நம்பிக்கை இயந்திரங்கள்(Belief Engines)

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

ரகுபதி ராஜா


உயிரியல் வல்லுனர்கள் (Biologists), மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப நாட்களில் மனிதமூளை ‘நம்பிக்கை இயந்திரங்கள்’ (Belief Engines) ஆக வளர்ச்சி பெற்றது என்று யூகித்து விளக்கங்கள் அளிக்கிறார்கள்.

எந்த காரியம் என்றாலும், எந்த விஷயமென்றாலும் காரணம் கற்பிக்காமல் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. – விடை தேடல் ஆரம்பிக்கிறது. Search Engine வழியாக –
ஏதாவது ஒரு காரணத்தை கற்பித்துக் கொண்டுவிட்டவுடன் அந்த விஷயத்திற்கான தீர்வு கண்டுவிட்டதாக முடிவு செய்து மனம் அமைதி அடைந்து விடுகிறது. தனது conclusion தான் சரியானது என்று மனம் நம்பிக்கை கொள்கிறது. இந்த வேலையை நமது மூளையின் செயல்பாடுகளில் ஒன்றான Search Engine செய்கிறது.

தத்துவ இயல் வல்லுனர்கள் இந்த நம்பிக்கைகளை ‘தத்துவ சிந்தனை முடிவுகள்’ என்று கூறுகிறார்கள்.

சிறு குழந்தை பருவத்திலிருந்தே இந்தமாதிரியான ‘தத்துவ சிந்தனை முடிவுகள்’ அல்லது ‘நம்பிக்கைகள்’ உருவாகின்றன. வளர்கின்றன. மூளையின் தேடல்தன்மைக்கு ஒரு உதாரணம் பார்க்கலாம்.

நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரது மகன் துரு துருவென சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். அவனை அருகில் அழைத்து என்ன படிக்கிறாய் என்று கேட்டேன்.

முன்னாலெ எலுக்கேஜி படிச்சேன்
இப்ப உலுக்கேஜி படிக்கிறேன் என்றான்.

(எலுக்கேஜி என்றால் அவனது மொழியில் LKG. உலுக்கேஜி என்றால் UKG என்று சிறிது நேரம் கழித்து விளங்கியது)

அப்பொழுது மாலை நேரம். சூரியன் மறையும் நேரம். மும்பை கடற்கரையில் இருக்கிறோம். அந்தப் பையன் மும்பைவாசி.

சூரியன் மாலையில் அடிவானத்தில் கீழே இறங்கும்பொழுது வானம் எவ்வளவு கலர் கலராக இருக்கிறது பார்த்தாயா? என்று பேச்சு கொடுத்தேன்.

அழகைப் பற்றி அவனுக்கு ஆர்வமில்லை. இந்த சூரியன் ஏன் கீழே தண்ணீரில் விழுகிறான் என்று கேட்டான்.

– ஆகா! பையன் நியூட்டனைப் போல் கேள்வி கேட்கிறானே, அவர் ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுந்தது என்றுதானே கேட்டார். இவன் சூரியன் ஏன் விழுகிறான் என்று கேட்டுவிட்டானே, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தேன்.

அது அப்படித்தான். இந்த சூரியன் இப்படித்தான் மாலையில் விழுந்து காலையில் எழுந்திருப்பான் என்றேன்.

தப்பு – தாத்தா – தப்பு. தண்ணீரில் விழுந்தால் இந்த சூரியன் செத்துப்போவான். நாளைக்கு வருவது இன்னொரு சூரியன் என்றான்…

நான் திகைத்துப் போனேன்.

அப்படி இல்லை தம்பி. இருப்பது ஒரு சூரியன்தான். இந்த சூரியன்தான் இன்னைக்கி ராத்திரி பூரா மேற்கே இருந்து பூமிக்கு கீழாகவே வந்து நாளைக்கு கிழக்கே எழுந்திருக்கிறான் என்றேன்.

அதெப்படி தாத்தா! பூமிக்கு கீழே ராத்திரி இருட்டாக இருக்குமே. தரைக்கு கீழே போனால் பூமி மேலே விழுந்து அமுக்கி நசுக்கிடுமே என்றான்.

குழந்தைகளின் சிந்தனைமுடிவுகள் அவர்களுடைய அனுபவங்களுக்கு தக்கபடி கற்பனையில் உதிக்கிறது. அவனது IQ எவ்வளவு தூரம் போகிறது பார்க்கலாம் என்று பேச்சைத் தொடர்ந்தேன்.

அது சரியில்லை. நீ சொல்வது தப்பு. இருப்பது ஒரு சூரியன்தான். அதனால இன்னொரு சூரியன் என்பது தப்பு. ஒரு சூரியன் என்பதுதான் கரெக்ட் என்றேன்.

சிறுவன் உடனே அதை ஒத்துக்கொண்டான். அதுதான் இளவயது இயல்பு.

அப்படி என்றால் எப்படி மேற்கே இருந்து கிழக்கே வருகிறான் என்று கேட்டேன். உனக்கு இப்பொழுது ஒரு விடுகதை கேள்வி கேட்கிறேன். இந்த சூரியன் தான் நாளை
கிழக்கில் மறுபடியும் மேலே வருகிறான். எப்படி வருவான் நீயே சொல்லு பார்க்கலாம் என்றேன்.

சற்று நேரம் சீரியசாக சிந்தித்தான். அவனுடைய Search Engine வேலை செய்யத் தொடங்கியது. விடையும் கண்டுபிடித்துவிட்டது.

மேற்கே கடலில் இறங்கி கீழே முங்காமல் (கீழே முங்கினால் அவன் செத்து விடுவானே) வெளியே தெரியாதபடி ஒளிந்துகொண்டு இப்படியே சைடு வழியாக தெற்கே வந்து அப்படியே ஒளிந்துகொண்டு பூனைபோல கிழக்கே வந்துவிடுவான் என்றான்.

அவனுடைய கற்பனையில் நான் அசந்துவிட்டேன். சிறுவர்களுக்கும் தத்துவ சிந்தனைகள் நம்பிக்கைகள் உண்டு. அவை தவறாக இருக்கலாம். ஆனால் தத்துவ தேடல் செயல்பாடு இருக்கிறது. பெரியவர்களான பின்னும் பெரும்பான்மையானவர்கள் இப்படித்தானே முடிவெடுக்கிறார்கள்.

எப்படி சூரியன் வருகிறான் என்று உனக்கு அஞ்சாம் கிளாசில் சொல்லித் தருவார்கள். இப்பொழுது நீ சொல்லுவதுதான் சரி. வெரி குட் என்று அந்தப் பையனை பாராட்டினேன். அறிவியல் பாடம் இப்பொழுது அவனுக்குத் தேவையில்லை. கிரகிக்கும் சக்தியும் அந்த வயதில் இருக்காது.

சிறுவயதில் ஏற்பட்ட நம்பிக்கைகள் மாறி புது சிந்தனைகளும் நம்பிக்கையும் வளர்வது இளவயதில் இயல்பானது. வயதாகிவிட்டால் ஏற்படும் நம்பிக்கைகள் எளிதில் மாறுவதில்லை. தங்களுக்கு பட்டதுதான் சரியானது என்று சாதித்துக் கொண்டிருப்பார்கள்.

பலரது மூடநம்பிக்கைகள் மண்டையைப்போடும் வரை மாறாது என்று கிராமங்களில் சொல்வார்கள்.

ஆகையால்தான் ‘இளமையில் கல்’ என்பார்கள். தவறுகளை சுட்டிக்காட்டினால் சரியானதை எடுத்துக்கொள்வதும் இளவயதில்தான். (முதிர்ந்த பிறகு கல்வி ஏறாது என்பது அனுபவ உண்மை) அவர்களது மாறாத நம்பிக்கைகள் Dogma ஆகிறது. சொன்னதையே திருப்பித்திருப்பிச் சொல்வார்கள். மாற்றிக்கொள்ள அவர்களால் இயலாது. இது இயற்கை நியதியாக இருக்கிறது.

– ரகுபதி ராஜா
ragupathirajaibr@gmail.com

Series Navigation