நஸீம்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

வெங்கட் சாமிநாதன்


நஸீம் என்பது அந்த படத்தின் பெயர். நஸீம் என்றால் இளங்காற்று என்று பொருள். காலையில் வீசும் இளங்குளிர் காற்று. இவ்வளவையும், நஸீம் என்ற ஒரு பதம் அர்த்தப்படுத்தி விடுகிறது. நானும் தமிழில் சுருக்கமாக ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் சொல்ல ஆசைப்பட்டு யோசித்துப் பார்த்தேன். கிடைக்கவில்லை. தென்றல் என்ற பதம் இருக்கிறது. ஆனால் அது காலை நேரத்தையோ குளிர்ச்சியையோ உணர்த்தாது. இதமான காற்று அது. சரி போகட்டும். நஸீம் அந்த படத்தில் வரும் பள்ளி செல்லும் சிறு பெண்ணின் பெயர். அந்த பெண்ணின் பார்வையிலேயே படத்தின் கதை நகர்வதால், பெண்ணே மையப்பாத்திரமாக இருப்பதால் படத்தின் பெயரும் நஸீம் ஆயிற்று.

கதையும் குரல் எழுப்பாமல், புயலோ கனலோ வீசாது, அடங்கிய குரலிலேயே சொல்லப்படுகிறது. ஆனால் கதை நிகழும் கால கட்டம் ஒரு வாரகாலம். உத்தர பிரதேசத்தில், ஸாஹ்ரன்பூரில், அயோத்தியில் நிகழ்ந்து வரும் மதக்கலவரங்களின் பின்னனி அவ்வப்போது உணர்த்தப்படுகிறது. ஒரு முஸ்லீம் குடும்பம். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் ஒரு வயோதிகர். அவருடைய மகன். மருமகள். பின் இரண்டு பேரப் பிள்ளைகள். மூத்தது பேரன். பின் கடைக்குட்டி, நஸீம். அவர்கள் அமைதியாகவே வாழ்ந்து வருகிறார்கள். கதை சொல்லப்படும் அந்த குறுகிய காலகட்டத்தில் அவர்களுக்கு சுற்றி வாழும் யாரோடும் அதிகம் அன்றாட வாழ்க்கைத் தொடர்பு இருக்கவில்லை. அவர்கள் இருப்பது ஒரு மாடியில். கீழே படியிறங்கி வந்தால் கீழே குடியிருப்பது ஒரு சிறிய இந்துக் குடும்பம். வீட்டு வாசலில் ஒரு சின்ன கடை. நஸீம் பள்ளிக்குப் போகும் போது அந்த ஆண்டியை (அத்தையை) குசலம் விசாரித்துவிட்டு கடையில் இருக்கும் குழந்தையின் கன்னத்தைத் தொட்டு கொஞ்சிவிட்டுப் போவாள். அந்த ஆண்டி அவளிடம் மிக பிரியமாக இருப்பாள். தன் மாமனார் அந்தப் பக்கம் பார்க்கவில்லை யென்றால், பெப்பர்மிண்ட் பாட்டிலைத் திறந்து ஒரு பெப்பர்மிண்ட் எடுத்து நஸீமுக்குக் கொடுப்பாள். அந்த வீட்டில் அந்த இளம் வயதுப் பெண், அவள் புருஷன், அவர்களது குழந்தை, பின் மாமனார். அவள் புருஷனோ, மாமனாரோ நஸீமைக் கண்டு கொள்வதில்லை. ஒதுங்கி இருக்கவே விரும்புகிறார்கள் என்று படும்.

நஸீம் மிக சூட்டிகையான, புத்திசாலித்தனமான பெண். பள்ளிப் பாடங்களை மீறி தெரிந்து கொள்ளும் ஆசை கொண்டவள். என்னேரமும் எல்லோரையும் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாள். அவள் அதிகம் தொந்திரவு செய்வது, படுக்கையில் கிடக்கும் தாத்தாவைத் தான். தாத்தாவுக்கும் பேத்திக்கும் ஒட்டுதல் அதிகம். இவள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல பெரும்பாலும் தாத்தாவிடமிருந்து அவரது பழங்காலக் கதைகளே வரும். அவர் இளம் வயதில் ஆக்ராவில் இருந்தவர். அப்போது சுதந்திரப் போராட்ட காலம். அவரும் நண்பர்களும், அவர்களில் திரிவேதி என்ற ஹிந்துவும் ஒருவர், ஊரடங்குச் சட்டல் அமுலில் இருக்கும்போது ஆக்ரா தெருக்களைச் சுற்றித் திரிந்தவர்கள். பாரா வரும் வெள்ளைக்கார காவல் அதிகாரியைச் சீண்டுவார்கள்.

ஆக்ராவில் இருந்த காலத்தில் அந்த மூவரும் அன்னியோன்னிய நண்பர்கள். அந்த குடும்பத்திலும் வேற்றுமை இன்றி பழகும் சினேகிதம் அவர்களது. செஸ் விளையாட்டில் அவர்கள் பொழுது போகும். திரிவேதியைக் கொஞ்ச நாளாகக் காணோமே என்ற பேச்சு வருகிறது. அவர் எங்காவது கோவிலில் பண்டிட்ஜியுடன் சமஸ்கிருதம் கற்கிறேன் என்று அரட்டை அடித்துக் கொண்டிருக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள். அவர் வரட்டும் அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என்று சொல்கிறாள் மனைவி. பாதாம்கீர் செய்துகொடு அண்ணி என்று சொல்லிவிட்டுப் போனவர் போனவர் தான் ஆளையே காணோம் என்று புகார் செய்கிறாள் மனைவி. அப்போது “மித்ர கன்” என்று வழக்கொழிந்த சமஸ்கிருதத்தில் நண்பர்களைக் கூவி அழைத்துக்கொண்டே உள்ளே நுழைகிறார் திரிவேதி. அவருக்கு நல்ல உருதுவில் திட்டும் கிடைக்கிறது. தண்டனையாக சாப்பிட முடியாத ஏதோ பானகமும் கிடைக்கிறது. இப்படித்தான் விளையாட்டும் அன்பும் அவர்களைப் பிணைக்கின்றன. அன்னியன் என்ற வித்தியாசம் இல்லை. வேற்று மதம் என்ற வித்தியாசமும் இல்லை. ஒரு நாள் அவர்கள் மூவரும் ‘நௌடங்கி’ பார்க்கப்போய் நடு இரவில் தான் வீடு திரும்புகிறார்கள். அவர்களுக்கு பஷீரின் (படத்தின் தாத்தா) மனைவியிடமிருந்து நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்கிறார்கள். அவள் கண்டிப்புடன், பண்புடனும் கோபிக்கும் அழகே தனி. அது ஒரு நாகரீகம். அது ஒரு காலம் 1942-ல்.

இப்போது நடந்து கொண்டிருப்பது 1992-ம் வருடம் டிஸம்பர் மாதம் முதல் வாரம். யாரோ தெரிந்தவர்களில் ஒரு ஆன்ட்டியை தலாக் செய்து இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதாக பேச்சு வருகிறது. “ஏன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்?” என்று நஸீம் தன் அம்மி ஜானைக்(அம்மாவை) கேட்கிறாள். அடுப்படி வேலைக்கிடையே, “ஆமாம் செய்துகொள்கிறார்கள், அதுக்கு நீ என்ன செஞ்சிடுவே?” (ஹா(ன்) கர்தே ஹை(ன்), து க்யா கர் லேகி?”) என்று பதில் சொல்கிறாள் எரிச்சலுடன். இது தான் நடப்பு, ஆண்கள் வைத்த சட்டம். அடாவடித்தனம், அதற்கு பெண்கள் ஒன்றும் செய்துவிட முடியாத இயலாமை எரிச்சலாக வெளிவரும். இது பதில் சொல்லும் தோரணையிலும் அந்த சூழலிலும் தொனிக்கும். இந்த பதில் நஸீமுக்குப் பிடிக்கவில்லை. அம்மி ஜான் சொன்னதைத் திருப்பி வக்கணையாகச் சொல்லிக்கொண்டே “ஹா(ன்) கர்த்தே ஹை(ன்). யே பீ கோயி ஜவாப் ஹை?” (ஆமாம் செய்றாங்க? நல்லாருக்கே, இது ஒரு பதிலா என்ன?) என்று முணகிக்கொண்டே தாதாஜானிடம் போகிறாள் வழக்கம்போல. தாதாஜானைக் கேட்கிறாள். “தாதாஜான், நீங்கள் ஏன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?” என்று. அவர் வழக்கம் போல பேத்தியிடம் தமாஷ் செய்கிறார். ” ஆமாம். செய்திருக்கலாம் தான். ஆனால், எனக்கு முன்னால் உன் பாட்டி எனக்கு தலாக் சொல்லிவிடுவாளோ என்று பயந்து கொண்டிருந்தேன்” என்கிறார்.

அன்று தாதாஜானுக்கு பிறந்த நாள். பேத்தி, நஸீம் ஒரு ஷெர்வானியை எடுத்து வந்து தாத்தா அதை அணிந்து கொண்டு தான் ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். எழுந்து நிற்கவும் இயலாதவர் அவர். “ஏன் என்னை மாப்பிள்ளையாக அலங்கரித்துப் பார்க்கணுமா?” என்று கேட்கிறார் தாத்தா. மகன் வருகிறான். “போட்டுக் கொள்ளுங்கள், அப்பா ஜான், மாப்பிள்ளையாக இல்லை, கவிஞராகக் காட்சி அளிப்பீர்கள்” என்கிறான். அடுத்த காட்சியில் அவர் படுக்கையைச் சுற்றி அண்டை அயலார்கள், சுற்றம் எல்லோரும் குழுமியிருக்க (எல்லோரும் முஸ்லீம்கள் தான்) “என் பேத்தியின் பிடிவாதத்துக்கு அடிபணிந்து நான் இப்படி அலங்காரம் செய்துகொண்டிருக்கிறேன். அவள் சொல்வது எதையும் நான் தட்டமுடியாது. இப்போது நான் சில கவிதைகள் சொல்கிறேன்.” என்று அவர் தன் கவிதைகள் சில சொல்லி, பின் “இப்போது சொல்லப்போவது மீர் தக்கி மீரின் (18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த உருது, பாரசீக மொழிகளில் கவிதைகள் எழுதியவர், மிர்ஜா காலிப் காலத்தில் வாழ்ந்த அவருக்கு இணையான பெரிய கவிஞர்) கவிதைகள் சில என்று சொல்லி, கவிதை சொல்ல ஆரம்பித்தவருக்கு கடைசி அடி மறந்து போகிறது. அப்போது கூடியிருந்தவரில் ஒரு இளைஞன் அந்த கடைசி அடியைச் சொல்கிறான். தாத்தா அவனைப் பாராட்டுகிறார். அவன் புதிதாக வந்தவன், அவருடைய பேரன் ரஸாக்குக்கு சினேகிதன். தாத்தாவின் பாராட்டைத் தொடர்ந்து அவன் அந்தக் கவிதையின் அர்த்தத்தைச் சொல்கிறான். “பையா, நீ கவிதையை நினைவு வைத்து எனக்கு உதவினாய், சந்தோஷம். ஆனால் மீர் தக்கி மீர் சொல்லாததையெல்லாம் கற்பித்துக்கொண்டு மீர் தக்கி மீர் சொன்னதாகச் சொல்கிறாயே” என்று கனிவுடன் அவன் சொல்வதை மறுக்கிறார். “அவ்வப்போது காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப கவிதைக்கு அர்த்தம் காணவேண்டும். இல்லையெனில் கவிதை படித்து என்ன பயன்?” என்கிறான் அந்த வாலிபன் ஒரு முரட்டுப் பிடிவாதத்தோடு. அவன் கவிதைக்கு எடுத்துக் கொண்ட அர்த்தத்தில் முஸ்லீம் அடிப்படை வாதம் தொனிக்கிறது. அவனது மரியாதையற்ற முரட்டுப் பிடிவாதத்தை விரும்பாத மற்றவர்கள் எல்லோரும் மௌனமாகிறார்கள். “இந்த சமயத்தில் உங்கள் மகிழ்ச்சிக்கு குந்தகமாக இருக்க நான் விரும்பவில்லை. நான் போகிறேன்.” என்று சொல்லி அவன் போய்விடுகிறான். “இவனுடன் எத்தனை நாளாக ரஸாக்குக்கு (பேரனுக்கு) பழக்கம்? என்று பெரியவர் கேட்கிறார். “நானே இப்போது தான் அவனைப் பார்க்கிறேன்” என்று மூத்த மகன் சொல்கிறான்.

ஒரு நாள் மங்கிய மாலை நேரத்தில், நஸீம் தன் தாத்தாவுடன் வெட்டவெளியில் வானத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். நஸீம் வானத்தைப் பார்த்துக்கொண்டே தாத்தாவைக் கேட்கிறாள், “தாதாஜான், ஆகாயம் ஏன் நீலமாக இருக்கிறது?” என்று. அதற்கு தாத்தா; “மஞ்சளா இருந்தா வேண்டாம் நன்றாக இருக்காது என்று தான் நீலமாக இருக்கட்டும் என்று இருக்கிறது.” என்று பதில் தருகிறார். நஸீமுக்கு அதைக் கேட்டு சிரிப்பாக வருகிறது. “போங்க தாதாஜான், நீங்க ஒண்ணு,” என்கிறாள் சிரித்துக்கொண்டே. தாத்தா சொல்கிறார், “நிஜமோ, பொய்யோ, நீ சிரிக்கிறாயல்லவா? அது தான் வேண்டும். எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும்” என்று சொல்கிறார்.

ஒரு நாள் அடுத்த வரவேற்பு அறையில் தாத்தாவையும் பேத்தியையும் தவிர எல்லோரும் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நஸீம் தாத்தா பக்கத்தில் உட்கார்ந்து பரிட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள். டிவி பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்து அறையிலிருந்து சத்தம் அதிகமாகிறது. ஸஹரன்பூரில் மதக்கலவரம் வெடித்துள்ளது. முஸ்லீம் தரப்பிற்கு சேதம் அதிகம். என்று டிவி செய்தி சொல்கிறது. தாத்தா தன் அறையிலிருந்து கொண்டே, “நஸீம் பரிட்சைக்குப் படிக்கிறாள், சத்தம் போடாதீர்கள்,” என்கிறார். பேரனுக்கு கோபம் வருகிறது. “இங்கே முஸ்லீம்களையெல்லாம் கொலை செய்கிறார்கள். உங்களுக்கு உங்கள் பேத்தி பரிட்சை தான் முக்கியமாகப் படுகிறது. … உங்களுக்கு என்ன? வெளியே என்ன நடந்தாலும், நீங்கள் பேத்திக்கு கதை சொல்வீர்கள். கதைகள் சொல்லும் காலம் போய்விட்டது உங்களுக்குத் தெரியவில்லை…..பாகிஸ்தான் பிரிந்த போது நாம் அங்கே போயிருக்க வேண்டும். நீங்கள் இங்கேயே ஏன் தங்கினீர்கள்? நாளைக்கு இந்த வீடு எங்களது, நீங்கள் காலி செய்யுங்கள், என்று அவர்கள் சொல்வார்கள், அப்போ என்ன செய்வீர்கள்?” என்று தாத்தாவை எதிர்த்து கத்த ஆரம்பிக்கிறான். தாத்தா அமைதியாகிவிடுகிறார். யாரும் பேசவில்லை. ஒரு கலவரம் நிறைந்த பீதி உணர்வு அந்த இடத்தில் பரவுகிறது.

சற்றுக் கழித்து மகன் அப்பாவிடம் வருகிறான். ” அவன் பேசியது சரியில்லை தான். நாம் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். ஆனால் அப்பாஜான், அவன் சொன்னதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆமாம். அப்பாஜான், நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போகவில்லை?” என்று அப்பாவிடம் கேட்கிறான். “உனக்குத் தெரியுமே, ஆக்ராவில் நாம் இருந்த வீட்டின் முற்றத்தில் ஒரு பெரிய மரம் இருந்ததல்லவா? உன் அம்மாவுக்கு அது ரொம்ப பிடித்த மரம்?” என்பது தான் அவர் பதிலாக இருக்கிறது. இதற்கு முன்னர், அவர் தன் ஆக்ரா நாட்களைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம், தன் பேத்திக்கு பழைய கதைகள் சொல்லும் போதெல்லாம், வரும் பழங்கால ஆக்ரா காட்சிகள் அந்த மரத்தின் கீழேயே அவர்கள் வாழ்க்கை கழிந்ததைச் சொல்லாமல் காட்டும். அவர் படிப்பது, தேனீர் சாப்பிடுவது, அவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது, இப்போது கேள்வி கேட்கும் மகன் விளையாடியது எல்லாம் அந்த மரத்தை மையமாகக் கொண்டே இருக்கும். ஆனாலும் இப்போது அந்த பதிலைக் கேட்ட மூத்தமகன், “ஒரு மரத்துக்காகவா?” என்று முணுமுணுப்பான்.

மறுநாள் காலை, நஸீம் தாத்தா, அம்மா, அப்பா எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு பரிட்சைக்குப் போவாள். வாசலில் அவள் அண்ணன், ரசாக், அவளுக்கு வாழ்த்துச் சொல்கிறான். நஸீம் பதில் சொல்லாமல் போகிறாள். அவன் மறுபடியும் சத்தமாக, “நான் வாழ்த்துகிறேன், நீ பேசாமல் போகிறாயே?” என்று கோபமாகக் கேட்பான். “நான் உன்னோடு பேசப்போவதில்லை. நீ முதலில் தாதாஜானிடம் மன்னிப்புக்கேள், உன் நடத்தைக்காக” என்று சொல்லிக்கொண்டே போகிறாள் அவள். வழியில் வழக்கம்போல், கீழே இருக்கும் கடையில் நுழைகிறாள். அவள் கொஞ்ச குழந்தையும் இல்லை. பெப்பர் மின்ட் கொடுக்க ஆன்ட்டியும் இல்லை. “என்ன வேண்டும்?” என்று அந்த கடை சொந்தக்காரன் கேட்கிறான். “ஒன்றுமில்லை. சும்மா வந்தேன்” என்று சொல்லிவிட்டு நகர்கிறாள் நஸீம்.

மாலையில் அவள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, அந்தக் கடையின் முன் ஒரே கூட்டம். ஒன்றிரண்டு போலிஸ்காரர்களும் கூட. கடைச் சொந்தககாரன், தான் அந்த சமயத்தில் இல்லையென்றும் எப்படியோ இந்த விபத்து நேர்ந்து விட்டது என்றும் போலிஸ¤க் குச் சொல்லிக்கொண்டிருக்கிறான். கடையில் நஸீமுக்கு வழக்கமாக மிட்டாய் கொடுக்கும் ஆன்ட்டியின் முகம் கருகிய சடலம் வெளியே கொண்டுவரப்பட்டு போலீஸ் வண்டியில் ஏற்றப்படுகிறது நஸீமுக்கு துக்கம் தாளவில்லை. அழுது கொண்டே வீட்டுக்குள் போகிறாள். “அம்மிஜான், ஆன்ட்டி….” என்று துக்கம் பீறிட அழவே, “நீ உள்ளே போ” என்று அவளை மேலே பேசவிடாது தடுத்து விடுகிறாள். “எப்போ பார்த்தாலும் அந்த வீட்டில் சண்டை தான், அடி தான்” என்று ஒருவர் சொல்ல, பேரன், “இது எப்படி, ஹிந்துக்கள் வீட்டில் மாத்திரம் தான் ஸ்டவ் வெடித்து விடுகிறது? என்று சத்தமும் கோபமுமாக கத்துகிறான். “உங்களுக்குத் தான் தலாக்கும் புர்க்காவுமே போதுமா இருக்கே?” – (துமாரேலியே தோ புர்க்கா ஔர் தலாக்-ஹி கா·பி ஹை’)- என்று அம்மா வெறுப்பும் கோபமும் பொங்க சத்தமாகச் சொல்கிறாள். தாத்தாவின் உடல் நிலை மோசமாகிறது. கடும் சுரம். டிவியில் கரசேவக் கூட்டம் கூட்டமாக கோஷமிட்டுக்கொண்டு, கொடிகளை ஏந்திக்கொண்டு வரும் காட்சிகள்.

பாப்ரி மசூதியைச் சுற்றி கரசேவக் கூட்டம். “மசூதியை இடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கோபமாக ரஸாக் கத்துகிறான். அவன் அம்மாவும் அப்பாவும், “‘கத்தாதே, தாத்தாவுக்கு சுகமில்லை தெரியாதா?” என்று சொல்வது போல அவர்களிடையே மௌன சமிக்ஞைகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. அவ்வப்போது எவ்வளவு இடித்தாகிவிட்டது என்று சத்தமாகவும் சீற்றத்தோடும் பேசுகிறார்கள். மறுபடியும் அமைதியாக இருக்க சமிக்ஞைகள். கடைசியில் மசூதி முழுதுமே இடித்துவிட்டார்கள் என்ற கூச்சல். வீட்டுக்குக் கீழே வாசலில் ரஸாக்கின் கோப வெறிகொண்ட நண்பன் தன் சகாக்களோடு வருகிறான். “மசூதியை முழுதுமே போய்விட்டது” என்கிறான். அந்த சமயத்தில் தாத்தாவின் சடலம் மாடியிலிருந்து கீழே இறக்கப்படுகிறது. “இனிமேல் இவர் எதற்கும் பதில் சொல்லத் தேவை இல்லை. போகிறார்” என்று வெறுப்புடன் சொல்கிறான் ரஸாக், தாத்தாவின் சடலம் போவதைப் பார்த்து.

தாத்தா படுத்திருந்த அறை இப்போது காலியாக இருக்கிறது. எல்லாம் அவர் விட்டுப் போனபடியே அதனதன் இடத்தில். அவர் தான் இல்லை. நஸீமுக்கு தாத்தாவுடன் இருந்த பழைய நினைவுகள், “தாத்தா, ஆகாயம் ஏன் நீலமாக இருக்கிறது? …மஞ்சள வேண்டாமென்று தான்…. போங்க தாத்தா, நீங்க ஒண்ணு,….நிஜமோ பொய்யோ, சிரித்தாயல்லவா? அது தான் வேண்டும், சந்தோஷமாக இரு… தாத்தா, நஸீம் என்றால் என்ன அர்த்தம்?…. காலையில் வீசுமே இளங்காற்று……”

கதை என்று சொல்ல ஏதும் இல்லை. ஒரு வார காலத்தில், வெளியே கலவரங்கள் பெரிய அளவில் வெடித்துக் கொண்டிருக்கும் சூழலில், அமைதியாக ஒதுங்கியிருக்கும் ஒரு பாரம்பரிய முஸ்லீம் குடும்பத்தில் நிகழும் பாதிப்புகள், மூன்று தலைமுறைகள் ஒவ்வொன்றும் அதை அவரவர் சுபாவத்தில் எதிர்கொள்வதும் தான் நம்முன் படமாக விரிகிறது. படம் இருவரைத் தான் மையமாகக் கொண்டுள்ளது. “சந்தோஷமாக இரு. அது போதும்.” என்று சொல்லும் தாத்தா, “முதலில் உன் நடத்தைக்கு தாத்தாவிடம் மன்னிப்புக் கேள், பிறகு உன்னிடம் பேசுகிறேன்” என்று தன் அண்ணனிடம் பேச மறுக்கும் நஸீம், “புர்க்காவும், தலாக்குமே போதுமே உங்களுக்கு!” என்று சீறும் தாய், எல்லாம் தம் சுபாவத்திற்கேற்ப புரிதலுக்கேற்ப, மதத்தை மனிதாபிமானத்தோடு புரிந்து வாழ்ந்த, மென்மையான உணர்வுகள் கொண்ட குடும்பம் மாறி வருவதைப் பார்க்கிறோம்.

இதில் தாத்தாவாக நடிப்பவர் கெய்·பி அஸ்மி, இடது சாரி கருத்துக்கள் கொண்ட உருது கவிஞர். நடிகை ஷாப்னா அஸ்மியின் தந்தை. வெகு அடக்கமாக இயல்பாக, நாடகார்த்த பாவனைகள் அறவே இல்லாது நடித்திருக்கிறார். மகனாக நடிக்கும் குல்புஷன் கர்பந்தாவும் மருமகளாக நடித்திருக்கும் சுரேகா சிக்ரியும் தேர்ந்த தில்லி நாடக நடிகர்கள், சினிமாவிலும் பொறுக்கித் எடுத்த படங்களில் நடிப்பவர்கள். நஸீமாக நடிக்கும் சிறு பெண் தான் எனக்குப் பெயர் மறந்துவிட்ட புதிய வரவு. அந்தப் பெண்ணின் இனிமையும், சூடிகையும், அலட்டிக்கொள்ளாத, இயல்பான நடிப்பு பார்க்கவே இனிமையானது.

எல்லாவற்றிலும் பார்க்க எனக்கு ஆச்சரியம் தந்தது, இதை இயக்கிய சையது மிர்ஸா. தில்லி தொலைக்காட்சியின் ஆரம்ப காலத்தில் ‘நுக்கட்’ (தெருமுனை) என்ற தொடரைத் தந்தவர். அது வெறும் தமாஷ் தொடர். ஆனால் விளிம்பு நிலையில் உள்ளவர்களை வைத்து அனுதாபத்துடன் சித்தரித்த தொடர். சில முழு நீளப் படங்களும் அவர் இயக்கத்தில் வந்திருக்கின்றன. “ஆல்பெர்ட் பிண்டோ கோ குஸ்ஸா க்யோ(ன்) ஆதா ஹை? (ஆல்பர்ட் பிண்டோக்கு ஏன் கோபம் வருகிறது?) என்ற ஒரு முழு நீளப்படம் அவரது என் ஞாபகத்துக்கு வருகிறது. அவரும் ஒரு இடது சாரி சிந்தனை உள்ளவர் தான். இப்படிச் சொன்னதால் அவர் செய்வதெல்லாம், நம்மூர் இடது சாரிகளின் எழுத்தும் பேச்சும் இருக்கும் லக்ஷணத்தில் தான் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இடது சாரி சிந்தனைகள் தான். வெற்று இரைச்சல் போடமாட்டார். ஆனால், சையது மிர்ஸாவிடமிருந்து இத்தனை நுட்பத்துடன், மனித மனத்தின் மெல்லிய சலனங்களை, அடங்கிய குரலில் சித்தரிக்கும் திறமை அவரிடம் இருப்பது கண்டு எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தான்.

வெங்கட் சாமிநாதன்/10.3.08


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்