பச்சைத் தமிழரைப் பற்றிச் சில பசுமையான நினைவுகள்

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

மலர் மன்னன்


அண்ணாவைப் பற்றித் திரும்பத் திரும்ப எழுதிவிட்டீர்கள். காமராஜரைப் பற்றியும் எழுதுவதாக ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டிருந்தும் இதுவரை அவரைப் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதாதது ஏன் என்று திண்ணை வாசகர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அவரது ஞாபக சக்திக்கு என் நன்றி.

காமராஜர் அவர்களுக்கு நான் அறிமுகமானது பத்திரிகையாளனாக அல்ல. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரின் மகன் என்கிற முறையில்தான்.

சென்னையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், நடப்பது காங்கிரஸ் ஆட்சிதானே என்கிற தைரியத்தில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டிருந்தார். இவர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டும் காவல் துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்கி வந்தனர். இந்த விவகாரம் என் தந்தையாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு அவர் முதலமைச்சர் காமராஜரைச் சந்தித்து முறையிட வேண்டியதாயிற்று. 1954 வாக்கில் நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது, காமராஜரைக் காண தந்தையார் என்னையும் தம்மோடு அழைத்துச் சென்றார். அபோதுதான் முதல் முறையாகக் காமராஜர் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. சி சுப்பிரமணியம் அவர்களையும் அப்போது சந்திக்க முடிந்தது.

சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு பத்திரிகையாளனாகக் காமராஜர் அவர்களைச் சந்தித்தபோது, அவருக்கே உரித்தான ஞாபக சக்தியின் பயனாக உடனே என்னை அடையாளங் கண்டுகொண்டார். என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே நேரவில்லை! ஒரு குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் என்கிற தகவல் மட்டுமே அவருக்குப் புதிதாக இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரது மகன் என்கிற ஒரே காராணத்திற்காகத்தான் காமராஜர் எனது அணுக்கத்தை அனுமதித்ததோடு, என்னைச் சகித்துக்கொண்டும் இருந்தார் என்றே அனுமானிக்கிறேன்.

ஹிந்து கிருஷ்ணஸ்வாமி, எக்ஸ்பிரஸ் ஆர் ராமச்சந்திர ஐயர் ஆகியோர் காமராஜர் அணுக அனுமதித்த மற்றிரு நிருபர்கள். வயதில் அவர்கள் இருவரைக் காட்டிலும் நான் மிகவும் இளையவன். எனவே அவர்களுக்கு ஆச்சரியம்: இந்தச் சின்னப் பையனைக் காமராஜர் எப்படித் தம்மை அண்ட அனுமதிக்கிறார் என்று. ஏனெனில் நீண்ட காலம் பரிச்சயமான, தம் நம்பிக்கைக்குப் பாத்திரமான மூத்த பத்திரிகையாளர்களைத்தான் காமராஜர் தம்மை அணுக அனுமதிப்பார். அத்தகையவர்களிடந்தான் மனந்திறந்து பேசுவார். அதிகாரப்பூர்வமல்லாத சந்திப்புகளின்போது புதிய நபர் எவரையேனும் காண நேர்ந்தால் யார் என்ன என்று விசாரித்துவிட்டுப் பேச்சைச் சுருக்கமாக முடித்துக்கொண்டு விடுவார்.

ராமச் சந்திர ஐயரும் கிருஷ்ணஸ்வாமியும் அலுவலகத்திற்குப் போகிற உத்தியோகஸ்தர்களைப் போலத்தான் இருப்பார்கள். வெளிவிவகாரங்களில் எல்லாம் தலையிடாமல் அலுவலகத் தேவையை மட்டுமே நிறைவு செய்பவர்கள், அவர்கள். கூண்டுப் பறவைகளைப் போன்ற அவர்கள் அலுவலகத் தேவைக்கு இணங்கப் பத்திரிகையாளர் கூட்டங்களுக்குச் சென்று அறிக்கை அளிப்பதோடு நின்று விடுவார்கள். எனது சுபாவம் அப்படி அல்ல. சொந்த ஆர்வம் காரணமாகப் பல முகாம்களுக்கும் போய்வருவதோடு, மக்களிடையேயும் நெருங்கிப் பழகி அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். இதன் கரணமாகக் கூட காமராஜர் என்னை அவரிடம் நெருங்க அனுமதித்திருக்கக் கூடும். தமக்கு வரும் தகவல்களோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ள என்னிடமும் பல விஷயங்களை விசாரித்துத் தெரிந்துகொள்வார். இந்த வகையில் ராமச் சந்திர ஐயரையும் கிருஷ்ணஸ்வாமியையும் விட நான் அவருக்கு உபயோகமானவனாக இருந்தேன்.

காமராஜரை முக மலர்ச்சியுடனோ வாய்விட்டுச் சிரித்தோ ஒரு தடவை கூட நான் பார்த்ததில்லை. அதிகாரிகளுடன் பேசுகிறபோது கூட மிகவும் கண்டிப்பாக அவர் பேவதைத்தான் கேட்டிருக்கிறேன். அதிகாரிகளும் அவரிடம் ஒருவித அச்சத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் பேசுவதைத்தான் பார்த்திருக்கிறேன். ஜனநாயக அமைப்பில் ஓர் அரசியல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும்போது அது வகுத்துக்கொண்டிருக்கும் சமூக, பொருளாதாரக் கொள்கைகள் எத்தகையனவாக இருப்பினும் அவற்றின் சாத்தியக்கூறுகளைப் பற்றித் தயங்கிக்கொண்டிருக்காமல் அவற்றை நிறைவேற்றித் தருவதற்காகத்தான் அரசு இயந்திரம் உள்ளது என்கிற எண்ணம் அவர் மனதில் திடமாக வேரோடியிருந்தது. அவசியமான நடவடிக்கை ஏதும் எடுத்தாக வேண்டியிருப்பின் நடப்பில் உள்ள விதிமுறைகள் அதற்கு இடமளிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி இருதலைக் கொள்ளி எறும்பாகத் தடுமாறுவார்.
ஜனங்களுக்காகத்தான் விதிமுறைகள். விதிமுறைகளுக்காக ஜனங்கள் இல்லை. விதிமுறைகளில் இடமில்லையெனில் விதிமுறைகளுக்கு உட்பட்டே அந்த நடவடிக்கையை எப்படி எடுப்பது என்று கண்டறிந்து அதன்படி நடப்பதற்குத்தான் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதில் அவருக்குச் சந்தேகமே இருந்ததில்லை.

எந்த அதிகாரியாவது இதைச் செய்வதற்கு விதிகளில் வழி இல்லையே என்று தயங்கினால் வழியைக் கண்டுபிடிப்பதற்குத்தானே நீ இருக்கிறாய்; இல்லாவிட்டால் நீ எதற்கு, நானே பார்த்துக் கொள்வேனே என்று அதட்டல் போடுவார் காமராஜர்.
காமராஜர் பெற்ற கல்வி, கண்டும், கேட்டும், உணர்ந்தும் பெற்ற கல்வி. அகையால் அது சுயத்தன்மையுடனும் நடைமுறைக்குப் பொருந்துவதாகவுமே பெரும்பாலும் இருந்தது. அவர் பேசுவது மிகவும் குறைவு. ஆனால் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதுபோல் சுருக்கமாக அவர் பேசியதெல்லாம் அனுபவ அறிவின் வெளிப்பாடாக இருந்தது. தமக்கு உள்ள பொது அறிவை மட்டும் வைத்துக் கொண்டிருந்தால் வேலைக்கு உதவாது என்பதை அவர் புரிந்து வைத்திருந்ததால்தான் சி சுப்பிரமணியத்தையும் ஆர் வெங்கட்ராமனையும் தமது அமைச்சரவையில் முக்கிய சகாக்களாக வைத்திருந்தார். இவ்வளவுக்கும் சுப்பிரமணியம் ராஜாஜியின் ஆதரவாளர் என்று கருதப்பட்டவர். ராஜாஜி முதல்வர் பொறுப்பிலிருந்து விலகியபின் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் காமராஜருடன் போட்டியிட்டுத் தோற்றவர்.

ராஜாஜி பதவி விலகியபின் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகக் காமராஜர் தேர்வு செய்யப்பட்ட போதிலும் அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. பிற்பாடுதான் குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி எம் ஆர் வெங்கட்ராமனை நிறுத்தியது. தி மு க அந்தச் சமயத்தில் நேறடியாகத் தேர்தலில் ஈடுபடும் நடைமுறையில் இருக்கவில்லையாயினும் பொதுவாகத் தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிடுபவர்களில் ஒருவரைத்தான் ஆதரிப்பது வழக்கம். ஆனால் குடியாத்தம் இடைத் தேர்தலில் தி மு க காமராஜருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது (முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சியை அண்ணா ஆதரிக்கவில்லை).

சுப்பிரமணியத்திடம் நிதியையும் வெங்கட்ராமனிடம் தொழிலையும் ஒப்படைத்து அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தவர், காமராஜர். அவர்களிடம் வேலைவாங்கி, மேற்பார்வையிடும் நாட்டாண்மைபோலத்தான் அவர் தமது பதவியைப் பயன் படுத்தினார்.
நமக்குப் பெரிய தொழில்கள் வேண்டாம்; அதில் பல சங்கடங்கள் உள்ளன. அதிக அளவில் முதலீடு செய்யக் கூடிய பெரிய நிறுவனங்களின் தயவை எதிர்பார்க்க நேரிடும். நிறைய நிலப் பரப்பு தேவைப்படும். அதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படலாம். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குவியும் தொல்லையும் ஏற்படும். பல விஷயங்களில் மத்திய அரசின் ஒப்புதலுக்காகவும் காத்திருக்க வேண்டிவரும். எனவே சிறு தொழில்களைப் பரவலாகத் தொடங்குவதுதான் புதிசாலித்தனம் என்று காமராஜரின் அனுபவ அறிவு பேசியதால்தான் வெங்கட்ராமனின் மூளையில் தொழில்பேட்டை என்கிற திட்டம் உதித்து, தமிழ் நாடு முழுவதும் தொழிற்பேட்டைகள் அமைந்தன. பொறியியலும் வேறு தொழில் நுட்பங்களும் கற்றுவிட்டு வேலைக்காகக் காத்திருந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் தாமே சிறு தொழிலதிபர்களெனப் பலருக்கு வேலை வாய்ப்பளிக்கும் முனைவாளர்களாக உருவாகவும் முடிந்தது. நடைமுறைக்கு ஒவ்வாத பர்மிட், லைசென்ஸ், கோட்டா என்கிற அக்காலத்து மத்திய அரசின் தொழிற்கொள்கையால்தான் காமராஜரின் சாமனிய அறிவின் பிரகாரம் தோன்றிய சிறு தொழில் ஊக்குவிப்பு துளிர்த்துத் தழைக்காமல் வாட நேர்ந்தது.

அடிப்படையில் காமராஜர் ஒரு அரசியல் கட்சியின் விசுவாசமிக்க தொண்டர். எந்த வழியிலும் தமது கட்சியை நிலை நிறுத்துவதில்தான் அவரது முழு கவனமும் இருந்தது. நேருஜியின் மீதும் அவருக்குக் கண்மூடித்தனமான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தன. நேருஜி சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று பிடிவாதமாக இருந்தவர் காமராஜர். சிறு தொழில்களுக்கு உரிய ஊக்கம் அளித்தும் அவை தலையெடுக்க இயலாமல் தடுமாறுவதன் காரணம் புரிந்த பிறகும் கட்சியின் மீதுள்ள பற்றின் காரணமாகக் கட்சியின் பொருளாதார, தொழில் கொள்கைகளை விடாமல் கடைப்பிடித்தார்.
மொழி, கலாசாரம், கவின் கலைகள், இலக்கியம் முதலான அம்சங்களில் அவருக்கு ஈடுபாடு கிடையாது. அதெல்லாம் மூணு வேளையும் வயிறு ரொம்பினப்புறம் தேவைப்படுற விஷயம். முதல்ல வயித்துப்பாட்டுக்கு வழியப் பார்ப்போம் என்பார் அவர். நான் அது சம்பந்தமாக ஏதும் பேச்செடுத்தால் இதையெல்லாம் சி எஸ் கிட்டச் சொல்லு என்பார். மொழிவழி மாநிலம் அமைந்ததால்தான் காமராஜர் முதல்வராக முடிந்தது. ஆனால் மொழியின் அடிப்படையிலான பிரிவுகள் அவரது தேசியக் கண்ணோட்டத்தை பாதிக்கவில்லை. தேவிகுளமும் பீர்மேடும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவை, கேரளத்துடன் அவை சேர்க்கப்பட்டால் தமிழ்நாட்டுத் தென் மாவட்டங்களின் நீர்ப்பாசன வசதி பிற்காலத்தில் பாதிக்கப்படும் என்று பலரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதனை அவர் பொருட்படுத்தவில்லை. குளமாவது, மேடாவது என்றார். ரெண்டும் எங்கயும் போயிடல்லே, நம்ம இந்தியாவுக்குள்ளதான் இருக்கு என்றார். இவ்வளவுக்கும் அவர் தென் மாவட்டத்துக்காரர்தான்!

மொழிவழி மாநிலப் பிரிவு வட்டார உணர்வைப் பெருமளவு தூண்டிவிடும் என அவர் எதிர்பார்க்கவில்லை. மொழியின் அடிப்படையில் வட்டார உணர்வு வலுப்பெறுவதைப் பார்த்துச் சலித்து அவருக்கு மொழியின் மீதே ஒருவித வெறுப்புத் தோன்றிவிட்டது. ஒருத்தருக்கு ஒருத்தர் அவங்கவங்க நினைக்கிறதைச் சொல்லிக்கத்தானே பாஷைன்னு ஒண்ணு இருக்கு, இந்த விஷயத்திலே பெரியார் சொல்றதுதான் சரி என்று ஒருமுறை சொன்னார். தி மு க வின் மீது அவருக்கு அளவு கடந்த வெறுப்பு வளரக் காரணமே அது மொழி, மொழி என்று மொழியை முன்னிலைப் படுத்தியதுதான். நமக்குன்னு ஒரு தேசிய பாஷை வேணும். எத்தனை நாளுக்குத்தான் இங்கிலீஷை வெச்சுக்கிட்டு இருக்கறது? நமக்குன்னு ஒரு பாஷை இல்லாம இங்கிலீஷ்தான் எங்களுக்கும் பாஷைன்னு சொன்னா மத்த நாட்டுக்காரன் சிரிக்க மாட்டான்? நம்ம தேசத்திலே இந்திக்காரன்தான் கூடுதலா இருக்கான். பேசாம இந்தியை ஏத்துக்கறதுதான் மத்த பாஷைக்காரனுக்கு நல்லது என்று அவரது பிரத்தியட்ச அறிவு பேசியது. 1965 ல் தமிழ் நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அவரால் சகித்துக்கொள்ளவே இயலவில்லை. தமிழ் நாட்டு மத்திய அமைச்சர்கள் அதை முன்னிட்டுப் பதவியை ராஜினாமா செய்தபோது அடக்க மாட்டாத சினமடைந்தார்.

என்னவானாலும் காங்கிரஸ்தான் ஜயிக்கவேண்டும் என்கிற தாபம் அவருக்கு இருந்தது. முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது சென்னை மாகாணத்தில் தமிழ் நாட்டுப் பகுதியில் வேட்பாளர்களை முடிவு செய்யும் அதிகாரம் அவரிடம் இருந்தது. காங்கிரசின் வெற்றி என்பதிலேயே குறியாக இருந்ததால் பெரும்பான்மை சாதி, பண வசதி, ஆள் பலம் ஆகியவற்றையே தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளாக அவர் நிர்ணயம் செய்தார். பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் அவற்றையே போட்டியிடுவதற்கான தகுதிகள் என முடிவு செய்தார்.

பழுத்த காங்கிரஸ் காரரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவருமான காரைக்குடி சா. கணேசன் சுதந்திரக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டபோது அவருக்கு எதிராகக் காமராஜர் நிறுத்திய காங்கிரஸ் வேட்பாளர் விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாய் இருந்த ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்த ராஜ சர் முத்தைய செட்டியார்தான்! காமராஜர் விரும்பியதுபோல் தேர்தலில் வெற்றி பெற்றவரும் முத்தைய செட்டியார்தான்! காங்கிரசின் பிடியிலிருந்து ஆட்சியதிகாரம் போய்விடலாகாது என்பதால்தான் முதல் தேர்தலுக்குப்பின் தடுமாறிய காங்கிரசைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தாம் விரும்பாத ராஜாஜி முதல்வராகப் பொறுப்பேற்கக் காமராஜர் சம்மதித்தார்.

ராஜாஜி மீது காமராஜருக்குத் தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை. சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் ஒத்துவராததால்தான் சத்தியமூர்த்தியின் சீடப் பிள்ளை போலிருந்த காமராஜருக்கு ராஜாஜியைப் பிடிக்கமால் போயிற்று. மேலும் 1942 ல் காங்கிரசைவிட்டு வெளியேறிய ராஜாஜியைத் திரும்பவும் கட்சிக்குள் வர அனுமதித்து, அவர் பதவிப் பொறுப்புகளைப் பெற இடமளிப்பதா என்று காமரஜர் குமுறினார். 1942 ல் காங்கிரஸ் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தனது இறுதிப் போரைத் தொடங்கியது. உலக மகா யுத்தம் நடைபெறும் தருணத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்கடி கொடுப்பது சரியல்ல என்று ராஜாஜி கருதினார். அதன் காரணமாகக் கட்சியிலிருந்து விலகினார். கட்சி போராடிய சமயம் ஒதுங்கிக் கொண்டவர், நிலைமை சரியானதும் உள்ளே நுழைவதா என்கிற கோபம் காமராஜருக்கு. ஏனெனில் எந்தச் சமயத்திலும் கட்சிதான் அவருக்கு பிரதானமாக இருந்தது.
ராஜாஜி திரும்பவும் காங்கிரசில் சேருவதற்குத் தடங்கல் செய்ய காமராஜர் சிறு குழுவைச் சேர்த்துக்கொண்டு இயங்கியதைக் கண்டித்து காந்திஜியே செய்திக் குறிப்பு ஒன்றை எழுதினார்.

சத்தியமூர்த்தி பற்றிச் சொல்லும்போது எனக்கு ஒரு நினைவு வருகிறது. காமராஜரை ஒரு தடவை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென நீ எங்க குடியிருக்கே என்று கேட்டார், காமராஜர். திருவல்லிக்கேணியில் அப்போது நான் இருந்த வீட்டின் அடையாளம் சொன்னேன். அடடே, அது நம்ம ஐயர் இருந்த இடமாச்சே?அந்தக் காலத்திலே ஐயருக்குத் தெரியாம சிகரெட் பிடிக்கிறதுக்கு இப்ப நீ இருக்கற இடத்துலேதான் ஒதுங்குறது வழக்கம் என்றார், காமராஜர்.

திருவல்லிகேணியில் ரத வீதியும் சிங்கராச்சாரி தெருவும் கூடும் முக்கில்தான் சத்திய மூர்த்தி அவர்களின் வீடு இருந்தது.
வழக்கமாகக் காலை நேரத்தில்தான் காமராஜர் பத்திரிகையாளர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வார். உணவு மேஜையில் தாம் மட்டும் பலகாரம் சாப்பிட்டுக்கொண்டு எங்களிடம் பேசுவார். ஒரு சம்பிரயத்திற்குக் கூடஎங்களிடம் வெறும் காப்பி சாப்பிடச் சொல்ல மாட்டார்! எனக்கு அப்போதெல்லாம் சங்கடமாயிருக்கும்.

ஒருமுறை காலை வேளையில் அவருடன் தனித்திருக்கையில் காரணம் சொன்னார். என் சாப்பாட்டுச் செலவை இன்னொருவர் கவனித்துக் கொள்கிறார். நானே அவருக்கு பாரமாயிருக்கிறேன். இதில் பிறரையும் உபசரித்து அவரது செலவைக் கூட்டுவது சரியா?

அதன் பிறகு எங்களை வைத்துக் கொண்டு அவர் தாம் மட்டும் உணவருந்துகையில் எனக்கு எவ்விதச் சங்கடமும் இருக்கவில்லை.

மொழிவழி மாநிலமாகத் தமிழ் நாடு தனித்துப் போனபின்னரும் தமிழ் நாடு சென்னை மாநிலம் என்ற பெயரிலேயே தொடர்ந்தது. தமிழில் குறிப்பிடும்போது மட்டும் தமிழர்களின் மனத் திருப்திக்காகத் தமிழ் நாடு என்று இருக்கட்டும்; ஆங்கிலத்தில் குறிப்பிடுகையில் உலகம் முழுவதும் நன்கு அறிமுகமான மெட்ராஸ் ஸ்டேட் என்கிற பெயரே நீடிக்கட்டும் என்று கருதினார், காமராஜர். பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. மக்களின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிற சமாசாரம்தான் அது என்று அவர் நம்பினார். அதனால்தான் அவரது கட்சிக்காரரும், அவரது ஊர்க்காரருமான தியாகி சங்கர லிங்க நாடார் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தபோது அவரைச் சமாதானப் படுத்தாமல் சாகவிட்டார். அவரது இறுதி ஊர்வலத்திற்கு பலத்த கட்டுக் காவல் போட்டு, கிளர்ச்சி எதுவும் கிளம்பிவிடாமல் பார்த்துக்கொண்டார். அவரு பெயர் மாற்றம் மட்டும் கேக்கலே, இன்னும் வரிசையா நிறைய கோரிக்கைகளை நிறைவேத்தணும்னு பிடிவாதமாயிருந்தார். நினைச்சாப்பல எப்படி அத்தனை கோரிக்கைகளை நிறைவேத்த முடியும் என்று கேட்டு இவரோட உண்ணாவிரதத்தால திமுக காரனுக்கு லாபம், காங்கிரசுக்கு நஷ்டம் என்று கண்டித்தார்.
பச்சைத் தமிழன்,பச்சைத் தமிழன் என்று ஈ வே ரா அவர்கள் காமராஜரை ஆதரித்தபோதிலும் காமராஜருக்கு அது சங்கடமாகத்தான் இருந்தது. இவரு எலக்ஷன் பிரசாரம் செய்தா நமக்கு ஓட்டு கொறைஞ்சு போகுது என்று கவலைப்பட்டார். ஈ வே ரா காமராஜரை வெளிப்படையாகக் கொண்டாடினார் என்பதற்காக காமராஜர் அவரைப் பகிரங்கமாகப் போற்றிப் பேசவில்லை.
பிள்ளைகளுக்கு ஒருவேளைச் சோறாவது நிச்சயம் என்று தெரிந்தால் பெற்றோரே தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுபுவார்கள் என்று கண்டுகொண்டதால்தான் பள்ளிகளில் மதிய உனவுத் திட்டத்தைக் காமராஜர் அறிமுகம் செய்தார். அந்தக் காலத்தில் பள்ளிகளில் கைத் தொழில் வகுப்பு என்பதாக ஒன்று இருந்தது. பஞ்சுப் பட்டையையும் தக்களியையும் கொடுத்து நூல் நூற்கிறமுறையை மட்டும் சொல்லித் தருவார்கள். அதற்குப் பதில் வேறு சில கைத்தொழில்களையும் பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் திட்டத்தைக் கொண்டுவரவும் அவர் முனைந்திருந்தால் மேலும் பயன் கிட்டியிருக்கும்.

சாப்பாடு என்கிற தூண்டிலைப் போட்டுப் பிள்ளகளைப் பள்ளிக்கு அழைத்தால் படிப்பில் புத்தி போகாது; சாப்பாடு எப்போது வருமென்றுதான் காத்திருக்கத் தோன்றும்; சாப்பாடு ஆனதும் பிள்ளைகள் மாடு மேய்க்கப் போய்விடும் என்று மதிய உணவுத் திட்டத்திற்கு விமர்சனம் வந்தபோது காமராஜருக்கு நியாயமான கோபம் வந்தது. மிகக் கொடிய வறுமையில் உள்ளவர்கள் மிகுதியாக உள்ள நாட்டில் சில அடிப்படைத் தேவைகளை எந்த வடிவிலாவது ஓரளவுக்கேனும் நிறைவு செய்வது அரசின் கடமை என்று அவர் கருதினார்.

சாப்பாட்டுக்காக மட்டும் பிள்ளைங்க பள்ளிக்கூடம் வராங்களாமா? சரி, படிப்புங்கிற சாக்குல ஒருவேளைச் சோறு அதுங்களுக்குக் கிடைச்சா சரி என்றார்.

மக்களின் வாழ்க்கைத்தரம் உயர ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆதங்கம் அவருக்கு எப்போதுமே இருந்து வந்தது. சுதந்திரம் வந்த பின்னரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதைக் கண்டு ஒருவிதக் குற்ற உணர்வை அனுபவித்து வந்தார். நிலைமை சரியாக என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. எனக்குப் பெரிசா பொருளாதாரம் எதுவும் தெரியாது. என் கையிலே அதுக்கான அதிகாரமும் கிடையாது. இருக்கிற அதிகாரத்தை வெச்சுக்கிட்டு முடிஞ்சதைச் செய்யுறேன் என்று எரிச்சலுடன் சொல்வார். வெற்று கோஷங்களால் தி மு க மக்களிடம் செல்வாக்குப் பெறுவது கண்டு அவருக்குக் கோபம் அதிகரித்தது. காங்கிரசிடமிருந்து அதிகாரம் தி முக விடம் போய்விடலாகாது என்பதற்காக எத்தகைய வழியைக் கையாண்டாலும் பரவாயில்லை என்று கருதினார்.

ஆனால் அவரது எண்ணத்திற்கு மாறாக 1967 ல் தமிழ் நாட்டின் ஆட்சி தி முகவிடம் போய்விட்டது.
காமராஜர் பதவியில் இல்லாதபோதிலும் அதிகாரிகளுக்கு அவரிடம் அபரிமிதமான மரியாதையும் அச்சமும் இருப்பதைப் பலமுறை காணமுடிந்தது. குறிப்பாக முதலமைச்சர் அண்ணா அடிக்கடி உடல் நலம் குன்றி மருத்துவமனைக்குச் செல்வதும் வீடு திரும்புவதுமாக இருந்து, அனைவரும் அது குறித்துச் சந்தேகப்பட்டுக்
கொண்டிருக்கையில், ஒருமுறை அண்ணா பொது மருத்துவ மனையில் இருக்கையில் போய்ப் பார்த்த காமராஜர், அவருக்கு என்னதான் உடம்புக்கு, எதை மூடி மறைக்கிறீர்கள் என்று மருத்துவர்களைக் கடிந்துகொண்டார். அன்று மாலையே அண்ணாவுக்குப் புற்று நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியாயிற்று. அதுகாறும் புற்று நோய் என்று அறிவிப்பது குறித்துத் தயக்கம் காட்டி வந்த மருத்துவ மனை, காமராஜர் அதட்டல் போட்டதும் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தியது.
தாம் பெரிதும் மதித்த நேரு குடும்பத்து வாரிசு இந்திரா 1969 ல் தம்மைத் துச்சமாகக் கருதியது கண்டு காமராஜர் மனம் பொருமினார். 1971 ல் இடைக்காலத் தேர்தல் வந்தபோது, மாநிலத்தில் தி முக வையும் மத்தியில் இந்திராவையும் முறியடிக்க ராஜாஜியுடன் சேரவும் அவர் தயங்கவில்லை. ஜன சங்கத்தையும் அப்போது தம்முடன் சேர்த்துக் கொண்டார். இந்திரா காந்தியிடம் அதிகாரம் நீடிப்பது தேசத்திற்கு நல்லதல்ல என்றும் அதேபோல் தமிழ் நாட்டில் தி முக ஆட்சி தொடர்வது தீங்கை விளைவிக்கும் என்றும் கருதிய ஜன சங்கம் காமராஜர் அமைத்த கூட்டணியில் இணைந்தது. அதற்கு ஒரேயொரு சட்ட மன்ற அல்லது மக்களவைத் தொகுதியை ஒதுக்க க்கூட க் காமராஜருக்கு மனம் வரவில்லை. ஜன சங்கம் அதனைப் பொருட்படுத்தாமல் தேர்தல் பணியை தேசத் தொண்டாகக் கருதி விசுவாசத்
துடன் மேற்கொண்டது.

1971 தேர்தல் முடிவுகள் தமிழ் நாட்டைப் பொருத்த மட்டில் தமக்குச் சாதகமாக இருக்குமென்று காமராஜர் உறுதியாக நம்பினார். அவரை அப்படியொரு மாயையான மகிழ்ச்சியில் பலரும் திளைக்க வைத்தனர். 1967 தேர்தலின் போதே தி முக தான் வெற்றி பெறப் போகிறது என்று சொன்னதற்காக என்னைத் திட்டித் தீர்த்த காமராஜர் இப்ப என்ன சொல்லறே என்றார். வெற்று ஆர்ப்பாட்டத்தில் தற்சமயம் இந்திரா காங்கிரசின் துணையும் கிடைத்திருப்பதால் தி மு க முன்னிலும் கூடுதல் இடங்களைப் பெற வாய்ப்புள்ளது என்று சொன்னதற்காக அவரிடம் முன்னிலும் கூடுதலான வசைமாரியில் நனைந்தேன்.

அந்தச் சமயத்தில் மதியழகனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். எங்களுக்கு தினசரி செய்திப்பத்திரிகை நடத்திப் பழக்கமில்லை. அதன் அமைப்புமுறை எப்படியிருக்க வேண்டும் என்று தெரியாமல் வழக்கமான கட்சிப்பத்திரிகை மாதிரி நடத்தத் தொடங்கி விடுவோம். தம்பி கிட்டு (கே ஏ கிருஷ்ணசாமி) தென்னகம் வார இதழை நாளிதழாகக் கொண்டுவரப் போகிறான். நீதான் நாளிதழுக்கான அமைப்பில் தென்னகம் வருகிறதா என்று நட்பு முறையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மதியழகன் சொன்னதால் பத்திரிகையின் கட்சிக் கண்ணோட்டம் எதையும் கண்டுகொள்ளாமல் அவரது விருப்பத்திற்குக் கட்டுப்பட்டு நான் தென்னகம் அலுவலகம் செல்லத் தொடங்கிய நேரம் அது. தென்னகம் மாலை நேரப் பத்திரிகையாதலால் காலையில் சென்று எட்டு பத்தி தலைப்புச் செய்தி இன்னது என்றும் நன்கு, மூன்று இரண்டு பத்திச் செய்திகள் இன்னவை என்றும் தீர்மானம் செய்துகொடுத்துவிட்டு வருவேன். பத்திரிகையில் ஒருவரி கூட எழுத மாட்டேன் என்று மதியிடம் சொல்லிவிட்டுத்தான் தென்னகம் அலுவலகத்திற்குள் நுழைந் தேன். அது விளங்காமல் சில சமயங்களில் கே ஏ கே என்னிடம் தலையங்கம் எழுதச் சொல்வார். மறுப்பேன். வாக்கு வாதம் சிறு மனத் தாங்கலாகி நான் வீட்டிற்குப் போய்விடுவேன். மதி கேள்விப்பட்டு சமாதானம் செய்வார். கே ஏ கே வீடு தேடி வந்து அழைப்பார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒருமுறை காமராஜர் என்னிடம் என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று கேட்கப் போய் நான் வெகு சகஜமாக மதி கேட்டுக் கொண்டதால் தென்னகம் பத்திரிகைக்குப் போய்வருவதாகச் சொன்னேன். அதைக் கேட்டதும் காமராஜருக்கு அடக்கமாட்டாத கோபம் வந்துவிட்டது. இனிமேல் வராதே போய்விடு என்றார். நானும் பதில் பேசாமல் எழுந்து சென்றுவிட்டேன்.

சில நாட்கள் கழித்து திருவல்லிக்கேணியில் வசித்து வந்த காமராஜருக்கு மிகவும் வேண்டியவரான மவுண்ட் பார்மசி பாலு வந்து பெரியவர் ஏதோ கோபத்தில் பேசினால் போய்விடுவதா, உன்னை வரச் சொல்கிறார் போ என்று சொல்லிவிட்டுப் போனார். சத்தியமூர்த்திபவன் காரியதரிசி வெங்கட்ராமனும் வந்து பெரியவர் விசாரித்தார், என்ன வென்று கேட்டுவிட்டு வா என்றார். சரி என்று போனேன். போனால் மீண்டும் அர்ச்சனைதான்!

தி முக வின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் நாட்டில் காங்கிரஸின் வாயிற் கதவுகளை காமராஜர் திறந்து வைத்தார். கம்யூனிஸ்டுப் பிரமுகர்கள் பலர் காங்கிரசில் இணைந்தது ஓர் ஊடுருவல் திட்டந்தான் என்பதை அவர் உணரவில்லை. வலுவான தேசிய ஸ்தாபனமான காங்கிரசைத் தம் வசப்படுத்திக்கொள்ளும் கம்யூனிஸ்ட் முயற்சிக்கு உதவுவதாகத்தான் அது அமைதந்ததேயன்றி, காமராஜர் எதிர்பார்த்ததுபோல் காங்கிரசுக்கு அது ஆதாயம் தரவில்லை.
அந்தக் கால கட்டத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் காங்கிரசுக்கு ஆதரவாகப் பேசி வந்த ஜயகாந்தன், கண்ணதாசன், நெல்லை ஜபமணி, போன்றவர்கள் தி முக வையும் அண்ணாவையும் மிகவும் இளக்காரமாகப் பேசுவதால் காங்கிரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைகிறதேயன்றி அவர்களின் பேச்சால் கட்சிக்கு ஆதாயம் ஏதும் இல்லை என்பதைக் காமராஜர் அறிந்திருந்தார்.
இவங்களுக்குத் தனிப்பட்டமுறையில் ஏதோ ஆதங்கம். அதை வெளிப்படுத்த காங்கிரஸ் மேடையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று தான் காமராஜர் கருதினார். சிறிது நிதானமாகப் பேசுமாறு அவ்வப்போது அறிவுறுத்தியும் வந்தார்.
இரண்டாம் நிலையில் உள்ள தி மு க பேச்சாளர்கள் தரக் குறைவாகப் பேசுகிறார்கள் என்றால் அது அவர்களின் பாணி என்று மக்கள் சகஜமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால் காங்கிரஸ் மரபு அதுவல்லவாதலால் எரிச்சலடைகிறார்கள் என்று காமராஜர் கணித்தார்.

காங்கிரஸ் மேடையில் ஜயகாந்தனோ கண்ணதாசனோ பேசுகிறபோது கை தட்டல் பலமாகக் கேட்டாலும் அது காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்களிடமிருந்து வருவதுதான், பொது மக்களிடமிருந்தல்ல என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்களின் பேச்சை வாக்காளர்கள் ரசித்துக் கேட்பார்களேயன்றி, ஓட்டுப் போடமாட்டார்கள் என்று அவர் சொன்னார். இருந்தாலும் என்ன செய்ய, அவர்களை விட்டால் காங்கிரஸ் கூட்டத்திற்குக் கூட்டம் சேர்க்க சுவரஸ்யமாகப் பேசத் தெரிந்தவர்கள் வேறு எவரும் இல்லையே என்று சலித்துக் கொண்டார்.

காங்கிரஸ்காரனுக்கு மீட்டிங்போட்டு பேசுற பழக்கம் நாப்பத்தாறோட போச்சு (1946ல் சுதந்திரம் உறுதியாகி காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதும் சாத்தியமாகிவிட்டது). காங்கிரஸ் கூட்டங்களுக்கு அப்பல்லாம் ஜனங்க வந்தாங்கன்னா அது காந்தி மகான் கட்சிங்கிற அபிமானம். சுதந்திரம் வரணுங்கிற ஆசை. பேசறவங்க வீராவேசமாப் பேசினாப் போதும். ஜனங்களுக்குத் திருப்தி. இப்ப அப்படியில்லையே என்பார், காமராஜர்.

காமராஜரால் பிரதமர் நாற்காலியில் அமர்ந்த இந்திரா காந்தி, தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிற மாதிரி காமராஜரிடம் நடந்துகொண்டார். மக்கள் மத்தியில் ஆதரவு மிக்க அவருக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் அளித்தால் அனுபவமும் பல தரப்புகளில் தொடர்பும் உள்ள அவர் தம்மை மிஞ்சிவிடுவார் என்ற காரணத்தால் இந்திரா அவரைப் புறக்கணித்தார். இது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் பதவி என்கிற அதிகாரம் தன்னிடம் உள்ளது என்கிற ஒரே ஆதார பலத்தில் அவர் காங்கிரஸ் கட்சியை உடைத்தபோது அவரது அதிர்ச்சி மேலும் தீவிரமாயிற்று.

தாம் பெரிதும் நம்பிய பக்தவத்சலம், அனந்த நாயகி, சம்பத் முதலானவர்கள் இந்திராவின் முகாமுக்குத் தாவியது அவரை மனம் நோகச் செய்தது. ஆனால் சி சுப்பிரமணியம் போனது அவருக்கு ஏமாற்றமளிக்கவில்லை. அவர் தனது விசுவாசியல்ல என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக இந்திரா தனது சொந்தக் காரணங்களுக்காக நெருக்கடிநிலையை அறிவித்தபோது, உடல் நிலையே பாதிக்கிற அளவுக்கு அவரது அதிர்ச்சி கூடுதலாயிற்று. நெருக்கடி நிலை பிரகடனத்தைக் கண்டித்து அவர் விடுத்த அறிக்கை அவரது காங்கிரஸ் ஆதரவு நாளிதழான நவசக்தியைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையிலுமே வராததை அவரால் நம்பவே முடியவில்லை. தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் பொறுப்பு வகித்த மூத்த அரசியல் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர், விடுதலைப் போராட்ட காலத்திலும் அதன் பிறகும் அரசியலில் முக்கிய இடம் வகித்த ஒருவருக்கு உள்ள மரியாதை அவ்வளவுதானா என அவர் மனம் வெதும்பினார்.

அந்தச் சமயத்தில் நெருக்கடி நிலையின் தீவிரத்தை மட்டுப்படுத்திய மாநிலங்களாக கருணாநிதி தலைமையிலான தி முக ஆளும் தமிழ் நாடும், காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைத்த சிமன்பாய் பட்டேல் ஆட்சி செய்த குஜராத்தும் மட்டுமே இருந்தன. அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்த இவ்விரு மாநிலங்களில் மட்டுமே அரசின் அனுமதி கிடைத்து வந்தது. ஆட்சியாளர்களின் மனம்போனபடிக் கைதுகள் நடைபெறவில்லை. இது காமராஜருக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது. அந்தச் சமயத்தில் தன்னைக் காண வந்தோரிடமெல்லாம் கருணாநிதியை மனமாரப் பாராட்டி வந்தார், காமராஜர்.

நெருக்கடி நிலையின்போது இந்திரா காங்கிரஸ்காரர்களாகிவிட்டிருந்த ப சிதம்பரம், ஏ கே சண்முகசுந்தரம், அனந்தநாயகி ஆகியோர் விருப்பத்திற்கிணங்க அன்னை நாடு என்கிற பெயரில் அவர்கள் தொடங்கியிருந்த நாளிதழில் செய்தி ஆசிரியராகப் பொறுப்
பேற்றிருந்தேன். இது காமராஜருக்குத் தெரிந்திருந்த போதிலும் அதற்காக என்னைப் புறக்கணித்துவிடவில்லை. நீ தொழில்முறை பத்திரிகைக்காரன்தானே என்று சொல்லி அதனைச் சகித்துக் கொண்டார்.

1975 அக்டோபர் மாதம் 2ந் தேதி மாலை நாலரை மணி வாக்கில் சென்னையில் லேசாக மழைபெய்துகொண்டிருந்த சமயம் காதி கிராமோத்யோக்பவனில் இருந்தபோது காமராஜர் திடீரென மரணமடைந்த செய்தி கிடைத்தது. திருமலைப் பிள்ளை சாலைக்கு விரைந்து சென்று பார்த்தேன். கடுமையாக உழைத்துவிட்டு நிம்மதியாக உறங்கும் ஒரு கிராமத்துப் பெரியவர் மாதிரி காட்சியளித்தார். அதுவரை அவர் முகத்தில் கண்டிராத சாந்தத்தை அப்போது கண்டேன்.

காமராஜர் மரணமடைவதற்கென்றே காத்திருந்ததுபோல் கருப்பையா மூப்பனார் முதலான காமராஜரின் விசுவாசிகள் உடனடியாகவே இந்திரா காங்கிரசில் ஐக்கியமானது அவர்களின் காமராஜ விசுவாசம் எவ்வளவு போலியானது என்பதைப் புலப்படுத்தியது. நல்லவேளையாக அதனைப் புரிந்துகொண்டு வேதனைப்பட வேண்டிய அவசியம் காமராஜருக்கு இல்லாமற் போனது ஆறுதலாக இருந்தது.

காமராஜர் என்னை அழைத்து நாட்டு நடப்புகளைப்பற்றி விசாரிக்கையில் பெரும்பாலும் அவருக்குச் சோர்வூட்டுகிற விதமாகத்தான் நான் கொடுக்கிற தகவல்கள் இருக்கும். இது வேண்டுமென்று அமைவதல்ல. அன்றைய நாட்டு நிலவரம் அப்படியிருந்தது. நான் கொடுக்கிற தகவல்களைக் கேட்டு என்னை மிகக் கடுமையாகப் பேசுவார் என்றாலும், மீண்டும், மீண்டும் என்னை அழைத்துத் தகவல்கள் கேட்க அவர் தவறவில்லை.

காமராஜருடனான எனது தொடர்பு இப்படித்தான் கழிந்தது. ஒரு தடவைகூட அவர் என்னிடம் சிடுசிடுக்காமல் பேசியதில்லை. அதேபோல் ஒரேயொரு தடவைகூட அண்ணாவின் முகத்தில் குறும்புச் சிரிப்பைக் காணாமலும் கனிவான விசாரிப்புகளைக் கேட்காமலும் வீடு திரும்பியதில்லை. அண்ணாவின் இறுதி நாட்களின் போது மட்டுமே அவரது முகத்தில் அந்தப் புன்னகையைக் காண இயலாது போயிற்று. ஒவ்வொரு தடவையும் காமராஜரைப் பார்த்துவிட்டு வருகிறபோது ஏனடா இவரிடம் போனோம் என்று எண்ணத் தோன்றும். அண்ணாவிடம் சென்றாலோ விடைபெற வேண்டியுள்ளதே என்று விசனித்து, மறுபடியும் எப்பொழுது அண்ணாவைக் காணச் செல்வோம் என்று ஏங்கத் தோன்றும்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்