நான்காவது கொலை!!! (அத்யாயம் 14)

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

ஜெயமோகன்


அத்யாயம் 14

எழுத்தாளர் சிரித்து , ‘அப்டியா சொல்றீங்க ? வாங்க ‘ என்றார். ‘நானே இப்ப ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன் .ஏற்கனவே கதை பதிமூணு வாரம் வந்தாச்சு , இன்னும் முதல் அத்தியாயமே முடியலை… ‘

பாண்ட் ஸ்தம்பித்து , ‘ பதிமூணு அத்தியாயம் வந்துவிட்டதாக சொன்னார்களே ? ‘

‘ ‘அப்படியா ? அது மார்க்சியர்களும் பெரியாரியர்களும் என்னைப்பத்தி சொல்ற அவதூறுங்க. இப்பதான் முதல் அத்தியாயத்தோட பதிமூணு பகுதிகள் எழுதியிருக்கேன். … ‘

‘நாலாவது கொலையோடு கதை முடிந்துவிடும் என்று பலபேர் ஆவலாக இருக்கிறார்கள் ‘ என்றார் பாண்ட் நெஞ்சடைக்க.

‘அவங்கள்லாம் இலக்கிய நுண்ணுணர்வில்லாத சாமானிய ஆட்கள் சார். நாலுகொலையும் முடிஞ்ச பிறகுதான் கதையே ஆரம்பம். மொத்தம் ஆறாயிரத்து சொச்சம் அத்தியாயம் . ‘

‘இப்போது என்ன சிக்கல் ? ‘

‘அதாவது பிரச்சினை என்னன்னா நம்ம கதையிலே எல்லாருமே துப்பறிகிறவங்க . அவங்களை கொல்ல முடியாது. அதுக்கு பொன்விதி இடம் தாறதில்லை. மிஞ்சியிருக்கிறது இப்ப நாலுபேர். எல்லாம் சோட்டா ஆட்கள். பட்லர் பரமசிவத்தை இப்ப தேர்ந்தெடுத்து வச்சிருக்கேன். ஆனா அவரை எப்படி இதிலே பொருத்தறது, ஒண்ணுமே புரியலை… ‘

‘எதாவது பீலா விடவேண்டியதுதானே ? ‘ ‘

‘அதை ஏற்கனவே எங்காவது கோடி காட்டியிருக்கணும். இப்ப எப்டி சொல்றது ? ‘

‘அப்படி முன்னரே யாரை கோடி காட்டியிருந்தீர்கள் ? ‘ ‘

‘யாருமில்லை. சும்மா அந்தந்த வாரத்திலே என்ன தோணுதோ அதை எழுதுறதுதான் , ஆயிரத்தஞ்ஞூறு வார்த்தை வாரப்ப ஒரு மர்மத்தை சொல்லி தொடரும்னு போட்டுடறது. பலவிஷயங்களை பின்னாடி டெவெலெப் பண்ணலாம்னு விட்டுட்டேன் .உதாரணமா எஸ்பராண்டோ , ஸ்டிக்கர் போட்டு . கறுப்புநாய் ரகசியம் மட்டும் ஒரு வழியா செட்டில் ஆச்சு. பாருங்க மீசையை கடிச்சு கடிச்சு ஒருபக்கம் முழுக்க ஒருமாதிரி ஆயிடிச்சு. இப்ப நீங்க வந்து பேசிட்டிருக்கிறப்பதான் முதல்கொலை ஒரு சோசியர்னு ஞாபகம் வருது .அவரை எதுக்குங்க கொன்னாங்க ? ‘ ‘

‘என்னைக்கேட்டால் ? கொன்றது நீங்கள்… ‘

‘ஆமா. அதுவும் சரிதான். ஆனா அந்த ஆள் யார் ? எப்பிடி செத்தான். ஒரே மர்மமா இருக்கு. ஒண்ணு பண்ரேனே, காவேரித்தண்ணி பத்தி ஐடியா குடுத்து தண்ணி வராமபோன கோபத்திலே ஒத்தன் குத்திட்டான். எப்டி ? ‘ ‘

‘சரி , அப்படியானால் மற்ற கொலைகள் ? ‘

‘ஆமா இல்ல ? என்ன பண்ரதுன்னே தெரியலையே … ஆரம்பத்திலே தலைப்பை குடுத்து தொலைச்சிட்டேன். எல்லாம் இந்த க.சீ.சிவக்குமார் செஞ்ச வேலைங்க . ‘

‘யார் அவன் ,முக்கிய வில்லனா ? நாசகார விஞ்ஞானி ? ‘

‘கோணங்கி மாதிரி ஐதீகமா ஆறதுக்கு இப்ப அப்ரண்டாஸ்ஷிப் எடுத்துக்கிட்டிருக்கான். பெரிய விண்ணன். அவன்தான் சொன்னான், தொடர்கதை எழுதறது சல்லிஸான விஷயம்னு .என்ன கதைன்னு தெரியாமலே தலைப்பு குடுத்திடுவான். ‘கல்கில நான் தொடர்கதை எழுதறதா விளம்பரம் வந்திருக்கு , நல்ல தீமா ஒண்ணு சொல்லு தலைவான் ‘றான் ஒரு நாளைக்கு . அப்டியே எழுதி எல்லாரும் ஆகா ஓகோன்னு சொல்ற மாதிரி பேரும் வாங்கிடறான் . இன்னொரு பத்திரிகையாள நண்பர் சொன்னார் பாலகுமாரனுக்கெல்லாம் அத்தியாயத்தை கேட்டு வாங்கிறப்ப கதைச்சுருக்கத்தை நாமதான் சொல்லி குடுக்கணும்னு. அதையெல்லாம் நம்பி எறங்கிட்டேன். ‘

‘தலைப்பை யோசித்து போட்டிருக்கலாமே ? ‘

‘எல்லாம் விதி . என்ன சொல்றது ? முதலிலே ‘இங்கபார் மச்சானே ‘ ‘ அப்டான்னு தலைப்பை வச்சேன். அப்ப இவ சொன்னா அது சுஜாதாவோட ‘ ‘நில்லுங்கள் ராஜாவே ‘ ‘ மாதிரி இருக்குன்னு. சரீன்னு ‘ ‘ கொலையெடுத்தான் ஒரு சின்னப்பொண்ணுக்கு ‘ அப்டான்னு வச்சேன். அதுமாதிரி ஏற்கனவே வந்திடிச்சுன்னாங்க. ‘ ‘கொலைபாயுதே கண்ணா ‘ ‘ அப்டான்னு வச்சா அதுவும் வந்திரிச்சு. ‘லை ‘யிலே முடியற எல்லா வார்த்தையிலயும் ‘கொ ‘ சேத்து பாத்தா எல்லாமே வந்தாச்சு. சொல்லுங்க என்னங்க பண்ரது ? மண்டை காய்ஞ்சுபோய் ஒரு குன்ஸா இந்த மாதிரி தலைப்பை போட்டுட்டேன் ,இப்ப கதை கந்தலாயிட்டது… பட்லர் விஷயத்திலே என்ன பிரச்சினைன்னா ஒரு பட்லரக் கொல்ல ஜேம்ஸ்பாண்டா… அதுதான் . ஆ!இப்டி பண்னா என்ன ? ‘

‘என்ன, படலர் உண்மையில் பின் லாடனின் மச்சான் ? ‘

‘இல்லீங்க . பட்லர் ஒரு மாறுவேஷம் போட்ட விஞ்ஞானி. அவன் உயிர் அவன் கிட்டே இல்லை. பாண்ட் வேளிமலையிலே ஏறறார் . அங்கே ஏழு சிகரங்களுக்கு அப்பாலே ஏழு நிலையுள்ள ஒரு கட்டிடம் .அதிலே ஏழு வாசல். ஏழிலேயும் ஏழு பூதங்கள் காவல் காக்கிறது. பாண்ட் ஒண்ணொண்ணா சண்டைபோட்டு கொன்னுட்டு உள்ளே போறார் . உள்ள எழு கிளிக்கூடுகள். ஒண்ணுலே ஒரு நீலக்கிளி. அதிலேதான் பட்லர் பரமசிவத்தோட உயிர் இருக்கு . பாண்ட் கிளியை பிடிச்சு அதன் காலை இழுக்கறார் . இங்க டிவி பாத்துட்டிருக்கிற பரமசிவம் காலை உதறிட்டு விழறான் . சிறகை பிடிச்சு பாண்ட் இழுக்கிறப்ப அவன் கையை உதறிட்டு அலறறான், எப்டி ?சூப்பரா இல்லை ? கடசீல பாண்ட் கிளியோட கழுத்தைபிடிச்சு ஒரே அமுக்கு… ‘

‘இதை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேனே ‘

‘சீச்சி , இது ஒரிஜினல்ங்க ‘

‘இல்லை. இதை யாரோ என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘

எழுத்தாளர் சுதி குறைந்து, ‘ சரி. முழுக்க ஒரிஜினல் இல்லை. கொஞ்சம் தழுவல்தான். பட்டும்படாம . பழைய பாகவதர் ருக்மிணிதேவி தழுவல் மாதிரி. ஆனா இது இலக்கியத்திருட்டு இல்லை. ரெண்டுக்கும் வித்தியாசம் உண்டூன்னு வேத சகாய குமார் சொல்றார் ‘

‘தமிழ் எழுத்தாளர்களுக்கு ரொம்ப சகாயம்தான். ‘பாண்ட் பாய்ந்தெழுந்து ‘அய்யோ , இது கொலம்பியா பிக்சர்ஸ் எடுக்கப்போகும் என் அடுத்த படத்தின் கதை! ‘ என்றார்

‘இதுவா ? ‘

‘ நீ பயங்கர கில்லாடி. உனக்கு உளவுப்படை இருக்கிறது. இந்தக்கதைக்கு அவர்கள் இஜட் பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள். கதை வைக்கப்பட்டிருக்கும் இடமெல்லாம் கருப்புப்பன்றிப்படைகள் ரோந்து சுற்றுகின்றன. .. ‘

‘சத்தியமா இல்லை சார், இது என் பையன் என்கிட்டே சொன்னகதை…. ‘

‘என்னை ஏமாற்றாதே. நான் கொல்லும் உரிமை பெற்றவன்.. ‘

‘நானும்தான் ‘ ,எழுத்தாளர் சரேலென பேனாவை உருவினார்

பாண்ட் தளர்ந்து அமர்ந்தார் .

‘சரி .அந்தக் கதையை சொல்லுங்க. நம்ம பையன் எப்டி கண்டுபிடிச்சான்னு கேட்டு பாக்கிறேன் ‘

‘வி. ஐ. அல்பா என்று ஒரு மர்மத்தீவு. அதை செயற்கைகோள் படங்களில் கூட பார்க்க முடியாது. அதை ஆட்சி செய்பவர் பயங்கர விஞ்ஞானியான மாக்ஸோ என்பவர் . அவரிடம் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். அதனிடம் கேட்கிறார். உலகிலேயே அழகான பெண் யார் என்று . அது அமெரிக்க ஜனாதிபதியின் மகளை காட்டுகிறது. கட் . அமெரிக்க ஜனாதிபதி அளிக்கும் விருந்து .பிரிட்டிஷ் கலாச்சார தூதுவராக பாண்ட் அதில் கலந்துகொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதியின் பெண்ணுக்கு பிறந்தநாள் அன்று. அப்போது ராடோ 3X என்ற ரோபோ அங்கே மாறுவேடத்தில் வருகிறது. அழகான ஒரு பெண்ணாக . ‘ ‘

‘ ‘அதை யாருமே தடுக்கலியா ? ‘

‘எப்படி தடுக்க முடியும் ? அவள் நீல நிற ஸ்வெட்டர் போட்டு கையில் ஒரு குளிர்பதனப் பிப்பெட்டும் வைத்திருக்கிறாளே. அவளைக் கண்டதுமே புஷ் ஜகா வாங்கிவிட்டார் . மற்றவர்கள் நெருங்கவேயில்லை. அவள் நேராக போய் ஜனாதிபதி மகளின் ஒப்பனை அறைக்குள் நுழைந்து அவள் மீது ஒரு கதிர்வீச்சை செலுத்துகிறது. அது மெல்வா 333 என்ற அபூர்வமான கதிர் . செல்களிலிருந்து புரோட்டானை கார்பன் டையாக்சைட் மற்றும் வாயுக்களாக மாற்றி வெளியே தள்ளிவிடும் . ஜனாதிபதி மகள் அப்படியே புகைபுகையாக விட்டு சுருங்கி சுருங்கி ஒருஜாண் உயரமுள்ள பெண்ணாகி விடுகிறாள். கோழிக்குஞ்சு கத்துவதுபோல சத்தம் போடுகிறாள். அவளை ஒரு பிளாஸ்கில் எடுத்துக்கொண்டு ராடோ 3X பறக்க முயல, பாண்ட் அவளை பார்த்துவிடுகிறார் .காரணம் அவர் கையில் உள்ள வாட்ச் அன்னிய கதிர்களை அடையாளம் காணும்.பயங்கரச் சண்டை . ராடோ 3X காலி . ஆஃப் ஆவதற்கு முன்னால் அது ‘ மாக்சோ ! வி ஐ அல்பா தீவிலே ‘ என்று முனகுகிறது. அந்த இடத்தை தேடி பாண்ட் மினியேச்சர் ஜனாதிபதிமகளுடன் கிளம்புகிறார்… ‘

‘ஒரு நிமிஷம் , இந்த படத்திலே பாண்டுக்கு தலையிலே ஒரு துண்டு உண்டா ? ‘ ‘

‘அடப்பாவி ! காஸ்ட்யூம் கூட தெரிந்துவைத்திருக்கிறாயா ? ‘ ‘

‘எல்லாம் எமக்கு தெரியும்! ‘ எழுத்தாளர் சொன்னார் ‘படத்தின் தலைப்பு ‘விர்ஜின் ஐலண்ட் ‘ தானே ? ‘ ‘

‘ஆமாம் ‘என்றார் சப்த நாடியும் [அதென்ன ? ] ஒடுங்கிப்போன பாண்ட் கிசுகிசுப்பாக

‘சரி , நான் எப்படிப்பட்டவன் தெரிகிறதல்லவா ? சொல்லு ஏன் இங்கே வந்தாய் ? ‘

‘உங்களை கொல்ல ‘

‘எதற்கு ? ‘

‘ ‘இத்தனை கொலைகளையும் செய்தவர் நீங்கள்தானே ? ‘

‘ஆனால் இன்றுவரை எந்த துப்பறியும் கதாசிரியன் கொலைக்காக கொல்லப்பட்டிருக்கிறான். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் என்பவர் மொத்தம் நாலாயிரம் கொலை செய்திருக்கிறார் … மேலும் ஜேம்ஸ் பாண்ட் கதையில் புதிதாக எதையுமே செய்யக்கூடாது என்பது விதி தெரியுமல்லவா ? ‘ ‘

‘இது என் தனிப்பட்ட திட்டம்.. அதெல்லாம் கதைகள் . நீங்கள் எழுதியது கந்தரகோளம் .இதை முடித்துவைக்காவிட்டால் துப்பறியும் உலகமே ஸ்தம்பித்து போய்விடும். இப்போது உலக அளவில் அறுபதாயிரத்து நாநூற்று எண்பத்தேழு துப்பறியும் கதைகள் அந்தரத்தில் நிற்கின்றன . ‘

‘நல்ல விஷயம்தானே ? ‘

‘அதையெல்லாம் வாசித்த பன்னிரண்டுகோடி மக்கள் அடுத்த இதயத்துடிப்புக்காக காத்திருக்கிறார்கள்… நீங்களானால் இன்னும் விரிவாக எழுதபோகிறீர்கள் ‘

‘எதையுமே மூன்றுதலைமுறை எழுதினால்தான் எனக்கு இலக்கியநயமே வரும். உண்மையிலே இந்த கதையின் மையக்கொலையை துப்பறியப்போகிறவர் சாம்புதான் ‘

‘துப்பறியும் சாம்புவா ? ‘

‘எஸ். சாம்பு அய்யர் .இவரது தந்தையார் சுந்தரமூர்த்தி அய்யரும் ஒரு துப்பறியும் நிபுணர்தான். ‘பொன்மணல்வெளியின் வெண்குரங்குகள் ‘ என்பது அவரது புகழ்பெற்ற கதை. அவரது தந்தைதான் துப்பறியும் சாம்பு என்பவர்… ‘

‘ ‘ யேசுவே ராஜாவே! ‘ பாண்ட் கதறிவிட்டார்.[ஆங்கிலத்தில்தான்]பிறகு ‘ ‘ இனி பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா ‘ என்று சீறி எழுந்து பக்கத்து அறைக்கு ஓடி பையனிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கி வந்து

சரமாரியாக சுட்டார்.

‘சீச்சி கழுநீர்! ‘ என்று எழுத்தாளர் முகத்தை துடைத்தார் . ‘டேய் அஜி , என்னடா பண்னே ? ‘

‘உள்ள தண்ணியே இல்ல அப்பா. அதான் தண்ணி ஊத்தினேன் ‘

‘அதுக்காக கழுநீரையா உடறது ? வந்து பொறந்திருக்கு பார், ஆல்வா எடிசன்மாதிரி….. மன்னிச்சுக்குங்க சார். அவனுக்கு தண்ணித்துப்பாக்கிதான் பழக்கம் ‘

பளுக் பளுக் என்று சத்தம். பாண்ட்தான் விம்மியழுதார்.

‘அழாதீங்க சார். வைகோ அழறது மாதிரி இருக்கு நீங்க அழறதப் பாத்தா . மனசே கலங்கிடறது. இப்ப என்ன ? கதைய நிப்பாட்டணும் அதானே ? ‘

‘ஆமா ‘

‘இது நான் சும்மா ஜாலிக்காக எழுதினது. காலச்சுவடிலே ரொம்ப அவதூறு பண்ணி நோகடிச்சுட்டங்க. அதான் எழுதினேன். அவங்க பண்ன தப்புக்கு உங்களை இம்சை பண்ரது தப்புதான். மிச்ச அத்தியாயத்தையெல்லாம் அவங்களுக்கே இ மெயில் பண்ணிடறேன். ‘

‘நீங்கள் தெய்வம் சார் ‘ பாண்ட் உணர்ச்சிவசப்பட்டு கைகளை பற்றிக் கொண்டார்.

‘பரவாயில்லை. ‘

‘ஆனா நாலாவது கொலை ? ‘

‘யோசிச்சு பாருங்க இதிலே முக்கிய குற்றவாளி யார் ? திண்ணை ஆசிரியர் . எவனோ எழுதி தந்தான்னா இவங்க போடுடறதா ? கேள்விமுறை இல்லியா ? இப்டியே இதை விட்டுடறதா ? ‘ ‘

‘பாவம் சார் ‘ என்றார் பாண்ட்

‘ஒரு பாவமும் இல்லை. அவங்க போடற கவிதைக்காக அவங்களை வாராவாரம் நாலுமுறை கொன்னாலும் நியாயம்தான் ‘

‘உண்மை ‘என்றார் பாண்ட் கொலை வெறியுடன்

‘ஒழிச்சுகட்டுங்க சார் .ஆனா அந்த ஆளை எப்டி கண்டுபிடிப்பீங்க ? பீனல்கோடு கூட இல்லாத சைபர் உலகம்… ‘

‘ இருப்பதிலேயே புதிய தொழில்நுட்பம் பாண்ட் கைவசம் என்பது விதி தெரியாதா ? ‘ ‘ பாண்ட் சொன்னார். கணிப்பொறியில் மின்னஞ்சலை திறந்து editor@thinnai.com என அடித்தார். கோப்பு இணைப்பை திறந்த பிறகு ஒரு சிறு ஊசியை எடுத்தார் .

‘என்னது இது ? ‘ ‘

‘வைரஸ் . இணைப்பிலே அனுப்பப் போறேன் ‘

‘அதுக்குள்ள ஏதாவது மைக்ரோ சிப் இருக்கா ? ‘

‘இது உண்மையான HIV வைரஸ். புது தொழில்நுட்பம். ஒழியுங்கடா ‘ என்று பாண்ட் SEND ஐ அமுக்கினார்.

‘ ‘பிரமாதம் ‘என்றார் எழுத்தாளர்.

‘அப்படியானால் நான் வருகிறேன், என் அடையாள வில்லையை தரமுடியுமா ? ‘

‘பாப்பா எங்கேடா ? ‘

‘அப்பா பாப்பா ஃப்ரிட்ஜ் பக்கத்திலே உக்காந்திருக்கு ‘

‘முழிக்கிறாளா ? ‘

‘ஆமாப்பா ‘

‘போச்சுடா . சார் , எங்க பாப்பா அவளுக்கு பிடிச்சதை எடுத்து பதுக்கிட்டான்னா அங்கதான் உக்காந்து முழிப்பா. அப்புறம் அவளை பேச வைக்க யாராலயுமே முடியாது. உங்க கிட்டே ஏதாவது புதிசா தொழில்நுட்பம் இருக்குமா ? ‘

‘இல்லையே .சார் என் வேலை போய்விடும்சார் .. ‘

‘இருங்க .ஒரு வழி இருக்கு.. டேய் நாம அன்னைக்கு தொலைச்ச பாஸ்புக்கை தேடுடா ‘

‘சார், என் அடையாள வில்லை ? ‘

‘இருங்க சார். இங்க முன்னாடி தொலைஞ்ச வேற எதையாச்சும் தேடினாத்தான் இது கிடைக்கும் . ‘

பாஸ் புத்தகம் கிடைக்கவில்லை .ஒரு பேனா, இரண்டு உடைந்த பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் வில்லை கிடைத்தது .

‘பாத்தீங்களா சார் ? போயிட்டு வாங்க ‘

‘இங்க ஜாக் ஃப்ரூட் எங்கே கிடைக்கும் ? ‘

‘வடசேரி மார்க்கெட் பஸ் ஸ்டாண்ட் பக்கம்தான் சார் . ‘

பாண்ட் எட்டிப்பார்த்தார் ‘நாய் ? ‘ என்றார்

‘அது இனிமே மூணுநாள் கழிச்சுதான் வரும். வந்திரிச்சுன்னா நாமளே கண்டுபிடிக்கிறவரை மூச்சு காட்டாது. நீங்க போங்க ‘

பாண்ட் இறங்க் போனார் . ‘மாமா டாட்டா ‘ என்றது பாப்பா .

தெரு முனையில் குமரேசன் குழுவினரின் சேர்ந்திசை கேட்டது. ‘அய்யோ நாய்! காப்பாத்துங்க! ‘என்ற தீனக்குரலும்.

[முற்றும்]

***

Series Navigation