தொட்டுப் பாக்கணும்

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


புலி வருதுன்னு சொன்னாலும் அருண் பேசாமல்தான் நிற்பான். ஆனால் அப்பா வர்றார்னு சொன்னாப் போதும். அவன் ரத்தம் உறைந்துவிடும். அப்படி ஒரு பயம் அப்பாவுக்கு. உடனே தன் அறைக்குச் சென்று ஏதாவது ஒரு புத்தகத்தில் தன்னைப் புதைத்துக் கொள்வான்.
அப்பா செந்தில்நாதன் ஒரு கட்டட ஒப்பந்தக்காரர். தன் ஊழியர்களிடமிருந்து, அரசிடமிருந்து, வாடிக்கையாளர்களிடமிருந்து, வங்கியிலிருந்து ஏகப்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும்.அத்தனையையும் சாணக்கியத் தனமாகத் தீர்ப்பதில் வல்லவர்தான். ஆனால் பாவம் தன் மனவிக்கு நல்ல கணவனாக, தன் மகனுக்கு நல்ல அப்பாவாக அவரால் இருக்க முடியவில்லை. தன் பென்ஸ் காரை நிறுத்திவிட்டு அப்பா வாசல் கதவைத் திறப்பதை ஒளிந்து நின்று அருண் கவனிப்பான். சுளித்திருக்கும் அவர் புருவம். நெற்றியில் மூன்று கோடுகள். ஏதாவது பிரச்சினையை உடைத்துக் கொண்டும் உருவாக்கிக் கொண்டும் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சிகள். வாசல் கதவு திறக்கப்படும்போதே பீர் பாட்டில்கள் திறக்கப்பட்டுவிடும். அது இல்லாவிட்டால் அவரால் தூங்க முடியாது. 7 மணிக்கு வீடு பிறகு காலை 9 மணிக்கு அலுவலகம். இதுதான் அவரின் வாடிக்கையான ஒரு நாள் பொழுது.
வீடு, அலுவலகம் மேலும் சில வாடகைக்கு விடப்பட்ட கட்டடங்கள் எல்லாமே கடனில்லாத சொத்துக்கள். ஆனால் மனைவி மஹேஸ்வரியையும் மகன் அருணையும் ஒரு வெறுமை அழுத்திக்கொண்டே இருந்தது. சேர்ந்து ஒரு திரைப்படம் பார்த்ததில்லை. ஒரு விருந்துக்குச் சென்றதில்லை. ஒரு சாப்பாட்டுக் கடையில் அமர்ந்து நேரம் போக்கியதில்லை. பல ஆண்டுகளாக இந்த வாழ்க்கை பழகிப் போய்விட்டது. இப்போது அருணுக்கு கொஞ்சம் உலகம் புரிகிறது. அவன் நண்பர்களை யெல்லாம் கேட்பான். இதோ குணா இ\ப்படிச் சொல்கிறான்.
‘எங்க அப்பா ஏழு மணிக்கு வந்து எட்டு மணிக்கு சோபாவில் உட்காருவார். அலுவலகத்தில் நடந்த கோமாளிக் கூத்துக்களைச் சொல்லிச் சிரிப்பார். எல்லாரும் சிரிப்போம். நாளைக்கு என்ன கறியென்று ராத்திரிக்கே சொல்லிவிடுவார். யாராருக்கு என்னென்ன வேணும்னு கேட்பார். அத்தனையும் மறக்காமல் அடுத்த நாள் வாங்கி வந்துவிடுவார்.
நண்பன் சதீஷிடம் கேட்டான். அவன் இப்படிச் சொல்கிறான்.
‘வார இறுதியில் நாங்கள் வீட்டில் சாப்பிட்டதே யில்லை. ஒரு புதிய நல்ல தமிழ்ப் படம் வந்தால் முதல் நாளே டிக்கெட் புக் செய்துவிடுவார். மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்றால் நிச்சயமாக எங்களை சிங்கையில் பார்க்க முடியாது.. இந்தோனேஷியா, ஹாங்காங், மலேசியா என்று பறந்து விடுவோம்.
அருண் நெறிஞ்சி முள்ளை விழுங்கியதுபோல் நிலை குத்திப் போனான். அவன் உடைகள், அவன் வைத்திருக்கும் கைத் தொலைபேசி அவனிடம் இருக்கும் காசு எல்லாமே சக மாணவர்களால்

நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஆனாலும் அப்பா ஏன் விலகியே இருக்கிறார். அவரைப் பார்த்தால் ஏன் இத்தனை பயம். ‘அவரைப் பக்கத்திலே பாக்கணும். தொடணும். கட்டிப்புடிச்சுக்கணும். அவர் வயித்திலே நெத்தியாலே முட்டணும்’ இதுதான் அருணின் உயிர் ஆசை.

மகனுக்கே இப்படிப்பட்ட ஆசையென்றால் மனைவிக்கு? மஹேஸ்வரி ஒரு நாள் கேட்டார்.
‘ஸ்லம்டாக் மில்லயனர் படம் வந்திருக்கிறது. ரொம்ப நல்லா இருக்காம். தயவுசெய்து கூட்டிப் போங்க. பாட்டிலை அப்புறம் திறக்கலாம்.’
‘மஹேஸ், என் சுதந்திரத்திலே நீ தலியிடாதே. உன் சுதந்திரத்திலே நான் தலையிடமாட்டேன். நான் எரிந்து கொண்டிருக்கும் கொள்ளிக்கட்டை. மனிதர்களெல்லாம் பெட்ரோலால் அணைக்கப் பாக்குறாங்க. என்னை அணைக்க கடவுளுக்கு மட்டும்தான் முடியும் அவர் அதை விரும்பல.’ செந்தில் கண்ணில் கண்ணீர் அரும்பு கட்டியது.
முதலும் கடைசியுமாக அதுதான். அதற்குப் பிறகு மஹேஷ் எந்தப் பிரச்சினையையும் கொண்டுவருவதில்லை. நாட்கள் ஓடின. செந்தில் ஹாங்காங் போயிருக்கிறார். இன்று இரவு அவர் வீட்டில் இருக்க மாட்டார். அருண் முடிவு செய்து கொண்டான். ‘இன்று அம்மாவிடம் பேசியே தீர வேண்டும்.’ இரவு மணி எட்டு.
‘அம்மா’
‘ஏம்ப்பா’
‘உங்கக்கிட்ட ஒன்னு கேக்கணும்’
‘கேளுப்பா’
அப்பாக்கிட்ட நீ சந்தோஷமா இருக்கியாம்மா? ஏம்மா அவருக்கிட்ட என்னால நெருங்க முடியல. அவரை பக்கத்தில பாக்கணும்மா. தொடணும்மா. அவரைக் கட்டிப் புடிக்கணும்மா.’ அம்மாவைக் கட்டிக் கொண்டு அருண் அழுதான். மஹேஸ்வரியும் அழுதார்.
‘ அருண் எனக்கு திருமணமாகி இத்தனை வருஷத்தில என் செலவுக்கு கணக்கே கேட்டதில்லை. கட்டுக்கட்டா காசு கொண்டாந்து வப்பாரு. வேணுங்கிறதை எடுத்துக்கச் சொல்வாரு. அருணுக்கு இரண்டு வெள்ளி கொடுக்கிறியே, உனக்கு அறிவிருக்கான்னு திட்டுவாரு. நிறைய காசு கொடு. அவன் நண்பர்களோடு ஜாலியா இருக்கட்டும்பாரு. எப்ப வெளியூர் போனாலும் உனக்கும் எனக்கும் உயர்ந்த பரிசுப் பொருள் வாங்காம அவர் வந்ததேயில்லை. மகனே! இந்த சுகம் எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத சுகம். இந்த சுகத்தை நினைச்சு என் சோகத்தை சகிச்சுக்கிறேண்டா அருண்.’

‘ நமக்காகத்தானேம்மா அவர் தன்னையே எரிச்சுக்கிறாரு. போதும்மா. அவர் வந்ததும் சொல்லும்மா. அவரை நான் தொடணும்மா. தொடணும்மா. அவருக்காகத் தர எனக்கிட்ட கண்ணீர் மட்டும் தாம்மா இருக்கு’
‘ஒரு நாள் பொறு அருண். உனக்காக நான் அவர்க்கிட்ட பேசுறேன்.’
அடுத்த நாள் இரவு செந்தில் வந்தார். விடிந்ததும் அலுவலகம் சென்றுவிட்டார். அடுத்த இரவுக்காக மஹேஷ் காத்துக் கொண்டிருந்தார்.

அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு.
‘ஹலோ’
‘அம்மா செந்தில் சாருக்கு திடீர்னு மாரடைப்பு. பொது மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாரம்மா’
நெருப்பை விழுங்கினார் மஹேஸ்வரி. மண்டைக்குள் ஆயிரம் ஃபேன்கள் சுற்றின.காரைக் கிளப்பினார். அருணையும் அள்ளிப் போட்டுக் கொண்டார். அவர் போய்ச் சேர்வதற்குள் செந்தில் போய்ச் சேர்ந்துவிட்டார்.
மைய ஹாலில் உடல் கிடத்தப்பட்டது. எம். பிக்களென்றும் அமைச்சர்களென்றும் ஏகப்பட்ட கூட்டம். அருணைச் சுற்றி குணா சதீஷ் இன்னும் சிலர்
‘டேய் குணா சதீஷ் என்னைக் கூட்டிப் போங்கடா. நான் அப்பாவத் தொட்டுப் பாக்கணுன்டா. கூட்டிப் போங்கடா. கூ. கூ. ‘
அருணை அவர்கள் அழைத்துச் சென்றபோது அங்கே குளிப்பாட்ட ஏற்பாடுகள் நடந்தன. அருண் அம்மாவிடம் ஓடினான். ‘அம்மா அம்மா. நான் அப்பாவத் தொட்டுப் பாக்கணும்மா’
குளிப்பாட்டிய உடல் கிடத்தப்பட்டது. உடனே எடுத்துச் செல்ல வேண்டுமாம். சில பாக்டீரியா பிரச்சினையாம். யாரும் உடம்பைத் தொடக்கூடாதாம். செந்தில் பெட்டிக்குள் கிடத்தப்பட்டார். கடைசியாக பார்க்க விரும்புகிறவர்கள் பார்த்ததன்பின் பெட்டி மூடப்பட்டது. அருண் அந்தப் பெட்டியின் மேல் பரவி கதறினான்
‘தொட்டுப் பாக்கணும்பா
தொட்டுப் பாக்கணும்பா’

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்