This entry is in the series 20060818_Issue

புதியமாதவி, மும்பை


உன் மூச்சுக்காற்றின்
புணர்ச்சியை விலக்கி
என்னில் கருக்கொள்ளும்
மனிதப்பூக்கள்
போர்த்தொடுக்கும்
போர்க்களத்தில்
உன் கால்களுக்கு நடுவில்
காலம் காலமாய்
அமுக்கி வைக்கப்பட்டிருக்கும்
என் தளைகள்
உடைபடும்,
உன் தளைகளும்தான்.
என்னைக் கைதியாக்கியதில்
நீயும் கைதியானதை
அறியாமலேயே
காத்திருக்கிறாய் சிறைவாசலில்.
உள்ளே நானும்
வெளியே நீயுமாய்
ஒரே அறையில்
பூட்டப்பட்டிருக்கிறோம்
எனக்கான
என் விடுதலைப்போரின்
விடுதலைப்பரிசாக
உன் கனவுகளுக்கும் கொடுப்பேன்
கட்டுகள் அறுத்து
பறப்பதன் சுகத்தை.

—————————————————-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation