நிறைவு?

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

உஷாதீபன்


“முப்பத்தஞ்சும் முப்பத்தஞ்சும் எழுபது ரூபா பஸ்காரனுக்குக் கொடுத்து சாமி கும்பிட வந்திருக்கு…கோயிலுக்குள்ளே, அதுவும் சந்நிதியிலே, இது என்ன கஞ்சத்தனம்?” சற்றே குரலைத் தாழ்த்தி, மெதுவாகத்தான் கேட்டான் ரமணன். ஆனாலும் இவன் பேசியது அங்கு நிற்பவர்களின் காதில் விழுந்திருக்கும் போலும்? வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தவர்களின் கவனம் மூலஸ்தானத்தில் இருந்த சாமியிடமிருந்து இங்கே இடம் பெயர்ந்தது. பின்னால் நிற்பவர்கள் “ம்ம்….நகருங்க…நகருங்க…” என்று நெருக்கியடிக்க, வரிசையிலிருந்து விலகினான் இவன். முன்னால் நின்று கொண்டிருந்த சாரதாவும், இவனோடு சேர்ந்து நகர்ந்தாள். “ஸ்பெஷல் என்ட்ரன்ஸ்” பத்து ரூபா…பத்து ரூபா…” என்று ஆங்கிலத்தில் கூவி, சந்நிதிக்கு வெளியே ஒரு மேஜை நாற்காலி போட்டு அமர்ந்து, வரும் பக்தர்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர். ஒரு போர்டைத் தொங்கவிட்டுக்கொண்டு அமர வேண்டியதுதானே? ஏனிப்படிக் கூவி விற்க வேண்டும் என்று தோன்றியது. . இலவச தரிசனத்திற்கும், சிறப்பு வழிபாடு இடத்திற்கும் இடைப்பட்ட தூரம் மிகக் குறைவாக இருந்தது. நாலைந்து அடி முன்னால் சென்று கும்பிட வேண்டுமானால் அதற்குப் பத்து ரூபாயா? இதுவே போதுமே என்று பலரும் நினைக்கக் கூடும் என்று தோன்றியது. அர்ச்சகர் ஒவ்வொருவராக அருகில் வந்து பக்தர்களால் கொடுக்கப்படும் சூடம், பூப்பந்து, ப+மாலை, அர்ச்சனைத்தட்டு என்று சேகரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பயபக்தியோடு பெயர், நட்சத்திரம், என்று கேட்பதை உடனடியாகவும், யோசித்து யோசித்தும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவற்றை அங்கேயே சேர்த்து, மந்திரங்களோடு கோர்த்து, முணுமுணுத்தவாறே நகர்ந்தார் அர்ச்சகர். சுவாமி சந்நிதியில் அர்ச்சனையை முடித்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் நுழைந்திருந்தோம் நாங்கள். அங்கே அம்பாளின் திருக்கோலத்தைப் பார்த்தவுடன் மனதுக்குள் கிளர்ந்த பக்தியிலும், அந்தக் காட்சி சொரூபத்தில் தன்னை இழந்த நிலையிலும் சாரதா படபடப்பாய்ச் சொன்னாள். “ஓடிப்போயி ஒரு அர்ச்சனைச் சீட்டு வாங்கிட்டு வாங்க…” – வெளியே கையைக் காண்பித்தாள். “வெறும் அர்ச்சனைச் சீட்டா?” – புரியாமல் கேட்டான் இவன். “போதும்….மந்திரம் சொல்லிப் பண்ணுவார்…ரெண்டு ரூபாதான்… வாங்கிட்டு வாங்க..”-பரபரத்தாள் சாரதா. “என்ன சாரதா நீ? வெறும் அர்ச்சனைச் சீட்டை வாங்கிட்டு வரச்சொல்றே? அப்படியே ஒரு அர்ச்சனைத் தட்டும் வாங்கிட்டு வர்றேனே?” “வேண்டாம்…அதுக்கு வேறே பதினைஞ்சு ரூபா தனியாக் கொடுக்கணும். ஏற்கனவே சுவாமி சந்நிதியிலேதான் அர்ச்சனை பண்ணியாச்சே…அது போதும்…” “அதுக்குத்தான் நான் முதல்லயே சொன்னேன்;… இங்கேதான் எல்லாரும் அர்ச்சனை பண்ணுவாங்கன்னு…நீதான் அங்கே பண்ணுவோம்னே…” “எங்கே பண்ணினா என்ன? எல்லாம் சாமிக்குத்தானே? பரவால்லே, போய் அர்ச்சனை டிக்கெட் வாங்கிட்டு வாங்க…” அவள் விரைசல் படுத்தியதில் மேலும் அங்கே நிற்க மனமின்றி, வாசலை நோக்கி விரைந்தான் ரமணன். சாரதா ஏனிப்படிச் செய்கிறாள்? என்னவோ போலிருந்தது அவள் செய்கை. யாருமே வெறும் அர்ச்சனை டிக்கெட் மட்டும் கொடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னதாகத் தெரியவில்லை. இல்லாத வழக்கத்தை அவள் உண்டு பண்ணுவது போலிருந்தது. ஏற்றுக் கொள்வார்களா? முடியாது என்றால் இன்னும் கேவலமாயிற்றே? போக,வர பஸ்ஸ_க்கே நூற்றைம்பது நெருக்கி ஆகிறது. அவ்வளவு செலவழித்து ஒரு கோயிலுக்குச் சாமி கும்பிட வரலாம்., அங்கே ஐம்பதோ, நூறோ செலவழித்து நிறைவாகக் கும்பிட்டுச் செல்லக்கூடாதா? அதற்கு ஏன் மனசு சுணங்குகிறது? இதிலென்ன சிக்கனம்? இது சிக்கனமா அல்லது கஞ்சத்தனமா? …………..2………… -2- சுவாமி சந்நிதியில் அர்ச்சனை பண்ணிவிட்டால், அம்பாள் சந்நிதியிலும் அர்ச்சனை பண்ணக் கூடாது என்று உள்ளதா என்ன? ஏதேனும் ஐதீகம் உண்டோ? அதற்கு ஒரு இருபது முப்பது செலவழித்தால் என்ன? குடியா முழுகிவிடும்? மனது நினைக்கிறது. அது நல்ல காரியம் என்று தோன்றுகிறது. பிறகென்ன தயக்கம்? எதைச் செய்தால் மனது நிம்மதிப்படுமோ அதைச் செய்துவிட வேண்டியதுதானே? பக்தியையும் சிக்கனமாகத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நியதி போல் அல்லவா இருக்கிறது இவள் செய்வது? பிறகு ஊருக்குத்திரும்பி “சே! தப்புப் பண்ணிட்டோம்…அம்பாளுக்கும் ஒரு அர்ச்சனை நிறைவாப் பண்ணியிருக்கலாம்? என்று எண்ணி துக்கப்படவா? இந்த நேரத்தில் சாரதா இப்படிச் சுங்கம் பிடிப்பது சரியில்லை என்றே தோன்றியது இவனுக்கு. நுழைவாயிலில் இருந்த கடைக்குப்போய் ஒரு அர்ச்சனைத் தட்டு வாங்கினான். அதில் எல்லாம் இருக்கிறதா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டான். தேங்காயைச் சுண்டிப் பார்த்து ‘டிக்…டிக்..” என்று சத்தம் வருகிறதா என்று சோதனை செய்தான். சரியாக நடுவில் உடைய வேண்டும். இல்லையென்றால் அதுவேறு மனதுக்கு சந்துஷ்டி. காதுக்கு அருகே வைத்து குலுக்கிப் பார்த்தான். உள்ளே தண்ணீர் கலகலத்தது. இந்த மனது சங்கடப் படாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் பழக்கி வைத்திருக்கிறார்கள்? ஆனால் அடிப்படையாக எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை இருப்பது புலப்பட்டது. ஒரு மாலையையும் வாங்கித் தட்டில் வைத்துக் கொண்டு, கௌன்ட்டருக்கு வந்து அர்ச்சனை டிக்கெட்டை வாங்கி, தட்டில் தேங்காய் அடியில் பாதுகாப்பாய் செருகிக் கொண்டு வேகமாய் உள்ளே நுழைந்தான். “வாங்க…வாங்க..சீக்கிரம்…ஏன் இவ்வளவு நேரம்?”-இவனைப் பார்த்ததும் பரபரத்தாள் சாரதா. அர்ச்சனைத் தட்டை அவளிடம் நீட்டியதும், அவள் முகம் சுருங்கியது போலிருந்தது. வரிசையாய் வாங்கி வந்து கொண்டிருந்த அர்ச்சகரிடம் பயபக்தியோடு நீட்டினாள். அவள் பெயர், என் பெயர், ரெண்டு குழந்தைகளின் பெயர் என்று சொல்ல ஆரம்பித்தாள். அ:டுத்து…அடுத்து…என்று எல்லாவற்றையும் கேட்டு, அங்கேயே முணுமுணுத்தவாறே மேலும் சிலரின் தட்டை வாங்கி கழுத்துவரை அடுக்கிக்கொண்டு கர்ப்பக் கிரஉறம் நோக்கி விரைந்தார் அர்ச்சகர். கூட்;;டம் அதிகமாய்த்தான் இருந்தது. இன்னும் பலர் அர்ச்சனை பண்ணக் காத்துக் கொண்டிருந்தார்கள். சாரதாவின் முழுக் கவனமும் நேர் உள்ளே சந்நிதானத்தில் இருந்தது. இந்நேரம் பார்த்து கழுத்துச் சங்கிலியில் எவனும் கட்டிங் போட்டால்கூட அவள் உணரப் போவதில்லை.. கன்னத்தில் மாறி, மாறி டப்பு, டப்பு என்று போட்டுக்கொண்டு, பயபக்தியோடு கும்பிட்டுக் கொண்டிருந்தாள் சாரதா. அவளையும் அவளின் தீவிரமான முரட்டு பக்தியையும் பார்த்து, ரசித்துக்கொண்டே சந்நிதியை நோக்கிக் கை கூப்பினான் இவன். “தீபாராதனை…..தீபாராதனை…கும்பிடுங்க…” என்றாள் திடீரென்று இவனைப் பார்த்து. “கவனிச்சிட்டுத்தானே இருக்கேன்…” என்றான்.; கூட்டத்தில் பலரும் கவனிக்க அவள் அப்படிக் கூறியதில் சிரிப்புத்தான் வந்தது. கண்மூடிக் கும்பிடலுக்கு இடையே பக்கவாட்டில் நின்ற சாரதாவின் நெற்றியில் கவனம் போனது. அங்கும் இங்குமாக ஒரு சீரின்றி இமைக்கு நடுவிலிருந்து தலை வகிடு ஆரம்பிக்கும் இடம்வரை பல இடங்களில் குங்குமம், சந்தனம், விப+தி என்று அப்பியிருந்தாள் அவள். போதாக்குறைக்கு கையில் வேறு குவித்து மூடிக் கொண்டிருந்தாள். “செல்லாத்தா…செல்ல மாரியாத்தா…” என்ற பாட்டு ஞாபகத்துக்கு வந்தது இவனுக்கு. “அங்கே தூண்லே மாட்டியிருக்கே…கிண்ணம்…அதுலே போடு…இப்படிக் குவிச்சு வச்சிட்டு எப்படிக் கும்பிடுவே…”- “இருக்கட்டும்…இருக்கட்டும்…” இவ்வளவு பக்தியிருக்கு…நிறையக் கோயில்களுக்குப் போகணும்…கும்பிடணும்ங்கிற ஆசையிருக்கு…ஒரு வேளை அதனாலதான் இந்தச் சிக்கனப் புத்தி வருதோ? -மீண்டும் நினைத்துக் கொண்டான். ஆனாலும் வெறும் அர்ச்சனைச் சீட்டை வாங்குங்கள் என்று அவள் சொன்னது ஏனோ பொருத்தமாகத் தெரியவில்லை சூடத் தட்டை ஏந்தியவாறே அர்ச்சகர் வர பல கைகள் தீபத்தை நோக்கி முன்னேறின. நீளும் கரங்களின் வேகத்தைப் பார்த்தால் எங்கே சூடம் அணைந்து போகுமோ என்றிருந்தது. சில்லரைக் காசுகள் தட்டில் விழுந்தன. பின்னாலேயே ஒருவர் தீர்த்தம் கொடுத்துக் கொண்டு வந்தார். அவர் பின்னால் இன்னொருவர் குங்குமமும் ப+வும். சட்டென்று இவன் கழுத்தில் ஒரு ப+மாலை விழுந்தது. லேசாகப் புன்னகைத்துக் கொண்டே கைகூப்பி ஏற்றுக்கொண்டு மாலை போட்டவரின் கையில் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்தான் அவர் முகம் மலர்ந்தது. குங்குமம் கொடுத்தவருக்குப் பின்னால் வந்த ஒருவர் “அர்ச்சனைக்குக் கொடுத்தவா தட்டை வாங்கிக்குங்கோ…” என்றவாறே டக்கு டக்கென்று உயர்த்தி நீட்டினார். …..3………. -3- “இங்கே…இங்கே…” என்றவாறே தட்டை வாங்கிக்கொண்டனர் பலரும். கூட்டத்தில் உண்மையிலேயே அர்ச்சனைக்குக் கொடுத்தவர்கள் மட்டும்தான் தட்டு வாங்குகிறார்களா என்று தேவையில்லாமல் சந்தேகம் வந்தது இவனுக்கு. சாரதாவும் கைகளை நீட்டினாள். யார் தட்டு யாருக்கு வந்தது என்று ஒரு சந்தேகமும் எழுந்தது. எல்லாமும் ஒன்றுபோல் இருந்தன. எது வந்தால் என்ன?. தனக்கு சரி, அவளுக்கு? அவளைப்போன்றேதானே மற்ற பெண்களும் என்று தோன்றியது. “வாங்க போவோம்…” என்றவாறே கண்களில் ஒற்றிக்கொண்டு இவனிடமும் நீட்டினாள் சாரதா. தொட்டுக் கும்பிட்டுக்கொண்டே வெளியே வந்தான். அடுத்த கூட்டம் முன்னேறியது இப்போது. கோயிலில் சில இடங்களில் கட்டிட மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. விதானக் கற்கள் ஆட்டம் கண்டிருக்கின்றன என்பதாகச் செய்தி படித்திருந்தான். . புஷ்கரணியில் (தெப்பக்குளம்) உள்ள மண்ணை நீக்கிவிட்டு சிமிண்ட் கான்கிரீட் போட்டதால் கோயில் கட்டடத்தின் அஸ்திவாரம்; ஈரப்பதம் அற்று பாதிக்கப்பட்டது என்பதாகவும் ஒரு செய்தி ஞாபகத்துக்கு வந்தது. அருகேயிருந்த சின்னச் சின்ன சந்நிதிகளைக் கும்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்தாள் சாரதா. சாவகாசமாய் வரட்டும் என்று அவள் திருப்தி கருதி ஆசவாசமாய் ஓரிடத்தில் காத்திருந்தான். கொஞ்ச நேரத்தில் சாரதா அங்கங்கே தன்னைச் சுற்றியவாறே வந்து சேரப் புறப்பட்டான். அங்கங்கே கோயிலின் பல பகுதிகளில் தூண்களுக்குக் கீழே அமர்ந்துகொண்டு, தேங்காய்களை உடைத்து, சில்லுப்போட்டும், பழத்தை உரித்தும், தொன்னையில் வாங்கிய பிரசாதங்களை ருசித்துக்கொண்டும் பலர் தின்று கொண்டிருந்தார்கள். வாசலுக்கு முன் பாட்டையில் யானை ஒன்று உரித்துப்; போட்ட தென்னை மட்டைகளுக்கு நடுவே நின்று கொண்டு ஆடிக் கொண்டிருந்தது. அதன் உடம்பில் தொங்க விட்டிருந்த வஸ்திரமும், மணியும், அது ஆடுவதனால் எழுந்த மணிச் சப்தமும், கேட்க இனிமையாயிருந்தது. ஒரு குழந்தையைக் கட்டாயமாகத் தூக்கி, அது பயத்தில் கதறக் கதற, அதன் தந்தை, மேலே அமர்ந்திருந்த பாகனிடம் அதைக் கொடுத்துக் கொண்டிருந்தார். குழந்தை மேலும் குரலெடுத்து அழ, அதைப் பார்த்துப் பலரும் சிரித்துக் கொண்டிருந்தனர். “குழந்தைகளுக்கு சீர் தட்டவே தட்டாதாக்கும்…” -என்று யானை மேல் ஏற்றுவதைக் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்தது ஒரு பெண். ஒவ்வொன்றாகப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தார்கள் இவர்கள். “கோயிலுக்கு வந்தா உட்காராமப் போகக் கூடாது…ஒரு நல்ல இடமாப் பாருங்க…” சாரதா சொன்னதுபோல் நல்ல இடம் எது என்று தேடத் துவங்கினான் இவன். “அதோ, அங்கே போய் உட்காருவோம்…” என்றவாறே ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடந்தான.; “அப்பாடா…” என்றவாறே ஆசுவாசப்பட்டுக்கொண்டு அமர்ந்தாள் சாரதா. இவன்; அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தது எதற்கு என்பது போல், மேலே விதானத்தில் இருந்த ஓவியங்களையும், சிற்பங்களையும் ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று கத்தினாள் சாரதா. என்னவோ, ஏதோவென்று பதறிப் போனான் இவன். “என்ன? என்ன? என்னாச்சு?” என்றான் பதிலுக்குப் பதட்டத்துடன். உடம்புக்கு ஏதேனும் உபாதையோ? என்று தோன்றியது. “ஐயையோ…என்னங்க இது?” என்றாள் அர்ச்சனைத் தட்டைக் காண்பித்து. இவன் ஒன்றும் புரியாமல் பொறுமையின்றி, “விஷயத்தைச் சொல்லு..” என்றான் எரிச்சலுடன். “இந்தக் குடுமித் தேங்காயையும், ஒரு பழத்தையும் அர்ச்சகருக்குக் கொடுக்க விட்டுப் போச்சேங்க…?” என்றாள் சாரதா. அவள் முகம் துக்கத்தில் சுருங்கியது “அட…! இதுக்குத்தான் இப்படிக் கத்தினியா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன்…” என்றவாறே தூணில் சாய்ந்தான். “சாயாதீங்க…எண்ணைப் பிசுக்கு….ஒட்டிக்கிடும்…” பதறினாள் சாரதா. இவனுக்கு ரொம்பவும் ஆசுவாசமாய் இருந்தது. ……..4………… -4- “ஏங்க, ஒண்ணு செய்றீங்களா? சிரமம் பார்க்காம இதைக் கொண்டுபோய் அர்ச்சகர்ட்டக் கொடுத்துட்டு வந்திடறீங்களா? புண்ணியமுண்டுங்க…ஒரு பழமும், ஒரு மூடித் தேங்காயும் அவருக்குக் கொடுக்கணும். சாஸ்திரமுண்டாக்கும்….!” இவனுக்கானால் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. “என்ன நினைச்சிட்டிருக்கே நீ? வெளையாடுறியா? நானென்ன சின்னப்பிள்ளைன்னு நினைச்சியா? சும்மா ஓடிட்டிருக்கிறதுக்கு? அவருக்கு தட்சணை பத்து ரூபாய் கொடுத்தாச்சுல்ல, அத்தோட விடு…இதுக்குன்னு ஒரு தரம் என்னால போக முடியாது. அங்கென்ன எடம் காத்தாடவா கிடக்கு? ஒரே இடிபிடி. கூட்டப் புழுக்கத்துல அரை மணி நேரம் நின்னதுல, வேர்த்து விறுவிறுத்து எனக்கு மயக்கமே வந்திடுச்சு. கால் கடுத்துப்போய் அப்பாடான்னு இப்பதான் உட்கார்ந்திருக்கேன். திரும்பவும் போங்கிறியே? இங்கே யாராவது கேட்பாங்க..அவுங்களுக்குக் கொடு…அதுவும் புண்ணியந்தான்…” – நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே போனான் ரமணன். அப்போது சாரதாவின் குரல் மீண்டும் இவனைத் துணுக்குறச் செய்தது. “அய்யய்ய…இங்க பாருங்களேன்…!” என்றவாறே அர்ச்சனைத்தட்டை முன்னே நீட்டினாள் “என்ன?” என்றவாறே கூர்ந்து பார்த்தான் ரமணன். ஒன்றும் புரிந்தபாடில்லை. இவளுக்கென்று ஏதாவது தோன்றிக்கொண்டே இருக்குமோ? இவள் சென்டிமென்டுக்கு ஒரு அளவேயில்லையா? “நல்லாப் பாருங்க…” என்றாள் மீண்டும். “..எல்லாந்தானே இருக்கு?”- ; பதிலிறுத்தபோது சட்டென்று என்னவோ தோன்றியது. “அட, ஆம்மா…!!” – என்றான் உடனே. இப்போது எல்லாமும் தெளிவாகத் தெரிந்தன. . நூலில் கட்டிய பத்தியும் சுருட்டிக்கட்டிய வெற்றிலையும், பொதிந்த சூடமும், பொட்டணமிட்ட கற்கண்டும், பழமும், மாலையும், கசங்கிய அர்ச்சனைச் சீட்டோடு வைத்தது வைத்தமேனிக்கு அப்படியே அமிழ்ந்திருந்தன கூடையில். “என்னங்க இது? “- சாரதாவின் குரலில் மெல்லிய சோகம். “அப்டியே வந்திருக்கு!…இல்ல?” – அவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது இவனுக்கு. “சரி, விடு…கூட்டம் அதிகமானாலே எல்லாமும் நெகிழ்ந்து போறதும், நீர்த்துப் போறதும் சகஜந்தான். சந்நிதிக்குள்ள போயிட்டுத்தானே திரும்பியிருக்கு…கண்ல ஒத்திக்கோ…அவ்வளவுதான்…” அழுத்தமாய்ச் சொன்னான் ரமணன். இவன் பதிலில் அவளுக்குத் திருப்தி வந்ததா தெரியவில்லை. பக்தியும், அனுஷ்டானங்களும், நியமங்களும் அதைக் கடைப்பிடிப்பவர்களின் மனம் சார்ந்த, அறிவு சார்ந்த படிமங்களாயிற்றே?

Series Navigation