நினைவுகளின் தடத்தில் – 16

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

வெங்கட் சாமிநாதன்


ஊரின் ஆரம்பத்தில் ஒரு கோடியில் ஒரு கம்பத்தின் மேல் எரியும் மண் எண்ணைய் விளக்கைத் தவிர ஊரில் இரவு நடமாட்டத்திற்கு வேறு விளக்கே இல்லையென்றால் எப்படி இருந்திருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது, அந்த வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், எப்படி வாழ்க்கை சாத்தியமாகியது என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறது. ஆனால் நான் தான் இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமும் திகைப்பும் அடைகிறேனே தவிர வேறு யாரும், நானே கூட அப்போது ஆச்சரியப்படவில்லை. வாழ்க்கையில் சகஜமான ஒன்றாகத்தான், அது பற்றிய நினைப்பே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கும் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. அப்படி பார்க்கப் போனால், நிலக்கோட்டையிலேயே கூட அப்போது மின்சாரம் வந்துவிடவில்லை. எங்கள் வீட்டுக்கு வெளியே, உடையாளூரில் கண்ட மாதிரி, ஒரு விளக்குக் கம்பமும் மண்ணெண்ணெய் விளக்கும் தான் இருந்தது. மின்சார இணைப்பு வர நிலக்கோட்டை இன்னும் சில வருஷங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. நான் நிலக்கோட்டையை விட்டுப் போவதற்கு ஒன்றிரண்டு வருஷங்களுக்கு முன்னரே மின்சார விளக்குகள் தெருவுக்கு வந்து விட்டன. ஆனால் மாமா இருந்த வீட்டுக்கு இன்னமும் மின்சார இணைப்பு தரப்படவில்லை. இன்னமும் எனக்கு ஞாபகமிருக்கிறது. தினமும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பின், சற்று நேரம் கழித்து அந்தி சாய்வதற்கு முன்னதாகவே அன்றாடம் சிம்னி, ஹரிகேன் விளக்குகளின் கண்ணாடிகளைக் கழற்றி எடுத்து அவற்றில் மண்டியிருக்கும் புகைபோக அலம்பித் துடைத்து, மண் எண்ணெயோ, அல்லது அகல் விளக்குகளுக்கு கடலை எண்ணெயோ ஊற்றி, விளக்கேற்ற தயாராக வைப்பது மாமாவின் வேலைகளில் ஒன்று.

உடையாளூரில் அந்நாட்களில் இரவில் தெருவில் நடமாட, வீடுகளை அடையாளம் காண ஒவ்வொரு வீட்டின் முன் திண்ணைப் பிறையில் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கே போதுமானதாக இருந்திருக்கிறது. உடையாளூர் வீட்டில் ஒரே ஒரு ஹரிகேன் விளக்கு தான் இருந்ததாகப் பார்த்த ஞாபகம். அது தான் அவ்வப்போது தேவைக்கேற்ப வீட்டினுள் ஒவ்வொரு இடத்துக்கும் எடுத்துச் செல்லப்படும்.

எனக்கு அன்று இரவு அந்த கப்பி ரோடில் செய்த மாட்டு வண்டி பிரயாணம் தான், அந்த சூழலும் தனித்து யாருமற்ற இருண்ட வயல் வெளியின் நடுவே போகும் பாதையில் போகும் உணர்வுடன் கூடிய நினைவில் தங்கி இருக்கிறது. பின் இருளில் அந்த ஊருக்குள் நுழைந்தது. எடுத்த உடன் ஊர் தொடங்கும் மேட்டில் ஒரு சின்ன பிள்ளையார் கோயில், அதைத் தொடர்ந்து ஒரே சாரியில் இருந்த நான்காவது அல்லது ஐந்தாவது வீடு. அவ்வளவே. வீட்டின் முன் கட்டு கூடத்தில், கூடத்தை ஒட்டிய தாழ்வாரத்தில் ஹோமம் வளர்த்து அதன் முன் நானும் அப்பாவும் உட்கார்ந்திருந்ததும், வேத மந்திரங்களின் உச்சாடனமே ஒரு கவர்ச்சியாக இருந்ததும் நினைவில் இருக்கிறது. ஒரு கோஷ்டியாக நாலைந்து பேர் சாமவேத மந்திரங்களைச் சொல்லக் கேட்கும் ஆனந்தம் அன்றிலிருந்து தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறார்கள் என்ற அர்த்தம் ஏதும் அன்று புரிந்ததில்லை என்பது ஆச்சரியமில்லை. இன்று வரைக்கும் புரிந்ததுமில்லை. ஆனாலும் கேட்க இனிமையாக இருந்து வருகிறது. அன்று எனக்கு முகம் வீங்கியிருந்ததும், அது பொன்னுக்கு வீங்கி என்று சொன்னார்கள். அம்மா தன் தங்க செயினை என் கழுத்தில் மாட்டிவிட்டாள். அதை ஒரு நாள் பூராவும் போட்டுக்கொண்டிருந்தேன். வேறு ஒன்றும் அந்த உபநயனம் சம்பந்தப்பட்டது நினைவில் இல்லை. நிலக்கோட்டைக்குத் திரும்பியதும் தினம் மூன்று வேளை என்னை சந்தியாவந்தனம், மாத்தியான்னிகம்என்று மாமாவும் உடனிருந்து என்னைச் செய்யவைத்துக் கொண்டிருந்தது இன்னமும் மிகத் தெளிவாகத் திரையோடிக்கொண்டிருக்கிறது.

உடையாளுரில் அப்பா இருந்த வீடு சொந்த வீடு இல்லை. மண் தரை உள்ள வீடு தான். சாணி மெழுகிய தரை. கொஞ்சம் குண்டும் குழியுமாக இருந்தாலும் குளிர்ச்சியான தரை. எல்லா தஞ்சை கிராமத்து வீடுகளைப் போலவே இரண்டு கட்டுக்கள் கொண்ட நாட்டு ஓடு வேய்ந்த வீடு. இதற்கும் முன்னால் நான் இந்த ஊருக்கு, இந்த வீட்டுக்கு வந்திருக்கவேண்டும், ஆனால் எப்போது என்பது தான் நினைவுக்கு வர மறுக்கிறது. ஏனெனில் பல விஷயங்கள் முன்னர் பார்த்ததாக நினைவில் பதிந்திருப்பவை இப்போது இல்லாதிருந்தன. அப்பா வீடு இருந்த சாரியிலேயே நான்கு வீடு தள்ளி இருந்த வீட்டில் சித்தப்பா இருந்தார். சீனு என்று அழைக்கப்பட்ட சீனிவாசன். சித்தப்பாவோடு சித்தியும் பாட்டியும் இருந்தார்கள் அந்த வீட்டில். அந்த வீடு தான் தாத்தா இருந்த வீடு. எங்களுக்குச் சொந்த மான வீடு. எப்போது அப்பா தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வந்தார் என்பது தெரியாது. அப்பாவைப் பெற்ற பாட்டி சித்தப்பா இருந்த வீட்டில் ஒரு ஊஞ்சலில் இரு கால்களையும் நீட்டி உட்கார்ந்து இருந்த படியேதான் எப்போதும் பார்த்திருக்கிறேன். பாட்டி விதவைப் பாட்டி. அந்த வீடு நன்றாக செங்கல் தளம் பாவிய வீடு. நன்றாக கட்டப்பட்ட வீடு. “கொலு வச்சிருக்காடா, சித்தப்பா வாத்திலே பாட்டி கூப்பிடறா பாக்க வரயா?,” என்று அம்மா அழைத்துக்கொண்டு சென்றதும் அங்கு கூடத்தில் ஆறு ஏழு படி அமைத்து கொலுவைத்திருந்ததைப் பார்த்ததும் ஞாபகம் இருக்கிறது. எப்போதோ அந்தப் பாட்டி ஊஞ்சலில் உட்கார்ந்த படியே என்னையும் அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு ‘”பயப்படாதே” என்று சொல்லி ஊஞ்சலை ஆட்டியதும், “இந்தா இதை எடுத்துக்கோ,” என்று என்னவோ பக்ஷணம் தின்னக் கொடுத்ததும், “நீ சாப்பிடு பாட்டி, நான் அப்புறமா சாப்பிடறேன்” என்று நான் சொன்னதாகவும், “அடேயப்பா, பாரேன், இந்த பேரனுக்கு புதுசா பார்த்த பாட்டிகிட்டே எத்தனை கரிசனம்னு! பாட்டி சாப்பிட்டாத்தான் இவனுக்கு உள்ளே இறங்கும் போல இருக்கு! என்னடா சொன்னே “நீ சாப்பிடு பாட்டி” எங்கே இன்னொரு தரம் சொல்லு பாப்பம்!” என்று என்னை எல்லோரும் அடிக்கடி கேலி செய்வது வழக்கமாகியிருந்தது. அந்த பாட்டி இல்லை இப்போது. அந்த வீட்டில் பாட்டியோடு, சீனுவாசன் சித்தப்பா, சித்தியோடு, இருபது இருபத்தைந்து வயதில் இன்னொரு சித்தப்பாவையும் பார்த்த ஞாபகம். அவரை ரங்கண்ணா என்று எல்லோரும் அழைத்ததும் நினைவில் இருக்கிறது. அவரை இப்போது உபநயனத்துக்கு வந்திருந்தபோது பார்க்கவில்லை. ஆனால் இது பற்றியெல்லாம் கேட்கவேண்டும் என்று அப்போது எனக்குத் தோன்ற வில்லை. 1947-48-ல் நான் மதுரையில் ஒருவருஷம் படித்துவிட்டு கும்பகோணத்தில் மேலே படிப்பைத் தொடர்வதற்காக உடையாளூர் வந்த போது தான், அம்மா அவ்வப்போது பழைய கதையெல்லாம் எனக்கு ஒழிந்த வேளைகளில் சொல்வாள். அப்போது தான் நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ரங்கண்ணா ஒரு நாள் காணாமல் போய் விட்டதாகவும், எங்கே போனார், ஏன் போனார், இப்போது எங்கே இருக்கிறார்? என்று யாருக்கும் தெரியவில்லை என்றாள். கொஞ்ச கால கவலைக்குப் பிறகு அதுபற்றி யாரும் நினைப்பதில்லை, இனி பிரயோஜனம் இல்லை என்று, என்றாள். ரங்கண்ணாவுக்கு கொஞ்சம் மனப் பிறழ்வு இருந்தது என்றும் சொன்னாள்.

அந்த வீட்டில் கொல்லைக் கட்டில் ஒரு பசு மாடு கட்டியிருந்ததைப் பார்த்த ஞாபகம். அந்த மாடு இல்லை இப்போது. அப்பா ஒரு சிலேட்டு குச்சியோட, ஒரு ஒண்ணாங்கிளாஸ் பாடப்புத்தகமும் வாங்கி வந்து என்னிடம் கொடுத்து இரண்டு வீடு தள்ளி ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்றார். அவர் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர் என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். அதுவும் ஞாபகம் இருக்கிறது. ஆக, ஒரு வேளை எனக்கு அக்ஷராப்பியாசம் செய்து வைக்கத் தான் மாமா என்னை உடையாளுருக்கு அழைத்து வந்திருந்தாரோ என்னவோ. அது என் ஐந்தாவது வயதில் இருக்க வேண்டும். ஆனால், உடையாளுரில் பார்த்த காட்சிகளும் நடந்த சில விஷயங்களும் தான் நினைவில் இருக்கின்றனவே தவிர, இப்போது என் உபநயனத்தை ஒட்டி உடையாளுருக்கு வந்த பயணம் போல அந்த பழைய பயணம் நினைவில் இல்லை.

அப்போதெல்லாம் உடையாளூரில் ஆரம்பப் பள்ளிக்கூடம் கூட இருந்ததில்லை. ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், தபால் ஆபீஸ் என்று எதற்கெடுத்தாலும், மூன்று மைல் தூரத்தில் இருந்த வலங்கைமானுக்குத் தான் போகவேண்டும். அது தான் உடையாளூருக்கு அருகாமையில் இருந்த வசதிகள். ஊர் முழுதும் ஒரு மேடிட்ட நிலத்தில் அமைந்திருந்தது. நாங்கள் இருந்த தெரு ஒரு சாரி மாத்திரமே வீடுகள் கொண்டது. அதன் கிழக்குக் கோடியிலும் மேற்குக் கோடியிலும் இரு சாரிகளிலும் வீடுகள் கொண்ட இரண்டு தெருக்கள். அவற்றை இணைக்கும், எங்கள் தெருவுக்கு இணையான மற்றொரு தெரு. இவ்வளவு தான் உடையாளுர்ர். மொத்தமே 100 வீடுகளுக்குள் தான் இருக்கும். மேடிட்ட ஊரின் கிழக்குக் கோடியில் ஒரு பழங்கால சிவன் கோவில். 11-ம் நூற்றாண்டுக் கோவில். அதன் கல்வெட்டுக்களில் இருந்து ஒரு பகுதி அச்சிடப்பட்டு கண்ணாடியும் சட்டமும் போட்டு சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும். அது இப்போது இல்லை. என்னவாயிற்று என்று அர்ச்சகருக்கே தெரியாது. மேற்குக் கோடியில் ஒரு கோயில். செல்வமாகாளி அம்மன் கோயில். செல்வ மாகாளி தான் ஊரில் மிகப் பிரசித்தமான தெய்வம். ஊருக்கே குல தெய்வம். ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண் குழந்தைக்காவது அம்மன் பெயர் இடப்பட்டிருக்கும். என் தங்கையின் பெயரே செல்லம் தான். இந்த ஊர் பற்றியும் பிரசித்தி பெற்ற செல்வமாகாளி அம்மன் பற்றியும் உ.வே.சா தன் நினைவு மஞ்சரியிலோ அல்லது எதிலோ எழுதியிருக்கிறார். உடையாளூருக்கு ஒரு பழங்கால பெயர் உண்டு என்று சொல்லி அந்த பெயரையும் அவர் குறித்திருந்தார். அதை நான் தேடித் தேடிப் பார்த்து விட்டேன். எனக்குக் கிடைக்கவில்லை. உடையாளூரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு உ.வே.சா வின் நினைவும் எழும்.

உடையாளுருக்கு அன்று இரவு மாட்டு வண்டியில் ஒரு கப்பி ரோடில் பிரயாணம் செய்ததும், பள்ளியோ, ஆஸ்பத்திரியோ, தபால் வசதியோ எதுவும் அற்று இரவு அரிகேன் விளக்குகளும் அகல் விளக்குகளுமே மஞ்சள் நிற ஓளியை மினுக் மினுக் கென்று வீசிக்கொண்டிருந்ததையும், தங்களுக்கு இந்த வசதி எதுவும் இல்லாதது பற்றி எந்தக் கவலையோ வருத்தமோ இல்லாது, தங்களுக்கு அவையெல்லாம் மறுக்கப்பட்டவை என்று கூட நினையாமல் இந்த வசதிகளோடு வாழும் மக்களின் சந்தோஷங்களோடும், துக்கங்களோடும் வாழ்ந்து உடையாளூர் ஜனங்கள். நினைத்துப் பார்க்க எந்த விசேஷ குறையும் இல்லை. இன்று அது பற்றியெல்லாம் நினைவிலிருந்து எடுத்து எழுதும்போது, உ.வே.சாமிநாத அய்யர், சுவடு தேடி கிராமம் கிராமமாக செய்த மாட்டு வண்டிப் பயணங்களும் ஹரிகேன் விளக்கொளியோ அகல் விளக்கொளியிலோ தான் அந்த பழம் தமிழ்ச்சுவடிகள் அவருக்கு தமிழ் இலக்கியத்தின் மகோன்னதத்தை ஒளி வீசிக் காட்டியது என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது. அந்த பயணங்களும், அந்த உடையாளூர் தினங்களும், ஜனங்களும், என்னை உ.வே.சாவுக்கும் 19-ம் நூற்றாண்டுக்கும் இட்டுச் சென்று அந்த நாள் வாழ்க்கையின் காட்சிகளைக் கோடி காட்டின. 19-ம் நூற்றாண்டு கிராமங்கள், வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று நினைக்கத் தூண்டின.

வெங்கட் சாமிநாதன்/10.1.08

Series Navigation