நந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

கே ஆர் மணி:

“கக்கூஸ்காரி மவனா நீ ? ஏன் பாக்கியம் மவனா நீ என்று கேட்கக்கூடாது என் மனம் சஞ்சலப்பட்டது.

அவைக்கு என் இனிய தமிழ் வணக்கம் ! நமஸ்காரம் ! சுவாகதம் !

விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகத்தில் சிறுகதையும், குறுநாவலும் பற்றிய வாசக அநுபவத்தை உங்களுடன் பகிர்வதில் எனக்கு பெருமை, இன்பமும் கூட. வாசித்த புத்தகங்கள் அம்மாவின் நிழல், ஏஞ்சலின் மூன்று நண்பர்கள், அப்பாவின் புகைப்படம்.

இந்த மூன்று கதைத்தொகுதிகளிலும் சிறந்த கதைக்கான, My awards goes to நிலைமை, விளையாட்டு ஏன் ?
, சோறு : இதில் சோறு பத்து சிறந்த தலித்திய கதைகளில் கண்டிப்பாய் இடம்பெறவேண்டிய ஒன்றாகிறது.
சோறு – தலித்திய கதைசொல்லியின் இறந்தகாலம் ; நிலைமை – இறந்தகாலத்தில் தொடங்கி நிகழ்காலத்தில் முடிகிற கதைக்களன் ; விளையாட்டு ஏன் ? – தலித்களின் எதிர்காலம் பற்றிய உருவகமான கதை (அப்படித்தான் எனக்குப்பட்டது)

விமர்சனங்களுக்கு முன் சில வரிகள், நண்பர்களே !

இந்த புத்தகத்தின் உலகம் எனக்கு முற்றிலும் புதியது. நான் வசிக்காதது. வாசிக்காதது. க.நா.சுவின் பொய்த்தேவின் கதாநாயகன் சோமு முதலி சேரியிலிருந்துதான் வருவான். அக்கிரகாரத்தில் வேலை செய்வான். அவர்களின் உதவியால் பக்கத்து ஊரில் ஒரு பெரிய வியாபாரியாய் மாறுவான். வாழ்க்கையை மது, மாதுவின் மூலம் அநுபவித்துவிட்டு கடைசியில் எல்லாம் துறந்த வேதாந்தியாக, முனிவனாகிவிடுவான். புதுமைபித்தன் எழுதிய சேரியும் வெளியிலிருந்து பார்த்துபோய்விட்டு எழுதிய எழுத்து. ஜெயகாந்தனின் சேரி கொஞ்சம் உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டியது. அந்த வெளிச்சத்தில் ‘அடடா அங்கனையும் மனுசங்கதான்’, என்று யோசிக்க வைத்தது. ரிக்ஸாக்காரர்கள், கதாநாயகனை கணவனில் காணத்துடித்த சினிமாவுக்குப்போன சித்தாளு என்ற ஓரிரு ஓளிக்கீற்றுகள். ஆனாலும் அவற்றிற்கும் யதார்த்ததிற்கும் எப்போதும் கொஞ்சம் இடைவெளி இருந்து
கொண்டிருந்ததால் அந்த கதைகள் சேரிகளை ஒரு பறவை பார்வையிட்டன (Birds View) என்றுதான் சொல்லவேண்டும்.

இதயவேந்தனின், இந்த எழுத்துக்கள் அங்கிருந்தே புறப்பட்டவை. வாசிக்கும்போது இவை ஏற்படுத்தக்கூடிய வாசனைகள், பயங்கள், நிஜங்கள் உண்மைக்கு ரொம்ப பக்கமாயிள்ளவையாதலால், அவை வயிற்றை கலக்குகின்றன. மனத்தை கனமாக்குகிறது. உண்மையை மறைக்காமல் சொன்னால், கொஞ்சம் அருவருக்கவைக்கின்றன. அதுதான் இந்த சத்திய எழுத்தின் வெற்றி. வாழ்க்கைகள் வெகுவாகவே எழுத்துகளாகும். இதயவேந்தன் எழுத்துகள் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு வெகுஅருகிலிருந்து பேசுகின்றன. கற்பனைக்குதிரைகளில்லை.
பனிமூடும் காமமில்லை. வலி, நாத்தம், மலம், சாராயம், ஆதிக்கசாதிகளின் குத்தல், திமிரி எழுகிற துணிச்சல், மக்களின் ஈரம், தொழில், மண் இழத்தல், புதியயிடம் புலம்பெயர்தல், நுட்பமாய் எழுந்து நிற்கிற பிரம்மாராட்சச சாதியீயம், எங்கெங்குநோக்கினும் நான் ஈனமாடா என்கிற புலம்பல். கதையில் கொட்டிக்கிடக்கின்றன கதை சொல்லியின் நகமும், சதையுமான பள்ளத்தெருக்கள், சேரிகள். அவர்களின் ஞாயிறுகள் நன்றாக பொழுது போகின்றன. மாட்டுக்கறியும், குடிப்பதும், வறுமையும், அழுக்கும், நாற்றமும் அவர்களின் வாழ்க்கையோடு ஒட்டிக்கிடக்கிறது. இப்படியென போகிறது இவர்களது வாழ்க்கை. அப்படியே போகிறது இவரது எழுத்து.

இந்த எழுத்துகள் என்னை அதிகமாகவே பாதித்தன. கொஞ்சம் குற்றணர்வாகவும், அதை மறைக்கமுயல்கிற அறிவாளியாகவுமே
நான் நடந்து கொள்ளமுயல்கிறேன். இந்த எழுத்துக்களில் என் விமர்சனத்தில் தவறிருப்பின் மன்னீப்பீர்களாக.. என் எழுத்துகளின் மூலம் என்னை சுயபரிசோதனை செய்துகொள்ளமுயன்றேன். என் ஞாபகச்சுருளில் சில ஓட்டங்கள்.

என் பாட்டி வீட்டில் ரொம்பநாளாய கழிப்பறையில்லை. திறந்த,புதர் மண்டிய கொல்லைப்புறமும் அங்கிங்கெனாதபடி எழுந்துநிற்கும் மணல்மேடுகள், கொல்லைப்புறங்கள் எப்போதும் இலக்கியத்திற்குள் வந்திருக்க முடியாது. அங்கு பன்னிகள் எந்த சம்பளமுமின்றி வேலைசெய்து கொண்டிருந்தன.

நான் சின்னவானயிருக்கும்போதும், விடுமுறை நாளில் ஊருக்குபோகும்போது கழிப்பறையிருக்கும் அக்கிரகார வீட்டி நோக்கிபோவேன்.
‘பின்ன டவுன் பிள்ளையில்லயா..’ அப்புறம் மறைவான சிமெண்ட் கழிப்பறைகள் வந்தன, கழிவுநீக்க மனிதர்கள் வந்தனர். அவர்கள் கையில் வாளியும், நீளமான துரட்டியுமிருந்ததாய் ஞாபகம். புதர்மண்டிய தோட்டம் போய் ஒரு சில தென்னைமரங்கள் வந்தன. இதெல்லாம் ஏறத்தாழ 25-30 வருடங்களுக்குமுன். இப்போது மும்பை கழிப்பறையிருக்கிறது. கழிப்பறை இயந்திரமயமாக்கப்பட்டதாய் தெரிகிறது. அந்த பெரிய வீதியின் எல்லா வீடுகளிலும் ஒரு கழிப்பறை இருக்கிறது. இது எப்போதும் இல்லாத ஒன்று புதிதாய் வந்தது.
ரொம்ப நாளாய் இருந்த ஒன்றும் உடைந்தது. அது பெண்களுக்கான மாதவிலக்கு குச்சில்.

பாட்டி திண்ணையில் உட்கார்ந்து எதிர்த்த வரிசையில் உள்ளவர்களிடம் பேசுவாள். அவர்கள் சிலசமயம் எங்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்தும் பேசுவார்கள். நல்ல நாள் கிழமையென்றால் மட்டும் அவர்கள் உட்கார்ந்தயிடத்தில் தண்ணிவிட்டு கழுவுவாள். என்னையும் அவள் தொடமாட்டாள். ஏன் யாரையும் தொடமாட்டாள். நான் எல்லார் வீட்டிலும் புகுந்து புறப்படுவேன். எதிர்த்த வீட்டு மனிதர்களும் அப்படித்தான். அவர்களும் சில கொல்லைப்புறத்து மனிதர்களுக்கு தூக்கிபிடித்தே தண்ணீர்விடுவார்கள். பாட்டி பார்க்காத மனிதர்களை அவர்கள் பார்க்கலாம். ஆனால் தொடமாட்டார்கள். அப்போதிருந்தே நான் கருத்தாளனாகவோ புரட்சிக்காரனாக மாறிவிட்டேன் என்று சொன்னால் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள். நம்பவும் கூடாது. அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை என்பதுதான் உண்மை. அது அந்தக்காலம்.

சாதி சிலசமயம் தோலிருந்த அழுக்காயிருந்தது. கழுவமுடிந்தது. சிலசமயம் சட்டைக்குள்ளிருந்தது. குளிக்கமுடிந்தால் துடைக்கமுடிந்தது. சிலசமயம் ரொம்ப உள்ளவே, நானே தொடமுடியாத தூரத்தில், எனக்கே தெரியாமல். கிராமங்களில் அது தோலின் மேலும், சிறு நகரங்களில் சட்டைக்குள்ளும், பெருநகரங்களில் மனித நரம்புகளிலும், DNAக்களிலும் ஒளிந்துகொண்டிருக்கிறது.

சாதி ஒழிப்பில் நாம் முன்னேறவேயில்லை என்று சொன்னாலும், ரொம்பத்தான முன்னேறிட்டோம் என்றாலும் இரண்டிலுமே கொஞ்சம் உண்மையும் பொய்யும் இருக்கத்தான் செய்கின்றன. 250 ஆண்டு ஜனநாயகத்தில் கறுப்பர்களின் முன்னேற்றத்தை விட
60 ஆண்டு இந்திய ஜனநாயகத்தில் நமது தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறித்தானிருக்கிறார்கள். இந்தியாவின் வறுமைக்கோடு 20 சதவீததிற்கும் கீழே போயிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். சாதிகளை மையம்கொண்டு சேரும் போக்கு[polaris] கனத்துவருவது சாதிகள் ஒழிப்பதில் நல்லமைல்கல்லாகவே படுகிறது. சாதிகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல் முதல்படியாகவும், அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் இருக்கமுடியும் என்பது ஒரு சிலரின் எண்ணம். சாதிகளை அழிப்பதை ஒரு நெடுங்கால கனவாகயிருக்கலாமேயொழிய அது ஒருவரின் வாழ்நாளின் குறிக்கோளாகயிருக்க முடியாது. எந்த தலைவராவது என் வாழ்நாளில் சாதி ஒழிக்கப்படமுடியவில்லையே என்று வருத்தப்பட்டால் அது பிரச்சனையின் பலம் புரியாத அறிவீனம். இந்த பிரபஞ்சத்தில் கடந்த 2000 வருடமாக இரண்டு மட்டுமே அழியாமல், மாறி வளர்ந்து கொண்டுவந்திருக்கிறது. ஒன்று முதலாளித்துவம், மற்றது சாதி. இரண்டுமே காலத்திற்கேற்ப மாற்றம் செய்துகொண்டு வளர்வதில் கில்லாடிகள் என்று நிருபிக்கிறார் ஜனார்த்தன் சமூக அறிவியல் பற்றிய கட்டுரையாளார். சாதி வேறுபாடகற்றல் ஒரு வளரும் சமுதாயத்தின் அடிப்படை குறிக்கோளாகமாற்றப்படவேண்டும். தலைமுறை தாண்டி எடுத்துச்செல்லப்பட வேண்டிய தலையாய செயலாகிறது. சாதிபற்றி தெளிவான அறிவும், அதன் தோற்றம், வளர்ச்சி பற்றிய தெரிதலும் அதன் திரிபுநிலை தெளிவும் கற்றபின் அது வழக்கொழிந்துபோகிவிடவேண்டிய பழைய காலத்து முறை என்பதுதானே விளங்கிவிடும்.

இந்த அடிப்படையிலிருந்துதான் கிளைவிட வேண்டும் தலித்திய இலக்கியம்.

தலித்தயம் இலக்கியமோ, இசமோ, கொள்கைமுழக்கமோயல்ல. அது ஒரு சிலரின், ஒரு சில காரணத்தால் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றின் வடிவமைக்கப்பட்ட சமூதாய கட்டமைப்பால் ஏற்பட்ட வாழ்க்கைமுறை. தொழிலால், பொருளாதாரத்தால், பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. தலித் என்ற வார்த்தைகளின் குறிப்படுதல் மட்டுமோ, வலி, ஊனம் மட்டுமோ அதனை தலித் இலக்கியமாகத்தகுதி படைத்ததாகிவிடாது. அவை வெறும் ஆவணங்களாக, நல்ல குறிப்புகளாக மாறமட்டுமே தகுதிபெறும். அதைத்தாண்டி தனது மனித அநுபவம் கலந்து, மானுடதரிசனம் தாங்கிய பெரிய காலப்பதிவாகும்போது அது தலித்திய இலக்கியமாகிவிடுகிறது, கவனிக்க அதுவும் அந்த காலத்திற்கான இலக்கியமாகிவிடுகிறது. [ இன்னும் 50 ஆண்டுகள் கழித்து தலித்துகளின் மாறுபட்ட மேம்பட்ட வாழ்க்கைச் சரித்தரித்தில் கருக்கு பழைய வரலாறாகவோ, ஒரு காலத்தில் குறிப்பாகவோ மாறலாம். ]

நான் படித்த தலித்திய எழுத்துகள் மிகக்குறைவு. சில கீற்று இணையக்கட்டுரைகள், ஒரு சில எழுத்தாளர்களின் எழுத்து வாசிப்பு என்பதலானதுவே எனது உலகம். அழகிய பெரியவனின் கட்டுரைகள், ரவிக்குமாரின் தெறிந்துவரும் அறிவுப்பார்வை, கண்மணி குணசேகரன் எழுத்துக்கள், நண்பர் அன்பாதவனின் நெருப்பின் காய்ச்சிய பறை, புதிய மாதவியின் சில எழுத்துகள், கருக்கு, இமையம், சோ தர்மன், சிவகாமியின் சில எழுத்துகள் என நாய் நக்கியதுபோல தேடலில் அங்கொன்றும், இங்கொன்றுமாய். இன்னும் படிப்பும், புரிதலும் எனக்கு அதிகம் தேவை. நான் போகவேண்டிய தூரம் ரொம்பவே அதிகம். கதைகளை விட அ.மார்க்ஸ் மற்றும் மற்றவர்கள் போடும் கருத்துச் சண்டைகளும் அதனால் எழுகிற புதிய கருத்தாக்கமும் என்னை ஐவரி டவரின்(Ivory) சிந்தனையிலிருந்து என் பார்வையை கொஞ்சம் விசாலாமாக்குகின்றன. ஆனாலும் இப்போது வாசிக்க கிடைக்கிற எழுத்துக்களிலிருந்து என் புரிதல் சரியாகயிருக்குமானால், பெரும்பாலான தலித் இலக்கியத்தின் Recipe கீழ்கண்டவற்றால் தயாரிக்கப்படலாம்.

மதத்தின் மேலடுக்கு மீதான கொள்கை தாக்கம், புராண இதிகாசங்களின் மீது வெறிப்புமிழ்தல்,
மற்ற மதங்களும், இசங்களும் பிரமாதம் என்கிற பிரமை அல்லது ஒப்பீட்டு தாழ்வு கொள்ளல்,
எதிர்ப்பும், வெறுப்பும், கோபமும் மட்டுமே தங்களது உணர்ச்சி என்பதான வலி,
விளிம்பிலிருந்து உள்ளே வராது, வெளியேறுவதான உணர்ச்சி கொந்தளிப்புகள்,
அறிவுமயமான தீர்வுகள் மடத்தனமானவை என்பதான அடிப்படை எண்ணம்.. இந்த வரிசையிலே சில…

இது என் கருத்தல்ல. தலித் இலக்கியத்தை நகர்த்து செல்லும் சில தலைசிறந்த எழுத்தாளர்களின் கருத்தையே நான் இங்கு என் புரிதலுக்காக மறுபதிவுசெய்கிறேன். அதைக்கொண்டு யோசிக்கையில் தலித் இயக்கத்தின் முன்னான சோதனைகள் என்னாவாக இருக்கலாம் என்பதை நோக்கி என் சிந்தனைகள் பயணிக்கின்றன.

1) மதத்திற்குள்ளிருந்து போராட்டம், வெளியேறி போராட்டம்
[ அரங்கத்தில் ஒரு சில வினாக்கள் எழுப்பட்டன. இந்து மதம் சாக்கடையென்றால் அதிலிருந்து ஏன் வெளியேறக்கூடாது. அதற்கு ஆசிரியர் தனது ஏஞ்சலின் மூன்று நண்பர்கள் கதையின் நுண்ணிய அரசியலை மறுவாசிப்பு செய்யுமாறு கூறினார். மதமாற்றம் இந்த கட்டுக்களை பெரிதாக உடைப்பதாகயில்லை என்கிற கருத்தை முன்வைத்தார். அது தற்காலிக தப்பித்தலாகவே அமையுமேயொழிய நிரந்தர தீர்வல்ல என்பதான கருத்துக்கள் உலவின ]
2) வெற்றியின் முடிவுகள் என்ன என்பதை வரையறுக்கமுடியாமை

[ தாங்கள் செய்கிற தொழிலால் வேறுபடுத்தி பார்க்கப்படுவதால் தொழிலின் சமன்பாடுகள் மாற்றப்பட்டால் சமூகப்பார்வை மாறுமா, எந்தப்புள்ளி தலித்திய பண்பாட்டு, அரசியல் இயக்கத்தின் வெற்றிப்புள்ளிகள். இல்லை இந்தப்போராட்டங்கள் மனிதகுலத்தின் எப்போதும், எதையாவது எதிர்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியத்தத்துவத்தின் ஒரு அங்கமாகுமா? எதிர்ப்பின்றி அமையாது இவ்வுலகம்.]
3) எந்தவிதமான அடையாளங்களை கொண்டு சாதி அடையாளங்களை தொலைப்பது
[மார்க்கிசியவாதியாக ஓரே உலகம், ஓரே மனிதன், தமிழ் தேசிய தமிழனாக, இந்துவாக, மதமற்ற நாத்திகனாக எந்த முகமுடி கொண்டு தொலைப்பது]
4) தாங்கள் ஈடுபட்ட சிறுதொழில்களின் இயந்திரமயமாக்கப்படுவதால் ஒருபக்கம் நல்லதேயாயினும் அதன் வளர்ச்சியில் மாறும்போக்கில் எப்படி தங்களை இணைத்துகொள்வது [மனித கழிவு நீக்கம் காணாமல் போகலாம். இறப்பு பின்னான சடங்குகள் மறைந்துபோகலாம். இன்னிக்கு செத்தா, இன்னிக்கே பாலு என்கிற மின்னியந்திர வசதிகள் தொழிலின் முகத்தை மாற்றலாம். அப்போது சிறுதொழில் செய்து தங்களது உடலுழைப்பை நம்பி வாழ்க்கை நடத்துகிற தோழர்களை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு கொண்டுவரச்செய்வது ?
5) தலித் இலக்கியத்தில் அதன் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கம் செய்யும் பொருட்டு அதன் செறிவான பகுதிகளை, கூறுகளைப் பூரணமாக உள்வாங்கி, அவற்றை இலக்கியப் படைப்பின் மூலம் அடுத்தடுத்த காலகட்டத்துக்குக் எப்படி கடத்துவது ?.
6) முன்னேற்றங்களை துறக்காது, பொருளாதார, சமூக, ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதோடு பழைய அடையாளங்களை
எப்படி கைவிடுவது ?
7) வேகமும், வீர்யமும் குறையாது, திறனாய்வுக்கும், சுயசோதனைக்கும், விமர்சனத்திற்கும் தயாராயுள்ள ஒரு திறந்த புத்தகமாக
தலித்தியத்தை எப்படி அமைப்பது ?

தீர்வுதான் என்ன ?
இந்த உலகத்தில் நீண்டகாலம் மனித இனம் எதன் பொருட்டோ பிரிக்கப்படாமல் சமனாய் வாழ்ந்ததாய் சரித்தரமில்லையே என்பது
உண்மை சொல்லும் வரலாறு. மாற்றம் எப்படி மாறாததோ அதுபோல வளர்ச்சியும். வளர்ச்சியும் மாற்றமும் சமத்துவமின்மையின் மூலமே சாத்தியப்படுகிறது. வலியின்றி சமமான மாற்றம், முன்னேற்றம் என்பது புத்தக கொள்கையாகவேயிருக்க முடியும் என்கிறது கசப்பான வரலாற்று உண்மைகள். எல்லா தீர்வுகளும், தலைவர்களும் ஓரளவு தோற்றுத்தான் போனார்கள். சமூகத்தின் அசுரப்பசி அவர்களை தின்று விழுங்கி வளர்ந்தது.

இந்தியா சமூகத்தின் ஒரு முக்கிய அங்கம் வர்ணம் அது பின் சாதியாகி மாறிகிறது என்கிற அம்பேத்கார். சமத்துவமின்மையே இந்து மதத்தின் அதன் அடிப்படை என்று அழுத்தமாய் கூறுகிறார். அதையே எதிர்க்கவும் செய்கிறார். இயற்கை சமத்துவமானது ஆனால் அது சமத்துவமின்மையின் மூலமே சமத்துவத்தை தக்கவைத்து கொள்கிறது. அதை மறுபடியும் சமன் செய்யவே மானுடத்தலைவர்களாய் மார்க்சும், ஆதிசங்கரரும், ராமானுஜரும், அம்பேத்காரும், பெரியாரும் முயல்கிறார்கள். ஆனாலும். எல்லா தீர்வுகளும், தலைவர்களும் ஓரளவு தோற்றுத்தான் போனார்கள். நாம் எதற்காக போராடுகிறோமோ அதற்கான அர்த்தங்கள் அடுத்த தலைமுறைக்கு தேவையற்றதாய் போகிறதுதான் தீர்வாய் தெரிகிறது. வளர்ச்சியும், அதனால் ஏற்படுகிற சமனமின்மையும் பின் அதை தொடர்ந்து துரத்துகிற செயலும் அதனால் ஏற்படுகிற தற்காலிக சமத்துவமும்தான் மானுடகுலத்தை உயர்த்தி செல்லும் சுழற்சிகளாக எனக்குப்படுகிறது.

உளவியல் ரீதியான விடுதலையே உண்மையான விடுதலை. ஒரு மனிதனின் மனது சுதந்திரமாக இல்லையெனில், அவன் சங்கிலியால் கட்டப்படவில்லை எனினும், அவன் ஓர் அடிமையே; சுதந்திர மனிதன் அல்ல. அவன் சிறையில் இல்லையெனினும், அவன் ஒரு கைதியே. அவன் உயிரோடு இருந்தபோதும், இறந்ததற்கு ஒப்பானவனே. மனதின் விடுதலையே ஒரு மனிதனின் இருப்பிற்கு சான்று.
– டாக்டர் அம்பேத்கர்
இப்போதைய பண்பாட்டு, அரசியல் தலித் இயக்கங்கள் மனிதவிடுதலையை நோக்கி, நானும் பிரபஞ்சத்திலொருவன்[அகம் பிரம்மாஸ்மி] என்பதைநோக்கி பயணப்பட்டு உளவியல் ரீதியான விடுதலைக்கும், மனதின் விடுதலைக்கும் போவதே அண்ணல் அம்பேத்கார் சொன்னது போல உண்மைத்தீர்வாக அமையமுடியும் என்பதே என்னால் இப்போதுயோசிக்கமுடிகிறது. It is big dream and vision with many short and long term goals. சின்ன சின்ன வெற்றிகளை குறிய கால பல திட்டங்களையும் உள்ளடக்கிய பெருங்கனவாகவே அது அமையமுடியும், நம்பிக்கை என்கிற அடித்தளத்திலிருந்து. ஆனாலும் நாம் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. இருக்கும். இருந்துகொண்டேயிருக்கவேண்டும். வேறு வழியில்லை.

எனக்கு தெரிகிற நம்பிக்கை ஊற்றுக்கள்:
1) பெரிதாய் சிந்திக்க முடியுமா ? Mr. Toilet – singapore man – no profession is bad as long as it is big. மிஸ்டர் சிம், இந்தியாவில் ஒரு பில்லியன் மக்கள் தொகையில் 20 கோடி மக்கள் நல்ல கழிப்பறை சேவைக்காக ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கொடுக்கும்போது கழிப்பறை மாதம் 600 கோடி ரூபாயும், வருடம் 7200 கோடிக்கான சந்தையாகவும் மாறிவிட வாய்ப்புண்டு. இவை முதல் மற்றும் இரண்டாந்தர நகரங்களை குறிவைத்த சேவையாகயிருக்கலாம். அதற்கான முதலீடுகள் நிறுவனங்களிலிருந்து, Social responsibility Budget என்ற தலைப்பின் கீழ் ஓதுக்கலாம். இதனால் நிறுவனங்களுக்கும் கொஞ்சம் வரிச்சலுகையும் சமுதாய முன்னேற்றத்தில் பங்கு கொண்ட சமூக அக்கறையும் அடையலாம். இதில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் வெறும் தொழிலாளர்களாக மாற்றுமிராது இலாபத்தில் பங்குகொள்கிற பங்குதாரர்களாகவும் அமையலாம். ஒரு தொழிலினால் அடையக்கூடிய வருமானம் ஏற்கனவேயிருக்கிற தொழிலைவிட அதிகமானதாகவும், சமுதாய அந்தஸ்து பெற்றதாகவும் மாறும்போது அந்தத்தொழிலின் மீதான கண்ணோட்டம் முற்றிலும் மாறுபடுகிறது. முடிதிருத்தும் தொழில் முடி அழகுபடுத்தும் தொழிலாளாகவும், மனித அழகியலின் அங்கமாகவும் மாறும்போது அதன் சந்தை பெருகி, அதனால் பெருகிற வருமானம் மாறும்போது பழைய சமன்பாடுகள் கட்டுடைகின்றன. நமது நடிகர்கள் ஒரு நூறாண்டுக்கு முன்னால் கூத்தாடிகள்தானே. (ஆகா!!) இப்போதைக்கு அவர்களுக்கு கிடைக்கிற சமுக வெளிச்சம், மாறிய பார்வையும் பெருகிய வருமானம் மற்றும் தொழிலைப்பற்றிய கண்ணோட்ட மாற்றாத்தால்தான் என்று சொன்னால் அதில் அதிகளவு உண்மையிருப்பதாக நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். உலகத்தில் ஆறு பில்லியனுக்கு மேலான மக்கள் தொகையில் 2.7 பில்லியன் மக்களுக்கு கழிப்பறைசேவை கிடைப்பதேயில்லை. அதற்காக மிஸ்டர் சிம், உலக வளர்ந்துவரும் நாடுகளெல்லாம் பேசிக்கொண்டேயிருக்கிறார். நிறைய தனியார் நிறுவனங்களும் இந்தத் தொழிலில் வரலாம். அதன் முகம் மாறும். ஒரு கால்செண்டரை ஆளைவிட, ஒரு அரசாங்க அலுவலக அடிமட்ட ஊழியனைவிட கழிப்பறை சேவைத்தொழிலாளி சம்பாதிக்கலாம்.
[அன்பாதவன் : என்னதான் நிறுவனம் வந்தாலும் மறுபடியும் தலித்தான் கழிப்பறைசேவைக்கு தேவைப்படுகிறதே ? எனது பதில்: அப்படியிருக்கமுடியாது இவ்வளவு பெரிய சந்தையும், பணமும் மற்றவர்களையும் தூண்டலாம். இதுவும் இன்னொரு வேலைவாய்ப்பு துறையாகலாம். அவ்வளவுதான். ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் சத்திரம்வைத்து வாழ்ந்த இனத்தவர்கள் கூட அவ்வளவாய் சமூக அந்தஸ்து பெற்றவர்களாயில்லை. அது ஹோட்டல்களாகவும், லாட்ஜுகளாகவும் மாறியபோது பணம்செழிக்கும் தொழிலாய் மாற்றம்கொண்டபோது அதன் மீதான கானல் அழுக்கு களையப்பட்டதாகவே எனக்குப்படுகிறது. ]
2) தவறாக பதிந்துவிட்ட சிந்தனைகள் : காலம்காலமாக நாம் தாழ்த்தப்பட்டிருக்கும் என்று நீங்கள் எண்ணவேண்டாம் என்று எனக்குபடுகிறது. உயர்சாதிக்காரர்கள் மற்றுமே படித்தவர்கள் மற்றவர்களெல்லாம் சுத்தமாக நசுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதில் கொஞ்சம், ஓரளவே உண்மையிருக்கலாம். தரம்பால் என்கிற அறிஞர் காந்தியவழி வந்தவர் செய்த ஆராய்ச்சி அதை நிறுவுகிறது. 1930ல் காந்தி சொன்னார், நூறுவருடங்களுக்கு முந்திய இந்தியாவைவிட இப்போதைய இந்தியா ஆங்கிலேய காலத்தில், கல்வியறவில்லாத போய்விட்டது. அது உண்மையே என்பதை தரம்பாலின் ஆராய்ச்சிகள் நிரூபித்தது.
1835 – 38 ; 1 lac schools in Bengal, one school 500 boys [ Literacy in india was higher than that in England]
1800 ; 125 lacs school in Madras presidency ; 95 laksh in England
Decay : 1822-25 we end up with only 1.5 lakhs school.
1822-25 ; FC: 13% in south arcot, 23% in Madras ; BC : 70% Sales & Tirunelveli & 84% south Arcot
1750 – Indian Industrial Output – 25% ; 1900 – 2%
நினைத்துப்பாருங்கள், நாம் இப்போது பேசுகிற மெக்காலே படிப்பும், அலுவலகமும் ஒரு நூறுவருடத்தவயே. நாம் பேசுகிற ஜனநாயகம், மார்க்கிசயம் , எல்லாம் கொஞ்சம் காலத்தவைதான். ஒரு இருநூறு வருடங்களுக்குமுன் யாராவது நீதி கிடைக்க காசு கொடுக்கவேண்டுமென சொன்னால் நீங்கள் நம்பியிருக்கமாட்டீர்கள். சாதியக் கொடுமையும், மடத்தனமான ஆதிக்க மனப்பான்மையும் ஏற்படுத்திய சீரழிவுகள் ஒரிரூ நூற்றாண்டுக்கு உட்பட்டத்துதான். ஓரிரு தலைமுறைகளில் திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையும், ஒன்று படுகிற உலக கிராமத்தின் கட்டாயமும் மாறிவிடும் என்று நம்பவைக்கிறது.
3) பழைய நூற்றாண்டின் தலித், இந்த நூற்றாண்டின் இந்தியன் அவன் என்னைவிட வசதியானவன். அழகாயிருப்பான். பக்தியானவன். நன்றாகபடிக்கவும் செய்வான். படித்தபோது அவன் எந்த பிரிவென தெரியாது. பத்தாவது வகுப்பில் எந்த பிரச்சனையுமில்லை. +2வில் தெரிந்தது. அவனுக்கு நல்ல கல்லூரி கிடைத்தது. எங்கள் நட்பு தொடர்ந்தது. அவனுக்கு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. முழுக்க முழுக்க அவன் தகுதியிலே கிடைத்தது. அந்த வேலையைவிட்டு இந்தியாவின் உயர்ந்த மேலாண்மை படிக்கப்போனான். அவனுக்கு இடம் கிடைப்பது எளிதாகவுமிருந்தது. படித்தான். ஊண், உயிர் கொடுத்து படித்தான். மாதம் லட்சம் ரூபாய் கொடுக்கிற
அந்நிய நாட்டு வங்கி கம்பெனியின் வேலை வந்தது. அவன் அதை எடுத்திருக்கலாம். அவன் செய்யவில்லை. தான் வளர்ந்த சேரிப்பகுதியின் தனது அன்னையிட்டு வளர்த்த இட்டளி வியாபாரத்தை நிறுவனமாக்கி செய்தான். மெக்னால்டும், கோக்கும் உலகச்சந்தைக்கு போகும்போது நம்மூரு இட்டளி ஏன் உலகம் பறக்ககூடாது என்று வினா எழுப்பினான். அதற்கெனவே நிறுவனம் ஆரம்பித்தான். அது இப்போது தவழ்ந்து வளர்ந்து வருகிறது. அவனது ஆசிரியர்கள் எல்லாரும் அவனை தலைமேல் வைத்து
கொண்டாடினார்கள். நான் சந்தோசத்தால் மனம் நெகிழ்ந்தேன். என் வலிகள் இருந்தயிடம் இல்லாமல் போயிற்று.

எவ்வளவு பெரிய தன்னலமற்ற தியாகம் எனத்தெரியுமா நண்பர்களே, அவன் என் முன்னால் விசுவரூபமெடுத்து நிற்கிற
கண்ணணாய் போனான். அந்த கார்ப்பரேட் குருஸ்சேத்திரத்தில் அவனின் செயல் பல கீதைகளை சொல்லமால் சொன்னது.
உங்கள் பாசையில் அவன் தலித். எதுவோ ஒன்ணு இருந்துவிட்டு போகட்டும். கடைசியாய் சொன்னான், , நான் ஒடுக்கப்பட்டவனல்ல, வர்க்கம் தாண்டிவிட்டேன்.. வலியிருந்தாலும் தாண்டிக்கொண்டேயிருப்பேன். என்று, இவ்வளவு படித்த எனக்கும் என் தலைமுறைக்கும் இடஓதுக்கிடு உபயோகிப்பது தவறென்று சொன்னது ஒரு தனித்த குரலாக ஒலித்தது.

அவன்தான் போன நூற்றாண்டின் இறந்துபோன தலித்.. அவனைப்பற்றி யாரும் தலித் இலக்கியம் எழுதுவதில்லை. மறந்து கூட, மருந்துக்குகூட அவனைப்போன்ற கதாபாத்திரங்கள் வந்துவிடக்கூடாது என்பதான இலக்கியமாகவே தலித்திலிக்கியம் மாறிவிட்டது. ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே சொல்லவேண்டும், போராடி வெற்றிபெற்றவர்களை சாஸ்திரத்துக்குகூட சொல்லவிடக்கூடாது என்று மார்க்சியம் கற்றுக்கொடுத்திருப்பதாக நிறைய எண்ணக்குமிழிகள் இங்கே. அவன் உற்சாக ஊற்றுக்கண். அவன் நந்தனார் தெருக்களை எப்போதெ தாண்டிவிட்டான். அவன் வலிகளை மதிக்கிறேன். இவர்களின் வளர்ச்சியே அவர்களின் வலிக்கு மருந்தாகும். நம்மில் நம்மையறியாமல் உயிர்த்து கிடக்கும் சாதிய உணர்வுக்கு அக்னியாகலாம். அக்னியே இதன்னமாம.. அக்னியே சுவாக:

அட ! நீங்களும் நம்பிக்கையை எழுதலாமே !

என்னையா தள்ளிப்போகச் சொல்கிறார் கேட்கிறார் சண்டாளன். அடடா இவனல்லாவா பிரம்மம், குற்றணர்வு கொண்டு
அகந்தை அழிக்கிறார் சங்கரர். அவருக்கு முடிந்தது. அப்புறம் நம்மால் முடியவில்லை. காலக்குட்டை அழுக்கேறிவிட்டது. தூர்வரலாம் வாருங்கள்.

சாண்டாளோஸ்து ஸ து த்விஜோஸ்து
குருரித்யேஸ மனீஸா மம..
[நீ சண்டாளனோ பிராமணனோ, குரு என்பது உறுதியான நம்பிக்கை]

நண்பர்களே! உங்களின் எழுத்து என்னை சிந்திக்கவைத்தது. உங்களின் பாதகமலங்களுக்கு என் வணக்கங்கள். உங்களின் போராட்டத்தின் உண்மை , சத்தியம் உங்களை வழிநடத்திசெல்லும். உங்கள் எழுத்தின் தீ என்னிளுள்ள அழுக்குகளை எரிக்குமெனின் நான் சந்தோசப்படுவேன். வாழ்த்துக்கள்!
____________________________________________________________
விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்

புத்தகங்கள் : ஏஞ்சலின் மூன்று நண்பர்கள், அம்மாவின் நிழல், அப்பாவின் போட்டோ

***********

நிலைமை – ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதை. ஒரு காலத்தில் சிங்கப்பூர் சலூன் கடை வைத்து புகழ்பெற்ற குடும்பம் காலமாற்றத்தால் அதன் அடுத்த தலைமுறை சிதைந்து போகிறது. பெரிய பையன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்கிறான். அதனால் கிட்டத்தட்ட குடும்பத்திலிருந்து விலக்கிவைக்கப்படுகிறான். அடுத்த மகனும் முடிதிருத்தும் வியாபாரத்தை சரிவர செய்யமுடியாத சொத்தை விற்று ஒவ்வொரு ஊராய் புலம்பெயர்ந்து நகரத்தில் கட்டிடத்தொழிலாளியாய் அடைக்கலமடைகிறான்.

கதை இரண்டாவது தலைமுறை பேரனின் பார்வையிலிருந்து எழுதப்படுவதால் அசாதரணமாய் தலைமுறை நிகழ்வுகள் எளிதாய் பதிவு செய்யப்படுகின்றன. சிங்கப்பூராரின் முதற் பையன் தாழ்த்தப்பட்ட பெண்ணை மணந்து கொண்டதால் அவரின் வாழ்க்கை சக்கரம் திசை திரும்புகிறது என்பதே கதையின் மையம். இரண்டாவது மையம் நகர்புறம் நோக்கிய தொழில்கள் மாற்றங்கள் கொள்கின்றன.

முடிதிருத்தும் தொழிலிருந்து கட்டட வேலைக்கு வேறெங்கேவோ போய் வேறேதோ சாதிப்பெயர் சொல்லி வாழ வேண்டிய நிலையில் தன் சொந்தங்களிருப்பதை பார்ப்பதோடு கதைமுடிகிறது. தனது சுற்றங்களாவது நன்றாகயிருக்கின்றனவே என்கிற நம்பிக்கையோடு அதனடியில் நுட்பமாய் தன் குடும்பம் தாழ்த்தப்படுவதை பற்றியான சோகம் எந்த ஆரவரமில்லாமலே நம்மை கவ்விக்கொள்கிறது. இந்த கதையில் எந்த வில்லனுமில்லாது எல்லாரும் அவர் அவர்கள் அவர்களாகவேயிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தை பக்கதிலிருந்து பார்ப்பதைபோன்ற பிரம்மையை , சோகத்தை இந்த நாவல் தருகிறது. இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாமோ என்கிற வாசக ஆசையை கத்தரித்து முடித்தது, படிப்பவனின் இதயத்தில் இன்னும் சில பக்கங்களை எழுதச்செய்யலாம். அதுவே இந்த குறுநாவலுக்கான வெற்றி.

அப்பா தாழ்ந்து போய் விட்டார் என்பதாலா அல்லது தாழ்த்தப்பட்டவளோடு போய்விட்டார் என்பதலோ என்னவோ தெரியவில்லை. சொந்தக்காரர்களிடமிருந்து எந்தவித கொடுக்கல் வாங்கல் உறவுமில்லை. படிப்பு உத்தியோகம் கூட பெரியதாய் தெரியவில்லை. நிலைமை மோசமாகயிருந்தது.

ஏஞ்சலின் மூன்று நண்பர்கள் – கலா,இந்திரா, கதைசொல்லி , ஏஞ்சல் இந்த நான்கு இளம்மொட்டுகளின் கதை. அவர்களின் வர்க்க, சாதிபேதமற்ற சின்ன உலகம். அதுதான் எத்தனை அழகு. யதார்த்தம். குழப்பமற்ற உணர்வுகளால் வேயப்பட்ட அந்த கடவுள் உலகத்தின் அன்புதேவதை, அவள்பெயர் ஏஞ்சல். கடவுள்பணி செய்கிற அவளின் அருட்தந்தையின் பெயரிலிருந்தது அவளுக்கு இயற்கையாயகவேயிருந்தது. ரொம்பநாள் கழித்து தனது சின்னவயது ஏஞ்சலை கைம்பெண்ணாய் பார்க்கிறார். அவள் மறுபடியும் தங்களது இனிய பால்ய நினைவுகள் தொடரவேண்டிமென விருப்பத்தை தெரிவித்து நகர்கிறாள். Salad Days என்று சொல்லப்படுகிற நாட்களின் ஒரு ப்ளாஸ்பேக்காக சொல்லப்படுகிறது. சில இறந்தகாலங்களை நினைவுகளில் மட்டுமே மீட்கமுடிகிறது.

‘என்னையும் கலாவையும் ஞானஸ்தானம் பெற எவ்வளவோ கேட்டுப்பார்த்தார் பாதிரியார். எங்களுக்கு அவற்றில் உடன்பாடில்லை
என்பதைவிட அவை அந்த வயதில் புரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் மறுத்துவிட்டோம் அவற்றாலேயே கோவிலில் பல நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒதுக்கப்பட்டிருந்தோம்.

“கா வயிறு கஞ்சியாயிருந்தாலும் கவுரமா வூட்ல குடிடா..” அம்மாவின் வார்த்தையில் வாழ்க்கைபற்றி நம்பிக்கை இருந்தது.

[ இந்த கதை எனக்கு கருக்கை, பின் தொடரும் நிழலின் குரலை ஞாபகப்படுத்தியது. எதுவுமே நிறுவனப்படும்போது அதற்கான அதிகாரமையங்கள் உண்மைக்கு, நோக்கிற்கு தொலைவாகிவிடுகின்றன. ]

நானும் ஞானஸ்தான அப்பம் ஓரிருமுறை மைக்கேல் மூலம் வாங்கி சாப்பிடிருக்கிறேன். இயேசுவின் இரத்தமும், சரீரமும் [அப்பமும், திராட்சை ரசமும் ] மார்கழி மாசத்து பெருமாள்கோவில் தயிர்சாதமும் வெங்காச்சம் தோசை அளவுக்கு நன்றாயில்லாதது என் நாக்குபழக்கமே தவிர வேறெதுவுமில்லை. கோவிலும், கோவில் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அதிகமாய் பதிவு செய்யப்படாதவை. அவை சொல்லாமல் சொல்லும் விசயங்கள் பல. எல்லா நேரங்களிலும், எல்லா கடவுளர்களும், எல்லா மனிதர்களையும் வெற்றி கொள்வதில்லை. அவர்களும் தங்கள் கட்சிக்கு ஆள் சேர்க்க தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள். கதையின் நடை தளர்ச்சியென்றாலும் அதன் உயிர் உண்மையும் அதில் தொக்கி நிக்கும் காலச்சக்கரமும் மனித உணர்வுகளும்தான்.

சுமை : அழகேசன் பிறவியிலே அங்க ஹ¥னமானவன். விசாலம் அவன் ஆம்படையாள். அவனுக்கு சான்றிதழ்பெற கிட்டத்தட்ட ரிஸி பத்தினி சாவித்திரி ரேஞ்சுக்கு எமன் மாதிரியிருக்கிற அதிகாரிகளிடம் சண்டையிட்டு ஜெயிக்கிறாள். சாதரணக்கதைதான். அழுத்தமற்ற வழி நடத்தல். செய்யப்படுகிற தொழில் பற்றிய வர்ணனைகள் நன்றாய் அமைந்திருக்கின்றன. சீரான சோகம், கட்டுப்பாடு மீறாத கதாபாத்திரங்கள், நேர்மறையான முடிவு, ஏதோ கதைப்போட்டியை குறிவைத்து எழுதப்பட்டதாய் தெரிகிறது. ஹ¥ம்.. எண்ணிக்கையில் ஒன்று கூட அவ்வளவுதான்.

தனம் வீட்டு கல்யாணம் :
தாழ்த்தப்பட்ட பெண், கற்பழிந்த போகிறாள், அவளுக்கு கை கொடுக்கிறான் ‘ எவ்வளவு நெஞ்சுரம் மிக்கவனா மாமன் ; அதிசயிக்கிறாள் அமுதா. நாமும் அதிசயிக்கிறோம். எப்படி இவ்வளவு மட்டமான கதைகளையும் ஆசரியரால் எழுதமுடிகிறது என்று. இந்த புத்தகத்திற்கு திருஸ்டி வந்துவிடக்கூடாது என்கிற நம்பிக்கையிலிருக்கலாம் என்று மனசாந்தி கொள்கிறேன்.

என்று வருவான் அந்த ராஜகுமாரன் :

அமிர்தத்தின் கனவில் ராசகுமாரன். . பிரமாதமாய் பின்னப்பட்ட கதைக்களம். சரியான காதல் சொல்லாடைகள். கனவில் கூட அவள் ராசகுமாரியாகவோ, மந்திரி பெண்ணாகவோயில்லை, வெட்டியான், பிணம் எரிக்கும் சேவை செய்பவரின் பேத்தியாகவேயிருக்கிறாள். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாய் பேசுகிறாள். பயப்படுகிறாள். பயந்து கொண்டே காதலிக்கிறாள். ஊடலான சிலேடைகள். Sweet nothing என்று சொல்லபடவேண்டிய வசனங்களில் கூட தனது இனத்தின் அடிமைபற்றி பேசுகிறாள். அவளது தலை கனவுக்கோட்டையிலிருந்தாலும், அவளின் கால்கள் சேரியில்தானிருக்கின்றன என்பதை சொன்னாமல் சொல்லும் விதம் அருமை. துடைப்பகட்டைக்கு பட்டு குஞ்சலாமா.. என்று கனவை கலைத்து, திட்டுகிறாள் தாய். நமக்கும் அது கனவென்று தெரிந்தே கலைந்துபோகும்போது வருத்தமாகத்தானிருக்கிறது. பாவம் அமிர்தம்..

ஆரவாரமில்லாத, நிறைவின்மையையும் சோகத்தையும் நம்மீது நமக்கு தெரியாமல் ஏற்றுகிறது இந்த கதை.. நல்லாத்தானிருக்கு..

மண்ணாங்கட்டி :
ஏதோ சித்தபுருஸன் போன்று பில்டப் கொடுக்கப்பட்ட ஒருவன். தனது குடும்பம் தொலைத்து ஏதோ ஊரில் யாரோ தயவில் வாழ்க்கை சக்கரம் ஓட்டிக்கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து தேவையான உழைப்பை பெற்றுக்கொண்டு அவன் வயிற்றிற்கும் சிறிது ஈகிறது அந்த ஊர். அவன் தொலைந்துபோகிறான். அவனது இடத்தின் வெறுமை உணரப்படுகிறது. மறுபடியும் திரும்பி வருகிறான். ஆந்திராவில் எங்கோ தார்ச்சாலை போடும் வேலையில் சேர்கிறான். ஏன் போனான், ஏன் திரும்பி வந்தான், யாரோ சொன்னவுடன் விட்ட குடும்பத்தை கூட்டிக்கொண்டு போக ஏன் திடீரென நினைத்தான், என்ற எழும்புகின்ற கேள்விகளை துடைத்துவிட்டு படித்தால் இந்த கதை எப்போதும் எதற்காகவோ காரண, காரணமின்றி ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையை கதைசொல்லி படம்பிடித்து காட்டியிருப்பதாக நாமே விமர்சித்துக்கொள்ளலாம். கதை விளக்க இன்னொரு கதையோ, கோனார் விளக்கவுரையோ தேவைப்படுகிற கதை.

இந்த தொகுதியில் My awards goes to நிலைமை
———————-
புத்தகம் : அம்மாவின் நிழல் :
அழகான நிழல்கள்:
முள்ளோடை [ போட்ட குடிசை கழற்றப்படுகிறது. வாழ்க்கை தொலைப்பும், புலம்பெயர்தலும் தொடர்கிறது. நிலமற்ற ஆராயியின் மனதும் ஒரு நிலம் வந்ததும் வருகிற துக்கமும், கைவிட்டு போகிற பயமும் அழகாய் பதிவுசெய்யப்பட்டன. அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத எழுத்து ஆண்டாண்டு காலமாய் நிலமற்ற பெண்ணின் தனக்கென நிலம் வந்து குடிலமைக்கிற சந்தோசமும் துக்கமும் நம்மிலும் அப்பிக்கொள்கிறது. நம்மிலும் தைக்கிறது இந்த முள்ளோடை ]
அந்நியன் – [ வேலைப்பளுவினால் அந்நியப்பட்டுப்போகிற மனது. அது சாதாரணக்கதைதான். அதன் கடைசிவரிதான், “அந்நியமாகிப்போன மாதிரியிருந்த உறவுகளெல்லாம் அவன் மனதிற்கும் நெருக்கமாய் வந்துபோனதை யாராலும் உணரமுடிவதில்லை ” ]

விளிம்பு [ வேலப்பன் கழிவுத்தொட்டி கழுவதலில் இறந்துபோகிறான். மல்லிகாவிற்கு அய்யாயிரமோ, பத்தாயிரமோ கிடைக்கலாம். அவள் அழுகை ஒய்ந்திருந்தது, இன்னும் கொஞ்சநேரத்தில் விடிந்துவிடும் போலிருந்தது..?? 47]
நாற்றம் 46 [ தேர்தலுக்காக இளிக்கும் உடையார். ஆதிக்கசாதியிடம் எதிர்ப்பு கொள்ளும் ராசாங்கம். அவருக்கு ஓட்டுப்போடக்கூடாதென எதிர்க்கும் ராசாங்கத்தை அந்த பள்ளத்தெரு வெகுஇலகுவாய் தள்ளிப்போடுகிறது. “வெட்கத்தோடும் வேதனையோடும் எல்லாவற்றையும் இயல்பாக வேடிக்கை பார்த்துக்கொண்டு, உள்ளுக்குள் ஏதோ எண்ணங்களோடு நின்று கொண்டிருந்தான் ராசாங்கம் ” – அழகான உணர்வான முடிவுரைகள்]
சுமாரான நிழல்கள் :
விளையாட்டு [ அப்பா பயந்து விளையாட்டுக்கு அனுப்பாது, அதையே தனது பிள்ளைக்களுக்கும் தொடர்கிற தந்தையின் மனக்கிலெசம். மேகங்கள் விலகி தங்கள் குழந்தைகளின் வேடிக்கைபார்த்தலை அநுபவிக்கும் தந்தமை. தலைமுறைகள் மாறுவதாய் எனக்குப்பட்டது. மாற்றங்களை உணர்ந்து எல்லோருக்கும் பொதுவான தளத்திற்கு கதைசொல்லியின் குழந்தைகள் போகிறார்கள். அவர்கள் அடிபடாலாம். அவர் தந்தை அவரை பொத்தி பொத்தி வளர்த்ததுபோல இனியும் செய்யலாகது. அந்த குழந்தைகள் விளையாடும். அவை எந்த குழந்தைக்கும் சளைத்தவகளில்லை. அவைகளுக்கு எந்த பாதுகாப்பு கவசங்களும் தேவையுமில்லை. கதைசொல்லியின் குழந்தைகள் போல அவரின் எழுத்துகளும் பொதுத்தளத்திற்கு வரலாம். தன் எழுத்துக்களையே வெளியிலிருந்து வேடிக்கை பார்த்தல்தான் எவ்வளவு சுகம்.. தலித்திய எழுத்துகள் அதை செய்ய முற்படலாம். ]
அம்மாவின் நிழல் :
தண்ணீர் – 43 [ வயதுக்கு வந்த, அவளின் கணநேரபயம், தாயின் சந்தோசம். மனிதர்கள் எங்கிருந்தாலென்ன, அட எல்லாம் ஒண்ணுதானப்பா ? தமக்கையும் மகளும் வயதுக்கு வரும்போது வருகிற மகிழ்ச்சி, தனது மகளை அடைகாத்து திருமணம் முடிந்து வருகிற கண்ணீர், தாயை எப்போதாவது நினைத்து எதற்காகவாவது உருகும்போது, மனைவியிடம் சொல்லமுடியாத மெளனக்காதலின் இழப்பின்போதும் எல்லாமே கற்பிக்கபட்டதுதானே ? பரவாயில்லை ஆம்பளைகளும் மனுசால்தான்போல ]
புளியமரத்து அரைகுறை நிழல்கள் :
ஒரேயொரு பார்வையில் :
பழைய நண்பி கைம்பெண்ணாய் வருகிற பாலும் பழமும் கதை. சொன்னவிதமோ தியாகராஜ பாகவதர் திரைக்கதை. சில பெண் எழுத்தாளர்கள் ரவையை அடுப்பில் போட்டுவிட்டு இல்லை குக்கர் வைத்துவிட்டு அது விசில் அடிப்பதற்கும் சில கதைகளை எழுதுவார்கள். பெண்ணியம், அடுக்குமுறை என்று சில தாளித்து கொட்டலோடு கூடிய கதைகள் மூணாவது விசிலோடு நின்றுவிடும். அதுபோல ஆண்களுக்கும் சில Creative constipation. எனக்கென்னவோ அலுவலகத்தில் வயிறு சரியில்லாமல் போனபோது எழுதப்பட்ட கதையாகயிருக்கலாம் எனப்படுகிறது.
அன்றொருநாள் – ராணுவ சோமு மாமானுக்கு வாக்கப்பட்டு போகிற திலகம் ஏதோ அதிகாரி கெடுக்க தூக்கு மாட்டிக்கொண்டு சாகிறாள். ராணுவ அதிகாரி, கற்பழிப்பு, தற்கொலை கோடிட்ட இடங்களை நிரப்புக என எப்போதாவது போட்டி அறிவித்தார்களாயென்ன.. ?
அம்மாவின் நிழல், அன்றொருநாள் , ஒரேயொரு பார்வையில் இவை எல்லாம் சொல்லிக்கொள்ளுதல் மாதிரி இந்தக்கதைகளில் எதுவுமில்லை. ஒரேயொரு பார்வை கூட ரொம்ப கடினம். அதீத சினிமாத்தனம், அவசரத்தில் பக்கம் நிரப்ப எழுதப்பட்ட கதைகளாகத்தெரிகின்றன ]
இந்த தொகுதியில் My awards goes to விளையாட்டு ஏன் ?

அப்பாவின் புகைப்படம் :
நாய்கள் :
மாணிக்கம், பெரியண்ணண் மனைவியை போலிசு பீடித்துக்கொண்டு போகிறது. அவர்களென்ன அரசியல் தலைவர்களா? சிறைக்கும்போகும்போதே தொலைக்காட்சிகளால் படம்பிடிப்பதற்கும், கை அசைத்துபோயிக்கொண்டு இனமான உணர்வை காப்பாற்றுவதற்கும். பாவம், தாழ்த்தப்பட்ட ஜென்மங்கள். போலிசு நாய் தவறாய் மோப்பம் பிடித்து இவர்கள் வீட்டின் முன்நிற்க, இவர்களை சிறைக்குள் இழுக்கப்படுகிறார்கள். இவர்கள் சிறைச்சாலையில் நடத்தப்படும் முறை அதுவும் தாழ்ந்த ஜாதி என்று தெரிந்ததும் அதிகாரவர்க்கம் நடந்துகொள்கிற முறை, தமது குடும்பத்தார் சிறையிலிருப்பதால் குடும்பம் அடையும் பதட்டம் – மிகத்தெளிவாய் பதிவுசெய்யப்பட்டது.
தலைப்பு – நாய்கள்தான் இந்தக்கதையை விட பிரமாதம். பொதுவாகவே கதைத்தலைப்பில் அதிகம் கவனம் செலுத்தாத ஆசிரியரின் இந்த தலைப்பு என்னை பெரும் அதிசயித்திற்குள்ளாக்கியது. தவறாய் மோப்பம் பிடித்தது நாய்களா, மனிதத்தன்மையற்று நடத்தப்பட்ட அந்த பெண்கள் நாய்களா ? மனிதம் கொஞ்சம் கூட கலந்துவிடமுடியாத காவல்துறையா.. யார் நாய்கள். அந்த எழுத்தில் உள்ள கோபம்.
[ஜெயமோகனின் கதை ஞாபகம் வருகிறது ]
சோறு :
‘அம்மா சின்ன வயதில் எங்களை எப்படியெல்லாம் கவனித்தார்கள் என்று நினைத்தால் இன்னமும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.’ இந்த முதல்வரி
‘லோல்பட்டு லொங்கழிஞ்சி அம்மா எங்களைப் காப்பாற்றியதை நினைத்தால் இன்னமும் அதிர்சிசியாய் இருக்கிறது. அதிர்ச்சிகள் சில வரலாறு தருவது ‘ இது கடைசிவரி
இந்த இரண்டு வரிகளின் உயிர் நம்மில் அநேகருக்கும் பொருந்தும். ஏன் தாயை நாம் விரும்புகிறோம். சொல்லப்பட்ட காரணம்தாண்டி ஏதோ ஒன்று இருக்கத்தான் வேண்டும். நாம் தாயை விரும்பதுபோல மற்றதை விரும்ப ஆரம்பித்துவிட்டால் இந்த உலகம்தான் எப்படியிருக்கும். அயர்ண்ராண்டு சொன்னதுபோல தாய்மை ஒரு கற்பிதம்தான். ஆனாலும் சில கற்பிதங்கள் தேவையாத்தானிருக்கிறது.
‘பொட்டு பூவில்லாத தோற்றம், எண்ணெய் இல்லாத தலை, மங்கிய நகராட்சி, நகராட்சி புடவையும், மடியில் கனத்து முடுக்காயிருக்கிறதா என துருவிப் பார்ப்போம் ‘ அழகான வர்ணனை என்று நான் சொன்னால் அது அபத்தம். அம்மா நகராட்சியில் மலம் எடுக்கிற சேவை செய்கிறவள். கதைசொல்லியையும், அவனது தங்கையும், முடியாத அப்பாவையும் அவள்தான் சுமந்து வாழ்க்கை பயணம் நடக்கிறாள். அமாவசை, கிருத்திகைக்கு ஸ்பெசல் பிச்சையெடுத்த சோறு. அதையும் பார்த்து பதமாய் பரிமாறும் போது எழும் தாய்மை. சாவு வந்தால் கூட துக்கிக்கமுடியாமல் அன்று வெளியே போய் கைஏந்தினால்தான் சோறு என்கிற நிலைமை.
கக்கூஸ்காரி மவன். இது அம்மாவின் அடிமைச்சின்னம். அம்மாவிலிருந்து தலைமுறைக்கும் தொடரும்.
“கக்கூஸ்காரி மவனா நீ ? ஏன் பாக்கியம் மவனா நீ என்று கேட்கக்கூடாது என் மனம் சஞ்சலப்பட்டது. ” இந்த வரிகள்போதும். பெரிய ஆங்கார வார்த்தைகள், எதையும் நாலு தடவ அழுத்திச்சொன்னதான் புரியும் என்கிற தத்துவார்த்தமோ தேவையில்லை என்பது என் கருத்து. ஒரு இலக்கியத்தில் சின்னதாய் போடுகிற சரியான கோடு, சமுதாயத்தில் அழுத்தமாய் போடப்பட்ட ரோடு. அது பார்வையை சற்று நிமிண்டிவிட்டு, குற்றணர்வை தூண்டிவிட்டு போகும். அதன் வேலை அதுதான். அது பக்கம் பக்கமாய் எழுதப்படுகிற கட்டுரையை விட, மணிக்கனக்காய் பேசப்படுகிற சமுக நீதிக்கூட்டத்தைவிட பலம் பொருந்தியதாகயிருக்கும் என்பது நிதர்சனம்.
உழைப்பு :
நோட்ஸ் வாங்க காசில்லாத கதைசொல்லி தவளைபிடிக்கபோய் காசு சம்பாதித்து சந்தையியல் நோட்ஸ் வாங்கி முதல் மதிப்பெண் பெறுகிறார். மாறும் விழுமியங்கள், படிக்கும்போதே சம்பாதிப்பது தவறான செயலா என்ன ?
அப்பாவின் போட்டோ : வாழ்க்கையில் ஒரு போட்டாவும் இல்லாது வாழ்ந்துவிட்டு போன அப்பாவின் போட்டாவைத்தேடி ஒரு மகனின் அலைதலும், தோல்வியும் மெல்லியதாய் வலிக்கவைக்கின்றன. காமராசரோடு எடுத்துக்கொண்ட புகைப்படமும், அப்போது அண்ணாத்துரை என்ற பெயர்மீது காமராசருக்குயிருந்த பாசமும் பழைய நல்ல அரசியல் வாசனையை கிளப்புகின்றது.
பழுக்காத போட்டோ :
துளிர்விடும் பட்ட மரம்:
ஒரு பாலியியல் தொழிலாளியின் மகன் பள்ளிக்கூடத்தில் சேருவதிலுள்ள சிக்கல்களை காட்டுவதாக சொல்லப்பட்ட கதையாய் நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உன் அப்பா யாரென்று கேட்க எப்போதே மார்பில் பச்சை குத்தின சுப்பிரமணியை ஜாக்கெட் திறந்து காட்டுகிறாள். என்ன ஜாதி என்பதற்கு எதுவும் பதிலில்லை. ஒரு சினிமாத்தனமான ஆரம்பிப்பு, தொடர்தல் மற்றும் முடிவு.
இந்த தொகுதியில் My awards goes to சோறு :

என்னையா தள்ளிப்போகச் சொல்கிறார் கேட்கிறார் சண்டாளன். அடடா இவனல்லாவா பிரம்மம், குற்றணர்வு கொண்டு
அகந்தை அழிக்கிறார் சங்கரர். அவருக்கு முடிந்தது. அப்புறம் முடியவில்லை. காலக்குட்டை அழுக்கேறிவிட்டது. தூர்வரலாம் வாருங்கள்.

சாண்சாளோஸ்து ஸ து த்விஜோஸ்து
குருரித்யேஸ மனீஸா மம..
[நீ சண்டாளனோ பிராமணனோ, குரு என்பது உறுதியான நம்பிக்கை]

நண்பர்களே! உங்களின் எழுத்து என்னை சிந்திக்கவைத்தது. உங்களின் பாதகமலங்களுக்கு என் வணக்கங்கள். உங்களின் போராட்டத்தின் உண்மை , சத்தியம் உங்களை வழிநடத்திசெல்லும். உங்கள் எழுத்தின் தீ என்னிளுள்ள அழுக்குகளை எரிக்குமெனின் நான் சந்தோசப்படுவேன். வாழ்த்துக்கள்!
[மும்பை வனமாலி அரங்கில் நடந்த விழி.பா.இதயவேந்தனின் நூல்களின் மீதான விமர்சனத்தில் வாசிக்கப்பட்டது. கொஞ்சம் திருத்தி எழுதப்பட்டதும் கூட]


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி