நான் மரணித்து விட்டேன்

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

ரா.கிரிஷ்


போக்குவரத்து நெரிசலில்
தினம் தினம் செத்து பிழைப்பதில் இருந்து
நிரந்தர விடுதலை.
நான் மரணித்து விட்டேன். . .

இயந்திரதனமான வாழ்க்கை
இயற்கை சீரழிவுகள்
எல்லாம் என்னை இனி சீண்டபோவதில்லை
நான் மரணித்து விட்டேன். . .

காதல் இல்லை இனி,
காமம் இல்லை இனி,
இன்பம், துன்பம் எதுவும் இல்லை இனி
நான் மரணித்து விட்டேன். . .

மாதசம்பளத்துக்காய் காத்திருந்து
கிடைத்ததும் கடன்தீர்த்து
காலியாகி போன பார்சுடன் பெருமூச்சுவிடும்
நடுத்தர வாழ்க்கை இல்லை இனி
நான் மரணித்து விட்டேன். . .

ஊழல் அரசியலுக்காய்
ஓட்டு போட்டு கறைபடிந்த கையும்,
கனவில் மட்டும் வந்துபோன அரசாங்க
வேலையும் இல்லை இனி
நான் மரணித்து விட்டேன். . .

Series Navigation

ரா.கிரிஷ்

ரா.கிரிஷ்