நீர்வலை – (14)

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


>>>
தேவாலய வாசல்பகுதிகளில் உயரமாய் நிழல் வசதி பண்ணியிருந்தது அம்பது நூறு மீட்டர் அளவு. ஓரங்களில் நிறைய கடைகள். பெரிய பெரிய மாலைகள் கட்டிக் கொண்டு – ஏற்கனவே சிலுவையில் சிரமப்படும் யேசு… ஆளுயர மாலை! – ஆளுயர அளவு கூட மெழுகுவர்த்திகள் விற்பனைக்குக் கிடைத்தன. மெழுகுவர்த்தி ஓ.கே. உலக்கை போல. யானைத்தந்தம் போல அடுக்கப்பட்டோ நெட்டுக்குத்தலாக நிறுத்தப்பட்டோ பார்வைக்கு வைத்திருந்தார்கள். பொரி, கருப்பட்டி மிட்டாய், பனைஓலைகளில் தொப்பிகள், பல்வேறு ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள்… சிஸ்டர் நௌரோஜி முதல், ஜாலி ஆபிரஹாம், ஜேசுதாஸ், மற்றும் குரல் உள்ள யாரெல்லாமோ, பாடத் தெரியும் என நம்புகிற யாரெல்லாமோ, துட்டு கையில் புரள்கிற, பாட்டு ஆசையுள்ள யாரெல்லாமோ பாடிய ஒலிநாடாக்கள் கிடைத்தன. அந்த ஒலிநாடாக்களில் ஜிஞ்சிருஜிங்சிங் என்று கிதார் அதிர்வு அதிகமாய் இருந்தது. வளாகத்தில் எந்தக் கடையிலாவது எப்பவும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது. சிலாட்கள் எப்பவும் வெத்திலை பாக்கு அதக்கித் திரிவான். அதைப் போல… பொதுவான ஒலிநாடாக்கள் தவிர, வைகறைவாசல் ஆண்டவரை முன்னிலைப்படுத்தி புகழாரப் பாடல்கள்.
கடலலை தாலாட்டும் எங்கள் ஏசு
மனமே நீ அவருடன் மண்டியிட்டுப் பேசு…
வளாக வாசல்களில் லாட்டரிச்சீட்டு, தண்ணீர்ப் பாக்கெட், முப்பது நாளில் ஆங்கில பாஷை என்று புத்தகம் – பைத்தாரன்தான் பள்ளிக்கூடம் போய் பத்து வருஷம் பதினோறு வருஷம் என்று ஆங்கிலம் படிப்பான் போலிருக்கிறது!… ஆண்மைக்குறைவு புத்தகம், – autobiographyயா மாப்ளே?… நல்லாத்தான் விக்குது. அதுக்குப் பிரார்த்தனைன்னு வந்து போறானுங்களா என்ன! – மோட்டார் ரீவைண்டிங், அசைவ சமையல், பணம் சம்பாதிப்பது எப்படி? – முல்லா நசுருதீன் பஞ்சதந்திரக் கதைகள் – தெனாலிராமன், மரியாதைராமன், விக்கிரமாதித்தன்… தென்னிந்தியப் பழமொழிகள் 400, அ ஆ இ ஈ படத்துடன் அணில் ஆடு இலை ஈக்கள் விளக்கப் புத்தகம் என்றெல்லாம் கையில்சுமந்து விற்றுத்திரிந்தார்கள்.
அதோ ஒருத்தன் கிழிஞ்ச டவுசருடன் தோள்நிறைய புதுடவுசர், கைநிறைய ஜெட்டி, என விற்றுத்திரிகிறான்.
வாசனை பிடிச்சிப் பாருங்க, என கைமேல் இழுவி, ஒரிஜினல் சென்ட் என விற்பனை. ஒரிஜினல் தேன், ஒரிஜினல் நரிக் கொம்பு. ஒரிஜினல் மூலிகை, வேர், நாட்டு மருந்துச் சரக்குகள் விற்கும்… ஒரிஜினல் குறவர்கள்.
அதைநம்பி வாங்கிச் செல்லும் ஒரிஜினல் லூஸ்கள்!
சுற்றுலாக்காரர்களுக்காக… முப்பதுநாளில் தமிழ் பேச, புத்தகம் வந்திருக்கிறதா தெரியவில்லை…
ஹோட்டல்கள் வாசலில், அண்ணாச்சி வாங்க, என்கிற அழைப்புகள், ஓசியில் டிபன் காபி தர்றாப் போல.
கீ செய்ன், பைகள், குழந்தை பொம்மைகள், கடல் சோழிகள், பெண்களுக்கேயுரிய… ஸ்டிக்கர் பொட்டு, காதுரிங், டிராப்ஸ், சாந்து, ஹேர்பின், ஸ்லைடுகள், நகப்பூச்சுகள், உதட்டுச்சாயம், டென்னிகட் போல தைத்த, கூந்தல் முடிகிற துணி வளையங்கள்… சின்னப் பிள்ளைகளுக்கான சிவப்பு, கருப்பு, பச்சை என விநோத நிறங்களில் கண்ணாடிகள், விளையாட்டு டுப்பாக்கிகள், அரைஞாண் கயிறுகள், ஊதல்கள், (அப்பா ஊதல் வாங்கிக் குடு… போடா நாயே, சும்மா ஊதிட்டே கெடப்பே. காதை அடைக்கும்… இல்லப்பா, நீ தூங்கினபிறகு ஊதறேன்…)
ஆ – அந்தக் கோவில் பிதாமகர் யேசுபிரானின் படம் வரைந்தது – பாயில், காகிதத்தில், துணியில் என பல்வேறு விதங்களில் விற்பனைக்குத் தொங்கின. கர்ச்சீப்கள், துண்டுகள், ஜெட்டிகள், பனியன்கள்… பனியன்களில் விதவித வாசகங்கள். இப்போதெல்லாம் ஜெட்டியிலும் வாசகங்கள்… bofors –
ஜெட்டி சரியா இருக்குமா, என்று இடுப்பு சைஸ் வைத்துப் பார்க்கும் உஷார் பார்ட் டிகள்… விட்டா அங்கியே போட்டுப் பாப்பான்யா… பிளாஸ்டிக்கில் பந்துகள், பேட்கள், செஸ் போர்டு, பெல்ட்கள் தொங்கும் கடைகள், சோடா வெற்றிலை பாக்குக் கடைகள், கரும்புச் சாறு அங்கேயே பிழிந்து தருகிற கடைகள், டீக்கடை வாசலிலேயே பஜ்ஜி, சிப்ஸ் போட்டு… பார்க்கிறவன் வாயில் உமிழ் சுரக்க வைக்கிற உத்திநுணுக்கமான கடைகள்…
கடைக்காரன் ஏமாறும் நேரத்தை எதிர்பார்த்து, உமிழ்நீர் சுரக்க சுற்றி வருகின்றன – நாய்கள்!
அண்ணாச்சி மணி என்ன? – என ஒரு பிச்சைக்காரன் கேட்க, வெறுப்புடன், ஏல மூதேவி உனக்கு மணிதெரிஞ்சி எந்தக் கோட்டையப் புடிக்கப் போற – ‘ஒன்பது இருபது’… என்று சொல்லிச்செல்லும் ஒருவன்.
பெரிய உள்விஸ்தீரணமான ஆலயம்தான். யாரோ வெள்ளைக்காரன் எப்போதோ கட்டியது. அவனுக்கே தெரியாத சரித்திரங்கள் இப்போது அந்த ஆலயத்தைப் பற்றிப் புழங்குகின்றன. வெளிநாட்டுப் பயணிகள் ஆவென வாயைப் பிளக்க வைக்கிற சரித்திரங்கள்.
டூரிஸ்டு கைடு உணர்ச்சிபூர்வமாய்ச் சொல்ல, ஐஸ்கிரீம் சப்பியபடி கேட்கும் கூட்டம்.
காலாவட்டத்தில் சர்ச் புதுப்பிக்கப் பட்டுவிட்டதாக பயணிகள் நம்ப வைக்கப் பட்டிருக்கலாம்.
நமமூர்க்காரர்கள் சவடால் நிபுணர்கள்…. அடேய் காந்தி கண்ணாடி என்ட்ட இருக்கு…
ஏல நாசமாப் போறவனே இதுவா?
ஆமாண்ணாச்சி, முதல்ல ஃப்ரேம் மாத்தினேன். பிறகு கண்ணாடி மாத்தினேன்.
இந்துக் கோவில்களுக்குப் பழமை அதன் பெருமை என்கிற பிரமை. இப்போது கோவில்களின் அருகே கோவில் கோபுரங்களைவிட உயரமாக ஃபிளாட்கள் வந்து விட்டன. தெருவில் இருந்து பார்க்க, மனிதர்களே கோபுரத்து பொம்மைகளைப்போல் தெரிகிறார்கள்!
கோபுரத்து பொம்மைகள் மனிதர்களை அண்ணாந்து பார்க்கின்றன!
ரோல்டு கோல்டு மாலைகளில், அலுமினிய மாலைகளில், தனி டாலராகவும் சிலுவையில் யேசு விற்பனைக்குக் கிடைத்தார். நிறையப் பேர் அங்கே பிரார்த்தனை என்று வந்துபோகிற வழக்கமும் ஏற்பட்டிருந்தது. பிரார்த்தனை என்றால் பல்வேறு விதம் அதில். பெரும்பாலோர் தம் ஊரில் சலூனே இல்லாத மாதிரி அங்கேவந்து மொட்டை போட்டுக் கொண்டார்கள்.
மண்டைகள் பல விதம். அவனவன் மண்டையில் எத்தனை விதமான நெளிசல்கள்! டிங்கரிங் தேவைப்படும் மண்டைகள்!… பித்தளைப்பாத்திரம் போல் பளபளத்தன சில மண்டைகள். பாசி படிந்த ரசக்குண்டான். வெல்லக் கட்டிகள் போல். முடி உரிக்கப்பட்ட தலைகள் என்றாலும், பார்க்க உரிக்கப்படாத தேங்காய் போல சில மண்டைகள்.
இவர்களைப் பார்த்து வெளிநாட்டுக்காரர்கள் சிலரும் மொட்டைபோட்டுத் திரிந்தார்கள். புடவை கட்டிய வெளிநாட்டுப் பெண்மணிகள், முந்தானை பற்றிய கவனம் இல்லாமல் அலட்சியமாய் நடமாடினார்கள். டட்டர டட்டட் டாய்ங்… பட்டுப்புடவை கட்டி மாராப்பு கழணடு விழுந்த பணக்காரப் பைத்தியம். கைப் பகுதியில், முழங்கைக்குமேல் ‘டாட்டு’ டிசைன் வரைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். நம்பூர் ‘பத்திக்’ போல…
அந்தப் பக்கங்களில் நடமாடினால் பொழுதுபோவதே தெரியாது. பர்ஸ் திருடுபோவதேகூட தெரியாது!… வேதக்கோவில் வாசல்பக்கமாக திடீர் திடீரென்று டூரிஸ்ட் பஸ்கள் வந்து நிற்கின்றன. உடனே ஒரு இளங் கூட்டம் வெள்ரிப்பிஞ்சூ, வெள்ரிப்பிஞ்சூ… அல்லது தண்ணீர்ப் பாக்கெட், என்று கத்தி அந்தப் பஸ்ஸை நோக்கி தேங்காய் விடலுக்குப் பாய்கிறதைப் போலப் படையெடுக்கின்றன. பஸ் வந்துநின்ற ஜோருக்கு உடனே ஹோட்டல்களில் இருந்து புதுப்படப் பாடல் கேட்கிறது.
ரா ரா சரசுக்கு ரா ரா…
கெட்ட லாட்ஜா அது?!…
வர்ற ஆளையும் பயமுறுத்தாதீங்கப்பா!
சிலர் சாமி பாட்டு, அந்த ஊர் ஆண்டவர் பாட்டு என்று போடுவதும் உண்டு. ‘பெலந் தந்தார் – எனக்கு பெலந் தந்தார்’, என்று அல்போன்ஸ் ஐயா பாடிய பாடல்கூட உண்டு. வேறு சிலர் லியோனி பட்டிமன்ற நகைச்சுவை வைக்கிறார்கள்.
சின்ன இடம் தமிழ்நாடு… அதுலயே ஒவ்வொரு இடத்லயும் பாஷையை ஒவ்வொரு மாதிரிப் பேசறான். ஒரிடத்ல தண்ணியை குவளைல மோண்டு ஊத்துன்றான். இன்னொரு இடத்ல?…. (சிரிப்பு) அர்த்தமே எக்குத் தப்பாப் போயிருதில்லே!…
சட்டென அந்த உலகம் சுறுசுறுத்துப் போகிறது. வர்றவனை ஏமாற்ற அவசரம். போட் டி.
கூட்டத்தோடு கூட்டமாய் ஆடுகள் மாடுகள் – ஆமாம் போலிஸ்காரர்களும் நடமாடுகிறார்கள். எல்லாருமே, ஏப்ப சாப்பையா எவனாவது மாட்டுவானா, என்று அலைகிறார்கள். எங்க போகிறார்கள் தெரியாது. சும்மா நோட்டம் பார்த்தபடி. கால்போன போக்கில்…
போலிஸ்காரர்கள் பிச்சைக்காரர்களை அதட்டுகிறார்கள்.
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்குத்தான் குஷ்டரோகம் வரும்… ஏனெனில் அங்கே குஷ்டரோகப் பிச்சைக்காரர்களுக்குதான் அதிகம் பிச்சை விழுகிறது. அவர்கள் சொறிந்துகொண்டே காசுப் போணியை நீட்டுகிறார்கள்.
இத்தனைக்கும் நடுவே ஒராள் எப்படியோ – காலை எத்தனை மணிக்கு அங்கேவந்து வரைந்தானோ – யேசுபிரானை வண்ணப்பொடிகளால் ஓவியம் வரைந்து வைத்திருக்கிறான். அதற்குச் சிலர் சில்லரை எறிகிறார்கள்.
டப் டப் என்று மேல் மூடியைத் தட்டியபடி ஐஸ்கிரீம் வண்டிகள்.
மன ரீதியாகவும் கடல் ரீதியாகவும் அந்த இடம் ஜனங்களைக் கவர்வதாய் இருந்தது.
கச்சக் கச்சக்… அச்சு இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. தொலைபேசி ஒலிக்க, ரத்னசபாபதி அதை எதிர்பார்த்தவனாய் இருக்கிறான். ‘ஆமாம் ஐயா. எல்லாம் சரியாயிட்டது ஐயா. உங்க வேலைதான் ஐயா எடுத்துச் செஞ்சிட்டிருக்கோம். மாலைக்கூட்டத்துக்கு விநியோகம் செஞ்சிறலாம் ஐயா… சரி ஐயா. நல்லது ஐயா. மணி என்ன? ஒன்பது முப்பது இல்லியா. ஆச்சி ஒரு அவர், ஒன்ரை அவர்ல முடிச்சி பையன்ட்டக் குடுத்து டெலிவரி பண்ணிர்றேன். நன்றி ஐயா. பேமென்ட்விஷயம்?… சரி ஐயா சரி ஐயா. ஐய அதைப்பத்தி என்ன…’
தொலைபேசியை வைத்துவிட்டு, என்னத்த தொழில் பண்ண, அவசரம் அவசரம்ன்றாங்க பேமென்ட் பண்ண ஒரு அவசரமுங் காணம்… என்கிறான்.
பூகம்பம் வந்தது காலை பத்து தாண்டி. முக்கியமாய் இங்கே ஏற்பட்ட பாதிப்பைவிட, வேறு கீழ்க்கடல் நாடுகளில் கடுமையாய் இருந்தது என்கிறார்கள். ஒரு முன்தகவல் இல்லை. எதிர்பார்ப்பு இல்லை.
கச்சக் கச்சக் …
திடுதிப்பென்று பூமியே ஒரு ரயில்-ஆட்டம் ஆடியது. மாவு சலிக்கிறாப் போல. ஆனால் சர்ரியான ஆட்டம். கட்டடமே ஆடியது. ரா ரா சதஸுக்கு ரா ரா!… ஃபோர்மேனுக்கு அது புதிதல்ல. தண்டபாணி வேலையை முடிச்சிட்டா நேரா வீட்டுக்குப் போகமாட்டான். லேசா தாகசாந்தி பண்ணிக்கிர்றதுதான். ஊத்திக் குடுத்தாளே ஒர் ரவுண்டு … உலகம் சுத்துதடி பல ரவுண்டு… கேஸ்தான்.
தெளிவாக உணர முடிந்தது எல்லாராலும். நெல்லரைக்கும் கடையில் அரிசியில் கல் நீக்க இப்படித்தான் மிஷின் ஆடிட்டே இருக்கும். தண்டபாணி, அட நான் தண்ணிகூட அடிக்கலையே இன்னாங்கடா இது, என நினைத்தான். மண்பானைத் தண்ணீர் குடிக்க, என டம்ளருக்குக் குனிந்த சிவாஜி, சுவரில் முட்டிக்கொண்டான். ரத்னசபாபதி உட்கார்ந்திருக்கிறபோதே, அவன் முன்னால் இருந்த மேஜை, சர்ரென இடம்பெயர்ந்தது, சிறிது. ஐயோ துட்டு! திரும்பவும் அவனிடமே வந்து, சற்று கோணலாய் நின்றது. அப்ப்பா பரவால்ல!… அவனுக்குச் சிறிது தலைசுற்றல் மாதிரித் தோணியது. இரத்த அழுத்தக் கோளாறா, என நினைத்தான்.
ஆனால் ஆட்டம் நிற்கவில்லை. நன்றாக ஒரு முப்பது விநாடிகள் வரை நீடித்தது. எலி தட்டிவிட்டாப் போல உயரத்து சாமான்களில் சில கீழே விழுந்தன. அச்சகவாசல் குண்டம்மாவின் பழங்கள் கிடுகிடுவென உருண்டு நடுத்தெருவுக்கு ஓடின. அவைகளில் ஒன்றிரண்டு, வரும் வாகனங்களின் அடியில் நசுங்கிப் பிதுங்கின.
இயற்கை எனும் ராட்சஸன், பூமிக் கட்டிலில் கெட்ட காரியம் பண்ணினாப் போல!…
தெருவில் கூக்குரல் கேட்டது. ‘எல்லாரும் வெளிய ஓடி வாங்க. பூகம்பம்… பூகம்பம்!’ பஜாரில் கூட்டநெரிசல். எல்லாரும் பதறி வெளியே ஓடிவந்தார்கள். தெருவில் இருக்கிறவர்கள் கூட நிதானமற்று இங்கும் அங்கும் ஓடினார்கள். முடிவு என எதையும் எடுக்கமுடியாத நிலை. எல்லாரும் நிலை குலைந்து கலவரப்பட்டு பிரமித்திருந்தார்கள். அச்சகத்தில் பைன்டர் ராமசாமி அப்போதுதான் வேலைக்கு வந்தவர் – வெள்ளைச்சட்டைப் பிரியர் அவர் – சட்டையைக்கூட கழற்றியிருக்கவில்லை. வாசலைப்பார்க்க முதலில் ஓடியவர் அவர்தான். அவர்கள் அனைவரிலும் வயதானவர் அவர்தான்… அது சரி, எத்தனை வயதானால் என்ன, உயிரின்மேல் ஆசை குறையப் போவதில்லை.
யாரோ சொன்னார்கள் என்று எல்லாருமே வாசலுக்கு ஓடிவந்து விட்டார்கள். உள்ளே இருப்பதால், கட்டடம் இடிந்து விழுந்தால் இடிபாடுகளில் மாட்டிக் கொள்கிற பீதி, அவர்களிடம் இருந்தது. தெருவும் ஆபத்து அற்றது, என்று கூற முடியாது. கட்டடம் நம்மீது விழலாம். தெருத் தரை கீறல்விட்டுப் பிளக்கலாம்…
பூகம்பம். எதுவும் நடக்கலாம். எதையும் யூகிக்க முடியாத நிலை அது. பூமிக்கு அப்பால் ஐந்து பத்து கிலோமீட்டர் அடியில் நிகழும் சம்பவம். மேல்தளத்தில் ஆட்டம். கீழே, பூமியின் தகடுகளே அல்லவா, நகர்ந்து, வெடிப்பு விடுகின்றன.
இசகு பிசகான நேரம். பதட்டம். அவசரத்ல அண்டாலயே கை நுழைய மாட்டேங்கு து… என்பதான நேரம்!
இருபது நிமிடமா அரைமணிக்கும் அதிகமா தெரியாது. எல்லாரும் தெருவுக்கு வந்து, கலவரமும், லேசான பீதிச் சிரிப்புமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். அச்சக தார்ணாப் பொம்பளை ஒருவழியாக எழுந்து கொண்டிருந்தாள். நாலுகடை தள்ளி தவணைமுறையில் டி.வி., ஃப்ரிஜ், தட்டுமுட்டு சாமான்கள் விற்கும் கடை… தொலைக்காட்சியை ஆன் செய்திருந்தார்கள். ஒரே கூட்டம். ஒருநாள்க் கிரிக்கெட் பார்க்கிறாப் போல.
தமிழ்நாடு முழுதும் கடலோரப் பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டதாகப் பதிவுகளை அவசரச் செய்தியாக தொலைக்காட்சி, ரிப்பன்போல ஓடும் எழுத்தில் அறிவித்தது. உயிர்ச்சேதம், பொருட்சேதம் பற்றிய விவரங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன.
சற்றுநேரங் கழித்து கீழைநாடுகளில், குலுக்கல் எட்டு புள்ளிகளுக்கும் கூடுதல், எனவும் கட்டடங்கள், குறிப்பாக அடுக்கு மாடிகள் பல தரைமட்டமாகி விட்டன, என்றும் பயமுறுத்தியது. உற்சாகமான ஊரே சட்டென முகம் மாறிவிட்டது. வெளியூர் ஜனங்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். தங்கள் ஊரில் நிலவரம் எப்படி என அறிய அவர்கள் அவசரப் பட்டார்கள். கவலைப் பட்டார்கள். தொலைபேசி பூத்களில் ஏராளமான கூட்டம். வசதி படைத்தவர்கள் காதில் செல்ஃபோனுடன் பேசியபடி நடமாடினார்கள்…
வைகறைவாசலில் ஒரு பாத்திரக்கடையில், சுவரில் வெடிப்பு விழுந்திருந்தது. தொங்க விட்டிருந்த வாளிகள், பாத்திரங்கள் உருண்டு தாறுமாறாய்க் கிடந்தன. வெண்கலக் கடையில் யானை புகுந்தாப்போல ஆகியிருந்தது நிலை.
ஒரு தொலைக்காட்சியில், செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறபோதே, ஏய் எல்லாமே ஆடுது… ஆடுது… என்றபடி அவர் வெளியே பரபரப்புடன் எழுந்து போனதையே காட்டினார்கள்.
ஊரிலேயே சில பகுதிகளில் குலுக்கலே இல்லை, எனப் பேசிக் கொண்டார்கள். தெருவில் வாகனத்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் தங்களால் பூகம்பத்தை உணர முடியவில்லை என்றார்கள்.
திரும்ப பூமி அதிருமா, என எல்லாருக்குமே, உள்ளே புதிரான சந்தேகம் இருந்தது. எல்லாரும் கவனமாகவே இருந்தார்கள்.
ரத்னசபாபதிக்கு திரும்ப அச்சகத்தில்போய் அமரவே மனம் ஒப்பவில்லை. ஆபத்துக் கட்டம் நீங்கி விட்டது, என்று யாராவது அறிவிக்கக்கூடாதா, என்றிருந்தது. மேஜைக்கு அப்பால் அவன் உட்கார, திரும்பவும் பூகம்பம் வந்தால், எழுந்து, வெளியே ஓடிவர நேரம் எடுக்கும்…
துட்டை எண்ணி எடுத்துச் சட்டைப் பாக்கெட்டில் உஷார்ப் படுத்தி யிருந்தான்!
ஆனால் அவன் உள்ளேவந்து உட்காரும் வரை, சிவாஜி உட்பட யாரும் வேலைசெய்ய என உள்ளே நுழையப் போவதில்லை! அவர்களுக்கு என்ன, கதைபேசிச் சிரித்தபடி பொழுதை ஓட்டிவிட்டு, சம்பளமும் வாங்கிக் கொள்ளலாம். உண்மையில் வேலை, முடிகிற கட்டத்தில் இருந்தது.
உள்ளே தொலைபேசி ஒலிக்கிறது. போய் எடுத்தான்.
‘ஆமாம் ஐயா, இங்க பெரிசா பாதிப்பு ஒண்ணும் இல்லிங்கய்யா… கூட்ட மொத்தமும் வெளிய தெருவுக்கு வந்திட்டது. பாத்திரக்கடை ஒண்ணு. வடிவேல் நாடார் கடை… பழைய கட்டடம் அது. ஓனர் காலி பண்ணு பண்ணுன்னிட்டிருந்தாரு… மாட்டேன் மாட்டேன்னு டேக்கா குடுத்திட்டிருந்தாப்ல… கட்டடமே விரிசல் விட்ருச்சி. இனி இருன்னாலும் இருக்க மாட்டாரு!…’
‘பூமியை நான் அதிரப் பண்ணுவேன்…’ என்று எங்க வேதத்தில் வசனம் இருக்கு – என்றார் அல்போன்ஸ் ஐயா.
‘நீங்க என்ன புது நோட்டிஸ் எழுதப் போறீங்களா ஐயா’ என்றான் கவலையுடன் ரத்னசபாபதி.
பூகம்பம் கடுமையாய்த் தாக்கியது இந்தோனீஷியாவில். மின்கம்பங்களே சாய்ந்து கிடந்தன. மின்சாரம் முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது. சிறிதுநேரம் விட்டு விட்டு தரை ஆடிக்கொண்டே இருந்தது. ஜனங்கள் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள். எல்லாரும் தெருவில் நிற்கிறார்கள். இடிபாடுகள் குவியல்களாக எங்கு பார்த்தாலும் கிடக்கின்றன. சில கட்டடங்கள் எப்படியோ அந்த அதிர்வில் பிழைத்தாற்போல தனித்து நிற்கின்றன. ஒரு மாடிக்கட்டடம் பெயர்ந்து விழுந்து, அதன் பின்புறக் கட்டடம் தெரிகிறது.
குபீர் குபீரென்று தீ பற்றிக் கொள்கிறது அங்கங்கே. எப்படி தீ வெடிக்கிறது என்று யூகிக்கவே முடியவில்லை. சட்டென காற்று உயர்ந்து கிளம்புகிறது. தீ மேலே பார்க்க புழுமாதிரி நடனம் ஆடுகிறது. நல்ல பகல் வெயில். புகை. தீயின் உருக்க வெப்பம். பதட்டம். தூசிப் படலம்.
தீ காற்றின் திருப்பப்படியும் விருப்பப்படியும் தாவித்தாவி, தெருவில் கட்டடங்களுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. தீயை அணைக்க, அந்தந்த கட்டடத்தில் வேலைசெய்கிற ஆட்கள் முயல்கிறார்கள் என்றாலும், வேறு வெளிஉதவி, என யாரும் கிடையாது. அவரவர், அவரவர்சார்ந்த பயத்தில் இருக்கிறார்கள்.
புகை உள்சுருளல்களுடன் பந்துபந்தாய் மேலே எழும்புகிறது. முடியவிழ்ந்து சுதந்திரப் பட் ட மயிர்க்கற்றை. சலூனில் வீசியெறிகிறாப் போல.
தெருவில் ஓடிவந்து நிற்கிறவர்களே கூட, வேடிக்கை பார்த்தபடி நிற்கிறார்களே தவிர, யாரும் பிறத்தியார் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவரவர் கவலை அவரவர்க்கு.
தான், அதிகபட்சம் தன் குடும்பம், தன் நண்பர்கள்… அவர்களால் அக்கறை காட்ட முடிந்த எல்லை அவ்வளவே. எல்லாரும் உதவிக்கு என்றுபோய், தாங்கள் பிரச்னையில் சிக்கிக் கொள்வோம், என வெகுவாக உள்ளுக்குள் பயந்தார்கள். எல்லாரும் எத்தகைய மோசமான விளைவுக்கும், அந்த நொடியில் தயாராய் இருந்தார்கள். எந்த மோசமான செய்தியையும், அவர்கள் மேலும் அதிர்ச்சியடையாமல் ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான் தெரிந்தது.
யாரும் யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எதையும் விவாதிக்கவில்லை. ஆனால் எல்லாரும் எல்லாவற்றையும் கவனத்துடன், பயத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். எதுவும் இதுகுறித்து செய்வதற்கில்லை, என அறிந்தவராய் இருந்தார்கள். அபாயகட்டம் நீங்கிவிட்டதாக உணர்வு வரும்வரை, அவர்கள் வேறு எந்தக் காரியத்திலும் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிந்தது.
கட்டட அடியில், இடிபாடுகளில், எத்தனைபேர் சிக்கிக் கொண்டார்கள் தெரியாது. திடீர் திடீரென அழுகுரல்கள் கூக்குரல்கள் கேட்கின்றன. யாரும் அருகே போகவில்லை. விடாமல் பூமி ஆடிக்கொண்டே யிருக்கிறது.
எல்லாருக்கும் காலம் வேடிக்கைகாட்டிக் கொண்டிருப்பதைப் போலவே காட்சிகள் அமைகின்றன. கோரக்காட்சிகள்.
