நினைவுகளின் தடத்தில் – (27)

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

வெங்கட் சாமிநாதன்



எனக்கு அப்போது அதன் தீவிரம் தெரியவில்லை. அத்திம்பேர் அது பற்றிப் பேசிய விவரங்களிலிருந்தும், பேசிய தோரணையிலிருந்தும், ஏதோ ஒரு ஊரை விட்டு இன்னொரு ஊருக்கு வந்த பாவனையில் தான் நான் அதை எடுத்துக் கொண்டேன்.அப்படித்தான் என் மனதில் அது இறங்கியது. அத்தை சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது என்னைக் கேலி செய்து கொண்டும் இருந்தாள். அவள் கேலி பண்ணும்போது அப்பாவும் அம்மாவும் சந்தோஷமாகச் சத்தமிட்டுச் சிரித்தனர். என் வெட்கப்பட்ட முகம் அவர்களை இன்னமும் சத்தமிட்டுக் கொண்டாட வைத்தது. ஏதோ புதிதாக ஏதோ ஊரிலிருந்து வந்த உறவினர்கள், நான் புதிதாகப் பார்த்து உறவையும் தெரிந்து கொள்ளும் உறவினர்கள் என்று தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

அந்த நாட்களில், 1947 ஆரம்ப மாதங்களில், அவருக்கு வயது 30-35 இருக்க வேண்டும். லாகூரில் இருந்தவர் என்றால் தேவங்குடியிலிருந்து நேராக லாகூரில் வேலை கிடைத்துச் சென்றவரில்லை. எங்கெங்கோ அலைந்து திரிந்து, கடைசியாக லாகூர் சென்றடைந்திருக்க வேண்டும். அவர் நல்ல சாஸ்திரோக்தமான, தெய்வ நம்பிக்கையுள்ள, தன் ஆசாரங்களை விட்டு விடாத மனிதர். லாகூர் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட ஊர். அதோடு இந்து முஸ்லீம் அரசியல் பகைமை தீவிரமாகிக்கொண்டு வந்த காலம். இனி உங்களைக் காப்பாற்ற முடியாது என்று அவரது முஸ்லீம் வீட்டுச் சொந்தக் காரர் கைவிரித்து விட்ட நிலைமை. அந்த காலத்தில் 25,000 ரூபாய் பாங்கிலிருந்து சேர்த்து வைத்ததை எடுக்கமுடியாது குடும்பத்தோடு ஓடி வந்தவர் என்றால், அது பெரிய பணம், பெரிய இழப்பு. அந்த அளவு சேர்க்க எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கும் அவருக்கு, எத்தனை வருடங்களாக அந்த வட இந்தியக் கோடியில் அவர் இருந்திருக்கிறார், ஆசாரம் மிகுந்த ஒரு தஞ்சை கிராமக் குடும்பம். அப்போது அவர் லாகூரில் தன் வாழ்க்கை பற்றிச் சொன்னதிலிருந்து அவரது லாகூர் நாட்கள் மிக சந்தோஷமாகத் தான் கழிந்திருக்கின்றன, கலவரங்கள் தீவிரமடைந்த கட்டம் வரை. லாகூர் அவருக்கு மிகப் பிடித்தமான இடமாகத் தான் இருந்திருக்கிறது. காலை நேரத்தில் மிகப் பெரிய அகலமான வாய்க்கால் கரையோரமாக நடந்து செல்லும் வழக்கம் தந்த சந்தோஷத்தை மிகவும் அனுபவித்துச் சொல்வார் அவர். சங்கீதத்தில் மிக ஈடுபாடு கொண்டவர். நல்ல ருசியான தஞ்சை ஜில்லா சாப்பாட்டில் பிரியம் கொண்டவர். அவரே நன்றாக சமைப்பார். அக்காலத்தில் லாகூர் மிகப் பெரிய நகரம். திரைப்பட மையமும் கூட. பின்னாட்களில் லாகூரைப் பற்றி என் நண்பர்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார்கள். அடிக்கடி லாகூரின் அனார்க்கலி பஜார் அவர்கள் பேச்சுக்களில் அடிபடும். இங்கு தில்லியில் என் அருமை நண்பர், ஷாந்தி ஸாகர் டண்டனுக்கு லாகூர் நண்பர்கள் மிகவும் ஆப்தமானவர்கள். நாங்கள் இருவரும் கூட்டாக ·பில்ம் சொஸைடி திரையிடும் படங்களுக்குப் போகாத நாட்கள் எல்லாம் அந்நாட்களில் கன்னாட் ப்ளேஸின் மையத்தில் இருந்த கா·பி போர்ட் நடத்திக்கொண்டிருந்த கா·பி ஹவுஸில் தன் லாகூர் நண்பர்களுடன் அரட்டை அடிக்க உட்கார்ந்து விடுவார். அவர் என்னவோ கராச்சியிலிருந்து வந்தவர் தான். ஆனால் லாகூர் என்றால் ஒரு கவர்ச்சி. யாராவது புது நண்பரைப் பற்றிப் பேசினால், “வோ பி லாஹ¥ரியா ஹை” (அவரும் லாகூர் காரர் தான்) என்பார். அதைச் சொல்லும்போது அந்தக் குரலில், முகத்தில் அவரது உற்சாகம் ததும்பும். அவர்கள் பேசிக்கொள்வதெல்லாம் லாகூர் வாசிகள் பேசும் பஞ்சாபியில் தான். அதில் பேசுவதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். நானும் அவர்கள் லாஹ¥ரியா பேச்சை உற்சாகத்தோடு ரசித்துக் கொண்டிருப்பேன். இந்த மயக்கத்தை நான் சந்தித்த எல்லா மூத்த வயதுப் பஞ்சாபிகளிடமும் பார்த்திருக்கிறேன். எல்லா லாகூர் பெருமைகளையும் சொல்லிவிட்டுக் கடைசியாக, “ஓ புத்தரூ, தேனு கி பத்தா, ஜின்னே லாகூர் நஹி வேக்யா வோ ஜம்யா நஹி” என்று சொல்லிக் கட கடவென்று சிரிப்பு அலை வெடிக்கும் சத்தமாக. ‘மகனே, உனக்கென்ன தெரியும்! ஒருத்தன் லாகூரைப் பார்க்கவில்லை யென்றால், அவன் பிறக்கவேயில்லை” என்று அர்த்தம் அவர் கலாட்டாவுக்கு. பிறக்கவேயில்லை என்றால், பிரந்தும் ஒரு புண்ணியமுமில்லை என்று அதற்கு இன்னமும் ஒரு பாஷ்யம் சொல்ல வேண்டுm. இந்தப் பஞ்சாபிகளுக்கு சந்தோஷம் தலைக்கேறி விட்டால் அவர்களது அன்பும் பாசமும், வயதை அறியாது. செல்லம் மிகும். எல்லாருமே வயதை மீறி ‘புத்தரு’ ஆகி விடுவார்கள். அல்லது பச்சை பச்சையான வசவுகள் வந்து விழும். எல்லாமே அன்பின் அடையாளங்கள் தான்.

தான் ஒட்ட முடியாது ஒதுங்கியே இருக்க நிர்ப்பந்திகும் சூழலில் இருந்த அத்திம்பேருக்கே அது மிக சந்தோஷமான நாட்களாக இருந்திருக்கிறது. அவர் அவ்வப்போது சொன்ன சம்பாஷணைத் துணுக்குகளிலிருந்து நான் தெரிந்து கொண்டது, அல்லது இப்போது என் நினைவில் தங்கியிருப்பது எல்லாம், அவர் ஒரு சினிமா தியேட்டரிலோ, அல்லது ஒரு சினிமா வினியோகஸ்தரிடமோ அலுவலகப் பொறுப்பில் இருந்தவர் என்பது தான். முஸ்லீம் கலாச்சாரச் சூழலில் இந்தத் தஞ்சைக் கிராம வைதீக மனது எப்படி சமாளித்தது என்பது நான் கேட்கவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை. இருந்தாலும் அவர் தன் தஞ்சை கிராம வைதீக ஆளுமையையும் விட்டுக் கொடுக்காமல் அந்த முஸ்லீம் கலாச்சாரச் சூழலில் சந்தோஷமாகத் தான் வாழ்ந்திருக்கிறார். ஆனால் அவ்வளவையும் சேர்த்த பணம், வாழ்ந்த ஞாபகங்கள் என்று அத்தனையையும் விட்டு விட்டு திரும்ப அந்த நினைவுகளைக் கூடத் திரும்பப் பார்க்கமுடியாது என்று அடியோடு அழித்துவிட்டு வருவதென்றால் மிகப் பெரிய சோகம் தான். அவர் ஒரு விதத்தில் அதிர்ஷ்டக்காரர். அவரை உடனே ஊருக்குத் திரும்பச் சொன்ன முஸ்லீம் நல்ல வழியே காட்டியிருக்கிறார். ஒழுங்காக, உயிர் சேதம், உடல் சேதமின்றி அவரால் வந்துவிடமுடிந்திருக்கிறது. கொஞ்ச நாட்கள் தாமதித்திருந்தால் அவர் நடை பயணமாகத்தான் லாகூரிலிருந்து கிளம்பியிருக்க முடியும். கூட்டத்தோடு கூட்டமாக, ஆயிரக் கணக்கில் வீடு, நிலம், பணம், ஏன் சில சந்தர்ப்பங்களில், சிலர் தம் குழந்தைகளை, வயதானவர்களை, உறவினர்களை இழந்தும் கூட வந்திருக்கின்றனர். பாகிஸ்தான் பிரிவினைக்கு இரண்டு வருஷங்களுக்குப் பிறகு நான் ஹிராகுட் அணைத் திட்டத்தில் வேலைக்குச் சேர்ந்த 1950 மார்ச்சில் அங்கு வேலையில் சேர்ந்திருந்தவர்கள் அனேகர், பஞ்சாபிகள். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்கள். சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்தவர்களும் உண்டு. கேவல் கிஷன் என்று ஒரு எக்ஸிக்யூடிவ் எஞ்சினியர் இருந்தார். அவர் தனி மனிதர். 40 வயதிருக்கும். அவரைப் பற்றிக் கதைகள் சொல்வார்கள். அவரும் கலவரத்தின் போது தப்பி ஓடி வந்தவர். அவர் குடும்பமே அவர் கண் முன்னாலே வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டவர். இப்படி ஒவ்வொருவரும் சொல்ல ஒரு கதை உண்டும். குழந்தை குட்டிகளோடு நடைப் பயணமாக தில்லி வந்து புராணா கிலா (பழைய கோட்டை) யில் அகதிகளாக இருந்தது. ரயில் வண்டிகளில் உள்ளேயும், வண்டிகளின் மேலேயும் அடைத்து நெருங்கி உட்கார்ந்து வரும் காட்சிகளை நான் பின்னர் செய்திப் படங்களில் பார்த்தேன். இன்னும் சில செய்திகள், காட்சிகள் ரத்தம் உறைய வைக்கும். பாகிஸ்தானிலிருந்து தப்பி வரும் அகதிக் கூட்டங்களைச் சுமந்து வரும் ரயில் அம்ரித்சரை அடையும் போது அந்த ரயில் பெட்டிகளில் மக்களின் வெட்டுண்ட மனித உடல்கள் தான் ரத்தக் கிளறியில் சிதறிக் கிடக்குமாம். ரயில் பெட்டிகளின் வெளியே உருது வில் ‘ மர்னா ஹம்சே சீக்கோ” (சாகணுமா, நாங்க சொல்லிகொடுப்போம்) என்று எழுதப் பட்டிருக்குமாம். இந்தக் காட்சிகள் தான் இங்கும் அம்மாதிரியான கொலைகளும், இங்கிருக்கும் முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு விரட்டி அடிப்பதும் நடந்தது என்றார்கள். உயிருக்குப் பயந்த முஸ்லீம்களை, நேரு அரசு தில்லி புராணா கிலாவில் அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்று கேட்டு, மக்கள் வெகுண்டு எழுந்தார்கள் என்றும் செய்திகள் வந்தன. வாழ்க்கை சின்னா பின்னமாகிவிட்ட வேதனையில் பல லக்ஷக்கணக்கில் குடி பெயர்ந்த அந்த மக்கள் கூட்டத்தின் சோகத்தை, அதன் உக்கிரத்தை, நம்மால் சிந்தனையில் கூட அனுபவித்து உணர இயலாது. ஆனால் அந்த நிர்க்கதியிலும் கூட அந்த லக்ஷங்களில் ஒருவர் கூட பிச்சையெடுத்து நான் பார்த்ததில்லை. வாழ்க்கையில் எந்த சோதனையும் தலை நிமிர்ந்து சந்தித்தவர்கள் அவர்கள்.

என் அத்திம்பேர் தன் துக்கங்களை, தன் வேதனையை தன்னுள்ளேயே புதைத்துக்கொண்டவர். அப்படி ஒன்றும் கீதாசார்யன் சொன்ன ‘ஸ்திதப் ப்ரக்ஞன்’ இல்லை அவர். அவர் சுபாவம் அது. சத்தமாக வாய் திறந்து சிரித்தவரில்லை. அசாத்தியமான கிண்டல் அவருக்கு வரப்பிரசாதம் போன்று வந்தது. ஆனால் அவர் சிரிக்க மாட்டார். மெல்லிய ஒரு நமுட்டுச் சிரிப்பு அவர் உதட்டில் தவழும். ஆனால் அது கிண்டலுக்கு ஆளான பிராணியின் கண்களில் படாது. அது போலத் தான், ஒரு நாள் கூட அவரோ அத்தையோ தம் இழப்புக்களைப் பற்றி மனம் வெம்பி, தொண்டை அடைக்கப் பேசியதில்லை. நான் அவர்களது இழப்புக்களின் சோகத்தின் ரூபத்தை, பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக, நான் சந்தித்த மனிதர்களிடமிருந்தும், படிப்பிலிருந்தும் தெரிந்து கொண்டேன். உடையாளூருக்கு அவர் அத்தையோடும் மகனோடும் வந்தபோது அவர் மனத்தில் இருந்தது, அவர்களை தன் பிறந்த ஊரான தேவங்குடியில் விட்டு விட்டு சென்னை சென்று ஏதாவது வேலை தேடவேண்டும் என்பதே.

“ஏண்டா நீ போய்ட்டு வாயேண்டா அத்தையோட தேவங்குடிக்கு, போறையா?” என்றார் என்னிடம். தேவங்குடி எங்கேயிருக்கு, அங்கு யாரை எனக்குத் தெரியும். நான் திகைத்து மௌனமாக யிருந்தேன். அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கொண்டார்கள். “கூடப் போய்ட்டு வாடா. அத்தைக்குத் துணையா. இதிலே என்ன பெரிசா யோஜனை? புது இடம் பாத்த மாதிரியும் இருக்கும்” என்று அவர்களும் சொல்லவே, சரி என்றேன். “அப்ப்ப்பா… வாயத் தொறந்து ‘சரி’ன்னு ஒரு வார்த்தை சொல்றதுக்கு இவ்வளவு கஷ்டப்படறானே, ஏண்டா என்னோட வரப் பிடிக்கலையா, பிடிக்கலைன்னா சொல்லீடுடாப்பா” என்று அத்தையும் கேலி செய்ய ஆரம்பித்து விட்டாள். “பொண்ணாப் பெத்திருந்தேன்னா, கூடக் கூட ஒட்டீண்டு விடமாடான். பிள்ளையான்னா பெத்திண்டிருக்கே, அதான் அவனுக்கு சுவாரஸ்யப்படலே” என்று அம்மா சொல்லவே, வீடே அதிரும்படி எல்லோரும் கொல்லென்று சிரிக்கத் தொடங்கினார்கள். இருந்த இடத்தை விட்டு சேர்த்துவைத்த பணத்தை இழந்து, ஆயிரம் மைல்கள் ஓடி வந்தவர்களின் வேதனையின் சுவடே அங்கிருக்கவில்லை.

கடைசியில், ‘இந்தப் பிள்ளையாண்டானை நம்பி பிரயோஜனமில்லை’ என்று எண்ணினார்களோ என்னவோ, அத்திம்ப்பேரும் தேவங்குடிக்கு வந்தார். நானும் போனேன். தேவங்குடிக்குப் போக முதலில் உடையாளூரிலிருந்து வலங்கிமானுக்கு மாட்டு வண்டியில் போகணும். கப்பி ரோடு தான். வண்டித் தடம் பார்த்து தானாக மாடு போகும். தடம் மாறும் சாத்தியமே இல்லை. அங்கிருந்து மன்னார் குடிக்கு பஸ்ஸில் போய், மன்னார் குடியிலிருந்து ஒரு மாட்டு வண்டி வைத்துக்கொண்டு தான் தேவங்குடி போகமுடியும். திரும்பவும் கப்பி ரோடுதான். மன்னார் குடியிலிருந்து அதிக தூரம் இல்லை. தேவங்குடி எதிரும் புதிருமான இரண்டு சாரிகளில் மொத்தம் பதினைந்து பதினாறு வீடுகளே கொண்ட ஒரு மிகச் சிறிய கிராமம். அத்திம்பேரின் தம்பி அங்கு இருந்தார். அந்த கிராமத்துக் கணக்குப் பிள்ளையாக இருந்தார். அந்த கிராமத்துக் கணக்குப் பிள்ளையாக இருந்தால் என்ன வருமானம் வரும்? எப்படி அவர் ஜீவனம் நடந்தது? அதெல்லாம் இப்போது தான் யோசனை செய்யத் தோன்றுகிறதே ஒழிய அப்போது இந்த நினைப்பெல்லாம் இருக்கவில்லை. அங்கு கழித்த இரண்டு நாட்கள் மிக சந்தோஷமாக, நன்றாக சாப்பிட்டு அவரது இரண்டு குழந்தைகளோடு விளையாடிக் கழிந்தது. பின்னர் தான் அந்த தேவங்குடி கிராமம், எனக்கு மிகவும் பிடித்த தி.ஜானகிராமனின் பூர்வீகம் என்றி தெரிந்தது. புண்ணிய பூமி தான். Stafford-on-Avon-ஐ நம் எல்லோருக்கும் தெரியும். நம்மில் அக்கறை உள்ளவர்கள் இங்கிலாந்து சென்றால், ஷேக்ஸ்பியர் பிறந்த ஊராக்கும் என்று அந்த ஊரைப் போய்ப் பார்க்க தனி பிரயத்தனம் எடுத்துக் கொள்வோம். அந்த ஊரும் இன்னமும் ஷேக்ஸ்பியரின் பிறந்த இடமாக பாதுக்கக்கப்ப்ட்டு வரும். நம்மில் எத்தனை பேருக்கு தி ஜானகிராமனைப் பற்றி இத்தகைய நினைப்புகள் வரும்? தேவங்குடியைப்பற்றி தமிழ் சமூகம் கவலைப்படும்?

வெங்கட் சாமிநாதன்/8.10.08

Series Navigation