நிலமகளின் குருதி! (தொடர்ச்சி) – 2

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

நரேந்திரன்



“We learn from history that we learn nothing from history”
– George Bernard Shaw

உலகச் சர்வாதிகாரிகளுடன் அமெரிக்க அரசாங்கத்திற்குப் பிரச்சினைகள் எதுவும் இருந்ததில்லை. அதாவது, அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்கிறவரைக்கும். அந்தச் சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இருக்கின்றனவா? No Problemo! We can do business with you! என்பதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் பொதுவான கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. ஒருபக்கம் அவர்களை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மறுபுறம் அவர்களை அரவணைக்கவே செய்து வந்திருக்கிறார்கள். இரானின் ஷா துவங்கி, சிலியின் பினோசே (Pinochet), பனாமாவின் நோரியேகா, பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ், சவூதி அரசர்கள், பாகிஸ்தானின் முஷார·ப்….ஏன் சதாம் ஹ¤செய்ன் கூட அமெரிக்கர்களால் வளர்க்கப்பட்ட ஒரு சர்வாதிகாரிதான்.

எப்போதும் போல அமெரிக்கர்கள் சதாம் ஹ¤செய்னுடன் எளிதாக ஒரு மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்களுக்குத் தேவையான எண்ணெயைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். தொடர்ந்த பொருளாதாரத் தடைகளினால் தடுமாறிக் கொண்டிருந்த சதாம் ஹ¤செய்னும் அதனைத் தயங்காமல் செய்திருப்பார். பின் எதற்காக இந்தத் தேவையற்ற இராக்கிய ஆக்கிரமிப்பு? சதாம் ஹ¤செய்னையே தொடர்ந்து இராக்கை ஆள அனுமதித்திருக்கலாமே? அதற்கான காரணம் மிக வேடிக்கையானது.

சதாம் ஒரு ஊசலாடும் மனோபாவம் (swinger) உடையவர் என்பதால் அவரை விரட்டத் தீர்மானம் செய்தார்கள் அமெரிக்கர்கள். யு. என்.னின் Oil for Food திட்டத்தின் மூலம், உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இராக்கிய எண்ணெய் அளவு மிகக் குறைவானது (தினசரி இரண்டு மில்லியன் பேரல்கள்) என்றாலும், மிக முக்கியமான ஒன்று. எண்ணெய்ச் சந்தையில் விலையை நிர்ணயம் செய்யும் அளவிற்கு வலிமையானது. ஒரு வாரம் சதாம் பாலஸ்தீனிய விடுதலைப் போருக்கு ஆதரவளித்து எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைப்பார். உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஆகாயத்திற்கு உயரும். மறுவாரம் ஒன்றுமே நடக்காதது போல மீண்டும் ஏற்றுமதியைத் தொடர்வார். எண்ணெய் விலை சரியும். அதற்கடுத்த வாரம் வேறொரு காரணம். வேறொரு விலை உயர்வு.

இராக்கிய ஆக்கிரமிப்பிற்கான திட்ட வரைவு, ஹ¥ஸ்டனில் இருக்கும் ஜேம்ஸ் பெக்கரின் நிறுவனமான “ஜாய்ண்ட் கமிட்டி ஆன் பெட்ரோலியம் செக்யூரிட்டி”-இல் தீட்டப்பட்டது. ஜேம்ஸ் பேக்கர், ஜார்ஜ் புஷ் சீனியரின் ஆட்சிக்காலத்தில் செகரட்டரி ஆ·ப் ஸ்டேட் ஆக இருந்தவர் (வெளியுறவுத்துறை அமைச்சர் எனலாம்). சதாம் ஹ¥செய்ன் குவைத்தை ஆக்கிரமிப்பு செய்ய தயாரான நேரத்தில் ஏறக்குறைய அவருக்குப் பச்சைக் கொடி காட்டியவர் இந்த ஜேம்ஸ் பேக்கர். “குவைத்துடன் உங்களுக்கு இருக்கும் எல்லைப் பிரச்சினை குறித்து எங்களுக்கு (அமெரிக்க அரசாங்கத்திற்கு) கருத்து ஒன்றுமில்லை…இந்தப் பிரச்சினை எந்த விதத்திலும் அமெரிக்காவை பாதிக்காது” என்று அவர் சொன்னது ஊடகங்களில் பதிவாகி இருக்கின்றது.

ஹ¥ஸ்டன் உலக எண்ணெய்ச் சந்தையின் தலைமையகம். அமெரிக்காவின் “ஏழு சகோதரிகள்” (Seven Sisters) எனப்படும் மிகப் பெரும் எண்ணெய்க் கம்பெனிகளினின் முக்கிய அலுவலகங்கள் ஹ¥ஸ்டனில்தான் இருக்கின்றன. எனவே, ஜேம்ஸ் பேக்கரின் இன்ஸ்ட்டிடியூட்டும் அங்கு இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளினால் இறுதி செய்யப்பட்ட இராக்கிய ஆக்கிரமிப்புத் திட்டம், ஜார்ஜ் புஷ் அமெரிக்க ஜனாதிபதி ஆன ஓரிரு மாதங்களில் அவரால் ஒப்புதல் செய்யப்பட்டது. ஜார்ஜ் புஷ் குடும்பத்தினரின் எண்ணெய் உலகத் தொடர்பு உலகம் அறிந்தது. அவரின் அமைச்சரவையில் இருக்கும் உப ஜனாதிபதி டிக் செனி, காண்டலிசா ரைஸ் போன்றவர்கள் எண்ணெய் கம்பெனிகளில் உயர் பதவி வகித்தவர்கள்.

மேற்படித் திட்டத்தின் (இராக்கிய ஆக்கிரமிப்பு) செயல் திட்டம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது. முதலாவது, அமெரிக்க ஆதரவு இராக்கிய ஜெனரல்கள் மூலம் ஒரு உள்நாட்டுப் புரட்சியை உருவாக்கி, அவர்களுக்கு உதவுவது போல இராக்கினுள் நுழைவது. சதாமுக்கு பதிலாக வேறொருவரை ஆட்சியில் அமர்த்தி விட்டு மூன்றே நாட்களில் இராக்கை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறுவது என்பது. இதன் பிதாமகர் ஜெனரல் காலின் பவல். இரண்டாவது இன்றிருப்பதைப் போல முழுமையான ஆக்கிரமிப்பு. இது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செயல் திட்டம். ஜெனரல் காலின் பவலின் திட்டம் நிராகரிக்கப்பட்டு பென்டகனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் இன்றைய இராக்கிய ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு காரணங்கள் உலா வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை நீங்கள் அறிந்தவைகளே என்றாலும், சில முக்கியமான காரணங்களின் பட்டியல் இங்கே,

ஒன்று, முன்பே தெரிவித்த ஹப்பர்ட் தியரி மற்றும் உலகச் சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையும், இராக்கிய எண்ணெய் வளமும்.

இரண்டு, சதாம் தனது எண்ணெய் வருமானத்தின் வரவு செலவுகளை அமெரிக்க டாலரில் இருந்து, யூரோ (Euro) விற்கு மாற்ற முடிவு செய்தமை.

மூன்று, தனது கட்டுப்பாட்டுக்குள் அகப்படாத, சர்வ வல்லமை படைத்த OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை, இராக்கை ஆக்கிரமிப்பதின் மூலம் அமெரிக்கா கைப்பற்றுவது.

நான்கு, தனது தகப்பனாரான ஜார்ஜ் புஷ் சீனியர் குவைத்திற்கு வரும்போது அவரைக் கொல்லச் சதி செய்த சதாம் ஹ¥செய்னைப் பழி வாங்கவே, அவரின் மகனான ஜார்ஜ் புஷ் ஜூனியர் இராக் மீது போர் தொடுப்பது(!).

மேற்கண்டவற்றில் நான்காவது காரணம் எந்த அளவிற்கு உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். தமிழ் சினிமாக் குப்பைகளைப் பார்த்துப் பார்த்தே மூளை சூம்பிப் போன தமிழ்நாட்டுக் கற்பனை போல இருக்கிறது அது. எனவே அதனைப் பற்றி அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை.

1950களில் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் தோண்டுமிடமெல்லாம் எண்ணெய் கிடைத்துக் கொண்டிருந்தது. இதனுடன் வளைகுடா நாட்டு எண்ணெயும் சேர்ந்து கொள்ள, கச்சா எண்ணெய் பேரல் $2.80 டாலருக்கும் குறைவாக விற்க ஆரம்பிக்க, இதனால் பதற்றமடைந்த அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள், தங்களுக்குள் உற்பத்திக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டன. மேலும் ஜியாலஜிஸ்ட் கிங் ஹப்பர்ட் மூலமாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டு, அதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்தின் வாயை அடைத்தனர் என்பது பொதுவாக உலா வரும் ஒரு செய்தி. அதன் அடிப்படையில்தான் அமெரிக்காவின் இராக்கிய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது என்று கூறப்பட்டு வரும் முதலாவது கருத்து.

இரண்டாவது காரணத்தையும் புறந் தள்ளிவிடலாம். சதாம் தனது வரவு செலவுகளை வேறொரு கரன்சிக்கு மாற்றியிருந்தாலும் அதனால் அமெரிக்க டாலருக்கு அதிக பாதிப்பு ஏற்படப் போவதில்லை. மேலும், இன்றைய நிலையில் அமெரிக்க டாலர் வலிமை குறைந்து இருப்பதே ஜார்ஜ் புஷ் போன்றவர்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு விஷயம். இதனால் அவருக்கோ அல்லது அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கோ நஷ்டம் ஒன்றுமில்லை. மாறாக கொழுத்த லாபம் மட்டுமே. இதுபற்றி விளக்க வேண்டுமானால் தனியாக வேறொரு கட்டுரை எழுதினால்தான் உண்டு என்பதால் இத்துடன் இதனை நிறுத்திக் கொள்வோம்.

மூன்றாவது காரணம் மிக முக்கியமானது. உலக அரங்கில் எவ்வாறு அமெரிக்கா ஒரு பொருளாதார வல்லரசு எனில் பெட்ரோலிய உலகில் சவூதி அரேபியா அசைக்க முடியாத ஒரு எண்ணெய் வல்லரசு. OPEC-இல் அங்கம் வகிக்கும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியா நினைத்தால் உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலைய வைக்க முடியும். ஒசாமா பின்-லாடன் போன்றவர்கள் சவூதியைக் கைப்பற்றத் துடிப்பது இதனால்தான்.

உலக கச்சா எண்ணெய் வளத்தில் பெரும்பகுதி சவூதி அரேபியாவில் இருக்கிறது. OPEC-இல் அங்கத்தினராக இருக்கும் மற்ற நாடுகளும் சவூதி அரசுக்கு அடிபணிய வேண்டிய நிலைமையில் இருக்கின்றன. சவூதி அரசாங்கத்தை எதிர்த்து மற்ற ஓபெக் உறுப்பினர்கள் ஒரே ஒரு பேரல் எண்ணெயைக் கூட, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிலிருந்து அதிகமாக, ஏற்றுமதி செய்ய முடியாது. அவ்வாறு ஏற்றுமதி செய்யும் நாடுகள் இரக்கமில்லாமல் சவூதி அரசாங்கத்தினால் தண்டிக்கப்படும்.

இன்று சவூதி அரேபிய அரசிடம் ரிசர்வில் இருக்கும் ஏராளமான பணத்தை வைத்துக் கொண்டு, எண்ணெய் ஏற்றுமதி எதுவும் செய்யாமல் ஒரு வருடம் வரை அதனால் தாக்குப் பிடிக்க முடியும். அதனை எதிர்த்து, வழங்கப்பட்ட கோட்டாவிற்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளை பழிவாங்க சவூதி அரேபியா கடைப்பிடிக்கும் வழிமுறை தனியானது. தன்னை எதிர்க்கும் நாடுகளை வழிக்குக் கொண்டு வர, சவூதி அரேபியா கணக்கு வழக்கில்லாமல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து உலக மார்க்கெட்டை கச்சா எண்ணெயால் மூழ்கடிக்கும். பின்னர் எண்ணெய் விலை அதல பாதாளத்திற்குப் போக, சவூதி அரசினை எதிர்த்த நாட்டின் பொருளாதாரம் என்ன கதியாகும் என்பதினை விளக்கத் தேவையில்லை.

எழுபதுகளில், சவூதி அரசின் எதிர்ப்பிற்கும் இடையே அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளின் தூண்டுதல்களுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவை விட அதிமாக பம்ப் செய்த தென்னமெரிக்க வெனிசூலா அரசாங்கம் திவாலானது. பாடம் கற்ற வெனிசூலா அதன் பின் சவூதி அரேபியாவை எதிர்க்கத் துணியவில்லை. இன்றைய வெனிசூலா அதிபரான “சோசலிஸ்ட்” ஹ்யூகோ ச்சாவேஸ் கோட்டா சிஸ்டத்திற்கு கொடிபிடிப்பவர்களில் மிக முக்கியமானவர் என்பது கவனிக்கத் தக்க ஒன்று.

வல்லரசாக இருந்த சோவியத் யூனியன் சிதறுண்டு போனதன் பின்னனியிலும் சவூதி எண்ணெய் முக்கிய பங்கு வகித்தது எனலாம். அமெரிக்க ஜனாதிபதியான ரொனால்ட் ரீகனின் பாலிசிகள் சோயித் யூனியனின் சிதறலுக்கு ஒரு காரணமாக இருந்தாலும், சவூதி அரேபியாவின் பங்கு அதில் சிறிதளவும் குறையாத ஒன்றே. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மிக முக்கியமான நாடாக இருந்த சோவியத் யூனியன், தனது சகோதர இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்ததை பொறுக்காத சவூதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை உச்சமாக்கியது. அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைய, சோவியத் ரஷ்யாவின் மிக முக்கியமான வருமானம் அதல பாதாளத்திற்குப் போக, செலவினங்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தானை விட்டு சோவியத் ரஷ்யா வெளியேறியதும், பின்னர் சிதறுண்டதும் வரலாறு.

OPEC-இன் நடவடிக்கைகளில் சவூதி அரசாங்கத்தின் வலிமை தொடர்ந்து அமெரிக்க அரசின் கண்களை உறுத்திக் கொண்டே வந்திருக்கிறது. இராக்கைக் கைப்பற்றுவதன் மூலம், தானும் ஒரு ஓபெக் அங்கத்தினராகி விடலாம், அதன் மூலம் பெட்ரோலிய உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம் என்ற நப்பாசை அமெரிக்கர்களுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. இராக்கிய ஆக்கிரமிப்பிற்குப் பின் அதற்கான நடவடிக்கைகளை பால் பிரம்மர் (Paul Bremer) போன்றவர்களின் மூலமாக வெளிப்படையாக அமெரிக்கா செய்து வந்திருக்கிறது.

உலகின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் வளம் இருந்தாலும், இராக் ஒரு சபிக்கப்பட்ட நாடு. அதன் பிரச்சினைகள் டி.இ. லாரன்ஸ் (Lawrence of Arabia) காலத்திலேயே ஆரம்பமாகி விட்டன.

அதுபற்றி அடுத்த வாரம்.


narenthiranps@yahoo.com

Series Navigation