நிகழ்வின் நிழல்கள்…..

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

சேவியர்


அந்த காகத்தின் கூட்டிற்குள்
காரிருள் நேரத்தில்
சத்தமின்றி வந்து முட்டையிட்டுச் சென்றது
இசைக்குயில் ஒன்று…

முளைதெரியும் வரை
பூமிக்குள் விதைகளில் வித்தியாசமில்லை…
காகத்தின் கதகதப்பில்
குயில் குஞ்சு
முட்டைக்குள் முளைக்கத் துவங்கியது.

மழையில் ஈரமாகிப்போன இறகுகளுடனும்
வெயிலில் கருகிப்போன அலகுடனும்
கருமைக் காகம்
குஞ்சுகளுக்கான காத்திருப்பில் கரைந்து கொண்டிருந்தது.

நாட்கள் உடைந்து போன ஒரு பொழுதில்
முட்டையோட்டுக்கிடையே
சின்னப்பறவைகள் சிறகுலர்த்தத் துவங்கின…
தாய்ப்பாசத்தின் தழுவல்களில்
மெல்ல மெல்ல இமைதிறக்கத் துவங்கின…

ஒட்டுமொத்த கருப்புக் குடும்பமும்
இறகுகளால் சண்டையிட்டு
அலகுகளால் அன்பு பகிர்ந்து
மெல்ல மெல்ல வளரத்துவங்கின…

பொழுதுகளைப் பிளந்த ஓர் பொழுதில்
சுய முகம் தெளிந்த
அந்த சின்னக்குயில் மெல்ல மெல்ல
சாதகம் செய்யத் துவங்கியது…

சிரித்துக் கொண்டிருந்த
தாய்க் காகத்தின் கண்களில் கோபத்தீ…

கூட்டுக்குள் கும்மாளமடித்த
கருப்புச் சகோதரர்கள் கையில் கருப்புக்கொடி…

சுற்றி வளைத்த காகங்கள் மெல்ல
அலகுகளில் கொலைவெறி தேய்த்து
கொத்தத் துவங்கின அந்த மெல்லிசைக் குயிலை…

பறப்பதற்குப் பக்குவப்படாத அந்த
பச்சிளங் குயில்
அங்கங்கள் முழுதும் இரத்தப் பொட்டுக்கள் வாங்கி
மெல்ல மெல்ல சாகத் துவங்கியது…

ஊமையாய் பிறக்காததற்காய்
கடைசியாய் ஒருமுறை கவலைப்பட்டது

Series Navigation