‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா பற்றி

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

திண்ணை.காம் 27-2-2010 பதிவேற்றத்தில் வந்த ‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா’ நிகழ்ச்சிகளின் வண்ணனை, நேரில் சென்று அமர்ந்து விழாவைக் கண்டு மகிழ்ந்த உணர்வைத் தந்தது. படங்கள் பெரிய அளவில் வெளியிடப் பெற்றுள்ளமையால் ‘இல்லத் திரையரங்’கில் பார்த்ததுபோல் இருந்தது.

“விற்பதற்காவது மூன்று பேர் உண்டு! கற்பதற்கு? யாருமே இல்லையே!” என்றொரு காட்சியின் தலைப்பு. வாங்குவதற்கு எத்தனைப் பேர் இருந்தார்கள்?

பிரான்சில் இருந்திருக்கக் கூடும்.

இங்கு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஒருவரின் நூறு புத்தகங்களைக் கொண்டுவந்து, நூற்றிருபத்தைந்தாக அதை விற்ற திறமையும் உண்டு. அவரவர் ஆற்றலைப் பொறுத்து இப்பொழுதெல்லாம் எதுவும் அமைகிறது.

“திருக்குறள் தெளிவுரை திறம்பட வடித்தார் – உயர்

தென்மொழி ஆய்வுகள் தேனெனக் கொடுத்தார்!

நெருக்கற நுழைந்திடும் இந்தியைத் தடுத்தார்! – நம்

நிலத்திடைச செந்தமிழ் நிலவிடத் துடித்தார்! ”

என்ற நான்கு அடிகளில் இலக்குவனாரின் வாழ்க்கையைச் சித்திரித்த என் நெடுநாள் நண்பர் புதுவைப் பாவலர் தே. சனார்த்தனன் அவர்களின் பாவரிகள் அங்கு இசைக்கப்பெற்றமையை அறிந்து என் உள்ளம் மகிழ்ந்தது.

இந்த விழாவை எழுத்துகளாலும் படங்களாலும் வெளிப்படுத்திய ‘புதுவை எழில்’ என்ற புனைபெயருடைய நண்பர் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்களையும்; சிறப்புத் தந்து வெளியிட்ட தங்களையும் மனமாரப் பாராட்டுகிறேன்.

அன்புடன்,

தேவமைந்தன்

(அ.பசுபதி)

Series Navigation