பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

எஸ்ஸார்சி


துங்கபத்திரை என்னும் கட்டுரைத்தொகுப்பு வழி பாவண்ணன் மானுட உறவுகளின் ஆழத்தை ஆளுகையை ஆகிருதியை பல்வேறு வண்ணங்களில் காட்சிப்பொருளாக வாசகனுக்குக் கொண்டுதருகிறார். பவண்ணனின் எழுத்து துங்கபத்திரையின் தண்ணீராகப் பிரவாகித்துச் சுழித்துக்கொண்டு ஒடுகிறது, துங்கபத்திரையின் ஒட்டத்தை அனுபவித்தவர்களுக்கு நன்கு உணரமுடியும் பாவண்ணன் எழுத்துக்களும் அப்படித்தான் என்று
அழகின் அலைகள் கும்மாளமிடும் ஆற்று நீர். அன்பின் விசை உந்த ப்புறப்பட்டு ஒடோடி வருகிறது. ஆற்றின் கரை பொதிந்து கிடக்கிறது ஒரு கூழாங்கல். ‘இனிய நீரே இத்தனை நாளாய் எங்கே இருந்தாய் இப்போது மட்டும் எப்படித்தான் என்முன் வந்தாய் ‘ என ஊடி நிற்க துங்கபத்திரை த்தண்ணீர் கூழாங்கல்லிடம் கெஞ்சி க்கொஞ்சுகிறது. கரைவாழ் கல் மீது இப்போது இதோ பொழிகிறது ஒடோடி வந்த நதி நீரின் முத்தமழை. முத்தம் சொரியும் முத்தம். ஆற்றின் கரை கிடந்த கூழாங்கல் நதி நீரோடு சினந்து புரண்டுதிரும்பிக்கொள்கிறது. காதல் வயப்பட்டுவிட்ட துங்கபத்திரை விடுவாதாய் இல்லை. கோபக்கனலில் தகிக்கும் கல்லைக் கட்டிப்பிடித்து அதன் மோகம் அழித்து முடிக்கிறது.. கல்லும் நீரும் உலகின் தோற்றத்தை ஒருமுறை நம்முன் நிகழ்கதை யாக்குகின்றன. பாவண்ணனின் ஆழ்மனம் அழகொழுக எழுதிய உயிர் ஔவியத்தைத்தான் இங்கே வாசக அனுபவமாக்குகிறார்.
பிள்ளைகள் எல்லாம் ஒரு வகையில் தெய்வங்கள் என்னும் வரியில் பாவண்ணன் குழந்தைகளை பாலழும் பிள்ளைக்கு நல்கிய பேரருளின் அம்சமாய்க்காண்கிறார். கண்ணன் என் தெய்வம் என்பான் பாரதி.. தெவிட்டாப் புன்சிரிப்பு உதிர்க்கும் பிள்ளைகளும் மண்மீது வீழும் வான்மழையும் கடவுள் இருப்பதற்கு நித்திய சாட்சிகளாய்க் கொள்ளும் மரபு நம்ஆன்றோர்களது. நிலம்தொட்டு ஔடும் தண்ணீர் அனைத்துமே மறு உருவாய் கங்கை. பாவண்ணனின் துங்கபத்திரைக் கட்டுரையில் வரும் ஔர் சிறுமிக்கும் கங்கைதான் இந்தத் துங்கபத்திரை.
பறவைகள் மீது எப்போதும் காதல் கொள்வான் கவிஞன். கானப்பறவையின் கல கல எனும் ஔசை. மயில் குயிலாகும் பரவித்தை புக்குள் பறவையின் இருப்பு வால்மீகியின் வசந்த கோகிலம், அண்ணாமலை கோபுரம் அமர்ந்த ஞானப்புள் மேலைக்கவிஞர்களின் பாடிக்கொண்டே விண்ணுயர் வானம்பாடி, நிலையாமை பேசும் தோட்டத்துப் புறா, இன்னும் எத்தனையோ உண்டு பறவை உறவுகளாய்..
அறிவு அன்பு இரு இறக்கைகள் மேலே மேலே பறக்கிறது புள். இறக்கைகளில் ஒன்றின் எடையே மற்றதின் எடை. ஆக பறத்தல் சுகம் புள் பறந்து பறந்து வான் வதியும் அந்த வெண் நிலாவிடம் செல்லமுடியும் வடலூர் வள்ளல்பெருமானார் விருப்பமும் அது.
அலுவலக வளாகத்தில் ஒர் கணம் பார்த்து விட்டுவிட்ட பச்சைப்பறவைக்காக ஏங்கும் பாவன்ணன். பறவையின் பெயர்தான் தெரியவில்லை. பறவைக்கு என்ன பெயராக இருக்குமோ, யாருக்கேனும் அப்பெயர் தெரியுமோ என்ன விபரீதம் இது மனதை கிறங்கவைக்கும் ஆனந்தலகரியை வர்ஷிக்கும் அதன் பெயர் தான் என்ன பாவண்ணன் மனம் குடைந்து குடைந்து பெயர்தேடிப் போகிறது. பெயர் தேடும் முயற்சி இவண் ஈசன் அடி முடி தேடிய முடியாக் காரியமாகிறது. புள்ளின் பெயர் எட்டவில்லையே. ஒரு பெயர் ஒரு உருவம் இல்லார்க்கு பல் உருவம் பல் பெயர் சார்த்தி இன்புறும் மன்பதைக்கு எதற்கும் ஒரு பெயர் வைத்து விட்டால் தேவலைதான். கைக்கு ஒன்று அகப்பட்டால் அத்தனை மகிழ்ச்சி. கைக்குள் அகப்பட்டாலோ இன்னும் மகிழ்ச்சி.. ஆனால்
கிட்டாதிருத்தல் மட்டுமே சுகம் அது மட்டுமே ஒருவனைத்தேடல் வசம் ஒப்படைக்க பேருதவி செய்கிறது

கன்னடத்து ஷராவதி நதி பாவண்ணனின் முன்னர் ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை பிரவாகித்துக் கொட்டுகிறது நீர். ஊழிக்கூத்து புரியும் கங்காதரன் அல்லவா தெரிகிறான். உலகமே நாத மண்டலமாகி பாவண்னனைக் கிறங்க வைக்கிறது கண்ணனுக்கு யமுனா நதியே விளையாடும் பிருந்தாவனம். மாயக் கண்ணனுக்கு வாயைத்திறந்தால் வையகம் தெரிகிறது. ஆனால் அவனோ சிறு நங்கை ஒருத்தியின்பின்னலை பின் நின்று இழுக்கின்ற வம்பல்லவா செய்து சிரிக்கின்றான். பாவண்ணன் இங்கே இப்படித்தான் பேசுகிறார்.

‘ சக்தியின் காலடியில் நிற்பவனைப்போல் உணர்ந்தது என் மனம் .மானசிகமாக என் நெஞ்சிலிருந்து ஒவ்வொரு மலராக எடுத்து அவள் காலடியில் வைத்தேன். அந்த இசை நேராக உடலைக்கிழித்துக்கொண்டு ரத்தத்தோடு ரத்தமாகக்கலந்தது. இசையின் ஒவ்வொரு துணுக்கிலும் அளவற்ற மென்மை. பரவசமான சுகம். அப்படியே என் இடுப்பைத்தூக்கிக்கொண்டு பறப்பதுபோல இருந்தது. என்னையறியாமல் கண்களில் நீர் கட்டியது’
இது பற்றி ச் சரியாகச்சொல்ல வேண்டும் என்றால் அது ஒருவனுக்கு அகம்பாவத்தில் முடியலாம். ஆக அடக்கித்தான் வாசிக்க வேண்டும். அழகை ஆராதிக்கும் ஆங்கிலக்கவி கீட்சாகவே தெறிகிறார் பாவண்ணன்.
புதிய பெற்றோர்கள் என்னும் தலைப்பிட்டு வரும் கட்டுரையில் கனம் மிக்க எழுத்துக்களை மீண்டும் பாவண்ணன் மீட்டிக்காட்டுகிறார். ‘கனவுகளை யாரும் ஊட்டிவிடமுடியாது. அவை தானாகவே ஊறி வரவேண்டும்,,,,,,,கனவை வரித்துக்கொள்கிறவர்களுக்கு அதை அடையத்தேவையான திட்டங்களும் உழைப்பும் தாமாகவே வடிவமுறுகின்றன.’
அந்த வளவனூர் ஏரி. அதுவே இந்த எழுத்தாளனுக்கு என்றும் நெருங்கிய உறவு. அந்த ஏரி பற்றிப்பேசாத நாள் எல்லாம் பாவண்ணனுக்குப்பிறவாத நாளே. ஏரிமீது கண்ணுக்குத் தெரியும் அந்த செத்து செத்துப்பிழைக்கின்ற அம்மாக்கள் அடுப்புக்காகக்குச்சி பொறுக்கும் வளவனூர் அம்மாக்கள். அவர்களின் உலா காணும் ஏரிப் பெருவெளி. குடித்துவிட்டு ராஜகதியில் வரும் கணவன்மாருக்கு திருஅமுது படைப்பதுதான் எப்படி. ஆகத்தான் குச்சிகள் அம்மாக்கள் வசம்..
. ஒரு உதவிகேட்டு வந்த அந்த லட்சுமி சின்னம்மாவுக்கு உதவாமல் போய்விட்ட பாவண்ணன் குற்ற உணர்வோடு இக்கட்டுரையில் மனத்தை அசைபோடுகிறார். கவிஞர் பழமலய் ஒரு பழைய சட்டைகேட்டு வந்த தன் கிராமத்து ராமசாமிக்கு அடுத்த முறை பார்க்கலாமே ராமசாமி என்று அனுப்பிவிட அந்த ராமசாமியும் உடன் இறந்து போகிறான். அது கொடுத்த வருத்தம் பற்றி பழமலய் கவிதை ஒன்றில் பேசுவார் மிகப்பெரிய விஷய ஞானத்தை இங்கே வாசகனுக்குச்சொல்லிவிடுகிறார் பாவண்ணன்..
‘ மாபெரும் சக்தியின் ஒரு துளியாக ஒரு பெண் ஒருவனுக்குக்கிடைக்கிறாள். அந்தச்சக்தியை அறிவதற்கு
முன்பாகவே அதை உடனடியாக அச்சுறுத்தி அடிமைப்படுத்தி, வதைக்கிற புத்தி வந்துவிடுகிறது ஆணுக்கு.’
லட்சுமி சின்னம்மா கால் பட்ட வளவனூர் ஏரிக்கரையும் வனக்கத்திர்குரியதுவாகவே வாசகன் தெரிந்துகொள்கிறான்.

‘வாழ்க்கை அதிருஷ்டம் ஒரு இழையாகவும் துரதிருஷ்டம் இன்னொரு இழையாகவும் வைத்து நெய்யப்பட்ட விரிப்பல்லவா என்கிறார் பாவண்ணன். கட்டுரை சொர்க்கத்தின் நிறம் இப்படிஎழுதிப்போகிறது. சிலருக்கு வாழ்க்கை எனும் விரிப்பில் அதிருஷ்டமே நீளத்திலும் அகலத்திலும் இழையாக அமைவதும் மறுதலையாய் வேறு சிலருக்கோ துரதிருஷ்டம் மட்டுமே அவ்விரண்டு இழைகளாக அமைந்துவிடுவதும் சாத்தியமே என்கிறார் பாவண்ணன். செவ்வியான் கேடு இன்னும் வள்ளுவன் தொடங்கி பிடிபடா விஷயமே. அது பிடிப்படத்தான் வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். இப்படியாகக் கட்டுரைகள் சில தொகுத்த பாவண்ணனின் துங்கபத்திரை தமிழுக்கு எழுத்து முத்திரை. .


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி