2 மதியழகன் சுப்பையா கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

மதியழகன் சுப்பையா


செங்குத்துப் படுக்கை
—-

சுவர்களை எனக்குப் பிடிக்கும்
அந்தரங்களை
மறைத்துக் காக்கவல்லவை

ஓவியங்கள், புகைப்படங்கள்
தொங்கவிட ஏற்றவை

ஆணியிறங்காத
கடினச் சுவர்களைப் பிடிக்காது

சுவற்றில் ஆணி அடிக்க
பிடிக்கவே பிடிக்காது

சிறு பிள்ளைகளின்
கோட்டோவியங்கள் சிறக்கும்
பிள்ளையாய் சிரிக்கும்

சாய்ந்த இடங்களின்
எண்ணெய் கறை
சிலரை, சிலதை நினைவு படுத்தும்

முன்னொரு நாள் தோழியுடன்
நின்று புணரும் போது
செங்குத்துப் படுக்கையாய் தாங்கிய
சுவரை நிரம்பப் பிடிக்கும்.

மதியழகன் சுப்பையா
மும்பை

பிடித்த கைகள்
—-

கைகளை பிடிக்கும் எனக்கு

மழலைக் கைகள்
குங்குமம் குளைத்து செய்தவை
எப்போதும் என்
அங்கம் தீண்டும்

அம்மாவின் கைகள்
அன்னத்தின் தூவள்
அன்பாய் என்
அங்கம் தீண்டும்

அப்பாவின் கைகள்
மாதுளை பழத் தொலி
சுரசுரப்பாய் என்
தலை வருடும்

தோழமைக் கைகள்
தாயைப் போல
குற்றம் பொறுத்து
ஆதரவு தரும்

ஆனால், எப்பொழுதும்
என் பாவாடை தூக்கவே
நீள்கிறதுன் கைகள்.

மதியழகன் சுப்பையா
மும்பை

madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா