நினைவுகளின் தடத்தில் – (32)

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

வெங்கட் சாமிநாதன்இவையெல்லாம் பின்னர் நான் தெரிந்து கொண்டவை. படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு பிரசித்தமான இடங்களாகத் தெரிய வந்தவை, உடையாளூர் வாசிகளுக்குச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ளக் கூடியவை சில உண்டு. ஒன்று, ஒரு காலத்தில் காஞ்சியிலிருந்து கும்பகோணத்துக்கு இடம் மாறிய சங்கர மடம். அது காவிரிக்குப் போகும் வழியில் இருந்தது. அந்த தெருவுக்குப் பெயரே மடத்தெரு தான். மற்றது, அத்தெருவிலிருந்து பாணாதுரை ஹைஸ்கூலுக்குப் போக வலது பக்கம் திரும்பினால் பட்டமங்கலத் தெருவைக் கடந்தால் பாணாதுரை ஸ்கூல் வந்து விடும். அந்தத் தெருவில் தான் ஹைஸ்கூலின் ஹெட்மாஸ்டர் சீனிவாச ஐயங்கார், அவர் பெயரை நான் நினைவில் சரியாகத் தான் வைத்திருக்கிறேன் என்றால், வீடு இருந்தது. அவர் தான் என் க்ளாஸ் ஆசிரியரும் கூட. நான் ஒரு முறை வகுப்பில் கவனமில்லாது இருந்த போது, “இந்த சாமிநாதன் இங்கே இருக்கவேண்டியவன் இல்லைடா. சங்கர மடத்தில் இருக்க வேண்டியவன். எப்போ பாரு, தியானம் தான்.” என்று அவர் வகுப்பில் என்னைச் சுட்டி விரலை நீட்டிச் சொன்ன போது, வகுப்பில் எல்லோரும் சிரித்தார்கள். அவருக்கு என்னிடம் கொஞ்சம் கரிசனம் உண்டு. தினம் கிராமத்திலிருந்து வர போக 11 மைல் நடக்க வேண்டியவன் என்ற காரணத்தால். பின்னால் நான் மகா மகக் குளத்தெருவுக்கு வந்து விட்டேன் என்று அவரிடம் சொல்ல வில்லை. ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால், மறுபடியும் நடை தானே. எப்போ மகா மகக் குளத்தெரு வாசி, எப்போ உடையாளூர் வாசி என்று சொல்லிக்கொண்டா இருக்க முடியும்? பட்டமங்கலத்தெருவில் இருந்த ஒரு வி.ஐ.பி. டாக்டர் மகாலிங்கம். அவர் அந்த வட்டாரத்தில் மிகப் புகழ் பெற்றவர். கண் டாக்டர் என்று ஞாபகம். உடையாளூர் வரைக்கும் டாக்டர் மகாலிங்கத்தின் புகழ் பரவியிருந்தது.

இன்னொரு முக்கியமான தெரு டபீர் தெரு. யார் இந்த டபீர் என்று எனக்குத் தெரிந்ததில்லை. யாருக்கும் தெரிந்ததில்லை என்று சொல்லவேண்டும். தெரிந்துகொள்ளுவது அவசியம் என்று யாரும் நினைக்கவில்லை. இது ஏதோ முஸ்லீமின் பெயராக ஒலித்தாலும், அந்த தெருக்கள் எதிலும் முஸ்லீம் யாரும் குடியிருந்ததாகத் தெரியவில்லை. இருந்தால் அது தனித்துத் தெரியும். உண்மையில் டபீர் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட தெருக்கள். டபீர் கிழ்க்குத் தெரு, டபீர் நடுத்தெரு இப்படி. நகரின் மத்தியில் உள்ளவை. நடுத்தர மக்களும் அதற்குச் சற்று மேற்பட்ட மக்களும் வசிக்கும் இடம். நான் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் ஒரு சில தடவைகளே அந்தத் தெருக்களுக்குள் நுழைந்திருக்கிறேன். கும்பகோணத்தில் முதல் அடி எடுத்து வைத்ததே டபீர் தெருவொன்றில் தான். பாணாதுரைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக மாமாவும் அப்பாவும் என்னை அழைத்துச் சென்றனர். யாரையோ முதலில் பார்த்து அவர் எங்களை பாணாதுரை ஹெட் மாஸ்டரிடம் அழைத்துச் சென்றார். பின்னர் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நிலக்கோட்டையிலிருந்து வந்திருந்த பாட்டியை அங்கு யாரோ ஒரு உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். பாட்டியை உள்ளே அழைத்துச் சென்று உறவினர்களிடம் விட்டு விட்டு நான் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்த பெண்கள், ‘ பிள்ளையாண்டான் ரொம்ப வெக்கப்படறான் போலேருக்கே” என்று சொல்லிச் சிரித்துவிட்டு என்னை என் போக்கில் விட்டு விட்டார்கள்.

அந்தத் தெருக்கள் ஒன்றில் அடுத்தும், இது வரை கடைசியாகவும் காலடி வைத்தது, சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன். அறுபது ஆண்டுகள் நிறைவை ஒட்டி சஷ்டி அப்த பூர்த்தி கொண்டாடுவதைப் போல, பீம ரத சாந்தி என்பது ஆயிரம் பிறை பார்த்தவர்களுக்கானது என்பது அப்பாவின் பீமரத சாந்திக்கு வரும்படி எனக்கு அழைப்பு வந்த போது தெரிந்தது. இரண்டு நாட்கள் கும்பகோணத்திற்கு வந்திருந்தேன். அப்போது கரிச்சான் குஞ்சு கும்பகோணத்தில் இருக்கிறார் என்பது தெரிய வந்தது. அவர் 1930-40க்களின் கு.ப.ராவைக் குருவாகக் கொண்ட சிஷ்யகோடிகளில் ஒருவர். கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட் ராமோடு கரிச்சான் குஞ்சு மூன்றாமவர். இவர்களோடு சுவாமிநாதன் ஆத்ரேயனையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தஞ்சையில் ஜவுளிக்கடையோ என்னவோ வைத்திருந்தார் என்று படித்த ஞாபகம். கரிச்சான் குஞ்சு, கு.ப.ராவிடம் கொண்டிருந்த அபார சிஷ்ய பக்தியால், கரிச்சான் குஞ்சு என்று தன்னை இலக்கிய உலகம் அறிய விரும்பி அப்படி பெயர் வைத்துக்கொண்டார். கு.ப.ரா.வின் புனைபெயர்களில் ‘கரிச்சான்’ என்பதும் ஒன்று. கரிச்சான் குஞ்சு பாண்டிச் சேரியில் இருந்தவர் கும்பகோணத்திற்கு வந்து டபீர் தெருவில் தங்கியிருக்கிறார் என்று தெரிந்தது. யார் சொன்னார்கள் என்பது எனக்கு நினைவில் இல்லை. அனேகமாக தஞ்சை பிரகாஷாக இருக்கவேண்டும். அவரைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிற்று. அதுவும் இவ்வளவு கிட்ட கும்பகோணத்திற்கே வந்து விட்டதைக் கேட்ட பிறகு, நானும் விடுமுறையில் கும்பகோணத்தில் தங்கி இருக்கும்போது, அது இரண்டு நாட்களே ஆனாலும். ஜானகி ராமன் மறைந்தது அவரோடு பழகிய நினைவுகளைத் தொகுத்து யாத்ரா வில் ஒரு மலர் வெளியிட நினைத்து அதற்கு அவரோடு நெருங்கிப் பழகியவர்களை மாத்திரம் எழுதக் கேட்டிருந்தேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது கரிச்சான் குஞ்சு எழுதியது. மிகவும் நீளமானதும் கூட. நட்பின் அன்னியோன்னியத்தையும் ஆழத்தையும் அதில் காணலாம். மிகவும் ஆத்மார்த்தமாக, அனுபவித்து மனம் நெகிழ எழுதியிருந்தார் கரிச்சான் குஞ்சு.

அதிலிருந்து கரிச்சான் குஞ்சு எழுதியவற்றையெல்லாம் படித்தேன். அது வரை என் பாதையில் எதிர்ப்படாதவை அவை. தஞ்சை மண், சமஸ்கிருத புலமை, பழம் வாழ்முறைகளில் மதிப்பு, ஆசாரசீலம் எல்லாம் அவரைத் தனித்துக் காட்டின. ஸ்வாமிநாத ஆத்ரேயன் கிருஷ்ண ப்ரேமியோடு பிற்காலத்தில் ஐக்கியமாகியதைப் போலல்லாது தன்னில் தன்னிறைவு காண்பவராக இருந்தார். நான் அவரைச் சந்தித்த பிறகு பின் வருடங்களில் தம் புரட்சிகரத்தை உரத்துக் கூச்சலிட்டுத் தெரிவிக்கும் இளைஞர் கூட்டம் அவரைச் சுற்றி வந்தது. பஞ்சக் கச்சமும் குடுமியும், மார்பின் குறுக்கே பூணூலும், சமஸ்கிருதப் புலமையும், தமிழ் காவியங்களில் ஆழ்ந்த ரசனையும் பழமை மதிப்புகளும் கொண்ட ஒரு ஜீவன், எப்படி இந்த இளைஞர் கூட்டத்தை எப்படிக் கவர்ந்தது என்பது எனக்குப் புரிந்ததில்லை. ஆனந்த வர்தனரின் த்வன்ய லோகத்தையும், தேவி ப்ரசாத் சட்டோபாத்யாயாவின் What is true and relevant in Indian Philosophy புத்தகத்தையும் அவர் மொழிபெயர்த்தார். இதெல்லாம் பின் நிகழ்வுகள். அவரை நான் டபீர் தெருவில் பார்க்கச் சென்ற போது, புதுச்சேரியிலிருந்து அவர் திரும்பியிருந்தார். ஒரு நீளமான இரண்டு கட்டு வீட்டின் இரண்டாம் பின் கட்டில், தாழ்வாரமும் அதை ஒட்டிய ஒரு அறையும் அவர் குடியிருப்பாக இருந்தது. கல்யாண வயதில் இரண்டு பெண்கள். அவர் காட்டிக் கொள்ளாவிட்டாலும் வறுமையும் அவரால் தாளமுடியாத பொறுப்புகளும் தெரிந்தாலும், அவர்கள் யாரும் அதனால் வாடியவர்களாகக் காட்டிக் கொள்ளவில்லை. எல்லோருமே மிக உற்சாகத்துடன் வெகு சகஜமாக, மலர்ந்த முகமும் சினேக பாவமும் பெருகப் பேசினார்கள். ஒரு மகரிஷி, ஒரு யோகி தன் பாட்டில், வெளி உலகை விட்டுத் தனித்து தன் ஏகாந்தத்தில் தன்னிறைவு கண்டு தன் ஆஸ்ரமத்தில் வாழ்வது போன்று ஒரு அமைதியுடன் அவர் உலகம் இருந்தது.

அந்த நாட்களில், நான் முன் சொன்னது போல, நான் விடுமுறையில் தெற்கே வருவது என்பது வருடாவருடம் நடப்பதில்லை. சிலசமயங்களில் நான்கு வருடங்கள் கூட கடந்து விடும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என்று ரயில் பிரயாண சலுகை கிடைத்த பின் தான் அந்த சலுகையை வீணாகக் கூடாது என்று கட்டாயம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கும்பகோணம் வருவது என்ற பழக்கம் ஏற்பட்டது. கரிச்சான் குஞ்சு வைப்பற்றி, சாகித்ய அகாடமி வெளியிட்டு வந்த Encyclopaedia of India Literature-ல் எழுதினேன். அவருடைய பசித்த மானுடம் நாவலும், பாரதி பற்றி அவர் எழுதிய கண்டதும் கேட்டதும் புத்தகமும், ஏன் அவர் சிறுகதைத் தொகுப்புகளும் தாம், என்னைப் பாதித்தன. என்னதான் எழுதியிருந்தாலும் அவர் அடக்கமும், தமிழ் விமர்சகர்களோ, வாசகர்களோ அவரைக் கண்டு கொள்ளாதது பற்றி எந்தக் கவலையும் அற்று இருந்த அவரது நிச்சலன மனம் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன. அந்த அமைதி ஒரு தவசியின் அமைதி.

