பயமறியாப் பாசம்

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

மு புகழேந்தி


வளர்ந்த நகரத்தில்
இயந்திரத் தாக்கத்தில்
மூடிய வீட்டினுள்
உயிரற்றப் பொம்மைகளுடனும்
உயிருள்ள பொம்மைகளுடனும்
மூனொன்று வயதுவரை
வளர்ந்த அம்முல்லை
விடுமுறை கழிக்க
அம்மை அப்பனுடன்
வந்தது பாட்டனார்
வளர்ப்பசுமை கிராமத்திற்கு
***

செங்கதிரோனோடு
விடிந்த காலையில்
ஈறிரண்டு நாள் முன்பொரித்த
ஆறிரண்டு பொன் குஞ்சுகளோடு
இருப்பக்கம் படைசூழ
வந்தது கோழி முற்றத்திற்க்கு

காலை விடிந்த
கதையைச் சொல்லி
கொக்கரித்தே கூக்குரலிட்டது
———-

வட்டில் நிறைய தானியங்களோடு
வட்ட முகத்தில் புன்னகையேந்தி
வந்தான் அவ்வீட்டுப்பெரியோன்

நெஞ்சுநிறைய உவகைக்கொண்டு
ஒருகை வட்டில் ஏந்தி நிற்க்க
மறுக்கையால் உலர்தானியமெடுத்து
முற்றம் முழுக்க
சிதறி வீசினான்

கொக் கொக்வென்று கொக்கரித்தே
கோழி கொத்தி உணவெடுத்தது

யாரோ விளிக்க
உள்ளே சென்றான்
————————————————-
உதிர்த்த கதிரோனில்
உதிர்ந்த ஒளுவெளிளத்தில்
விழித்த பைந்தளிர்
கலைந்த முடியோடு
நித்திரை முகத்தோடு
முற்றம் அருகே வந்தாள்

விரிந்த விழி வழியே
திறந்த வாய்க்கொண்டு
வாழ்வில் முதன்முறையாக
அதிஅற்புதத்தை கண்டாள்

வாய் முழுக்க பல்லாய்
முகம் முழுதும் சிரிக்க
நெஞ்சு பூரிக்க
கையிரண்டும் அபிநயக்க
காலிரண்டும் களிநடனமாட
என்னவென்று புரியா மகிழ்வோடு
விண்ணுக்கும் மண்ணுக்கும்
குதியாட்டம் போட்டாள்

ஒலிவெளிளம் புரள
தாத்தா குட்டிக்கோழி
என்றே
கொஞ்சும் மழலையில்
கூக்குரலிட்டாள்

பரபரத்த மனத்தோடு
பாசம் நிறைந்த நெஞ்சோடு
பொன்னிற நெல்மணியை
பிஞ்சுக் கையிரண்டில் அள்ளி
வண்ணக் கோழிக்குஞ்சுகள்
நோக்கி வீசினாள்

பிக்பிக்வென்றே குஞ்சுகள் உண்ணும்
அழகைக் கண்டு
இரு கைக்கொட்டி சிரித்தாள்

உள்ளக் களிப்பில்
பாசம் உச்சிக்கு ஏற
வண்ணக் கோழிக்குஞ்சுகள் பிடிக்க
முற்றம் நோக்கி
வெண்சிவப்பு பாதம்
கருங்கல்லில் பதிய
ஆடிச்சென்றாள்

வந்ததே அம்மை
கோழிக்கு சீற்றம்
குஞ்சுகள் ஆளுக்கொரு
திசை நோக்கி ஓட
ஆக்ரோச கோழி
கோபக் குரலெடுத்து
கொக்கரித்தே இறகு விரித்தது
——————————————–
இயற்கை பாசமும் பயமும்
கிடைக்கா சூழலில்
வளர்ந்த இளந்தளிர்
சிலிர்த்த இறகுடன்
சீறும் கோழியின்
தோற்றம் கண்டு
பயமில்லா நெஞ்சோடு
பாசம் பொங்க
சீச்சி சீச்சி கோழி
நீ போ தூரே
என்றே சொல்லி
குஞ்சுகள் பிடிக்க
குதித்துச் சென்றாள்
————————————————-

முதிர்ந்து அறிந்த மூத்தோன்
முற்றத்தில் களிக்குரலுடன்
சிலிர்ப்புச் சீற்றமும் கேட்டு
ஓடோடி வந்தான்
கனித்தேன் தளிரிடம்
இயற்கை பாசமும் பயமும்
என்னவென்று இயம்ப
—————————————————

Series Navigation