பழிக்குப் பழி என்பது கடமையா ?

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

சதுர்வேதி பத்ரிநாத்


(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியிலிருந்து)

‘அஹிம்ஸா பரமோ தர்மா ‘ என்ற மூன்று வார்த்தைகள் (துன்புறுத்தாமையே மிக உயர்ந்த அறம்) மஹாபாரதத்தின் எல்லாப் பக்கங்களிலும் ஒலிக்கின்றன. இருப்பினும், மஹாபாரதம் முழுவதும் தன்மேலும், மற்றவர்கள் மேலுமான வன்முறையைப் பற்றியே இருக்கிறது.

மேலும், மஹாபாரதம் முழுமையும் வன்முறையிலிருந்து விடுபடலைப் பற்றியதும், பயத்திலிருந்து விடுபடலைப் பற்றியதுமாகும் அரசின் மீது கொண்ட கோரிக்கைகளுக்காக பங்காளிகளுக்குள் நடந்த கொடுமையான போரை விவரிக்கும் மஹாபாரதத்தில் இது பேசப்படுவது வினோதமாக இருக்கலாம்.

இதிலும், ஒரு அமைப்பு ரீதியான அணுகுமுறையைக் கொண்டு, எப்போதெல்லாம் வன்முறை பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் அஹிம்சையும் பேசப்படுகிறது.

பொய்மையும் பித்தலாட்டமும் பேசப்படும்போதெல்லாம் உண்மையும் பேசப்படுகிறது. மிகவும் சிறந்த மனிதர்களாக இருப்பவர்கள் தங்கள் வாயைக் கட்டுப்படுத்த முடியாமல் துன்புறுத்தும் அசிங்கமான வார்த்தைகளைப் பேசும்போது, ஒரு மனிதன் தன் நாவைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் பேசப்படுகிறது.

பயம் மனிதர்களின் இதயத்தை பீடித்திருக்கும்போது, அவர்களைத் தொடர்ந்து துரத்தும்போது, பயத்திலிருந்து விடுதலையும் பேசப்படுகிறது.

கோபம் நியாயமானதா என்பதையும், ஒருவர் மிகமோசமாக தவறிழைக்கப்பட்டிருக்கிறாரா என்பதையும் ஆராயும்போது கூட, மன்னிப்பும், சேர்ந்து வாழ்வதற்கான விட்டுக்கொடுத்தலும் சமாதானத்தின் அடிப்படை என்பது விவரிக்கப்படுகிறது.

குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமனின் மூலமாக, மஹாபாரதம், பழிவாங்கும் செயல்கள் ஒழுக்க ரீதியில் நியாயமானவையா என்பதை ஆராய்கிறது. ஒரு தவறு இழைக்கப்பட்ட முறையிலேயே, அந்தத் தவறைப் பழிவாங்கும் விதமாகச் செய்யப்பட்ட செயல்களும் சரியானவை என்றும் நியாயமானவை என்றும் அழைக்கலாமா ?

அஸ்வத்தாமனின் கோபக்கனல் தன் தகப்பனார் போர்க்களத்தில் கொல்லப்பட்டதால் அல்ல. பாண்டவர்களால் அவர் கொல்லப்பட்ட விதமே அஸ்வத்தாமாவின் கோபத்தின் காரணம். போர்வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதியதால் அவர் கொல்லப்படவில்லை. ‘அஸ்வத்தாமா இறந்துவிட்டான் ‘ அசிங்கமான பொய்யை அவர் முன் சொல்லித்தான் அவரைக் கொன்றார்கள்.

துரோணாச்சாரியார் யுதிஷ்டிரரிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள விழைந்தார். எத்தனையோ ராஜாங்கங்களைக் கொடுத்தாலும் யுதிஷ்டிரன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு. யுதிஷ்டிரன் துரோணாச்சாரியாரிடம் ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் ‘ என்று உரக்கக் கூறினான். ஆனால் ‘அஸ்வத்தாமா என்ற போர்யானை கொல்லப்பட்டான் ‘ என்று துரோணாச்சாரியாருக்கு கேட்காமல் முணுமுணுத்தான்.

தன் ஒரே மகன் போரில் இறந்தான் எனக்கேட்ட துரோணாச்சாரியார் தனது தேரில் தன் தலையை தொங்கப்போட்டு மிகுந்த புத்திர சோகத்தில் உட்கார்ந்தார். இந்த நேரத்திலேயே,பாஞ்சால நாட்டின் துருபத ராஜனின் மகன் திருஷ்டத்துயும்னன் துரோணாச்சாரியாரை நோக்கிப் பாய்ந்தான்.

துரோணாச்சாரியாரை தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரைக் கேவலப்படுத்தி திட்டி, தன் வாளால் ஒரே வீச்சில் அவரது தலையைக் கொய்தான். துரோணாச்சாரியார் அவலமான இறப்பை அடைந்தார். அஸ்வத்தாமா தன் தகப்பனாரின் இறப்பைப் பழிவாங்க உறுதிபூண்டான்.

பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றவுடன் அஸ்வத்தாமனின் தருணம் வருகிறது. பாண்டவருக்கு எதிராக மூன்றே பேர்தான் நிற்கிறார்கள். அஸ்வத்தாமன், கிருபாச்சார்யர், கிருதவர்மன். வெற்றி பெற்றவர்களின் பக்கம் இருக்கும் பாஞ்சாலப் படை உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. களைப்பினால் இறந்தது போன்ற உறக்கம்.

இறந்த இரவே பழிவாங்க சரியான தருணம். மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, தன் தகப்பனாரைக் கொன்ற திருஷ்டத்யும்னனைக் கொன்று பழிவாங்க அஸ்வத்தாமன் திட்டமிடுகிறான்.

இதனை கிருபாச்சாரியாரிடமும், கிருதவர்மனிடமும் சொல்கிறான். அஸ்வத்தாமன் சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆழ்ந்த வெட்கத்தை அடைகிறார்கள்.

கிருபாச்சார்யர் அஸ்வத்தாமனிடம் சொல்கிறார். ‘அன்பு மகனே, உன் நல்லதுக்காக உன் மனத்தைக் கட்டுப்படுத்து. நான் சொல்வதை நம்பிக் கேள். உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள், தங்களது ஆயுதங்களை விட்டுவிட்டு, தங்கள் குதிரைகளிலிருந்து இறங்கி அவைகளைக் கட்டிப்போட்டுவிட்டு, ‘நான் உங்கள் கைகளில் ‘ என்று பாதுகாப்பைக் கோரியிருக்கிறார்கள். இவர்களைக் கொல்லவே கூடாது. இவர்களைக் கொல்வது அறமாகாது. சூரிய வெளிச்சத்தில் போரிடு ‘

அஸ்வத்தாமன் இதற்கு பதில் சொல்கிறான்: ‘ எனக்கு அறத்தைப் பற்றியும் அறமற்றதைப்பற்றியும் பாடம் கற்பிக்க முயலாதீர்கள். பாண்டவர்கள் அறத்தை சுக்குநூறாக ஏற்கெனவே உடைத்து எறிந்து விட்டார்கள். நீங்கள் ஏன் அவர்களைக் குறைக் கூறக்கூடாது ? ‘

‘இந்தத் தீய மனிதர்கள் என் தகப்பனாரைக் கொன்றதை நீங்கள் சாட்சியாக இருந்து பார்த்தீர்கள். அந்த ஞாபகமே என் இதயத்தை மறுபடி மறுபடி குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. என் தகப்பனாரைக் கொன்றவனை உறக்கத்தில் கொன்றேன் என்பதற்காக நான் அடுத்த பிறவியில் பூச்சியாக பிறந்தாலும் அது எனக்கு உவப்பானதே ‘ என்கிறான்.

அஸ்வத்தாமன் பாஞ்சாலப் படை முகாமுக்கு செல்கிறான். அவன் திருஷ்டதுயும்னனைப் கண்டுபிடிக்கிறான். அஸ்வத்தாமன் அவனை எழுப்பி தன் காலால் உதைத்து தன் கைகளால் அவனை மெல்ல மெல்லக் கொல்ல ஆரம்பிக்கிறான்.

‘போதும்! என்னை உடனே ஒரு ஆயுதத்தால் வேகமாகக் கொல் ‘ என்று அஸ்வத்தாமனிடன் சொல்கிறான். அஸ்வத்தாமன் அதற்கு ‘ முடியாது, நீ உன் ஆசிரியரைக் கொன்றவன். ஒரு போர் வீரன் ஆயுதத்தால் இறப்பது போன்ற கெளரவமான மரணத்துக்கு நீ அருகதையானவன் அல்ல ‘ என்கிறான்.

பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ராணுவத்தினை அழித்தொழிக்கிறான். வெற்றி பெற்ற பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் அவன் கொன்று முடிக்கிறான். போர்வீரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் அமைதியான முகாமுக்குள் வந்த அஸ்வத்தாமன், போர்வீரர்கள் இறந்தொழிந்த அமைதியான முகாமிலிருந்து வெளியேறுகிறான். தன் கொலையுண்ட தகப்பனாருக்கு தான் பட்ட கடனை அடைத்து விடுகிறான். தன் தகப்பனாருக்கு நேர்ந்த இழிவிற்கு அவன் பழி வாங்கி விட்டான்.

அடுத்த நாள் காலையில், சென்ற இரவு என்ன நடந்தது என்பதை பாண்டவர்கள் உணர்கிறார்கள். யுதிஷ்டிரனின் அழுகையின் மூலம், மஹாபாரதம், எந்த வெற்றியும் முழுமையான வெற்றியல்ல என்பதையும், ஏதாவது ஒரு வழியில் அது தோல்வியாகி விடுகிறது என்பதை கற்பிக்கிறது.

அஸ்வத்தாமன் வேட்டையாடப்பட்டு கண்டுபிடிக்கப்படுகிறான். அர்ச்சுனனைப் பார்த்து அவன் திகிலடைகிறான். அவன் ஒரு புல்லை எடுத்து அதற்குள் பிரம்மஷிரி என்ற ஆயுதத்தின் பலத்தை ஓதுகிறான். அதனை காற்றில் எறிந்து ‘இது பாண்டவர்களை அழிக்கட்டும் ‘ என்று ஏவுகிறான்.

உலகத்தையே அது அழித்திருக்கும். அர்ச்சுனன் அதற்கு சமமான ஒரு ஆயுதத்தை எறிகிறான். இரண்டும் வானில் மோதி உலகத்தையே அழிக்க பயமுறுத்திக்கொண்டு பறக்கின்றன.

அப்போது ரிஷிகள் வந்து அவர்களிடம் சொல்கிறார்கள், ‘ உங்களது வெறுப்பும், கோபமும் உலகத்தின் எல்லா உயிர்களையும் அழிக்கும் அளவுக்கு உங்களை செயல் புரிய வைத்துவிட்டன. உங்களது ஆயுதங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் ‘ என்று கேட்கிறார்கள்.

அர்ச்சுனன் அவர்கள் கேட்டுக் கொண்டபடி செய்கிறான். ஏனெனில் அவனால் அது முடிகிறது. அதற்குக் காரணம் அவனிடம் இருந்த சுயக்கட்டுப்பாடு. அஸ்வத்தாமனால் அது முடியவில்லை. ஏனெனில் அவனிடம் சுயக்கட்டுப்பாடு இல்லை.

முடிவற்ற சுழற்சியாக வன்முறையும், பழிவாங்கலும், அதற்குப் பதில் இன்னொரு வன்முறையும் அதற்குப் பதில் இன்னொரு பழிவாங்கலுமாக நடந்த கதை, இன்றும் உலகெங்கும், இந்த வரிகள் எழுதும் போது கூட நடந்து கொண்டிருக்கின்றன.

மஹாபாரதம் கூறுகிறது

வெறுப்பும் பழிவாங்கலுமே உலகத்தை அழிக்கும் ஆயுதங்கள்.

உலகத்தை அழிக்கும் ஆயுதங்களுக்கு அளவற்ற சக்தி கொடுப்பது அவைகளின் மீது செலுத்தப்படும் கோபமும், வெறுப்பும், பழிவாங்கலுமே.

அளவு கடந்த வெறுப்பும், அளப்பரிய பழிவாங்கும் வைராக்கியமும் ஒரு புல்லையும் மாபெரும் சக்தி வாய்ந்த ஆயுதமாக்கி விடும்.

வெறுப்பும், பழிவாங்கலும் தோய்ந்து வீசப் பட்ட இந்த ஆயுதங்கள் திரும்பப் பெறமுடியாதவை. ஒரு சுயக் கட்டுப்பாடும், மன்னிக்கும் குணமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் உள்ளவர்களே இந்த ஆயுதங்களை திரும்பப் பெற முடிந்தவர்கள்.

ஆகவே, பெரும் அழிவு ஏற்படுத்தும் பெரும் ஆயுதங்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களிடமும், நியாயவான்களாக இல்லாதவர்களிடமும் இருக்கக்கூடாது.

தனக்கு எந்த விதமான எவ்வளவு பெரிய ஆபத்து இருந்தாலும், உச்சசக்தி உடைய மாபெரும் அழிவு ஆயுதங்களை உபயோகிக்கவே கூடாது. மனித உயிர்களுக்கு எதிராகக் கூடவே கூடாது.

***

Series Navigation

சதுர்வேதி பத்ரிநாத்

சதுர்வேதி பத்ரிநாத்