பணம் – ஒரு பால பாடம்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

இராம கி


‘பணம் ‘னா என்னாண்ணே ? ‘

‘என்ன கேள்வி இது இந்த நேரத்துலே ? எங்கே பாத்தாலும் இந்த வருசம் மழையே இல்லை, வெள்ளாமை சுத்தறவாப் போச்சுன்னு நான் உக்காந்திருக்கிற நேரத்துலே, நீீ என்ன நக்கல் பண்றியா ? ‘ஏதோ கிடைச்ச வேலையைச் செய்ஞ்சமா, பணத்தைச் சம்பாரிச்சமா, செலவு பண்ணமா ‘ன்னு இல்லாம இப்படிக் கேள்வி கேட்டு என்னத்தைக் கண்டே ? தவிர, இதெல்லாம் இங்கிலீசு படிக்கலைன்னா யாருக்குத் தெரியும் ? ‘

‘அண்ணே, அப்படிச் சொல்லாதீக, என்னன்னு தெரியாமலேயே, விளங்காமலேயே, ஒண்ணைப் புழங்கிட்டு இருந்தா, நம்மளை முட்டாப் பயகன்னு சொல்லமாட்டாய்ங்க ? அன்னாடம் புழங்குறதுக்கு, இதையெல்லாம் புரிஞ்சுக்குற தேவை இல்லைதான். அதுக்காக இப்படி நெடுகப் புரியாமலே இருந்தா, இந்தக் காலத்திலே குப்பை கொட்ட முடியுமா ? நம்மளத் தூக்கிச் சாப்பிட்ற மாட்டாய்ங்க! வாழ்க்கையிலே பொருளாதாரம், பணம்கிறது புரியணும்ணே! எல்லாம் இங்கிலிசுலே படிச்சாத்தான் முடியும்னு நாமளும் சும்மா இருந்துட்டோம்; அப்படி ரொம்ப நாளைக்கு இருக்கப்படாது. ‘

‘அப்படின்னா உனக்குப் புரிஞ்சதை மத்தவுகளுக்குத் தமிழ்லே சொல்லு! நாங்க கேட்டுக்குறோம்; நம்ம பக்கத்துலே மெத்தப் படிச்ச மேதாவி நீய்தான். ‘

‘இதுக்கு ஏண்ணே மேதாவி, அது இதுன்னு சொல்றீக ? படிச்சவன்லாம் மேதாவியா, என்ன ? இப்ப, நீங்க ஆடு, மாடு வளக்குறீகன்னு வச்சுக்குங்க! நான் விவசாயம் பண்ணுறேன். ஒங்களுக்கு நெல்லு தேவைப்படுது. ஒரு ஆட்டைக் கொண்டாந்து எங்கிட்ட விட்டுட்டு ஒரு மூடை நெல்லை நீங்க எடுத்துக்கிணு போறதுக்கு நான் சம்மதிச்சேன்னா, மத்தவுகளும் இதே மாதிரிப் பண்ணினா, ஒரு ஆட்டுக்கு ஒரு மூடை நெல்லு சமம்னு ஆகிப்போகிறும், இல்லையா ?

மூவாயிரம் நாலாயிரம் வருசத்துக்கு முன்னாடி, எத்தனை வருசம்னு கணக்குத் தெரியலை, இப்படி ஒவ்வொரு பண்டத்தையும் இன்னொரு பண்டத்தாலே அளந்து, அதுக்கு இது சமம்னு ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துக்குணு, பண்டமாத்துப் பண்ணியிருக்காய்ங்க. வாழ்க்கை வளர, வளர, மனுசனுக்குத் தேவைப்படுற பண்டங்கள் கூடிப் போச்சு. 100, 200 பண்டங்களை வச்சுக்குணு, பண்டமாத்துப் பண்ணும் போது, எதுக்கு எது எவ்வளவு சமம்னு மனசுலே நினைவு வச்சு, கொடுக்கல் வாங்கல் பண்ணுறது, நாளடைவிலே கடுசாப் போச்சு; அதனாலே இயல்பா, எல்லாருக்கும் அரிதாக் கிடைக்குற பண்டத்தாலே, வெய்யில், மழை, சூழல்னு அழியாத ஒரு பண்டத்தாலே, மத்த பண்டங்களின் சமன்பாட்டை அளக்க முற்பட்டாய்ங்க! உப்பு, விதை, முத்து, மணி அப்படின்னு ஒண்ணொண்ணா முயற்சி செய்ஞ்சு கடைசிலே பொன்னுக்கு வந்து சேர்ந்தாய்ங்க! எந்தப் பண்டத்தையும் பொன்னாலேயே அளக்க முற்பட்டாய்ங்க! அதாவது பொன்னுங்குறது பண்டமாத்துக்கு ஒரு அலகாப் போச்சுது.

இதுலே ஒண்ணு கவனிக்கோணும், நம்ம கையிலே பொன்னிருக்கோணுங்கிற கட்டாயமே இல்லை. வச்சுருக்குற பொருளுக்கு எவ்வளவு பொன் கிடைக்கும்கிறதைத் தெரிஞ்சிருந்தாப் போதும். கழஞ்சு, காணம், காசு அப்படின்னு பல்வேறு உருவிலெ, பேரிலே, பொன்னைப் புழங்கி யிருக்காய்ங்க! பொன்னுக்கு வந்த பொலிவைப் பாத்து, ஒவ்வோரு செல்வந்தரும், பண்டமாத்துப் பண்ணுற பெரிய பெரிய வணிகய்ங்களும், பொன்னைச் சேகரிக்கத் தொடங்குனாய்ங்க! பொன்னோட தேவை கூடிப் போச்சு. பொன்னைத் தேடுற சண்டையும் கூடிப் போச்சு. நாவலந் தீவுலே எல்லாப் பயகளும் ஒரே இடத்துக்கு வந்து சேர்ந்தாய்ங்க!

அந்தக் காலத் தமிழ்கூறும் நல்லுலகம் இன்னைய நிலத்தைக் காட்டிலும் ரொம்பப் பெரிசு, அண்ணே. தெக்கே ஈழத்துலேர்ந்து, வடக்கே வட பெண்ணை, கரும்பெண்ணை யாறு வரைக்கும் தமிழ் பேசுனாய்ங்க! அதுக்கு மேலே உள்ள வட நாடுகள்லேயும் தமிழ் புரிஞ்சுது. இவ்வளவு பெரிய, தமிழ் பேசும் இடத்துக்கு நடுவுலே ரொம்ப நாளாவே பொன்னு இயற்கையா கிடைச்சுது. இன்னைக்கு கோலார்னு சொல்றோம் இல்லியா ? அதுக்கு அந்தக் காலத்துலே கொல்லாளபுரம்னு பேரு; கொல்லுன்னா தங்கம். கொல்லை ஆளுற புரம் கொல்லாள புரம்; இதை வடக்கத்திகாரய்ங்க நாக்கை வளைச்சுக் குவலாள்/குவலாளபுரம்ணு திரிச்சுச் சொல்லியிருக்காய்ங்க. கொல்லாள் தான் இந்தக் கால கோலாளு/கோலாரு. நாம என்னடான்னா, ஒரு காலத்துலே கோலாள்ப்பொன்னுக்கு சொந்தக்காரய்ங்கங்கிற வரலாத்தையே மறந்துட்டு நிக்கிறோம்.

அங்கே இருக்குற சுரங்கங்கள் தான் உலகத்துலே ஆழமான, நாள் பட்ட சுரங்கங்கள். இங்கே தங்கம், தங்கம்ணு சொல்லி ரொம்ப காலத்துக்கு நோண்டிக்கிணே இருந்திருக்காய்ங்க! இந்தத் தங்கத்துக்காகத் தான் நம்ம அரசங்களெல்லாம் சண்டை போட்டிருக்காய்ங்க. கொல்லாளபுரத்தைக் கையிலே வச்ச அரசன் எவனோ, அவன்தாய்ன் உச்சாணிக் கொம்புக்குப் போனான். தெற்கே நடந்த பெருஞ் சண்டைகள்ளே பலதும் எவன் கைக்குள்ளே இந்த இடத்தை வச்சுக்கிறதுன்னு நடந்த சண்டைதான்.

பொன்னை வச்சுத்தான் வணிகமே நடந்துச்சு. வணிகங்கிறது உள்நாட்டு வணிகம்னு இல்லாம வெளிநாட்டு வணிகத்தையும் குறிச்சிது. பண்டத்தை வாங்குறது, விக்குறது எல்லாமே பொன்னாலே தான். பொன்னு நிறைய வச்சிருக்கிறவய்ங்க வணிகத்துலே பெரியாள் ஆனாய்ங்க. இவய்ங்க, பண்டம் நிறையக் கிடைக்குற இடங்களுக்குப் போய் கொள்முதல் செய்ய ஆரம்பிச்சாய்ங்க. மொத்தத்துலே வணிகர்கள்ணு சொல்லிகிறவய்ங்க தமிழகத்துலேர்ந்து உருவாகி நாவலந்தீவு முழுக்கப் பரவுனது இந்த இயற்கை விளைவாலே தான். அதனாலே, வணிகத்துக்கு மொழி தமிழ்னு அந்தக் காலத்துலே ஆகிப் போச்சு. தமிழ் வணிகய்ங்க மகத நாட்டுக்குப் போய் கொடுக்கல் வாங்கல்லே ஈடுபட்டதாலே மாவீரரும் புத்தரும் கூட தமிழ் கத்துருக்காங்க. தமிழ் வணிகர் பத்தி சாணக்கியரே அவரோட பொருள் நூல்லே எழுதி வச்சுருக்கார். சாணக்கியரே தமிழ்நாட்டுக்காரரோங்குற சந்தேகம் கூட ஒரு சிலருக்கு உண்டு; இன்னோரு சேதி; வணிகங்க தானே கணக்கு வழக்கு எழுதி வக்கணும்; அதனாலே இந்த நாவலந்தீவுலே எழுத்துக் கூட தமிழ்ல்லே தான் முதல்லே வந்துருக்குமோன்னு பல அறிஞர்கள் ஊகமாய்ச் சொல்றாக.

