பனி பொழுதில்…

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

தேன்சிட்டு


வானம் ஏனோ
குழைந்து போகும்,
சூழல்கள் கனிவாய்
இருண்டு வரும்,
வெண்பறவைகள்
வேகமாய்
இறக்கை அடித்து,
பறந்து சென்றே …
பனிமழையின் வரவை
தன் பக்கத்து வீட்டிற்கும்
சொல்லிச் செல்லும்.

இதென்ன ?
ஆகாயம் பூமிக்கு
தந்த நன்கொடையா ?
இருசொட்டு,
பூ பஞ்சில் தொடங்கி
கண்ணாடித் துளியென
பெருவெள்ளமாய்
கொட்டி,கொட்டி
நிறைந்து போகும்,இவை
அள்ள,அள்ள குறையாத
அமுத சுரபிகள்…

பூமி இறைவனின்
ஓவியக் கூடாரமாய் …
எவருமே தீட்டிடாத
வெண்ணிற ஓவியங்கள்
இயற்கை மீதே
எழுதிவிட்டான்,
இறைவன் இன்று,
அற்புதக் காட்சி இது …

பனி வைரத்துகள்கள்,
சாரைப் பாம்பென
ஊர்ந்து செல்லும்
மரக்கிளையெங்கும்.

வெண் கம்பளமே
நிறைந்திருக்கும்
வீதியெல்லாம் ….

வெண்ணிறமே
எங்கெங்கும், பற்றி
பரவியே படர்ந்து செல்லும்
எல்லையில்லாமல் ….

மாக்கோலமென
உலகமெங்கும், புது
வெள்ளையடிப்பு.
ஓ, பூமிக்கு கூட
இங்கு உருமாற்றமா ?

உயிர் பிசையும்
ஊதக் காற்றை
துணையாய் இழுத்து வந்து
மனிதர்க்கு கற்று தரும்
புதுவித
உதறல் நடனம் …..

வெண்ணிற மணல்களை
அள்ளியே எடுக்க
கர கர வென்றே சில
சப்தங்கள் …..
முதல்மொழி பேச
விழைந்திடும்
வெண்குழந்தையின்
சில முன்னுரைகள் ….

பனிமழையே …
இளகிப்போய்
விழுகிறாய் வானிலிருந்து,
பின் இறுகிப்
பாறையானது உன் முகம்,
வெயில் சுள்ளென
சுட்டால் மீண்டும்
இளகிப் போகிறாய்…
மனிதர்களைப் போல்
உணர்வுண்டா உனக்கும் ?

ஆட்டுக் குட்டியாய்,
போர்வைக்குள் சுருண்டாலும்,
மெல்ல கதவைத் திறந்து,
மெது,மெதுவாய்
வெளியே வந்து,
தடுக்கித்தான் விழுகிறது மனசு,
பனிமழைக்குள் …..

***

Series Navigation