பிரிவினை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

மாலதி


—-
கோயில் விட்டுத்
தள்ளிப் போகும் சாமிக்குக்
கத்துங்கடல் ரொம்பத்தூரம்.

கூப்பிட்டுத் தாள் பணியும்
ஆணவமறுத்த கடல்
கூவியழும் கண்ணீர்க்கடல்
முத்துமணி பவளம் போல்
மூத்திரமும் பொங்கவிடும்
மறைவிடமில்லாத கடல்

சப்பரத்தில் அடங்கிய சாமியை
இழுக்குமோ சும்மா யிராத கடல்!
கோயில் மணியோசைகளில்
தூரங்களில் சிலிர்த்து சாமி
கடலோரம் துறக்குமோ!
சாமி கடலாடல்
சாத்திரத்தில் அடுக்குமோ!
கோயில்கள் அமிழ்வதும்
கடலுக்குப் பொறுக்குமோ!

சர்வேசன் விழி நனைத்துத்
தங்கவண்ணம் மேலோங்கி
ஆழங்களே உயரங்களாய்
மலைப்புகுமோ கடல்!

சொக்கப்பனை வைக்குமோ
செக்கர்சிவப்பெடுத்து
ஞாபகங்கள் அலையெறிந்து
மறதிவான் முட்டுமோ!

நீலமே நீலமாகிக்
காத்துக் கிடக்குமோ!
காலாடிக் கடலிது!

காணாமல் போய் விடுமோ!
சாமி வந்து தேடும்படி!

—-
malathi_n@sify.com

Series Navigation

மாலதி

மாலதி