நிழல்களின் எதிர்காலம்

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

புதியமாதவி


மும்பை.

நெருப்பாய்ச் சுடுகிறது
உண்மை
குடைவிரித்து நடக்கிறது
கூட்டணி.
நாற்காலிகளுக்காய் தவமிருக்கிறது
நாட்கள்.
எப்போதாவது விழித்துக்கொள்கிறது
கொள்கைகள்.
எப்போதும் ஏதாவது போதையில்
தடுமாறிச் சரிகிறது
தலைமைப்பீடம்.
கொடிப்பிடித்து
கூட்டம்போட்டு
கூட்டம் சேர்த்து
கூட்டமாகி
கூட்டத்தில் கரைந்து போகிறது
தொண்டனின் பாதச்சுவடுகள்.

எது நிஜம்
எது நிழல்
எது கொள்கை
எது கூட்டம்
எது தலைமை
எது தொண்டு
எதுவுமே தெரியாமல்
தெரியவிடாமல்
ஏமாந்து கொண்டும்
ஏமாற்றிக் கொண்டும்
எங்கள் மக்களாட்சி.

நிழற்படங்களுக்கு
உயிர்க்கொடுக்கும்
ஒளிச்சேர்க்கையில்
இருண்டு கிடக்கிறது
நிஜங்களில் பெளதீகம்.
நிஜங்களில் வகுப்பறைகளில்
நிழல்கள் நடத்துகின்றன பெளதிகம்.

எங்கள் நிழல்களைத் தீண்டமறுக்கின்றன
வகுப்பறையின் ஒளிகள்.
ஒளிகள் பிரசவிக்காத நிழல்களாய்
உலாவருகிறது
எங்கள் பிறவி.
பிறந்து வாழ்ந்ததன் அடையாளமாய்
மனித எலும்புகள்
மண்ணுக்குள்.
அகழ்வாராய்ச்சியில்
அகப்பட்டால் மட்டுமே
எழுதப்படும்
எங்கள் மனித அடையாளங்கள்.

நிழல்களும் தீண்ட மறுக்கும்
எங்கள் நிழல் முகங்களில்
எழுதப்பட்டிருக்கிறது
எங்கள் நிழல்களின் எதிர்காலம்.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation