பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் நடத்திய சி. க நினைவரங்கத்தில் இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

திருமாவளவன்


(பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் 28.1104 இணைந்து நடத்திய சி. க நினைவரங்கத்தில் சிறந்த கவிதைத் தொகுப்புகான பரிசைப் பெற்று இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது)

இவ்விழாவின் மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, மதிப்புக்குரிய திருமதி.லட்சுமி கனகசபாபதி அவர்களே, காவ்யா அதிபர். திரு.சண்முக சுந்தரம் அவர்களே, பேரா.முத்து மோகன் அவர்களே, திரு. முருகேச பாண்டியன் அவர்களே,வைகைச் செல்வி மற்றும் பேரா.சுசிலா அவர்களே பேரா.ஆனந்த குமார் அவர்களே திரு .ஜீவகாருண்யன் அவர்களே கவிஞர் தேவேந்திர பூபதி அவர்களே கவிஞர் திலகபாமா அவர்களேமற்றும் கூடியிருக்கின்ற இலக்கிய கலைஞர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

நீண்ட பயணமும் வாழ்வுச் சூழலும் உடனடியாக உங்களை சந்திப்பதற்கு இடையூறாக அமைந்து விட்டன. உங்கள் அனைவரையும் பார்க்க முடியாமற் போனது மிக வருத்தம் தான். நான் உங்கள் முன் பேசியதாகவே இவ்வுரையை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

1

ஒரு நெடுத்த உரை என்பது எனக்கு சாத்தியமில்லாதது. அதற்கான பயிற்சிகளும் எனக்கு வாய்த்ததில்லை. ஈழத்து தமிழ்க் கல்வி முறையும் இதற்கு பெரிதும் இடந்தரவில்லை. அல்லது நான் அதற்குள் செல்லவில்லை . என் முன் இருப்பதெல்லாம் நான் வாழுகிற பூமி . அதன் இளமை குன்றாத அழகு. என் வாழ்க்கை.. அதனூடு கூடிய அனுபவங்கள் அவ்வளவே. இவைதான் எனக்கு பல்கலைக் கழகம் பட்டப் படிப்பு எல்லாம்.

சுய தொழிலற்ற அரச – நிறுவன உத்யோகங்கள் மீது ஆவலுற்ற ஒரு நடுத்தர வர்க்க மனிதர் வாழும் கிராமத்தில் நான் வீழ்ந்து முளை விட்டது துர்ரதிஸ்டமா அல்லது விபத்தா தெரியவில்லை. பதினாறாவது வயதில் தந்தையை இழந்த போது தொடங்கிய வாழ்வுப் போராட்டம் இன்று வரையிலும் பற்பல பரிமாணங்களில் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது

இத் துயர் மிகு போராட்டத்தைக் கடந்து செல்கின்ற வடிகாலாகத் தான் எனக்கு கவிதை அறிமுகமானது. சிறுவயதிலிருந்தே வாசிப்புச் சூழலுக்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் எனக்கு கிடைத்தவை எல்லாம் வர்த்தகப் பத்திரிக்கைகளும் அது சார்ந்த படைப்புகளும் அத்தகைய தொடர்புகளூம் மட்டுமே. முன்னாள் மலேசிய விடுதலைப் போராளியும் ஒரு சிறந்த இடது சாரியாக வாழ்ந்தவருமாகிய என் தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட வாழ்வியல் முறைக்கும் நான் வாழ்ந்த சூழலுக்குமிடையில் நிறைய முரண்களிருந்தன. இந்த முரண்களினூடாக எழுந்த கேள்விகளே என்னை சிந்திக்க வைத்தது எழுதத் தூண்டியது.

என் ஆரம்பக் கிறுக்கல்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் படி எங்கும் பதிவாகவில்லை. என் கிராமத்து நண்பர்களுடன் இணைந்து நடத்திய “ இளமருதம்” என்ற கையெழுத்துச் சஞ்சிகைகளில் ஓரிரு விடையங்கள் பதிவாகியிருந்த போதிலும் அவை போரின் காலடிக்குள் புதையுண்டு போயிற்று.

உக்கிரமான ஈழப் போர் என் பதினைந்து ஆண்டுகளை தின்று தீர்த்தது. உயிரை மட்டும் இறுகப் பிடித்தபடி இனி இந்த மண்ணுக்கு திரும்புவதில்லை என்ற வைராக்கியத்தோடு கடல் கடந்தவன் நான். அதன் பின்புதான் எனக்கு புரிந்தது. நான் மீண்டும் புதிய தொரு போர்க்களத்தினுள் தள்ளப் பட்டிருப்பது . இதுவொரு மாறுபட்ட சிறை வாழ்வு. இந்த வாழ்வைத்தான் ஏனைய புகலிடக் கவிஞர்களை போல நானும் என் எழுத்துகளுக்குள் பதிவு செய்திருக்கிறேன்.

ஈழத்தில் வாழ்பவர்களின் வாழ்வுப் போராட்டம் வேறு. அவர்கள் அதிலிருந்து மீழ்வதற்காக எத்தனிக்கிறார்கள். எந்திரங்களாக்கப் பட்ட எங்கள் குருதியில் மூச்செடுக்கிறார்கள். இப்புகலிட வாழ்வின் மீது ஆவலுற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு இத்துயரங்களெல்லாம் வெறும் ஒப்பாரிகளாகப் படுகிறது. பிறிதொரு புறத்தில் வாழ்ந்த தேசத்தைப் பிரிந்த குற்ற உணர்வோடு புதிய சிறைக்குள் அகப் பட்டு துயருக்குள் வாடும் மனிதரை கறந்து கறந்து போர் நடத்துவோருக்கு இவ்மறுத்தோடி எழுத்துக்கள் துரோகத் தனமாகப் படுவதில் ஆச்சரியமில்லை.

பேசுவதற்கோ அல்;லது எழுதுவதற்கோ தளங்கள் ஏதும் இல்லாத அல்லது மறுக்கப் பட்ட சூழலுக்குள் நெடும் காலமாக என் கவிதைகள் அறியப் படாமலே போயிற்று நாங்களே எழுதுவதோடு எழுதுவதற்கான தளங்களை உருவாக்க வேண்டியும், அவற்றை தக்க வைக்க போராட வேண்டியும் ஆயிற்று. இச்சூழலில் தான் “ ழகரம்” என்ற காலாண்டிதழை தொடங்கினேன். ஒரு வருடத்துக்கு மேல் தொடர முடியவில்லை. உயிர்நிழல் என்பவற்றோடு இணைந்து தொடர்ந்தேன். அப்போது சேர்ந்தவைதான் “ பனி வயல் உழவு” என்ற சிறு திரட்டு. அதே என் எழுத்துக்களை வெளிக் கொணர்ந்து ஓரளவுக்கு அறிமுகப் படுத்தியது.

இவ்வறிமுகந்தந்த உற்சாகம் ஒரு புறமிருக்க மறு புரத்தில் அத்திரட்டின் சிறு பலத்துடன் கூடிய நீண்ட பலகீனங்கள் தந்த உறுத்தலே மீண்டும் குறுகிய காலத்தில் “ அ•தே இரவு அ•தே பகல்” திரட்டு வெளி வருவதற்கு காரணமாயிற்று

2

தொண்நூறுகளின் நடுவில் தான் நான் மிகத் தீவிரமாக கவிதையில் கவனம் செலுத்த விழிந்தேன் அதற்கு முன் மேடைக் கவியரங்களுக்கான தயாரிப்பாகத்தான் என் எழுத்துக்கள் அமைந்தன. ஓசை நயத்துக்கு சொற்களை அடுக்கும் கலையும் அதை மேடையிலே லயம் பிசகாமல் ஒப்புவிப்பதிலும் என் ஆளுமையிருந்தது. அக்காலத்தில் தான் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையில் என் பார்வை வீழ்ந்தது. அதன் பாதிப்பே தீவிர இலக்கியம் பற்றிய தேடலுக்கு வித்திட்டது. பின்னர் சேரனின் கவிதைகளும் தொடர்ந்து சேரனின் நட்பும் எனக்கு வாய்த்தது.

சேரன் , செழியன் சக்கரவர்த்தி , ஓவியர் கருணா போன்றவர்களின் நட்பும் இவர்களுடான நீண்ட காத்திரமான இலக்கிய உரையாடல்களும் தீவிர வாசிப்புமே என்னை கவிஞனாக்கியது. இவ்விடத்தில் அவர்களையும் அந்த நாட்களையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். கூடவே இவ்விருதானது இத்தொகுப்புக்கென்ற வகையில் நான் இன்னுமொன்ற சொல்லியாக வேண்டும். ஒரு சிறந்த உணவுப் பதார்த்தமாக இருந்தாலும் அதை எப்படி பரிமாறுகிறோம் என்பதையிட்டே அதன் சுவை தீர்மானிக்கப் படுகிறது அவ்வகையில் அப்புத்தகத்துக்கு தளக் கோலம் தீட்டிய றஸ்மி மற்றும் மூண்றாவது மனிதன் பதிப்பகத்தினர் முக்கியமாக என் பணியை தன் பணியாக ஏற்றுக் கொண்டு செயற்பட்ட மு.கா. மு மன்சூர் ஆகியோரை நான் மறக்க முடியாது

இக்காலத்திற்தான் எனக்கான கவிதை மொழி பற்றிய தேடலும் ஆரம்பித்தது மஹாகவியிலிருந்து சேரன் வரையிலான அனைத்து கவிஞர்களின் மொழியையும் உள்வாங்கிக் கொண்டு எனது மொழியை வெளியே வீசுகின்ற பாங்கில் ஆங்காங்கே பலருடைய பாதிப்பும் ஒட்டியிருப்பதை “:பனிவயல் உழவு” திரட்டின் பின் என்னால் அவதானிக்க முடிந்தது. முடிந்தளவு அதிலிருந்து விடுபட்டே “அ•தே இரவு அ•தே பகல்” திரட்டு உருவானது. என்பேன். அ•தொரு கனாக் காலம். இவ்முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன் என எண்ணுகிறேன். இவ் நினைவுப் பரிசை அதற்கான சான்றாக கருதுகிறேன். இருந்தாலும் சிறு வயதிலிருந்தே என் இரத்ததோடு ஒட்டிய திருவாசகமும் அதன் உருக்கமும் அது பேசும் தொனிப் பொருளும் இன்னும் என் கவிதைகளில் ஒட்டியிருப்பதை உணர்கிறேன். இது பலமா பலவீனமா தெரியவில்லை.. இத்துயர் மிகு வாழ்வை உருகியிருகி பேசித்தான் கழிக்க வேண்டியிருக்கிறது. இடைப்பட்ட காலமொன்றில் புகலிட எழுத்துக்கள் தொடர்பான அறிமுகமும் அதன் மீதான கரிசனையும் தமிழ்நாட்டை பாதித்திருந்தது. ஆனாலும் அது நீண்டகாலம் நிலைக்கவில்லை. அது பற்றிய விவாதங்கள் எழவில்லை. ஆய்வுக் கட்டுரைகள் கூட வருவதில்லை. புகலிட எழுத்துக்கள் தான் இனி தமிழ் இலக்கியத்தை அரசோச்சும் என்ற கோசங்களோடு முடிந்து போயிற்று. பெண்ணிய எழுத்துக்கள் தலித்தெழுத்துக்கள் அல்லது மலேசிய எழுத்துக்கள் என்பன போன்று புகலிட எழுத்துக்களும் அடைப்புக் குறி எழுத்துக்களாயிற்று. தமிழகத்திலிருந்து வரும் எந்தக் கட்டுரைகளிலாயினும் சரி அல்லது நிகழ்வுகளிலாயினும் சரி ஈழ , புகலிடக் கவிஞர்களை பற்றி அல்லது எடுத்துக் காட்டுக்காக அவர்கள் கவிதையடிகளைக் கூட பாவித்ததாக அறியக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கனடா வந்து புகலிட எழுத்தை சிலாகிக்கும் ஒவ்வொரு தமிழக எழுத்தாளர்களிடமும் என் ஆட்சேபணையைத் தெரிவித்திருக்கிறேன். தமிழகத்திடம் நாமேன் அங்கீகாரத்துக்கு காத்திருக்க வேண்டும் என்று சக எழுத்தாளரிடம் எழும் கோபமும் சூழல் கருதிய ஆக்ரோஷமான பதில்களுடனும் முடிந்திருக்கின்றன. அரிதான காலச் சுவடு அடையாளம் போன்ற பதிப்பகங்கள் சில வெளியீடுகளை செய்திருக்கின்றன. அண்மையில் கண்ணன் அவர்கள் ஒரு கவிதை நிகழ்வில் ஈழத்துக் கவிதைகள் பற்றி பேசப் படாதது ஒரு குறை எனச் சுட்டிப் பேசியிருக்கிறார்

இத்தகைய சூழலில் “அ•தே இரவு அ•தே பகல்” திரட்டுக் கான இவ்நினைவுப் பரிசானது மிக முக்கியமான தொன்றாகப் பட்டுகிறது. இத் தொகுப்பை தெரிவு செய்த பாரதி இலக்கிய சங்கத்திற்கும் காவ்யா அறக் கட்டளைக்கும் தெரிவுக் குழுவுக்கும் குறிப்பாக இவ் நினைவுப் பரிசினை வழங்கிய திருமதி லட்சுமி கனக சபாபதி அவர்கட்கும் திருமதி திலகபாமாவிட்கும் என் மனமார்ந்த நன்றிகள்

நேரிலும் என் எழுத்துக்கள் மூலமும் உங்களை சந்திப்பதில் ஆவலுற்றிருக்கிறேன். காலம் கனியும் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்

koolam@hotmail.com

Series Navigation

திருமாவளவன்

திருமாவளவன்