பிப்ருவரி 14

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

விசா


பிப்ருவரி 14 2007 காலை 7 மணி.

நான் அந்த தண்டவாளத்தின் அருகில் ரயிலில் அடிபட்டு விழுந்து கிடக்கிறேன் கண்கள் மூடி முக்கால் மயக்கத்தில் . என் முகம் எல்லாம் இரத்தம். இடுப்புக்கு கீழே உணர்ச்சி இல்லை. உயிரின் கடைசி துளிகள் வற்றிக்கொண்டிருக்கிறன. நான் அவளுக்காக வாங்கி வந்த ரோஜா இதழ்கள் என்னை சுற்றி எங்கும் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொரு இதழிலும் தேடிப்பாருங்கள் அவள் பெயர் இருக்கும். என் காதலை சொல்ல அவளுக்காக எழுதிய கடிதம் காற்றில் எம்பி எம்பி குதித்துக்கொண்டிருக்கிறது. என் அரை மயக்கத்திலும் அவள் பிறை முகம் மட்டும் நிறைவாக தெரிகிறது. இதுவரை மூன்று ரயில்கள் என்னை கடந்து சென்றுவிட்டன. என்னை அடித்த அதே வேகத்தோடு. கடந்து செல்லும் ரயில்களின் ஜன்னல்களிலிருந்தும் கதவுகளிலிருந்து பல கண்கள் என்னை பார்க்கின்றன. சிலர் பரிதாபப்பட்டு பார்க்கிறார்கள். சிலர் பார்க்க பரிதாபப்படுகிறார்கள்.

யாராவது போலீசுக்கு தகவல் சொல்லியிருக்கக்கூடும்.

“இரண்டு மாதங்களாக அவளை தூரத்திலிருந்து காதலித்தேன். இன்று அவளிடம் என் காதலை சொல்ல ஓடி வந்தேன்….. ஆவலாய்…ஆசையாய். அந்த படபடப்பில் ரயில் வருவதை கவனிக்கவில்லை….ஒரே நொடி….எல்லாம் தவிடுபொடியாய் இதோ இங்கே நொறுங்கிக்கிடக்கிறேன்.……. இறைவா எதற்காக இந்த அவசர மரணம்.. அலாரம் எங்கே? அடித்து எழுப்பு என்னை. இது கனவாகிப் போகட்டும். ”

மண்டைக்குள் வலி இன்னும் தீவிரமடைகிறது.

“கடைசி வரை உன்னிடம் என் காதலை சொல்லமுடியாமல் போய்விடுமா? என்னை போல் என் காதலுக்கு அற்பாயுசா. இல்லை எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. காத்திருக்கிறேன். போலீஸ் அதற்குள் வரமாட்டார்கள். இங்கே தான் விழுந்து கிடப்பேன். நீ வழக்கமாக வரும் 7:30 ரயில் என்னை கடக்கும் வரை. நீ ஜன்னலோரத்தில் இருந்தால் என்னை எட்டிப்பார். எவனோ ஒருவனாய் நினைத்தாவது என் மேல் பரிதாபப்படு. என் வலி எல்லாம் மறைந்து போக உன் தாவணியை என் மீது போர்த்து .”

” இந்த இரண்டு மாதத்தில் ஒரு நாளில் உன்னை எத்தனை முறை நினைத்திருப்பேன். நீ பார்க்காத பொழுது உன்னை பார்த்தேன். நீ பார்க்கிற பொழுது நான் வியர்த்தேன். எத்தனை இரவுகள் எத்தனை தனிமைகள். எத்தனை கவிதைகள். உன்னை முதல் முதலில் பார்த்தது….உன் பச்சை தாவணி… பனிப்பார்வை….. குனிந்த நெற்றி.பார்த்த கணத்தில் யோசித்த கவிதை… இன்னும் ஞாபகம் இருக்கிறது……ஆயிரம் ரோஜாக்கள் ஒன்றாக ஆக்சிஜன் சுவாசிக்கிறது…ஐயோ….. எல்லாம் நினைவில் வந்து என்னை அழ வைக்கிறது.”

” எல்லாம் வீண்.நீ என்றும் போல் இன்றும் கல்லூரிக்கு போவாய். கல கலவென சிரிப்பாய். உன் காதலன் இங்கே ஒவ்வொரு தசையிலும் வலி வந்து இறக்க ஆயத்தமாய் விழுந்து கிடப்பது உனக்கு தெரியப்போகிறதா என்ன? இது விதியின் எத்தனையாவது அவதாரம்.. நீ காதலிக்கப்பட்டிருக்கிறாய் என்பது கடைசி வரை உனக்கு தெரியாமலே போய்விடுமா?”

யாரோ வருகிறார்கள். போலீஸ். என்னை சுற்றி பூட்ஸ் சத்தம் கேட்கிறது. ஐயோ உன் ரயில் இன்னும் வரவில்லையே. ஏழாவது முறையாக முயற்சித்து தோற்றேன் கண்களை திறக்க. அவர்கள் நான் விழுந்து கிடக்கும் இடத்தின் சுற்று வட்டாரத்தை கவனிக்கிறார்கள். மெலிதாக சிரிக்கிறார்கள். தூரத்தில் கிடந்த அந்த கடிதத்தை பிரிக்கிறார்கள். படிக்கிறார்கள். கவிதை. சுண்டவைத்த அடர்த்தியான கவிதை. கேலியாய் சிரித்தார்கள்.
“சூசைடு கேஸ் போல. லவ் பெயிலியரா இருக்கும். அதான் லெட்டரெல்லாம். ”

ஆ…..என் மூளைக்குள் மின்சாரம் பாய்ச்சுவது போல் வலி.

“இல்லை. மடையர்களா. என் காதல் தோற்கவில்லை. நான் தற்கொலை செய்யவில்லை. இது விபத்து. சொல்ல வேண்டும் உரக்க…. வாய் திறக்க…ஐயோ…அ…ஆ….வலி…..”

அசைவற்று கிடப்பது என் தேகம் தான் மனது பல அடி பள்ளத்துக்கும் பல மைல் உயரத்துக்குமாய் விழுந்து விழுந்து எழுகிறது.

இப்போது ஏதோ கொண்டு வந்து என்னை இடம் மாற்றினார்கள். எனக்கு மெல்ல மெல்ல நினைவு தப்புகிறது. என்னை தண்டவாளத்தில் இருந்து மீட்டு சாலைக்கு தூக்கி செல்கிறார்கள். அதோ தூரத்தில் ரயில் வரும் ஓசை கேட்கிறது. நீ அந்த ரயிலில் வருகிறாயா? ஆம்புலன்சில் சத்தம் மெல்லிசை போல் ஒலிக்கிறது. என் நினைவு மங்கி மங்கி அணைகிறது. இதோ நினைவு சூன்யமாகி மூர்ச்சையாகிறேன்.

ஒரு வருடம் கோமாவில் இருந்தேன்.நான் உயிர் பிழைத்ததே அதிசயம் என்றார்கள் .

பிப்ருவரி 14 2008 காலை 7 மணி.

சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு.சுவிட்ச் போட்டவுடன் எரியும் விளக்கு போல் அல்ல. உள்ளிருந்து உருவாகி திரண்டு மெல்ல மெல்ல கரை நோக்கி வரும் அலை போல என் நினைவு திரும்புகிறது. மின்னி மின்னி எரியும் விளக்கு போல என் கண்கள் திறக்கிறது. அந்த மருத்துவமனை அறையில் பலர் தெரிந்தார்கள். என் தாய் இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் பளிச்சிட்டது. என்னை ஆசையாய், என்னை பெற்றெடுத்த போது எப்படி சந்தோஷப்பட்டிருப்பாளோ அது போல் என் முகத்தை வாரி அணைத்துக்கொண்டாள். இரண்டு நிமிடம் என் முகத்தையே பார்த்து தாரை தாரையாய் அழுதாள். முத்தமிட்டாள்
பிறகு “உங்க அப்பாவ பாரு” என கட்டிலுக்கு எதிர்புறம் காட்டினாள்.

கட்டிலின் விளிம்பில் என் அப்பா அமர்ந்திருந்தார். அவர் அருகில்….என்ன ஆச்சரியம்…… ஆழ்
கிண ற்றில் விழுந்து கிடக்கும் நிலவின் பிம்பம் போல அசைந்து அசைந்து அவள் முகம் என் நினைவு குளத்தின் மேலே எழுகிறது.

அதோ அவளே தான். என் காதலி. என் உயிர். நான் நேசித்த சுவாசம். நான் சுவாசித்த நேசம். தவறவிட்ட பேருந்து. முகத்தில் அதே வசீகர புன்னகையோடு என் முன்னே அவள் நின்றுகொண்டிருக்கிறாள். என்ன ஆச்சரியம்…இது எப்படி சாத்தியம்… அவள் என்னை வாஞ்சையாய் பார்ப்பது தெரிந்தது. என் மகிழ்ச்சி காட்டாறாய் விரிந்து அந்த அறை முழுக்க பரவியது. எனக்கு துள்ளி குதிக்க வேண்டும் போல் இருந்தது.

அந்த மூன்று வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. எப்போதோ சொல்ல துடித்த அந்த மூன்று வார்த்தைகள். இப்போது சொல்ல வேண்டும். ஓங்கி சொல்ல வேண்டும். மீண்டும் பிறந்தல்லவா வந்திருக்கிறேன் இந்த வார்த்தைகளை சொல்வதற்கு. இந்த அறை முழுக்க இந்த மருத்துவமனையே அதிரும் படி மார்ச்சரி பிணங்கிளில் காதுகளில் கூட கேட்கும்படி இதயத்தின் ஆழத்திலிருந்து உரக்க சொல்ல வேண்டும்.

“ஐ லவ் யு.” வார்த்தைகள் உதடுகளிலிருந்து விடுபடுவதற்கு முன் ஒரு முறை அவளை கூர்ந்து கவனித்தேன்.

அவள் கழுத்தில் தாலி இருந்தது. அருகில் என் அண்ணன் அவள் தோளை உரசியபடி “உன் அண்ணி “என்றான்.


mailinfranki@gmail.com>

Series Navigation

விசா

விசா