சரி, பொன்னு வணிகத்துக்குத் தேவை; ஆனா அது அவ்வளவு எளிதாக் கிடைக்குறது இல்லையே! பொன்னிங்குற காவிரி ஆத்தை ஒட்டி எவ்வளவு தூரம் மண்ணைக் கொழிச்சாலும் பொன்னு ஓரளவுதானே கிடைக்கும் ? சுரங்கத்துலே தோண்டுன மண்ணூறலும் (mineral) எத்தனை நாளைக்கு வரும் ? சுரங்கம் ஆழப்பட்டது தான் மிச்சம். கொஞ்சம் கொஞ்சமா பொன்னோட கிடைப்புக் குறைஞ்சுது. ஆனா தேவை கூடிப் போச்சு; ஒரு மாதிரிச் சிக்கல் வந்துச்சு. இப்ப நாடெங்கிலும் மொத்தமாத் தோண்டி எடுத்து கொழிச்சு வச்ச பொன்னு ஒரு லெச்சம் கிராம் தேறும்னு வையுங்க. அதை எத்தனை முறை திருப்பித் திருப்பி ஒருத்தருக்கு ஒருத்தர் செலாவணியாப் பொருளாதாரத்துலே சுத்த முடியும் ? கொடுத்து வாங்குற பண்டத்தின் மதிப்பு லெச்சம் கிராமுக்கு மேலே போச்சுன்னா என்ன பண்றது ? அப்பத்தான் தங்கத்தோடு இன்னொரு உலோகத்தைச் சேர்க்குற நுட்பம் தெரிஞ்சுது. இதுலே கொஞ்ச நாள் நீட்டிக்கலாம்னு புரிஞ்சுது. இதன் மூலமா, லெச்சம் கிராம் தங்கம் வச்சுக்குணு மத்த உலோகங்களைக் கலந்து ஒண்ணேகால் லெச்சம் கிராம் அளவுக்குக் கூடப் பண்டங்களைப் புழங்கலாம், ஏன், அதுக்கு மேலேயும் புழங்கலாம்ணு நினைச்சாய்ங்க!

இருக்குற மாத்துக் குறையாத தங்கத்துலே வெள்ளி சேர்த்தாய்ங்க; செம்பு சேத்தாய்ங்க; கொஞ்சம் கொஞ்சமா அதையெல்லாம் மக்கள் ஏத்துக்கினாக. பணத்துக்கே கூட அந்தக் காலத்துலே தங்கத்தோட பேரு தான் இருந்துச்சு; ஒரு கழஞ்சுப் பொன்னுன்னா இவ்வளவு எடையுள்ள பொன்னுனு பேரு. கடைசியிலே பணத்தையே கழஞ்சுன்னு சொன்னாய்ங்க; காணம்னாய்ங்க; காசுன்னாய்ங்க; இன்னும் சில ஊர்லெ தங்கம் இல்லாம வெள்ளியைக் கூடச் செலவணியாக்குனாய்ங்க; அதனாலே பணத்தை வெள்ளின்னு கூடச் சொல்ல ஆரம்பிச்சாய்ங்க. சிலசமயம் இந்தத் தங்கம், வெள்ளி எல்லாம் நம்பகமானதான்னு தெரிய முத்திரை போட ஆரம்பிச்சாய்ங்க. வராக உருவம் போட்ட நாணயம் வராகன்னு ஆச்சு. ஒரு 100 வருசத்துக்கு முன்னாடி, வெள்ளைக்காரன் காலத்துலே, நம்மூர்லே வராகன்கிற நாணயம் உலாவுச்சு. ஒரு சின்ன வராகன்னா மூணரை ரூபான்னு அருத்தம். ஒரு பெரிய வராகன்னா, மூவாயிரத்து ஐஞூறு ரூபான்னு அருத்தம். ரூபாங்கிறது கூட ராசாவோட உருவம் அச்சடிச்சதாலே வந்த பேருதான்.

இன்னும் நாளான பிறகு, பொன்னோட தேவை ரொம்பவே கூடிப் போச்சு; அப்பத்தான் ஒரு பொறி மூளையிலே உதிச்சுது. ‘ஏன் ஓவ்வொரு தடவையும் பொன்னை நேரடியாப் பரிமாறிக்கோணும் ? பேசாமப் பாவனை பண்ணுனா என்ன ? ‘ன்னு தோண்ணுச்சு. மெதுவாப் ‘பொன்னோட இருப்புக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இல்லை; பொன்னுங்கிறது ஓர் அடையாளம்; பண்டங்களை மதிப்பிடுற ஒரு அலகு ‘ன்னு புரிஞ்சது; அதுக்குப் பின்னாலே, ‘பொன்னு கையிலே இருக்கோணும், வாங்குறவுகளும், விக்குறவுகளும் கொடுத்து மாத்தோணும் ‘னு யாரும் நினைக்கலே. ஒரு பாவனைன்னு சொன்னா, ஒரு ஓலையிலெ கைச்சாத்துப் போட்டு ‘இவ்வளவு பொன்னை நீங்க வந்து கேட்டாக் குடுக்குறேன் ‘னு வெறுமனே எழுதி, ஒரு பெரிய ஆளு நமக்காக இலச்சினை வச்சிட்டா, அதுக்கு இன்னோரு இடத்துலே மதிப்பு வந்துது. ஏதோ பொன்னையே கொடுத்துட்டதா அந்த ஓலையே, துணியை, தோலை மதிக்க ஆரம்பிச்சாய்ங்க. இது ஒரு வளர்ச்சி. தோள்லே பொன்னையோ, மத்ததையோ சுமக்க வேண்டியதில்லையே ? அதுவே ஒரு பெரிய சங்கதி தானே!

நாணயம்கிற சொல்லுக்கு நம்பிக்கைங்குற பொருள் இப்படித்தான் ஏற்பட்டுச்சு. நாணயம் தோலா, துணியா, ஓலையா, தாளா மாறிச்சு. தங்கமெல்லாம் ஏதோ ஒரு கிடங்குலே குடியேறிச்சு. எல்லாம் ஒரு நம்பிக்கையிலே, யாரும் வந்து பொன்னைக் கேட்டுற மாட்டாங்கன்னு நினைச்சு இன்னை வரைக்கும் ஓடிக்கிணு இருக்கு.

இப்ப நாணயம் பத்திச் சொன்னது பணம்கிறதைப் பத்திப் புரிஞ்சுக்கிறதுக்காக. நாணயம் பத்தியே சொல்லணும்னா இன்னும் ஊரம்புட்டுச் செய்தி இருக்குன்னாலும் மேக்கொண்டு அதையே பேசாம, பணம்னா இந்தக் காலத்துலே என்னன்னு இனிப் பாப்போம்.

நமக்கிட்டே இருக்குற பண்டம்(1), பானை, பொருள், மனை, நிலம், வண்டி, தோட்டம், துரவு எல்லாத்தையும் கொடுத்து சட்டுன்னு நாணயமா, ரூவாத் தாளா மாத்தி வாங்கணும்னு வையுங்க. இதையெல்லாம் வாங்குறவுக தேடிப் பாத்து, ஒவ்வொண்ணா விக்குறோம். ரூவா ஏதோ கிடைக்குது. ஆனா நினைச்ச படி எல்லாத்தையும் சட்டுன்னு விக்க முடியுமோ ? சிலதை உடனே விக்கலாம்; சிலதை ரெண்டு நாள்லே விக்கலாம்; சிலதை ஒரு வாரத்துலே, ஒரு மாசத்துலே, ஒரு வருசத்துலே விக்கலாம்; சிலதை விக்க முடியாமலே போகலாம்.

பொருளாதாரப் படி, ஒரு குறிப்பிட்ட நாள் கணக்கை எடுத்துக்கிணு அந்த நாளுக்குள்ள எதெல்லாம் விக்க முடிஞ்சு ரூவா கிடைக்குதோ, அதெல்லாம் பணம். மிச்சதெல்லாம் பணமில்லை, ஆனாச் செல்வம். இந்த வரையறைப் படி, நம்ம நாட்டுலே 15 நாளைக்குள்ளே விக்க முடியிற பண்டம் எல்லாத்தையும் பணம்னே எடுத்துக்குறோம். இப்ப உங்கள்ட்டே ஒரு நிலம் இருக்கு. பதினைஞ்சு நாளைக்குள்ளே வாங்க ஆளு இல்லை. விக்க நீங்க ரொம்பச் சரவற் படுறீங்க. அப்ப அதைப் பணம்னு கணக்குலே எடுக்க முடியாது. அது செல்வம், பணமில்லை. இதுபோல ஒவ்வொண்ணையும் பதினைஞ்சு நாளைக்குள்ளே எவ்வளவு விரைவா, சல்லிசா ரொக்கமா மாத்தமுடியும்னு பாருங்க; அதெல்லாம் பணம். இதைத்தான் நீரு போல மாத்தக் கூடிய நீர்ம நிதிச் சொத்துக்கள்(2)னு நீட்டி முழக்கிச் சொல்றாய்ங்க. இந்த நீர்மநிதிச் சொத்துக்கள் நாட்டுலே அதிகமா இருக்குற வரைக்கும் ஒரு நாட்டோட பொருளாதாரம் கோலாகலமாப் போகும்.

இப்ப ஒரு பேச்சுக்குப் பழைய கதையைச் சொல்றேன்.

நம்மூர்லே நகரத்தார் இருக்காகள்லே, இவுக இங்கேந்து பர்மாவுக்குக் கொண்டுவிக்கப் போனாக; போன இடத்தில் வட்டிக்குக் கொடுத்து வாங்குனாக. வட்டி வாங்கி முதலைத் திருப்பித் தர்ற வரைக்கும் நிலத்தை அடைமானமா வாங்கிக்குனாக; அப்புறம் விளைச்சலையே முதலுக்குத் தவணையா அவுக ஒப்புக் கொண்டாக. பர்மா நாட்டுலே ஒரு சமயம் அடுத்தடுத்த வருசத்துக்கு வெள்ளாமை சரியா வரவே இல்லை. ஏகப்பட்ட பணம் கொடுபடாமச் சிக்கல்லே மாட்டிக்கிச்சு. அரிசிவிலையும் சந்தையிலே சரிஞ்சுருச்சு; நம்ம நாடெல்லாம் விரும்புன பர்மா அரிசி விக்கல்லே; முத விளைச்சல்லெ மாட்டிக்கிட்டு அடுத்து விதைப்புக்குப் பணம் கேட்டுத் திரும்பத் திரும்ப நீர்ம நிதி வேணும்னு இவுகள்ட்டே வந்தா, இவுகள்ட்டே மிஞ்சுனது நிலமும் முதலாண்டு விளைச்சலும்தான். விளைச்சலை வாங்குறதுக்கும் ஆளு இல்லை. நான் ரொம்பச் சுருக்கமாச் சொல்றேன். ஒரு புதைகுழி மாதிரி இவுகவுட்டுப் பணமெல்லாம் நீர்மமில்லாம, புடிச்சு வச்ச புள்ளையார, அசையாம மாட்டிக்கிச்சு. அப்படி ஆகும்னு இவுகளும் நினைக்கலே; கடன் வாங்குன பர்மாக்காரனும் நினைக்கலே. மொத்தத்துலே ஒரு புதைகுழிக்குள்ளே பர்மா நாடே மாட்டிக்குச்சு. கடைசிலே விவசாயத்துக்குன்னு நம்மூருலேர்ந்து வேலை செய்யப் போன குத்தகைப்பயக, வெள்ளாமை பாக்குற ஆளுகள்லாம் திரும்புற படியா ஆயிருச்சு; எல்லாரு பணமும் மாட்டிகிச்சு; பர்மாக்காரன் நிலமும் மாட்டிக்கிச்சு. கிட்டத்தட்ட 75% விவசாய நிலம் அடமானத்துலே மாட்டிக்கிச்சு; யாராச்சும் விட்டுக்கொடுத்திருக்கோணும் இல்லையா ? யாரும் செய்யுற மாதிரி இல்லை; சிக்கல் விழுந்த முடிச்சை அவுக்க முடியாமத் தவிக்கிற மாதிரி, கவுத்தைப் போட்டு எல்லாரையும் கட்டிப் போட்டாப்பிலே, எல்லாப் பயகளும் மயங்கிப் போனாய்ங்க. ஒருபக்கம் ஒலகப் போரு வேற வர ஆரம்பிச்சுது; இன்னோரு பக்கம் விடுதலைப் போராட்டம் சூடு புடிக்குது; மொத்தத்தில் பர்மா சீரழிஞ்சு, நம்ம இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அறந்தாங்கிப் பக்கமெல்லாம் எல்லாம் போண்டியாச்சுது. செட்டிநாடே அம்போன்னு போச்சு. வீடெல்லாம் போயிக் கடைசிலே 30 வருசம் கழிச்சு இடிஞ்சது தான் மிச்சம். மிஞ்சுன பணத்தை இந்தியாவுக்குக் கொண்டாந்து பாழாப்போன கோடம்பாக்கத்துலே படங்காட்டப் போட்டதுதான். அதுவும் பலருக்கு விளங்காமப் போச்சு.

பொருளாதாரத்துலே முத படிப்பினை இதுதாண்ணே; ‘சொத்துலே கணிசமானதைப் பணமா வச்சுக்க; எல்லாத்தையும் அடைய வச்சுறாதே! நீர்மமாவே வச்சுக்க! தனி மனுசனா நீ இருந்தாலும் உன் சேமிப்புலே மூணுலே ஒண்ணை நீர்மமா வச்சுக்க; இன்னொண்ணை நீர்மம் ஆகுறாப்புலே வச்சுக்க (நீர்மம் ஆகுறாப்புலேன்னா என்னன்னு பொறவு சொல்றேன்); கடைசி ஒண்ணை அசையாச் சொத்தா வச்சுக்கோ. ‘

அதுக்கு முன்னாடி, ஒண்ணு புரியோணும்ணே! நீர்மமா இருந்தாத்தான் நா உங்கள்ட்டே பண்டம் வாங்குறதுக்கோ, சேவை பெத்துக்கிறதுக்கோ, ஏதோ ஒன்னுக்கு விலையா, இல்லாட்டிப் பரி(3)யாக் கொடுக்கலாம்; நீங்க இதுபோல இன்னோருத்தர்ட்டே கொடுக்கலாம்; ஆத்துலே நீரோடுற மாதிரி நாடெங்கிலும் இப்படிப் பணம் கைமாறிக்கிட்டே இருக்கணும். எந்த ஒரு இடத்துலேயோ கிடங்கு(4)க்குள்ளே போயிருச்சுன்னு வைய்ங்க; அது இந்தச் சுத்துக்குள்ளே வராது. அப்பப் பணப் புழக்கம் குறைஞ்சிருச்சுன்னு சொல்லுவோம்; (அண்ணே, ஒரு மாதிரியாப் பார்க்காதீக; நான் அரசியல் பேசலே, பணப் புழக்கம் குறைஞ்சிருச்சுன்னு சில ஆளுகள் ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நம்மூர்லே சொன்னது வேறே கணக்கு; அந்த ஆட்டத்துக்கு நான் வர்லே. என்னை விட்டுருங்க! :-)). பணப் புழக்கத்தைத்தான் பணவோட்டம்னு சொல்றோம். இங்கிலீசுலே கரன்சிங்குறாகள்லே அது இதுதான். இந்த ஓட்டத்துக்குள்ளே, நல்லாக் கவனிச்சுங்க, நமக்கிட்ட இருக்குற பணம்; நம்ம வங்கிகள்லே போட்டு வச்சிருக்குற பணம் போக இன்னோரு பணமும் இருக்கு.

அதுக்கு முன்னாடி வேற ஒண்ணைப் புரிஞ்சுக்கோணும். வங்கிகளுக்கெல்லாம் ஒரு வங்கி இருக்குன்னு ஒங்களுக்குத் தெரியுமில்லே. இப்ப நம்ம ரூவாத் தாளேப் புழங்குறோமில்ல ? அந்தத் தாள்லே காந்தி படம்போட்டு, முத்திரையிட்டு எத்தனை ரூவான்னு சொல்றது போக, ‘யாரு கொண்டாந்து எங்கள்ட்டே கொடுத்தாலும், இதை நாங்க மதிச்சு இவ்வளவு ரூபா கொடுப்போம் ‘ணு ஒருத்தர் கையெழுத்துப் போட்டிருப்பார். அவர்தான் வங்கி ஆளுநர். அந்த வங்கி தான் பணத்தையே புழக்கத்துக்கு விடுற வங்கி. எல்லாருக்கும் பொதுவா, தங்கத்தையும், அதுபோல மதிப்புள்ள வேறு பணங்களையும் (குறிப்பா வெளிநாட்டுப் பணங்களையும்) தங்கள்ட்டே சேர்த்து வச்சுக்கிணு நம்மூருப் பணத்தை எடுத்து அவுக அச்சடிச்சு விடுறாக. எல்லாரு பணத்தையும் சேர்த்து வச்சுக்குறதுனாலே அந்த வங்கி சேர்ப்பு வங்கி; இந்தியச் சேர்ப்பு வங்கி.(5)

நாமெல்லாரும் பணத்தை வங்கிலே போட்டு வச்சு, வேணும்கிற போது பணம் எடுத்துப் புழங்குறோமில்லை அந்த வைப்புகளுக்குப் பேரு வேண்டு வைப்புகள்(6); இந்த வேண்டு வைப்பு மாதிரி ஒரு சில வாய்ப்புகளை நமக்குக் கொடுக்குறவுகளுக்குப் பேரு மாறுகை வங்கிகள்(7). அவுகளோட வேலையே, ஒருத்தர்ட்டேர்ந்து பணத்தை வாங்கி, அதுக்கு மாறாக் கொஞ்சம் வட்டி கொடுத்துட்டு, பணம் வேணுங்கிறவுகளுக்குப் பணத்தைக் கொடுத்து, அதுக்கு இவுக கூட வட்டி வாங்கிட்டு, இடையிலே சம்பாரிச்சு, வங்கித் தொழிலை நடத்தி, கைமாத்திக்கிணே இருக்குறதுதான். கை மாறுதுங்குறதைத் தான் மாறுகைத் தொழில்னு சொல்றோம். மாறுகைங்கிறதைத் தான் இங்கிலீசுலே காமர்சுங்கிறாய்ங்க. பல்வேறு வாடிக்கைக்காரய்ங்களை இணைக்கிறது இந்த மாறுகை வங்கிகள் தான். இந்த மாறுகை வங்கிகளுக்கு கொஞ்சம் நிலைத்தன்மை(8) வரணும்கிறதுக்காக, இவுக வச்சுருக்கிற பணத்துலே ஒரு பங்கை எப்பவுமே சேர்ப்பு வங்கிலே போட்டு வைச்சிருக்கோணும்னு நம்ம அரசாங்கம் கட்டாயம் பண்ணி வச்சிருக்கு. அப்படி மாறுகை வங்கிக சேர்ப்பு வங்கியில் வைப்பா வச்சுருக்கிறதும் ஒருவகையில் பணம் தான். ஏன்னா, இவுக கேட்டா அவுக உடனே பொட்டகத்தைத் தொறந்து எடுத்துக் கொடுத்துறணும் இல்லியா ?

