நல் எண்ணங்கள் வளர்ப்போம்!

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

தமிழநம்பி


மாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்
மனத்தின் எண்ணம்;

வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ விழலாவான்
விரைவில் வீழ்வான்!

சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்
சரிவே காணா
ஏந்துடைய நல்வாழ்வு எளிதாகப் பெறநல்ல
எண்ணம் வேண்டும்!

ஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்
றுணர்ந்து கொள்க!

ஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் உனக்கேநீ
தீங்கு செய்தாய்!

ஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்
உடற்கும் உண்டே!

ஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்
உயர்த்தும்; தாழ்த்தும்!

தப்பாதே நல்லெண்ணம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்
தமையே தேர்க!
எப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் தல்லுறவும்
இணைத்துக் கொள்க!

இப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்
இனிமை சேர்க்கும்!

முப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்
முயும், உண்மை!

ஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்
உங்கள் நெஞ்சம்

ஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்
இயைந்து நின்றால்

ஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்
அளிக்கும் வெற்றி!

தோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்
துணையாய்க் கொள்க!

எண்ணத்தை ஆக்குவதார்? உள்வாங்கு்ம் செய்திகளே!
எனவே என்றும்
ஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்
ஓர்ந்து தேர்க!
எண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை
எண்ணிப் பாரீர்!
திண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்
தெளிந்து கொள்க!

நல்லெண்ணம் மனங்கொள்க! நல்லுணர்வைப் போற்றிடுக!
நனமை நாடி
நல்லாரோ டுறவாடி நல்லுறவைப் பேணிடுக!

நயந்தே நாளும்

வல்லாரும் வலியவுள மெல்லியரும் நல்லெண்ணம்
வளர்த்து வாழ்க!

எல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே
இனிது வாழ்க!

Series Navigation