ஆனால் இவையெல்லாம் பின்னைய சாமிநாதனின் உலகத்தைச் சேர்ந்தவை. டபீர் தெரு என்று சொன்னதும் அது இந்த கணத்தில் எழுப்பபும் நினைவுகள் எல்லாம் பெருக்கெடுத்துவிட்டது தான் காரணம். அன்றைய 1947 சாமிநாதனுக்கு ஜானகி ராமனையும் தெரியாது. கரிச்சான் குஞ்சுவையும் தெரியாது. முன்னாலேயே சொன்னபடி என் வகுப்பு நண்பன் ஆர் ஷன்முகம் தயவில் ஓர் இரவு என்ற தடை செய்யப்பட்ட புத்தகம் வழியாக சிதம்பர ரகுநாதனைத் தெரியத் தொடங்கியிருந்தேன். பள்ளிக்கூட லைப்ரரியில் காலடி வைக்க எங்களுக்கு கொஞ்ச காலம் கிடைத்த சுதந்திரத்தில் கிடைத்த தமிழ் நாட்டுப் பெரியார்கள் என்ற புத்தகத்தின் மூலம் வ.ரா. அறிமுகமானார். அதில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து, சில மாதங்களுக்குப் பிறகு ஈ.வே.ரா பற்றி ஒரு சின்ன புத்தகமும் வ.ரா. எழுதியது வெளிவந்திருந்தது. இவற்றைத் தொடர்ந்து அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்ற தலைப்பில் சி.என். அண்ணாதுரை எழுதிய ஒரு சிறு புத்தகமும் வ.ராவைப் பாராட்டி வெளிவந்தது. ஈ.வே.ராவுக்கு இலக்கிய உலகத்திடமிருந்து கிடைத்த முதல் அங்கீகாரம் என்று வ.ரா. எழுதியதைச் சொல்ல வேண்டும். அதே போல வ.ரா. வின் திறந்த மனதுக்கும் பரந்த சிந்தனைக்கும் அவர் பிராம்மணர் என்பதையும் மீறிக் கழகத்தினரிடமிருந்து கிடைத்த முதலும் கடைசியுமான அங்கீகாரம், ஒரே அங்கீகாரம் அண்ணாவினது தான். கழகத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர் பிராம்மணர் என்பதையோ அதுகாரணமாகத் தாம் கொண்ட வெறுப்பையோ விடத் தயாராயில்லை.

அந்த நாட்களில் யோகி சுத்தானந்த பாரதியார் தமிழ் பற்றியும், தேச பக்தி பற்றியும் வெகு ஆவேசத்துடன் நிறைய எழுதி வந்தார். ஏழை படும் பாடு என்ற தலைப்பில் Les Miserables- என்னும் ·ப்ரெஞ்சு நாவலையும் மொழிபெயர்த்திருந்தார். ரொமப தடி புத்தகம். பல ஐரோப்பிய மொழிகளிலிருந்து புகழ் பெற்ற காவியங்களை அவர் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் புதுச்சேரி வாசி. வை.மு.கோதை நாயகி அம்மாள் தன் நாவல்களை ஜகன் மோகினி என்ற மாதப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார். ஜகன் மோகினி இதழ் ஒன்றில் யோகியார் கட்டுரை ஒன்றும் படித்த நினைவு இருக்கிறது. அது படிக்க சுய சரிதை போல இருந்தது. அவர் தமிழ் பற்றி ஆவேசத்துடன் எழுதிய எழுத்துக்கள் எல்லாவற்றையும் நானும் மிக ஆர்வத்துடன் மட்டுமல்ல ஆவேசத்துடன் படித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

வெங்கட் சாமிநாதன்/13.11.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்