நைவேத்தியம்

This entry is part [part not set] of 8 in the series 20000806_Issue

-நீல பத்மநாபன்


கை நீட்டினால் தொட்டுவிட முடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப் போன்ற விரிந்த வானம்.

அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகிவிட்டு நிமிர்ந்தபோது தலையில் இடித்த வானத்தை, எட்டாத உயரத்துக்குப் போய்த் தொலை என்று சபித்து விரட்டிய பொக்கை வாய்க் கிழவியின் கர்ண பரம்பரக் கதை ஞாபகம் வர, வானததை வெறித்தபடி கோயில் முன் அரசமர மேடையில் மல்லாந்து கிடந்தார் லக்ஷ்மிநாராயணன் போற்றி.

இந்த வானத்தில் ஏன் இன்று இப்படியொரு இருள். சூன்யம்……விக்கிரகமோ, விளக்கோ இல்லாத கர்ப்ப கிரகம் போல்… ? பெயருக்குகூட ஒரு நட்சத்திரம் இல்லை. ரத்த சோகைப் பிடித்து முகம் வெளிறிப்போய் மேகங்களின் பின்னால் நின்று எட்டிப் பார்க்கும் சந்திரன்…

பக்கவாட்டில் வானளாவி நிற்கும் அரச மரம். அடிக்கடி கிளைகளைச் சிலிர்த்து அவரைத் தன்னுணர்வு வரச் செய்து கொண்டிருந்தது.

தூரத்தில் பாய்ந்து செல்லும் பதினோரு மணி ரயிலின் கூவல் தேய்ந்து மாய்ந்து கேட்டது.

அடைத்துக் கிடக்கும் கோயில் நடை…..வெளியில் அங்கங்கே தூண்களுடன் ஒதுங்கி நிற்கும் ஓரிரு பாவை விளக்குகளின் காலடியில் மட்டும் சிறைப்பட்டுக் கிடக்கும் வெளிச்சத் துண்டங்கள்…சுவர்களில் பூதாகாரமாய் எழும்பி ஆடிக் களிக்கும் நிழல்கள்… மற்றபடி இருள்…

அவர் பெருமூச்செறிந்தார்.

‘ஹஉம்…இன்னும் எடுக்கவில்லையாம்……மதுரையிலிருந்து கோமதியின் அண்ணா ராமண்ணா வரணுமாம்…உம்…எப்போ அவர் வந்து, பிரேதத்தை எடுத்துக்கிட்டுப் போன பிறகு, நடையை திறந்து அம்மனுக்குப் புஷ்பாபிஷேகம் செய்யப் போகிறோமோ…இன்னிக்கு சிவராத்திரிதான்… ‘ தலைமாட்டில், கொட்டுக்காரர் அண்ணாவி கனத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

போற்றி பதில் எதுவும் பேசவில்லை. மேலே அரசமர உச்சிக் கிளையில் ஒரு நிழலாட்டம்…வெளவாலோ, ஆந்தையோ, அல்லது வேறேதோ பறவை பறப்பது போல்…ஒரு வேளை இதுதான் மரணமெனும் பட்சியோ…

அவர் விழிக் கதவுகளை மூடிக் கொண்டார். உச்சிப் பொழுதில் ஏற்பட்ட வெட்டுக் காயத்திலிருந்து என்பதைப் போல், துடைக்கத் துடைக்க விடாமல் கசிந்து நினைவுகளின் குருதித் துளிகள்….

இன்று மாலையில் சாயராட்சை பூஜைக்காகக் கோயில் நடை திறக்க வரும்போதிலிருந்தே உள்ளுக்குள்ளே காரணம் தெரியாது இந்த சோக வெறுமை… நெஞ்சில் கார்மேகப் படலங்கள் புகைமூட்டமாய் உருண்டு திரண்டு கொண்டிருந்தன. ஒரு கணம் தயங்கி நின்றுவிட்டு கர்ப்பகிரக மணிக் கதவைத் தள்ளியபோது சின்னச் சின்ன மணிகளின் கலீர் என்ற நகையொலியில் கூட ஒரு பொருள் பொதிந்த வெறுமை…

கனத்த இருளில், கட்டுப்பட்டுக் கிடந்த வாயுவில், மோன தபஸில் நின்ற அம்பாள் விழி திறந்து ‘இப்போதான் வர்றியா… ? ‘ என்று கேட்டு ஒரு புன்சிரிப்புப் பொழிவது போல்…நெடுஞ்சான்கிடையாய் கீழே விழுந்து நமஸ்கரிக்கையில் ‘ஆமாம் தாயே…எனக்கு நீயில்லாமல் வேறு யார் இருக்கா ? ‘ என்றுவிட்டு எழுந்து சந்தியா பூஜைக்கான ஆயத்தங்களில் ஈடுபடலானார். காலையில் அம்மனுக்குச் சாத்தியிருந்த வாடிய புஷ்பங்களை அகற்றி விட்டு, அம்மனை நீராட்டி, திருவாபரணங்கள் பூட்டி, அலங்காரங்கள் செய்தார். இடுப்பில் பாய்ச்சியிருந்த தாரை ஒதுக்கி, உலர்ந்த குச்சிபோலாகிவிட்ட துடையில் திரித்த திரியை விளக்கில் போட்டு, எண்ணெய் டின்னை தலைகீழாய்க் கவிழ்த்து கடைசித்துளியையும் விளக்கில் விழச் செய்தார். விளக்கைக் கொளுத்தியபோது, எரிந்து கொண்டிருக்கும் அந்தத் திரிகூட தன்னைப் போலவே…

அம்மனின் விழிகளில் ஒரு பளபளப்பு…மனதுக்குள் மறுபடியும் அந்தக் கார் மேகங்கள் மழைக்காய்…

அறியாமல் தன் விழிகளும் பனிப்பது போல்…

அவர் விழிகள் கர்ப்பகிருக வாசல்படியில் தேடின. மனசுக்குள் முணுக்கென்று ஒரு உறுத்தல்… நான் இந்தக் கோயில் பூஜை கைங்கரியம் செய்யத் தொடங்கிய இந்த ஐம்பது ஆண்டுக் காலமாய் நாள் தவறாமல் சாயராட்சை பூஜைக்கு தெருவாசிகள் யார் மூலமாவது இதற்குள் இங்கே வந்து சேர்ந்துவிடும் கோமு. தன் கையால் கட்டும் துளஸி ஹாரத்தை இன்று ஏன் இன்னும் காணவில்லை என்று தன் மனம் அடித்துக் கொண்டது.

வெளியில் ஆவலுடன் தன் விழிகள் துழாவின. முதலில் அதை அம்மனுக்குத் தன் கையால் சார்த்தி விட்டுத்தான் மற்ற மலர்களின் பக்கம் திரும்பிப் பார்ப்பதே….

யாரோ ஓடிவரும் காலடியோசை.

கிட்டுதான்…கையில் வாழை இலைப் பொட்டலம் இல்லை. தனக்குத் திக்கென்றது.

‘கோமுப் பாட்டி…கோமு பாட்டி… ‘

ஓடி வந்த வேகத்தில் அவனுக்கு மூச்சு இரைத்தது. அவனையே பார்த்துக்கொண்டு நிற்கத்தான் தன்னால் முடிந்தது. என்னா என்று கேட்கும் வலுவைக்கூட நாக்கு இழந்து விட்டதைப் போல்…

‘கோமுப் பாட்டி செத்துப் போனாள்… ‘

தான் சிலையாகிவிட்டதைப் போல்…

பிறகு, கோயில் டிரஸ்டிமார்கள் வந்தபின் தான் தனக்கு தன்னுணர்வு வந்தது. ஒரு சுகக்கேடும் இல்லையாம்..சாயராட்சை பூஜைக்காக வழக்கம்போல் வீட்டு முற்றத்தில் துளஸி இலைகளைப் பறித்தெடுத்து வாழை நாரில் மாலைக் கட்டிக் கொண்டிருந்தாளாம், மாலையை வாங்கிக் கோவிலுக்குக் கொண்டுபோய் கொடுக்க அடுத்த்கத்துக் கிட்டு பார்க்கும்போது…

பேச்சு மூச்சில்லை…

முதுகில் எறும்போ என்னவோ ஊர்வது போலிருந்தது புதுநெல்லின் மணத்தைச் சுமந்தவாறு வீசிய வாடைக்காற்றில் இடுப்பில் தார் மட்டும் பாய்ச்ச்யிருந்த அவர் வெற்றுடம்பு வேறு வெடவெடவென்று நடுங்கியது. திக்பிரமையிலிருந்து விடுபட்டு, எழுந்து உட்கார்ந்தார். கீழே மணலில் விரித்திருந்த துண்டை உதறி உடம்பில் போர்த்திக் கொண்டார். மனசுக்குள்ளிலும் சொருசொருவென்று எத்தனையோ சிற்றெறும்புக்கள் ஊர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றையும் இப்படி உதறி விலக்கிவிடவா முடிகிறது…

தலை சுற்றிக் கொண்டே வந்தது. விழிகளை மூடியபோது, அடைத்துக் கிடந்த கோயில் நடையின் மறுபக்கத்தில் வெறிச்சோடிப் போய்க் கிடக்கும் பிரகாரம்–சிற்றம்பலம்…மோன நிஷ்டையில் ஆழ்ந்து கிடக்கும் விக்கிரகங்கள்…

கோயில் குளத்தில் இந்த அகால வேளையில் பனிக்கட்டிக் குளிரில் யார்தான் குளிக்கிறார்களோ…டொப் டொப்பென்று துணி துவைக்கும் சத்தம்…தூரத்தில் எங்கோ ஒரு ராக்குயிலின் ஒற்றை நெடுங்குரல்…

கோமு…

மனசுக்குள் பிடிக்கு அடங்காமல் வழுக்கி வழுக்கி வழுதிப் போய்க் கொண்டிருக்கும் நினைவு சர்ப்பங்கள்…

இதே அரசமர மேடையில் உதட்டு நுனியில் வெற்றிலைச் சாறு வழிய மணிக்கணக்கில் சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டிருப்பார் கோமுவின் அப்பா நரசிம்மன் போற்றி…குறைந்தது பத்துப் பேர்களாவது அவர் வாயைப் பார்த்துக்கொண்டு கீழே உட்கார்ந்திருப்பார்கள். அப்போதுதான் ஒரு நாள்; அப்போ தனக்கு எட்டு வயசிருக்கும்…கோமுவுக்கும் ஐந்து வயசு, தன்னை ஒரு துடையிலும், மற்ற துடையில் கோமுவையும் உட்கார வைத்து, மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு, பக்கத்தில் நின்ற தன் அப்பாவுடைய–அப்போ அவர்தானே இந்தக் கோயில் அர்ச்சகர், ‘விக்ஷ்ணூ…என்னிக்கு ஆனாலும் சரி…இவுங்க ரெண்டு பேரும்தான் புருஷனும் பெண்டாட்டியும் என்று சொல்லிவிட்டு ஓஹோன்னு சத்தம் போட்டுச் சிரித்தார். பக்கத்தில் கோமுவின் அம்மாவும் அண்ணா ராமண்ணாவும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

கோயில் நந்தவனத்தில் நிற்கும் பவழ மல்லியின் மணம் நளினமாய் ஓடி வந்தது.

‘உம்…….புஷ்பாபிஷேகம் அதுவுமா இன்னிக்குப் பார்த்து இப்படி ஆயிட்டதே… ‘ என்று அண்ணாவி முணுமுணுப்பது கேட்கிறது.

இவர் பதிலேதும் பேசவில்லை.

அன்றும் இப்படித்தான். ஒரு புஷ்பாபிஷேகத்தின் போது…எத்தனை வருஷங்களுக்கு முன்… ? குறைந்தது ஐம்பது வருஷமிருக்காதா…சரியாக ஞாபகம் இல்லை…அப்போ தனக்கு பத்து வயசிருக்கலாம்…

கூடை கூடையாய் புஷ்பங்கள்…நந்தியாவட்டை, ஜவந்தி, அரளி, தாமரை எல்லாம் நடுக்கல் மண்டபத்தில் அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் காட்சி…தேங்காய்ப் பழத்தட்டு, பால், எண்ணெய்கிண்ணங்களுடன் நிறைந்து வழியும் பக்தஜனங்கள்…மஞ்சள், சிவப்பு, பச்சை கோலப் பொடிகளால் களம் வரைந்து ஒவ்வொரு மூலையிலும் ஐந்து திரி போட்ட பதிமூன்று குத்துவிளக்குகள் ஜாஜ்வல்யமாய் எரிந்து கொண்டிருந்தன.

நெற்றியில் விபூதிப் பட்டை, குடுமியில் செவ்வரளிப் பூ, காதில் குத்துவிளக்குகளின் சுடர் பிரதிபலிக்கும் பத்துக் கல் கம்மல்–இந்தக் கோலத்தில் அப்பா ஒவ்வொரு புஷ்பமாய் எடுத்து அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். கூடமாட ஒத்தாசைக்கு நான் ‘ நாதஸ்வரமும் தவிலும் சேர்ந்து மங்கல இசை வெள்ளம்…கோமு அருகில் உட்கார்ந்திருக்க, நரசிம்மன் போற்றி தனக்கே உரித்தான விபுடமான குரலில் பஜனை பாடிக் கொண்டிருக்கிறார். அவர் முகத்தில்தான் என்ன பக்திப் பரவசம்…கம்பீரம்…நெற்றியில் நிறைந்த விபூதியில் மின்னும் குங்கும வட்டம்…அவர் பாடி நிறுத்தும் வரிகளை பக்த ஜனங்கள் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்…எங்கெங்கும் பக்தி சைதன்யம் நிறைந்து நெகிழ்ந்து நிற்கும் அமர கணங்கள்.

திடாரென்று அவர் குரல் நின்றது. அவர் சொல்லி விட்ட கடைசி அடியை எல்லோரும் திரும்பத் திரும்ப உள்ளம் உருகப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் விழிகள் விழித்தபடி…

முகத்தில் அதே கம்பீரம்…பக்திப் பரவசம்…

அப்பா இதைக் கவனித்தார். கோவில் டிரஸ்டி ஆறுமுகம் அப்பாவின் பக்கத்தில் கலவரப்பட்டுக் கொண்டு ஓடிவந்து நரசிம்மன் போற்றியைச் சுட்டிக் காட்டி என்னவோ சொல்ல முயன்றபோது, அப்பா முகத்தில் ஒரு கண்டிப்புடன் ஆள்காட்டி விரலை தன் உதட்டின் பக்கம் கொண்டு சென்று பேசாதிருக்க சைகை மூலம் சொல்லிவிட்டு, இன்னும் அக்ஷர சுத்தமாய் ஒருவித உணர்ச்சிப் பரவசத்தால் நடுங்கும் குரல் வன்மையுடன் ஸ்லோகங்களை உரக்கச் சொல்லி அர்ச்சனையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

கடைசியில் புஷ்பாபிஷேகம் முடிந்து கற்பூர ஆரத்தி நரசிம்மன் போற்றியின் முகத்தில் நேர் வந்தபோதுதான்…

எல்லோருக்கும் புரிந்தது…

‘புண்யாத்மா…யாருக்குக் கிடைக்கும் இப்படிப்பட்ட சாவு… ? ‘ என்று மெய் சிலிர்த்துப் போய்ப் பேசிக் கொண்டார்கள் ஊர்க்காரர்கள்.

எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது…நரசிம்மன் போற்றியின் சாவு அப்பாவைப் பெரிசாய்ப் பாதித்துவிட்டது…பிறகு அவரும் அதிக நாட்கள் இருக்கவில்லை.

இப்படித்தான் கோயில் நித்ய பூஜைப் பொறுப்பு மிக இளமையிலேயே தன்னை வந்து சேர்ந்தது.

பிராயம் ஆக ஆக, மனவெளியில் நரசிம்மன் போற்றி, அப்பா மறைந்த நினைவுகாட்சிகளில்கூட, கோமுவின் தெளிந்த நீரோடை போன்ற முகமும்…முற்றத்தில் செழித்து வளர்ந்து நிற்கும் துளஸிச் செடிகளின் இடையில் ஒரு புள்ளினமாய் அவளைக் காணும் போதெல்லாம், அன்றொரு நாள் அவள் அப்பா தன்னையும் அவளையும் மடியில் வைத்துக் கொண்டு சொன்ன சொற்களை நினைத்து ஒரு கனவு மிரட்சி…

என்றும் தன் கையாலேயே கட்டிய துளஸிஹாரத்துடன் கோமு சாயராட்சை தீபாராதனைக்கு ஆலயத்துக்கு வரத் தொடங்கினாள். கர்ப்பகிரக வாசல்படியில் அவள் கொண்டு வந்து வைக்கும் மாலையை அம்மனுக்குச் சார்த்தி ஆராதனை செய்வதற்கிடையில், சில வேளைகளில் கண்கள் மட்டும் சம்மதத்திற்குக் காத்திருக்காமல் மோதிக் கொள்வதுண்டு…அவ்வளவுதான்.

ஒருநாள் மாலை, மாலையுடன் அவள் கோயிலுக்கு வரவில்லை. பிறகுதான் தெரிந்தது, அவள் பெரியவள் ஆகிவிட்டாள் என்று.

அதோடு அந்த மெளன காட்சி நாடகத்திலும் திரை விழுந்துவிட்டது…மாசத்தில் நாலைந்து நாட்கள் தவிர, மற்ற நாட்களில் சந்தியா பூஜைக்கு, தெருச் சிறுவர் சிறுமியர்கள் யார் மூலமாவது அவள் துளஸி மாலை அம்மனுக்கு வந்து சேர்ந்துவிடும்.

அம்மனைச் சேவிப்பதில் நாட்கள் சென்று கொண்டே இருந்தன. இருந்தும் சில கணங்களில் அம்மனை வழிபட்டுக் கொண்டிருக்கையில், பிரக்ஞை வெளியில் ஒரு ஞானோபாசனையாய் அவள் முகம் நிழலாடும். ஊமை கண்ட கனவாய், முடவன் ஆசைப்பட்ட கொம்புத் தேனாய் மனம் ஒரு சோக வெறுமையில் நிழல் கோலங்களைப் போட்டுப் போட்டு அழித்துக் கொண்டே இருக்கும்…அன்று அவள் அப்பா தன் அப்பாவிடம் சொல்லும்போது, பக்கத்தில் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அவள் அம்மாவும் அண்ணாவும் இருக்கத்தானே செய்கிறார்கள்…தன் அப்பாவும் அவள் அப்பாவும் உயிருடன் இல்லாவிட்டாலும்… அவர்களுக்கு ஞாபகம் இல்லாமலா இருக்கும் என்று அடிமனசில் ஒரு நப்பாசை…

ஆனால்…

அவர்கள் அப்படி அதை ஞாபகம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஒருநாள் திடும்திப்பென்று கோமுவின் கல்யாணம்…மாப்பிள்ளை தெருக்கோடியில் சாப்பாடு கடை நடத்தும் ராமபத்ரன்.

அரசமர பீடத்தைச் சுற்றிய நாகபிரஷ்டைகள் தன்னையே உற்று நோக்குவது போல்…சரசரவென்று ஒரு சத்தம்…சாயந்திரம் யாரோ கொண்டுவந்து வைத்து விட்டுப் போயிருந்த பால் நிறைந்த பாத்திரம் இப்போ காலியாகத் தென்படுகிறது…

ஹஉம்…அந்த ராமபத்ரனும் இப்படியொரு ராத்திரியில் இந்த நாகபிரஷ்டையின் முன் வந்து விழுந்துதானே தன் கடைசி மூச்சை விட்டான்…

கோமுவின் கல்யாணம் தன் வாழ்க்கையில் ஒரு பேரிடியாக விழுந்தது. ஆனால் அம்மனின் தலையில் எல்லா மனப்பாரத்தையும் போட்டுவிட்டு அடங்கிப் போய்விட்டோம். யார் யாரெல்லாமோ நிர்ப்பந்தித்தும்–அம்மாவுக்குத் தன் ஒரே பிள்ளை இப்படி ஒற்றை மரமாய் நிற்கிறானே என்று அவள் கடைசி மூச்சுவரைக்கும் ஒரே தாபம். நான் அசைந்து கொடுக்கவில்லை…இன்று வரை–இப்போ தனக்கு அறுபது வயசு, கல்யாணம் முதலிய லெளகீக பந்தங்களை அறவே ஒதுக்கி அம்மனைப் பணிவதிலேயே ஆயுளைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்…

கல்யாணம் கழிந்த புதிதில், ஒருமுறை கோமு அவள் புருஷன் ராமபத்திரனுடன் கோயிலுக்கு, வழக்கமான அவள் துளஸி மாலையுடன் வந்திருந்தாள். விம்மி வெதும்பிய இதயத்தை அடக்கி ஆண்டு, அம்பாளை நினைத்துக் கொண்டு மாலையைக் குனிந்து எடுத்துக் அம்மனுக்குச் சார்த்தும்போதும், பிரசாதத்தைக் கொடுக்கும் போதும், ராமபத்ரனின் விழிகள் தன்னைத் துகிலுரிக்கப் பார்ப்பதை உணர முடிகிறது…

அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லி தன் செவியிலும் விழுந்தது. ராத்திரி அவளை அவன் அடித்து நொறுக்கினான் என்று.

அதோடு அவள் கோயிலுக்கு வருவது அடியோடு நின்றுவிட்டது. ஆனால் தெருக்குழந்தைகள் மூலமாய், மாலையில் துளஸி மாலை கொடுத்து அனுப்புவது நிற்கவில்லை.

ஒரு நாள் ராத்திரி…

வழக்கம்போல், கோயில் நடையை அடைத்துவிட்டுப் படி இறங்கி, தான் இந்த அரச மரத்தின் கீழ் வந்ததும்—

அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து இந்த நாக பிரதிஷ்டையின் முன் விழுந்த ராமபத்ரன்…திடுக்கிட்டு அவனைத் தூக்கி மடியில் கிடத்தி, விபூதியை மந்திரித்துப் போடுவதற்கிடையில், தெரு பூரா இங்கே கூடிவிட்டது…காலில் சர்ப்ப தர்சம்…அவன் தலை சரிந்துவிட்டது.

பக்கத்து அந்திச் சந்தையிலிருந்து காய்கறி வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த அவன், கோயிலிலிருந்து கொஞ்சம் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் இறங்கி, அதைத் தாண்டி, கரையிலிருந்த தாழம்பூ புதரின் அருகில் வந்ததும் இது சம்பவித்ததாகத் தெரியவந்தது.

பிறகும்….

கோமு கோயிலுக்கு வருவதில்லை…துளஸி ஹாரம் மட்டும் தவறாமல் வந்து கொண்டிருந்தது.

இனி… ?

தூரத்தில் கூ என்ற ரயிலின் ஓசை மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறது…

‘ரெண்டு மணி ரயில் வருதே…ராமண்ணா இந்த ரயிலில் வருவானாக இருக்கும்…போய் பார்த்துவிட்டு வருகிறேன்… ‘ என்றுகூறி அண்ணாவி எழுந்து சோம்பல் முறித்துவிட்டுப் போகிறார்.

ஒரு மணி நேரம் கழித்துத் தெருவாசிகள் வந்து பார்க்கும்போது போற்றியின் உடம்பு விறைத்துப் போய்க் கிடந்தது.

Series Navigation