நிழல்களைத் தேடி …. (2)

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

புதியமாதவி.


என் நிழல்
என் சாயலில்லாத என் நிழல்.
என் நிழல்
எனக்குச் சொந்தமில்லாத என் நிழல்.

கிழக்கே விழவா
மேற்கே விழவா
காலடியில் விழவா
கதவோரம் விழவா
என்னைக் கேட்க்காமலேயே
என் நிழல்
உன் ஒளிமேடையில்
தன்னை இழந்து
என்னிலிருந்து விலகி
எங்கெல்லாமோ விழுகிறது.

என் நிழலின்
உயரத்தைக்கூட
உன் உதயம்தான்
நிர்ணயிக்கிறது

உன்னிலிருந்து
விலகி ஓடும்
ஒவ்வொரு கணமும்
நிஜங்களைத் துரத்தும்
நிழலின் ஓட்டமாய்
என் நடைப்பயணம்.

நிஜமில்லாமல் வாழ்ந்துவிட முடிகிறது.
நிழலில்லாமல் வாழ்வது மட்டும்
நிழல்களுக்கும் சாத்தியமில்லை.
ஒளித்திரைகள் மறுக்கப்பட்ட இருட்டில்
கனவுத்திரைகளில் கண்விழிக்கிறது நிழல்.
நிஜங்கள் களைத்து கண்மூடித்தூங்கும்
நிழல்கள் எப்போதும் விழித்தே இருக்கும்.
நிஜங்களைக் காக்கும் காவலனாய்
நிஜங்களுடன் வாழ்க்கைநடத்தும் காவலனாய்
நிழல்கள் எப்போதும் விழித்திருக்கும்.உயிர்த்திருக்கும்.

நிஜங்களுக்குத்தான் ஆடைகள், அணிகள், அலங்காரங்கள்.
நிழல் எப்போதும் உண்மையாய், அலங்காரமில்லாமல்.
நிர்வாணமாய் கடைசிவரை .
நிஜங்களின் இருத்தலை நிச்சயப்படுத்திக்கொண்டு.

வெளிச்சத்தில் பிறப்பதை எல்லாம் நிழல் என்று மயங்கியே
நிஜங்கள் தன் அடையாளத்தை தொலைத்துக்கொண்டிருகின்றன.
வெளிச்சத்தை விலக்கி வைத்து
நிழல்கள்
இருட்டில் தவமிருக்கின்றன.

என்னை இழந்த இருட்டில்
என் நிழல்தேடி அலைகிறது என்நிஜம்.
என்னைப்போலவே
என் சாயலில்
என் கைகளில்
என் கருவறைத் திறந்து
கண்விழிக்கிறது என் நிழல்.
அள்ளி அணைத்து அமுதூட்டி
நிலா முற்றத்தில் தொட்டில்கட்டி
விளையாடுகிறது தென்றல்.
காலப்புயலின் கடைசி ஆட்டமாய்..
என்னிலிருந்து பிறந்த என் நிழல்..
என்னிலிருந்து வேறாகி
என்னைவிட்டு தனிப்பயணம்.

நான் என் நிழலாக நினைத்தது
என் நிழலல்ல.
என்னிலிருந்து மலர்ந்த என் நிஜமா ?
நிஜங்களில் நிழல்தேடி நிழல்தேடி
கரைந்து போகிறது என் காலம்.

மீண்டும் மீண்டும்
நம்பிக்கையுடன்
எனக்கான என் நிழல்..
என் நிஜத்தை நிச்சயப்படுத்தும் என் நிழல்..
அந்த-
நிழல்தேடிக் காத்திருக்கிறது
என் பூமி.

….புதியமாதவி.
—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை