நாட்டு நடப்பு

This entry is part [part not set] of 15 in the series 20010707_Issue

பசுபதி


நட்ட நடுநிசிக் காட்சி — சன
நாயக நற்றமிழ் நாட்டிற்கு வீழ்ச்சி !

பண்பற்ற செய்கையின் உச்சம் — இந்தப்
. . பழிவாங்கும் போக்கோ அரசியல் துச்சம்;
கண்ணியம் உள்கட்டுப் பாடு — கடமை
. . காற்றில் பறந்தது நம்வெட்கக் கேடு.

அதிகாரம் என்பதோர் போதை -எல்லை
. . அதிகமாய் மீறினால் ஆபத்துப் பாதை;
முதிராத ஆட்சியின் காதை — அதில்
. . முறைகேடு கண்டால் உடலுக்குள் ஊதை*.

மனிதர்க்கு வேண்டும் உரிமை — அதை
. . மதியாத ஆட்சியில் ஏது பெருமை;
பணிவுள்ள சட்டக்கண் டிப்பு — இதைப்
. . பயிலாத ஆட்சிக்(கு) இருக்கும் இழப்பு.

மக்கள் கொடுத்திடும் வாக்கு — அதை
. . மதித்து நடப்பது கற்றவர் போக்கு;
வக்கிர புத்தியோர் சீக்கு — வாய்மை
. . வைத்தியம் செய்து களைகளை நீக்கு.

கள்ளப் பணத்தின் புழக்கம் — இதைக்
. . காப்பது தொண்டரின் கெட்ட பழக்கம்;
குள்ள மனத்தின் அழுக்கு — இதைக்
. . கொய்யாது போனாலோ நாட்டிற்(கு) இழுக்கு.

*ஊதை=குளிர்க் காற்று.

Series Navigation