பெரிய கட்டடங்களில் குபீரெனப் பரவும் வெப்பம் அபரிமிதமாய் இருக்கிறது. தெருவெங்குமே அனல் பறக்கிறது. சில கட்டடங்களில், உள்ளே படார் படார், என்று மரச் சட்டங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், கம்பியூட்டர்கள் என வெடிக்கின்றன…
பாப்கார்ன் பொறிக்கிறாப் போல…
செய்திகளும் வரத் தொடங்குகின்றன. வைகறைவாசல் ஜனங்களை மேலும்மேலும் பயமுறுத்துகின்றன அவை…. கிழக்குக்கரை நெடுகவே கிழிஞ்சி கெடக்கப்போவ்… என்று ஜனங்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
தவணை டி.வி. கடையில் வாசல்க் கூட்டம் அதிகரித்து விட்டது. சங்க நோட்டிஸ் அறிவிப்பது போல, உண்மையிலேயே அது மாபெரும் தார்ணாதான். திரும்ப ஒரு பூகம்பக் குலுக்கல் வந்தால், கடைக்காரர்கள் வெளியே ஓடிவர முடியாது… அவர்கள், டி.வி. ஒளிபரப்பை அணைத்து விடலாமா, என்றுகூட நினைத்தார்கள்.
ஆனால் அவர்களுக்கும் செய்தி வேண்டியிருந்தது.
கட்டடங்கள் விரிசல் விடுகின்றன. அல்லது இடிந்து விழுகின்றன. அல்லது தீப்பற்றிக்கொள்கின்றன. காற்றில், சேதமடையாத கட்டடங்களுக்குக் கூட தீ துள்ளுகிறது. தாவுகிறது. பரவுகிறது…. எல்லாம் செய்திகளில் ரிப்பனாக ஓடுகிறது. டி.வி.யில், விடாமல் சமையல் குறிப்பு, பாட்டுப் போட்டி, தொலைக்காட்சித் தொடர், நேயர் விருப்பப் பாடல் என நிகழ்ச்சி அது பாட்டுக்கு. ஒரு பக்கம் உலகத்தில் செத்துக்கொண்டே யிருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. செய்திகள் வந்துகொண்டே யிருக்கின்றன. கவுண்டமணி செந்திலை எத்திக்கொண்டே இருக்கிறான்.. ஜனங்கள் சிரிக்காமல் பார்க்கிறார்கள்…
ஒரு கடல்கரை ஊரில், தீயில் இருந்து தப்பிக்க, ஜனங்கள் தண்ணீரில் – ஆறுகள் குளங்களில் கடலில் போய் நிற்கிறார்கள், என்று தெரிவித்தார்கள்.
சிவாஜி? … என்று கூப்பிட்டான் ரத்னசபாபதி.
நிகழ்ச்சிகள் இவனுக்கு சுவாரஸ்யமாய் இருந்தன. வைகறைவாசலில் நிலைமை சாவகாசமாய், செய்திபரிமாறிக் கொள்கிற அளவில் இருப்பதாகவே அவன் நினைத்தான். இங்கே பதிவான பூகம்பம் நின்று, ஒருமணி நேரம் வரை ஆகியிருந்தது. ஜனங்களும் சிறு ஆசுவாசத்துக்கு வந்திருந்தார்கள். எங்கோ நிகழ்ந்த பூகம்பத்தின் பக்க விளைவு இது.
நோட்டிஸ் அச்சடித்து முடிந்தாகி விட்டது.
சிவாஜி?… என்று கூப்பிட்டான் ரத்னசபாபதி.
சிவாஜி நோட்டிஸ் பார்சலைப் பெற்றுக் கொண்டான். ஊர்முழுக்க வேடிக்கை பார்க்க நல்ல வாய்ப்பு அவனுக்கு, என்றுதான் தோன்றியது…
இனி பூகம்பமோ, அது சார்ந்த ஆபத்தோ, இங்கே இல்லை, என நினைத்தான். வைகறைவாசல் பாதுகாப்பாக இருப்பதாகவே நினைத்தான்.
கடல்கரைப் பக்கம், வேடிக்கை பார்க்கும் உற்சாகத்துடன், சைக்கிளை மிதித்தான்.
(தொ ட ர் கி ற து)

Series Navigation