இதுவரை பாத்த மூணுவகைப் பணம் போக இன்னோரு வகை இருக்கு. நம்மூர்ப் பணத்தை வெளியூர்ப் பணத்துக்கும் வெளியூர்ப் பணத்தை நம்மூருக்கும் மாத்தித் தர்ற பெரிய முகவர்கள்(9) சிலபேர் இருக்குறாய்ங்க; அவய்ங்களும் தங்கள் பணத்தைச் சேர்ப்பு வங்கிலே வைப்பு நிதியா வச்சுருக்காய்ங்க;

மொத்தத்துலே சுற்றுலே இருக்கிற ஓடுபணம்(10), நாம எல்லாரும் உடனே எடுக்கிறாப்புலே வச்சிருக்கிற வேண்டு வைப்பு நிதிகள், வங்கிகளும் பணமாற்ற முகவர்களும் சேர்ப்பு வங்கிலே வச்சிருக்கிற வைப்பு நிதிகள் ஆகிய எல்லாத்தையும் சேர்த்து பொருளாதாரத்துக்கு அடிப்படையான பணம் – M0 (11) ன்னு சொல்லுவாக. இதுலே உடனேன்னு சொல்றதை வரையறுக்கோணும்லே. அதுதான் முன்னே சொன்னாப்புலே பதினைஞ்சு நாள் – ரெண்டு வாரம்னு அருத்தம். ஆனா ஒவ்வொரு வாரத்துக்கும் ஒருக்கா, சேர்ப்பு வங்கி தன்னோட ஐந்தொகைக் கணக்கை(12)ப் போட்டு M0 பணம் நாட்டுலே எவ்வளவு புழங்குதுன்னு சொல்லும். இந்த M0 – ங்குறதுதான் நாட்டினுடைய பொருளாதாரத்துக்கான ஒரு பண அடிப்படை.

M0வுக்கு அடுத்த நிலை M1. இது என்னன்னு பாப்போம். இப்ப மாறுகை வங்கிகள் கொஞ்சம் நாள்பட்டதா ரெண்டு வாரத்துக்கும் மேற்பட்டு சில பிணைகள்(13) வச்சிருக்காக; ஒரு வங்கி இன்னொரு வங்கிட்டே கைமாத்தா வாங்கிட்டு ஆனா வட்டி கொடுக்காம நடப்புக் கணக்குலே வச்சிருக்கிறது ஒருவகை; அதே போல நாம நடப்புக் கணக்கு(14)லே வச்சு அதுக்கு நம்ம வங்கி வட்டி வாங்காம வச்சிருக்கிறது இன்னோரு வகை. இப்படிப் பலவகையிலே வட்டி தராம பல வங்கிப் பிணைகள் இருக்கு பாருங்க, அதையெல்லாம் சேர்த்தா வர்றது வங்கிப் பிரிவுகளின் பிணை. இதையும் M0வையும் சேர்த்தா வர்றது M1(15). இன்னொரு வகையாச் சொன்னா, ஓடுபணம், வங்கிகள்ட்டே இருக்கும் எல்லாவிதமான வேண்டுவைப்புகள் (வட்டி இருந்தாலும், இல்லாட்டாலும் சரி), சேர்ப்புவங்கிலே இருக்குற ‘மற்ற வகை ‘ வைப்புகள் ஆகிய மூணும் சேர்ந்தது M1. இதை ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா இந்தியச் சேர்ப்பு வங்கி, கணக்குப் போட்டுச் சொல்லுது.

அடுத்தது M2. இதுலே M1 -ஓடே, வங்கிகள்லே இருக்கிற, குறிப்பிட்ட காலத்துக்குள்லே திருப்பிக் கொடுக்க வேண்டிய, சேமவைப்புக்கள்(16), வங்கிகள் கொடுக்கும் வைப்புச் சான்றிதழ்கள்(17), ஒரு வருசத்துக்குள்ளே திருப்பிக் கொடுக்க வேண்டிய தவணை வைப்புக்கள்(15) எல்லாத்தையும் சேர்க்கோணும். மொத்தத்துலே ஒரு வருச காலத்துலே அளக்குறது M2(18). இதுவுமே எவ்வளவு இருக்குன்னு ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா இந்திய சேர்ப்பு வங்கி சொல்லிருது.

கடைசியா M3 (19): இதுலே M2 – ஓடே ஒரு வருசத்துக்கு மேற்பட்ட தவணை வைப்புக்கள், வைப்புநிதி வச்சுக்காத நிதி நிறுவணங்கள்ட்டேர்ந்து வங்கிகள் வாங்குற கடன்கள் ஆகியவற்றைச் சேத்துக்குறோம். இதுவும் ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா எவ்வளவு இருக்குன்னு சேர்ப்பு வங்கி மூலமாத் தெரிஞ்சுரும்.

பொதுவா, ஒரு நாட்டுலே M0 கிறதை மட்டும் தான் பணம்னு சொல்றது. அப்பாலே, M0-வுக்கு மேலே M3-வரைக்கும் இருக்குறதைப் அணுகுபணம்(20)னு சொல்றோம். அதாவது பணத்தை நெருங்கி அணுகுன ஒன்னு. அணுகுபணத்துக்கு மேலே உள்ளதெல்லாம், அசையாச் சொத்து(21). பணம், அணுகுபணம், அசையாச் சொத்து ஆக மூணும் சேர்ந்தது செல்வம். அண்ணே! செல்வம்னா வேறே ஒண்ணும் இல்லைண்ணே!

மொத்தச் செல்வத்துலே M0 வோட விழுக்காடு அதிகமா இருந்தா அந்த நாட்டோட மக்கள் பெருத்த செலவாளிகள்னு அருத்தம். பணமும்,அணுகுபணமும் கூட இருந்தா, எதுன்னாலும் செலவளிக்க முனைப்புள்ளவுங்கன்னு அருத்தம். அணுகுபணத்தைப் பணமாகவும் பணத்தை அணுகுபணமாகவும் மாத்த அணியமா இருந்தா, பொருளாதாரத்தின் நிலைத்துவம் தடுமாறும்னு அருத்தம். திடார்ன்னு அணுகுபணத்துலேர்ந்து எல்லாரும் பணமா மாத்தணும்னு சொல்லி, அப்ப வங்கிகளும் சேர்ப்பு வங்கியும் ஓரளவு தடுமாறுச்சுன்னா, பணவீக்கம்(22) நாட்டிலே கூடாறும்.

திடார்ன்னு எல்லாரும் பணம் கேட்டா, அதுதான் பண வீக்கம். பணத்தை எவ்வளவு தொகைக்கு சுத்துக்குள்ளே விடுறதுன்னு சேர்ப்பு வங்கி பார்த்துக்குது. பணத்தோட வேண்டுதல் கூடப் போய் அதைச் சேர்ப்பு வங்கி கட்டுப்படுத்த முடியலைன்னா பணவீக்கம் பெருத்துடும்.

அண்ணே, இதோட நிறுத்திக்கிடுவோம். இன்னும் சொல்லிட்டே போனோம்னா அப்புறம் அது பெரியப் பொருளாதாரப் பாடம் ஆயிரும். நீங்களும் கேக்க மாட்டாக. போட்டுப் பொரிச்செடுக்குது(23)ன்னு சொல்லிருவீக. தவிர அதெல்லாம் பொறுமையாப் படிக்க வேண்டிய சங்கதி. வரட்டுமாண்ணே!

—-

அருஞ்சொல் அடைவு:

1. பண்டம் = commodity

2. நீர்மநிதிச் சொத்துக்கள் = liquid financial assets

3. பரி = free

4. கிடங்கு = vault

5. இந்தியச் சேர்ப்பு வங்கி = Reserve Bank Of India

6. வேண்டு வைப்புக்கள் = demand deposits

7. மாறுகை வங்கிகள் = commercial banks

8. நிலைத் தன்மை = stability

9. முகவர்கள் = agents

10. ஓடுபணம் = currency

11. M0 = Currency in circulation + bankers ‘ deposits with RBI + ‘other ‘ deposits with the RBI (including primary dealers ‘ balance); It is compiled every week. M0 is essentially the monetary base, compiled from the balance sheet of the Reserve Bank of India.

12. ஐந்தொகைக் கணக்கு = balance sheet

13. பிணைகள் = liabilities

14. நடப்புக் கணக்கு = current account

15. M1 = Currency with the public + demand deposits with the banking system+ ‘other ‘ deposits with the RBI = Currency with the public + current deposits with the banking system + demand liabilities portion of savings deposits with the banking system + ‘other ‘ deposits with the RBI. M1 purely reflects the non-interest bearing monetary liabilities of the banking sector. It is compiled every fortnight.

16. சேம வைப்புக்கள் = safe deposits

17. வைப்புச் சான்றிதழ்கள் = deposit certificates

18. M2 = M1+ time liabilities portion of savings deposits with the banking system + certificates of deposits issued by banks + term deposits of residents with a contractual maturity of up to and including one year with the banking system = Currency with the public + current deposits with the banking system + savings deposits with the banking system + certificates of deposits issued by the banks + term deposits of residents with a contractual maturity up to and including one year with the banking system + ‘other ‘ deposits with the RBI. M2 includes besides currency, and current deposits, saving and short-term deposits reflecting the transactions balances of entities. It is compiled every fortnight

19. M3 = M2+ term deposits of residents with a contractual maturity of over one year with the banking system + call borrowings from ‘non-Depository ‘ financial corporation by the banking system. M3 has been redefined to reflect additionally to M2 the call fundings that the banking system obtains from other financial institutions. It is compiled every fortnight

20. அணுகுபணம் = near – money

21. அசையாச் சொத்து = non-liquid asset

22. பணவீக்கம் = inflation

23. பொரிச்செடுத்தல் = boring

—-

Series Navigation