பார்த்தசாரதியும் பகவத்கீதையும்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

கவியோகி வேதம்


அர்ச்சுனனுக்கு மட்டுமா அவன்கீதை ? நமக்குள்ளே
கர்ச்சனை புரிந்தே காம,லோப ஆசையெல்லாம்
..
கண்ணனின் முழுஒளியைக் காண முடியாமல்
வண்ணத் திரைபோட்டு வகையாய் மறைக்கிறதே!
..
அத்திரையை அகற்றுகிற சூட்சுமத்தை அன்றுசொன்னான்;
முத்திரையைப் பாரதத்தில் பதித்துவிட்ட முதல்வனவன்!
..
அறுபது வயதின்மேல்;ஆனாலும் எதிர்வீட்டில்
குறுகுறுத்த விழியுடையாள் கோலமிட வந்தாலும்,
..
கண்ணுருட்டிப் பார்க்கின்ற கிழட்டுமனம்! அவ்வாசை
மண்ணாகிப் போக மனதில்நாம் கொள்ளபல
..
உபாயம் சொன்னான்அவ் வுத்தம சாரதியான்;
அபார யோகங்கள் கர்மம்,ஞானம்,பக்தியென;
..
ஒவ்வொன்றும் சீடனுக்கு உபதேசம் செய்துநின்றான்!:
செவ்வையாய் நம்வாழ்வில் அமைதியே செழிக்க
..
தியானமும் ஜபமும் தீவிரமாய்க் கொள்கஎன்றான்!
வியாகூலம் அகற்ற விரிந்தஎண்ணம் கொள்ளென்றான்!
..
பிறந்ததன் நோக்கம் அறிவதே ‘யோகம் ‘என்றான்!
தறுதலையாய் ஐம்புலன்கள் தறிகெட்டு ஓடாமல்
..
வசப்படுத்தும் மார்க்கத்தை வரிசையாய் அவன்சொன்னான்;
கசத்துள் காலைவிட்டுக் கத்துகின்ற யானைபோல்
..
அனைவருமே பிளிறுகின்றோம்!குப்பைஎண்ணம் சுமக்கின்றோம்!
இனியபல கருத்தினையே எட்டிக்காய் என்கின்றோம்!
..
சாப்பாட்டில் ஆசைவைத்தே சடுதியில்நோய் தாங்குகின்றோம்!
கூப்பாட்டு ‘சீரியல்களில் ‘ மனத்தைக் குலைக்கின்றோம்!
..
வாழ்வில் தினம்அமைதி;வளர்வயதில் உள்ஞானம்;
தாழ்விலும் மிகப்பொறுமை; தளர்ச்சியிலும் முகத்திலொளி!
..
பேச்சைக் குறைத்த பெரும்மோனம்;விரதங்கள்,
ஏச்சில்லா புகழ்நிலைகள், இவையெல்லாம் இன்றுஇங்கே
..
எத்தனைபேர் கொள்கின்றார் சொல்லுங்கள் ?நாகரிகம்
மெத்தவும் ஏறஏற மேதினியில் துன்பம்தான்!
..
அத்தனையும் சரியாக, அனைவரும் கீதையெனும்
முத்தினையே மனம்கொள்வோம்; முக்கண்ணன் நெஞ்சில்வர!
..
மேகத்தின் தியாகத்தில் மேதினியே ஒளிர்கிறது!
யோகமெனும் பயிற்சியிலே உள்ளொளி படர்கிறது!
..
பார்த்தசா ரதிகீதை பகலவனின் பாதை!
கோர்ப்போம் அதைநெஞ்சில்! பிறகேன் உபாதை ?
&&&&(கவியோகி வேதம்)
yogiyarvedham@vsnl.net

Series Navigation