ந்த தன் தாயை ஓடிப் போய் பிடித்து நிறுத்தினாள் அமலா.

“நில்லுமா. உனக்கென்ன பைத்தியமா ? சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா..” என்று சொல்ல வந்த அமலாவைத் தடுத்து நிறுத்திய கமலம்மாள் அவரை நோக்கினாள், “நீங்க இவ சொல்றதையெல்லாம் பெரிசு படுத்தாதிங்கய்யா. இவ சின்னப் பொண்ணு. இவளை உங்கக் கிட்டே ஒப்படைச்சுட்டேன். என்னை போகவிடுங்க அதுதான் என் தப்புக்கு தண்டனை.”

சுந்தரராமன் “இல்லம்மா. நீங்க ஒரு நிமிஷம் அமைதியாயிருங்க” என்று கூறிவிட்டு அமலாவிடம், “நீ என்னம்மா சொல்ல வந்தே ? சொல்லு, தயங்காதே” என்றார்.

அமலா இருவரையும் மாறி மாறி பார்த்தாள். என்றோ செய்துவிட்ட தவறின் பளுவால் உருக்குலைந்து நிற்கும் அம்மா ஒரு புறம் தனக்கு யாரும் இல்லையே என்று தவிப்புடன் நிற்கும் தன் தந்தை ஒரு புறம். தன்னால் யாராவது ஒருத்தருக்குத்தான் ஆறுதலாயிருக்க முடியும். அது இதுநாள் வரை வளர்த்த தன் தாய்க்குத்தான் என்ற முடிவுடன் “அம்மா சொல்றதில எனக்கு உடன்பாடில்லை. அவங்க செய்யறது அவங்களோட தப்புக்கு பிராயச்சித்தமாயிருக்கலாம். ஆனா வயசான காலத்துல அனாதரவா அவங்கள நிக்க வச்சிட்டு என்னால வேற ஒரு வாழ்க்கைய தேர்ந்தெடுத்துக்க முடியாது. அப்படியொரு முடிவை நான் எடுத்தேன்னா என்னை விட சுயநலவாதி இருக்க முடியாது. சார் உங்கள அப்பான்னு கூட கூப்பிட நினைக்க முடியாம தடுமார்ற நான் எப்படி உங்களோட … சாரி சார்.. நான்.. நான்.. அம்மாவோடத்தான்…” சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழும் தன் மகளின் கோலத்தைக் காண சகிக்க முடியாமல் சுந்தரராமன் அவளை நெருங்கி அணைத்துக்கொண்டார்.

அவர் ஸ்பரிசம் பட்டதும் தன்னையும் அறியாமல் விலகிச் சென்ற அவளை சோகத்துடன் பார்த்தவர் கமலம்மாளை நோக்கி திரும்பினார். “இங்க பாருங்கம்மா, உங்க மேல எனக்கு எந்த கோபமுமில்லை. என்னை விட நல்லாத்தான் நீங்க இவளை வளர்த்திருக்கீங்க. ஒரு வேளை இவ எங்களோட இருந்து அன்னைக்கு கார்ல வந்திருந்தா இவளையும் நான் இழந்திருப்பேனோ என்னவோ. கடவுளா பார்த்துத்தான் இவளை உங்கக்கிட்டே விட்டுவச்சிருக்கார். அதனால் இவ என்னோட மகளாயிருந்தாலும் இப்ப இவ உங்களுக்குத்தான் சொந்தம். உங்களுக்குத்தான் இவளோட துணை தேவைப்படுது. அதனால எந்த வித குற்ற உணர்வும் இல்லாம உங்க மகளை உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம்.”

“மெனி மெனி தாங்க்ஸ் சார்.. சாரி, தாங்க்ஸ்ப்பா” என்ற அமலாவைப் பார்த்து புன்னகைத்தவர், “ஆனா, எனக்கு பி.ஏவா கண்டிப்பா இருக்கணும். சரியா ?” என்றார்.

அமலா புன்னைகையுடன் விறைத்து நின்று “சரி சார்.” என்றாள் விஷமத்துடன்.

இன்னமும் தயங்கி நின்ற தன் தாயின் அருகில் சென்று அவள் கையைப் பிடித்து, “வாம்மா போலாம். அதான் அப்பாவே சரின்னு சொல்லிட்டார் இல்லை.” என்றவாறு வாசலை நோக்கி புறப்பட்டவர்களை அவர் குரல் நிறுத்தியது “உங்கம்மாதான் உனக்கு நான் குடுக்கற உன் பிறந்தநாள் பரிசு. என்ன, சரியா ?”

அவருடைய குரலில் இருந்த உணர்ச்சியை கண்டுக்கொண்டவளாய் திரும்பி அவரைப் பார்த்து கண்கள் கலங்கியவாறு கைக்கூப்பினாள், “மறுபடியும் தாங்க்ஸ்ப்பா.”

****

tbrjoseph@csb.co.in

Series Navigation

ஜோசப்

ஜோசப்