நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

வெங்கட் சாமிநாதன்


சாகித்ய அகாடமி தமிழ் இலக்கியத்துக்கான இவ்வருட பரிசை நாஞ்சில் நாடனுக்கு வழங்கப் போவதாக செய்தி வந்துள்ளது.; நாஞ்சில் நாடனுக்கு நம் வாழ்த்துக்கள். அவர் இதற்குத் தகுதி பெற்றவர் தான். ஆனால் அப்படிக் கருதித் தான் சாகித்ய அகாடமி வழங்கியுள்ளதா என்பது எனக்குத் தெரியாது.

எனக்குத் தெரிந்த வரையில், எனக்கு அதன் கண்விழித்த காலத்திலிருந்து தெரியும். அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. தமிழைப் பொருத்த வரையில். அகாடமி என்று நான் சொல்லும் போது நான் அதன் தமிழ் அவதாரத்தை மாத்திரம் தான் குறிப்பிடுகிறேன். எதாக இருந்தாலும், சினிமாவோ, உருளைக் கிழங்கோ, அரசியலோ, இல்லை மொழிப் பற்றோ, ஜனநாயகமோ, இல்லை பச்சை மிளகாயோ தான், நாம் நம் மண்ணுக்கேற்றவாறு தான் நம் ருசிக்கும் ஜீரண சக்திக்கும் ஏற்றவாறு தான் மாற்று ரூபங்களில் வடிவமைத்து பயன்படுத்திக்கொள்கிறோம். அது எங்கிருந்து வந்ததோ அங்கே இருந்தபடியே அப்படியே காப்பியடித்து நாம் இங்கும் வைத்துக்கொண்டிருக்கமுடியுமா என்ன? நம்ம மண், நம்ம பண்பாடு எல்லாம் வேறே இல்லையா? நமக்கு என்று சுயசிந்தனை கிடையாதா? நாம் முயற்சி எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். அது தானாகவே அது நம் சௌகரியத்துக்கு, அதை பயிர் செய்ய, கையாள வந்தவர்களால் மாற்றிக்கொள்ளும்.

ஆக தமிழ் சாஹித்ய அகாடமிக்கும் இலக்கியத்துக்கும் ஏதும் சம்பந்தம் கிடையாது. அதை மற்ற இடங்களின் செயல்பாட்டோடோ அல்லது தில்லி சாஹித்ய அகாடமியின் செயல்பாட்டோடோ, அல்லது எழுதி வைக்கப்பட்டுள்ள விதி முறைகளுடனோ சம்பந்தப் படுத்தக் கூடாது.

அதனால் தான் 1955-ம் வருட முதல் சாகித்ய அகாடமி பரிசை தமிழ் ஆலோசனைக் குழூவின் தலைவர் ரா.பி. சேதுப் பிள்ளைக்கே வழங்க வேண்டி வந்தது. இந்த வினை முற்று சரியில்லை என்றால், வழங்கியது, வழங்கிக் கொண்டார் என்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி வாசித்துக் கொள்ளலாம். தான் சமைத்த உணவை முதலில் தானே சுவைத்துப் பார்த்து விட்டு பிறகு தானே மற்றவர்களுக்கு படைப்பது வழக்கமும் முறையுமாகும்? முதல் கோணல் முற்றும் கோணல் என்று சிலர் சொல்லக் கூடும். பிள்ளையார் சுழி போட்ட முகூர்த்தமே சரியில்லை என்று இன்னம் சிலர் வேறு வார்த்தைகளில் சொல்லக் கூடும். ஆலோசனைக் குழுவில் இருப்பவர்கள் என்ன பாபம் செய்தார்கள்? அது ஒரு குற்றமா என்ன? அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்?

சோவியத் லாண்ட் பரிசுத் தேர்வுக்குழுவில் இருந்து கொண்டு நான் பரிசு பெறுவது சரியல்ல என்று ஒரு சமயம் க்வாஜா அஹ்மத் அப்பாஸ் தன்க்களிக்கப்பட்டதை நிராகரித்தார். சரி.அதுக்காக?. அது ஒரு காலம். அது வேற்று மண்ணைப், பண்பாட்டைச் சேர்ந்த விவகாரம். அதை நாம் காப்பி அடிக்க முடியுமா என்ன?

நிஜமாகவே இப்படித்தான் கி.வா.ஜகன்னாதன் கேட்டார். “நாங்கள் என்ன பாபம் செய்தோம்” என்று. ஆனாலும், தொடர்ந்து ஆலோசனைக் குழுவில் இருப்பவர்களே தமக்குள் பரிசை வழங்கிக்கொள்வது, ஏதோ கம்பெனி பங்குதாரர்கள் லாபத்தைத் தமக்குள் பகிர்ந்துகொள்வது போல் இல்லையா? மிக உயர்ந்த சிந்தனை தான். தாம் இருக்குமிடத்திலிருந்து நம்மை நாம் அன்னியப்படுத்திக்கொள்ளக் கூடாது. நம்மதே போல அதையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையா? நாம் உபசரிப்பதில்லையா, “இதை உங்க வீடு போல நினைச்சுக்கங்க.. சங்கோஜமே இல்லாமே உங்க இஷடம் போல இருந்துக்கலாம்” அப்படித்தான் சங்கோஜமே படாமே இருந்திருக்காங்க, ரா.பி.சேதுப்பிள்ளை தொடக்கம் இன்று வரை.

உண்மையில் ஆலோசனைக் குழு ஒரு பரிசுத் தேர்வுக் குழுவே இல்லை. ஆலோசனைக் குழு அகாடமியின் மற்ற பொறுப்புக்களுக்குத் தான் ஆலோசனை சொல்லும். பரிசு அளிப்பது அதில் இல்லை. அதற்கான சாகித்ய அகாடமியின் விதிமுறைகளைப் பார்த்தால் அங்கு ஆலோசனைக் குழுவுக்கு இடமே இல்லை. ஆனால் அப்படித்தான் ரா.பி.சேதுப்பிள்ளை காலத்திலிருந்து தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருகிறது. ஆலோசனைக் குழுவில் இருப்பவர்கள் எல்லோருக்கும் பரிசு கிடைத்துவிட்டது என்றால் பின் அவரவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரப்பட்டது. இது எப்படி நிகழ்கிறது என்பதே ஒரு புதிர் தான். ஆனால் அப்படித்தான் ஒரு மாயா ஜாலம் நடக்கிறது. தலையிலிருந்து தொப்பியை எடுத்தால்
புறா பறக்கிறது. இல்லையா? அது எப்படி என்று நீங்கள் கேட்டால் பி.ஸி. சொர்கார் சொல்ல மாட்டார். ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் சொல்ல மாட்டார்கள். சொல்லி விட்டால் மந்திரம் பலிக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறோமே நாம்.

இல்லையெனில் பரிசு பெற்றவர்கள் பெரும்பாலோர் ஆலோசனைக்குழுவினராகவே இருந்தது எப்படி நிகழ்ந்தது. தனக்கு மிஞ்சித் தானே தர்மம் என்பது தமிழ் உலகம் அறிந்த பொது வழக்கு.இதை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போனால் கூட அது செல்லாது. இந்திய குற்றவியல் சட்டமே பேசாமல் ஒத்துக்கொள்ளும் தர்மம் இது. இலக்கியம் இதில் பலவீனமான சக்தி. ஆதலால், ஆலோசனைக் குழுவினர் எல்லோருமே தமக்குள் முறைவைத்து பரிசை பகிர்ந்துகொண்டது போக, இனி பரிசு பெற பாக்கி எவரும் இல்லையென்ற கட்டம் வந்ததும், குழுவினர் தம் அடியார் கூட்டத்திற்கு பரிசு கொடுக்க எண்ணி, அப்படித்தான் ராஜாஜி, மு.வரதராசனார், அகிலனார், சிதம்பர ரகுநாதனார் தம் அடியார்கள் ஒவ்வொருவருக்குமாக (எத்தனை பேரைத்தான் பட்டியலிடுவது?) பரிசுப் பிரசாதங்களை வழங்கத் தொடங்கினர். சரி, இந்தப் பட்டியலில் லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், க.நா.சுப்பிரமணியம் போன்றோருக்கும் கிடைத்ததே என்றால், அது உறுப்பினர் சிலரின் நெஞ்சு உறுத்தலுக்கும் பக்திக்கும் அடையாளம் என்றறிக. நா.பார்த்தசாரதிக்கு, அகாடமியில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த அவலம் ஒரு கட்டத்தில் சகிக்க முடியாது போக, இதற்கு கழுவாய் தேடி சாகித்ய அகாடமிக்கு சாப விமோசனம் பெறத் துடித்ததன் விளைவு தான் தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், க.நா.சுப்பிரமணியம் போன்றோர் நா.பா.வின் முயற்சியில் பரிசுக்குரியவரானார்கள். இவையும் நியாயமான, விதிகளுக்குட் பட்ட இலக்கியத் தேர்வு இல்லை. முன்னர் குழுத் தலைவர்கள் கடைப்பிடித்த தமிழ் மரபு தான். தமக்கும் தமக்கு வேண்டியவர் களுக்கும் பரிசு பெற்றுத் தரும் மரபும். ஒரு முறை நா.பா. இந்திரா பார்த்தசாரதியிடம், “உமக்கு இந்த வருஷம் பரிசு கொடுக்கலாம் என்றால், ஒருத்தர் மாத்திரம் மசிய மாட்டேன் என்கிறார். நீர் அவரை ரொம்பவும் கேலி செய்திருக்கிறீராம். அவரை எப்படிச் சமாதானப் படுத்துவீரோ தெரியாது. செய்யும் அது உம் பொறுப்பு. அதைச் செய்தீரோ, பரிசு உமக்குத் தான்.” என்று அறிவுரை கூற, இ.பா.வும். அந்த மசிய மறுத்த உறுப்பினரை மசிய வைக்க ஆவன செய்ய, இ.பா.வுக்கு பரிசு கிடைத்தது. நா.பா.வின் இந்த பாச்சாவெல்லாம் ஒரே ஒருவரிடம் பலிக்கவில்லை. “ஏதாவது புத்தகம் இந்த வருடத்துக்குள் கொண்டு வந்துவிடுங்கள். எப்படியாவது உங்களுக்குப் பரிசு கொடுத்தாகணும்” என்று செல்லப்பாவிடம் நா.பா.எவ்வளவு மன்றாடியும் செல்லப்பாவின் பிடிவாதம் தளரவில்லை. நண்பர்களிடம் எல்லாம் சொல்லிப் பார்த்தார் நா. பா, .”நீங்களாவது சொல்லிப்பாருங்களேன். நான் சொல்லி அவர் கேட்பவராயில்லை” என்று. ஆனால், செல்லப்பாவின் பிடிவாதம் உலகம் அறிந்தது. அவர் அந்த பிடிவாதத்தோடுதான் வாழ்ந்தார். மறையும் வரை. 50,000 ரூபாய் பரிசுக்கு அதற்கு மேலும் செலவு செய்து லாபி செய்தவர்கள் இருக்கும் உலகில்தான் அவரும் வாழ்ந்தார்.

இது வரை முற்போக்குகள் காலம். முற்போக்குகள் அனைவருக்கும் கொடுத்தாயிற்று போலிருக்கிறது. வேறு யாரும் கண்ணில் படவில்லையோ என்னவோ. முற்போக்குகள் அனைவருக்கும் நிறமாற்றம் அவ்வப்போது சந்தர்ப்பத்திற் கேற்றவாறு நிகழ்வதுண்டு. இது முற்போக்குச் சிகப்பா, இல்லை, கழகக் கறுப்பா என்று நமக்கு நிதானிப்பது கஷ்டம். ஆனால், கறுப்புகளினிடையே அது கறுப்பாகும். சிகப்புகளினிடையே சிகப்பாகத் தோற்றம் தரும். முற்போக்குகள் காலத்தில் அவர்கள் கவனிக்கப் பட்டார்கள். வானம்பாடிகள் ஒவ்வொருவராகக் கவனிக்கப்பட்டார்கள். அத்தோழமை தொடர்ந்தது.

ஆச்சரியமாக இருக்கும். நம்புவது கஷ்டமாக இருக்கும். இல்லையெனில், சுந்தர ராமசாமி பெயர் இடம் பெற்றிருந்த கடைசிப் பட்டியலில், அவர் எப்படி ஒதுக்கப் பட்டார்?, தி.க.சிவசங்கரனின், அவரதேயான விமர்சனக் கட்டுரைகள் எப்படி பரிசுக்குரியதாகியது? பின் எப்படி ஆலோசனைக்குழுத் தலைவர், (இவர் வானம்பாடிக்காரர்), கழக பாஷையில் “பின் என்னய்யா பாப்பானுக்கு கொடுக்கணும்கறீங்களா?” இந்தக் கேள்வி பதிலையே வேண்டாத கேள்வி. தன்னிலேயே தன் சாட்சியத்தை, நியாயத்தைக் கொண்டுள்ள கேள்வி. Self evident truth.
”இன்னுமொரு பொதுவான அளவு கோள் வாய் வார்த்தையாக சொல்லப்பட்டதாகக் கேள்விப் படுகிறேன். “பாப்பான் யாரும் இல்லாம பாத்துக்கங்க..” இது அரசியல் அதிகார மையங்களிலிருந்து தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்றுள்ள தமிழ் நாட்டு சூழலில், இது சொல்லப்படவேண்டிய அவசியமே இல்லை. தாக்கீது ஏதும் தரப்படாமலேயே அனுசரிக்கப் படும் விதி இது.

முன்னரே சொன்னபடி, இது நம்பக் கஷ்டமாக சில அப்பாவி பிராணிகளுக்கு இருக்கக் கூடும். தற்செயலாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரருடன் ஒரு டீக்கடையில் சந்திப்பு நேர்ந்தது. இதை நானும் எதிர்ப்பார்க்கவில்லை. அவரும் எதிர்பார்க்கவில்லை. என்னை மிகவும் மதிப்பதாக அவர் சொன்னார். “இப்படி முற்போக்குகள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். நேர் சந்திப்புகளில் தான் இதைச் சொல்கிறீர்கள். பொதுவிலோ தி.க.சிவசங்கரன் தான் உங்களுக்காகப் பேசுகிறவர்”” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, “இதையெல்லாம் நீங்க சீரியஸா எடுத்துக்கொண்டு பெரிசு படுத்தக் கூடாது” என்றார். இது தான் சங்கடம். தனிப்பட்ட அபிப்ராயங்கள் வேறு. பொதுமேடையில் சொல்வது வேறு. சரி. விஷயத்துக்கு வருவோம்.

பரிசுக்குத் தேர்ந்தெடுப்பதன் விதி முறைகள் பற்றிச் சொல்கிறேன். அந்தந்த மொழியில் புகழ பெற்ற பண்டிதர்கள், விமர்சகர்கள் எழுத்தாளர்கள் நூறு பேரிடம் அவர்கள் பரிசுக்குத் தகுந்த நூலை சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பின் அவை தொகுக்கப்பட்டு அத்தொகுப்பில் ஒரே ஒரு நூலை மாத்திரம் தேர்ந்து சொல்லும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படி அவர்கள் குறிப்பிடும் நூலகளின் சிபாரிசுகளின் எண்ணிக்கையில் வரிசைப் படுத்தப்பட்டு வேறு மூன்று நிபுணர்களுக்கு அனுப்பப் படுகிறது. அவர்கள் கூட்டாக தேர்ந்தெடுக்கும் நூல் பரிசு பெறுகிறது. இந்த நடைமுறை அத்தனையும் ஒவ்வொரு கட்டத்திலும் ரகசியமாகவே நடக்கிறது. என்று சொல்கிறார்கள்.

இந்த விதிமுறைகள் எதனோடும் எனக்கு ஏதும் முரண் இல்லை எந்த நூல் யாரால் என்ன காரணத்தால் தேர்வு செய்யப்பட்டது என்பதன் ரகசியம் காக்கப்படுவதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. எல்லாம் சரி. ஆனால் இந்த விதிமுறைகள் ஒழுங்காக பின் பற்றப் பட்டதன் விளைவாகத்தான் ஆலோசனைக் குழு உறுப்பினர்களே ஒரு கட்டத்திலும், பின் அவர்களுக்கு வேண்டியவர்கள் அடுத்த கட்டத்திலும், பரிசுக்குரியவர்களானது எப்படி? மேற்கூறிய விதி முறைகளில் ஆலோசனைக் குழு எங்கு இடம் பெறுகிறார்கள்.? இல்லை. பின் அவர்கள். எப்படி முறை வைத்து எடுத்துக்கொண்டார்கள்? இந்த விதிமுறைகளின் படி தான் ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம் என்னும் புத்தகம் 1955 வரைய காலகட்டத்தில் சிறந்த நூல என்றார்களா? நியாயமாக விதிமுறைகள் பின்பற்றப் பட்டிருந்தால் அந்த வருடம் முதல் பரிசே கல்கிக்குத்தான் கிடைத்திருக்கும். அது இலக்கியத் தேர்வு என்று நான் சொல்லவில்லை. ஆனால், கல்கி அத்தகைய பிரபல, சக்தி வாய்ந்த, எல்லா மட்டத்திலும் புகழ் பெற்றிருந்தவர். மேலும் அவர் சில ஆண்டுகள் முன்பு 1954 அல்லது 1955-ல் தான் காலமாகியிருந்தார். அந்த இழப்பு வேறு தேர்வைப் பாதித்திருக்கும். ஆலோசனைக் குழுவில் இருந்த ராஜாஜி சிபாரிசு பண்ணவேண்டியிருந்திராது. அதுவும் கல்கியின் மறைவு காரணமாக பாதியில் விட்ட நாவல் அலையோசையாக இருந்திராது..

விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், பாரதி தாசனின் கவிதைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு பிசிராந்தையார் என்னும் அவர் நாடகத்துக்கா தமிழ் மேதைகள் உலகம் பரிசு தந்திருக்கும்? பாரதிதாசன் அந்த சமயம் உயிரோடிருப்பாராயின் என்ன வார்த்தைகளால் அவர் அகாடமிக்காரர்களை அர்ச்சித்திருப்பார் என்று நினைத்துப் பார்த்தால், பயங்கரமாக இருக்கும். அந்த வார்த்தைகள் கவிதையாக இருந்திராது என்பது நிச்சயம். கண்ணதாசனின் கவிதைகள், பாட்டுக்களையெல்லாம் ஒதுக்கி விட்டு அவரது நாவலுக்கா (பெயர் மறந்துவிட்டது) பரிசு தந்திருக்கும்? தி.ஜானகி ராமனின் மோகமுள்ளை ஒதுக்கிவிட்டு சக்தி வைத்தியம் புத்தகத்துக்கா தந்திருக்கும்.? லா.ச.ராமா மிர்தத்தின் சிந்தா நதி க்கா தந்திருக்கும்? க.நா.சுப்ரமண்யத்தின் ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் புத்தகத்தையா தேர்ந்திருக்கும்? வைரமுத்துவின் கவிதைகளையெல்லாம் அலட்சியம் செய்து கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலையா பரிசுக்கு தேர்ந்தெடுக்கும்? பாலகுமாரன் கண்ணெதிரே இருக்கும் போது அவர்கள் எழில் முதல்வனும், தி.க. சிவசங்கரனும், புவியரசும், சிற்பியும், எங்கே என்றா தேடிப் போவார்கள்?.

எப்படி நேர்ந்தது.? ஆலோசனைக் குழுவினர் அந்த வருஷத்துக்கான பரிசு யாருக்கு எனத் தேர்ந்தெடுத்தாயிற்று. அதற்கு உதவ, அப்போது வெளிவந்த புத்தகம் என்னவோ அதற்குக் கொடுத்தால் ஆச்சு, கதை முடிந்தது. இது சிறந்த இலக்கியத் தேர்வு இல்லை. குழு தேர்ந்தெடுத்தவருக்கு அளிக்கப் படும் கௌரவம். க.நா.சுவை, லா.ச.ராமாமிர்தத்தை, தி.ஜானகி ராமனை கௌரவித்தார்கள். செய்த பாபத்திற்கு விமோசனம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இடையில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கல்கி, பாரதிதாசன், கு.அழகிரிசாமி, கண்ணதாசன், ஆதவன், சி.சு.செல்லப்பாவெல்லாம் அவர்கள் உயிரோடு இருந்த வரை அகாடமியின் கண்களுக்குத் தெரியாமலே போனார்கள். இறந்த பிறகு உடனுக்குடன் இறுதி மரியாதையாக, கிடைத்த புத்தகத்துக்கு பரிசு கொடுத்தது அகாடமி. கொடுத்தது இலக்கியப் பரிசு அல்ல. இறுதி மரியாதை.

ஆக, இப்படி 1955- பிறந்து இன்று வரை, 2009 வரை இப்படியே வளர்ந்து விட்ட ஒன்று திடீரென இலக்கிய ஞான ஒளி பெற்று நாஞ்சில் நாடனுக்கு பரிசு கொடுக்கத் தேர்ந்துள்ளது என்றால் அதை நம்பமுடிகிறா? ஆச்சரியமாக இல்லையா?. விதிமுறைப்படி யென்றால், நிபுணர்கள் தேடித் தேர்ந்தது என்றாலும், சரி, அல்லது வழக்கம் போல ஆலோசனைக் குழுவினர் தேர்ந்தது என்றாலும் சரி, எந்தக் கணக்குக்கும் இது ஒத்து வர மறுக்கிறது. சரி, விதி முறைகள் பின்பற்றப்பட்டது என்றால் (அதை நான் நம்பவில்லை), ஆலோசனைக் குழுவினர் தேர்ந்தது என்றால், அல்லது இரண்டு தரப்புமே இன்றைய அதிகாரச் சூழலின்,கட்சி இலக்கியச் சூழலின் பாதிப்புக்கு உள்ளாகி, தேர்ந்தெடுத்தது என்றால், அப்போது அந்த[ப் பட்டியலில் இடம் பெறக்கூடியவர்கள் அனேகர். இன்றைய அரசியலில் தம்மை ஐக்கியமாக்கிக் கொண்டுள்ள கனி மொழி, சல்மா, தமிழச்சி தங்க பாண்டியன், , இளைய பாரதி, என்ற வரிசையிலும், பின்னர் ரவிகுமார், இமையம் (இமையம் எழுத்தை அவர் சார்ந்திருக்கும் கட்சியில் யாரும் படித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான், படித்திருந்தால் அவரையம் “நம்மாளுதான்” என்று ஏற்றுக்கொண்டிருப்பார்களா என்பதும் சந்தேகம் தான்) பின், எமது காலத்தின் மூத்த தமிழ் எழுத்தாளர் கலைஞருக்கு தன் நாவலைச் சமர்ப்பித்திருக்கும் தமிழ்ச் செல்வி, வாசற்படியில் நின்றுகொண்டு உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் மனுஷ்ய புத்திரன், அப்பா, எததனை பேருக்குக் கொடுக்கவேண்டி யிருக்கிறது!. இதையெல்லாம் விட்டு நாஞ்சில் நாடன் தான் கண்ணில் பட்டார் என்றால்…..

நமக்கு சந்தோஷம் தான். ஆனால் நாஞ்சில் நாடன் ஒரே ஒரு கணக்கில் தான் ஒத்து வருகிறார். சொல்லாத விதிமுறைக்கேற்ப அவர் “பாப்பான் இல்லை” அது வரைக்கு சரி. ஆனால் அவர் பாப்பானீய அடிவருடி என்ற லேபிளில் அடைபடுவார் போலிருக் கிறதே

நாஞ்சில் நாடன் என்று தன்னை அடையாளப் படுத்திக்கொள்பவர், மனுஷன் அந்த ஒன்றரை இலாக்கா மண்ணை விட்டு நகர்வதில்லை. பம்பாய் போனாலும் சரி. அதை விட்டு வந்த பிறகு தான் மிதவை என்னும் நாவலில் தான் பம்பாய்க்கு பிழைப்பு தேடிப் போன அனுபவத்தைச் சொல்கிறார். அங்கும் சரி, பின்னர் பம்பாய் சென்ற குசப்பய பூலிங்கம் எதிர்கொண்ட வாழ்க்கையைச் சொல்ல புகுந்த போதும் (எட்டுத் திக்கும் மத யானை) பம்பாயில் சந்திப்பது நாஞ்சில் நாட்டுக்காரர்களைத் தான். பம்பாய் போயும் கர்மம் தொலைய மறுக்கிறது. அங்கு பூலிங்கத்துக்குக் கிடைத்தது தேவர்கள் இருக்கும் சால் தான். அங்கே தேவம்மாரைத்தான் சேப்பங்களாமே. சட்டி பானை செய்யும் குசப்பயலுக்கு ஏது இடம்? ”இறைச்ச குளம் தேவம்மாருன்னு சொல்ல”ச் சொல்லி புத்தி சொல்லப்படுகிறது. சாதி போகவில்லை. சாதி ஒழித்து சமத்துவ புரம் கட்டி, அறுபது வருடங்களாயிற்று. நாஞ்சில் நாட்டைச் சொல்லிவிட்டுப் போகட்டும். இதையெல்லாமா எழுதுவது?

மனுஷன் கதையைச் சொல்லாம அரசியல் பேசத் தொடங்கினால். அதுவும் திமுக ஆட்சியின் பொற்கால மகத்துவத்தையாவது பேசியிருக்கலாம். ஆனால் நடப்பதே வேறு.

“பள்ளிக்கூடத்துக்கு முன்னால் தார் ரோடு. கக்கன் மராமத்து மந்திரியாக இருந்த காலத்தில் போட்டது. அதன் முறை நான்கு முறை தார் பாவியதாக ரெக்கார்டுகளில் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் குண்டு குழிகளில்……. சல்லி வாரிப் போட்டு, தார்க்குழம்பு தெளித்ததைத் தான் ரோடு அறியும்.” இந்த விவரத்தை யார் கேட்டார்கள்? எழுதுகிறார். அவர் பார்த்தது அது தானாம். என் அனுபவத்தை எழுதுகிறேன் என்கிறார்.

“இருபத்திரண்டு ஆன சூனா மானா ஆட்சியில். எப்போதாவது நொடிகளில் இடும் சல்லியும் கலந்து ஒப்பேத்துவதோடு சரி. புதிதாய் போடுவதில்லை. ஆனால் தாமரைக்குண்டு தொடங்கி, மாங்குளம் வழியாக கற்றாழைக்குடி வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் போட்டதாக மூன்று முறை கோப்புகளில் பதிவானதாகச் சொல்கிறார்கள்.” இது வெறும் வர்ணணை இல்லை. எதையோ சொல்வது போல் எங்கோவெல்லாம் பாய்கிறதில்லையா? இன்னும்,

“ஒலி பெருக்கிகள் ஒன்றையொன்று பார்த்துக் குரைத்தன .”தோற்றத்தில் இவர ஒரு பெரிய அறிவாளி என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது.; இவர் எப்படி சாதிச் சேற்றில் பன்றியாகப் புரள்கிறார் என்பதில் சந்தேகம் பலருக்கும் உண்டு”

சாதிச் சேற்றில் புரள்வது இன்று தமிழ்கம் முழுதுமே என்பதும் அவர்கள் தோற்றத்தில் பெரிய அறிவாளிகள் என்பதும் அதிகாரத்தில் இருக்கும் யாருக்கு உவப்பாக இருக்கமுடியும்?

நாஞ்சில் நாடன் ஆழ்ந்த தமிழ் பற்றும், புலமையும் கொண்டவர். அது தானாகவே வெளிப்படும். அவர் பார்வையோடு. அது வெற்றுக் கேலியாக மட்டும் வெளிப்படாது. எங்கெங்கோ யாரையெல்லாமோ தாக்கும். ஒரு கதையில் ஒரு கிழவி வசை பாடும் குணத்தைப் பற்றிச் சொல்கிறார், “ நாவலர்கள், நடமாடும் பல்கலைக் கழகங்கள், சிந்தனைச் சிற்பிகள், இங்கர்சால்கள் எல்லாம் எட்டி நிற்க வேண்டும்” இது கிழவியை மட்டும் சாடும் கேலி இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இன்னொரு இடத்தில் எழுதுகிறார்.

“அரசியல் ஆரவாரக்காரர்கள் எல்லாம் தலை சிறந்த நாடகக் காரர்களாகக் கருதப் பட்டார்கள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, வாடா தமிழா வாளெடுத்து” என்ற ரீதியிலோ, “மாட மாளிகையில் மயக்கும் மங்கையர் மடி மேல் கிடக்கும் மணவாள முதலியாரே பார்…… உழைத்து, உருக்குலைந்து உதிரம் உதிர்ந்து உயிருக்குப் போராடும் உலக நாதனைப் பார்,” என்றோ வசனங்கள் வழி நெடுக தாளித்துக் கொட்டப்பட்டிருக்கும் நாடகங்கள் அவர்களுக்கு நிறையக் கிடைத்தன.”

“அரசாங்கம் அதிகார பூர்வமாகச் செய்யாத ஒரே தொழில் விபச்சாரம் தான். ஆனால் அரசு சம்பந்தப்பட்ட எதிலும் மக்களுக்கு போதை இல்லை போலும். கவனிக்கவும் “அதிகார பூவமாகச் செய்யாத தொழில்”

ஒரு பெரியவர் சொல்கிறார்: “ இதிலே பொது நியாயம் என்ன தம்பி? அதிலே இன்னும் ஒரு கசவாளித்தனம் பாத்துக்கோ. நாலு ஆட்டைக் கூட்டீட்டு வந்து, ஒண்ணைக் கறிபோட்டு தொங்கப் போட்டு வித்துக்கிட்டிருப்பான். மத்த மூணும் பாத்துக்கிட்டே இருக்கும். அதுக்கு முகத்திலே ஏதாணும் வருத்தத்தைப் பாத்திருக்கியா நீ. ஒரு புண்ணாக்கும் கிடையாது. அது மாரித் தான் நாமோ ஒத்தனுக்குக் குடலைச் சரிச்சாலும், ஒரு வருத்தம் படாமே பாத்துக்கிட்டே போவான்….. அது தான் தம்பி உலகம்.”
என்று அவர் சொல்லும்போது அது இன்றைய அராஜகம் எது என்பதையும் அதையும் பார்த்துக்கொண்டு வாய் மூடி ”நம்ம ஜோலியைப் பார்த்துக்கொண்டு போகும்” நம்மையும் சுட்டவில்லையா?
இதைக் குறிப்பிட்டு நான் வேறு ஒரு இடத்தில் சொன்னேன்.

“இன்றைய நம் வாழ்வின் நாற்றத்தையும் அது பூசியிருக்கும் சமூக அங்கீகார சந்தனத்தையும், கைப்பற்றியிருக்கும் அதிகார குண்டாந்தடியையும் பற்றி நான் ஒரு நேரடியான குறிப்பை
நான் வாசித்ததில்லை. சுற்றி வளைத்து விடுகதைகளையும், மாயா ஜாலங்களையும், கனவுலக சஞ்சாரத்தையும் எழுதி விட்டு பன்முக வாசிப்பு என்ற ஒரு பம்மாத்து நடக்கிறது. தனக்கு முதுகெலும்பு இல்லாதது தெரிந்து விடக்கூடாது என்று பகட்டு சிம்மாசங்களில் ஒட்டு அமர்ந்த தோற்றமே இது..

நாஞ்சில் நாடன் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள் கிறார். நாஞ்சில் நாடு என்னும் அந்த ஒரு சின்ன இடத்தைத் தான் எழுதுகிறார் அந்த மண்ணைச் சேர்ந்தவர்களைத் தான் திரும்பத் திரும்ப எங்கு சென்றாலும் பார்க்கிறார். ஆனால், அவர் இன்றைய தமிழ் நாட்டின் சீர்கேட்டையே அந்தச் சின்ன சித்திரத்தில் பார்க்கச் செய்துவிடுகிறார். இது யாருக்கு உவப்பாக இருக்கும்? சாகித்ய அகாடமிக்காரர்களுக்கு இது எப்படி உவப்பாகிப் போனது? அதன் ஆகி வந்த மரபும் பண்பும் என்ன ஆனது?.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்