‘தொகை இயல்’ – அ. பாண்டுரங்கன்: தொட்டனைத்தூறும் ஆய்வு மணற்கேணி

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

தேவமைந்தன்


அகவை எழுபதைக் கடந்து விட்டவர். இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியரும் எங்கள் உழுவலன்புக்குப் பாத்திரரும் ஆன கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால், தம் புலமை நேர்மை, ஆய்வுக் கடப்பாட்டுணர்வு, ஆழமான தேடல் ஆகியவற்றுக்காக அன்புடன் அரவணைத்து வாழ்த்தப் பெறுபவர். அன்னார்தாம் பேராசிரியர் முனைவர் அ. பாண்டுரங்கன். அவர் ஆய்வுத் தமிழுக்குப் படைத்த அரிய நூல் காணிக்கையே – ‘தொகை இயல்.’

தோராயமாக எழுபத்தைந்து ஆண்டுகள், தமிழ்ச் சங்கத் தொகைநூல்கள் பற்றி ஆய்வு உலகில் நிலவி வரும் கருதுகோள்கள் பலவற்றை ஆராய்ந்து, இங்கிலாந்தில் கருவாகி உலகமுழுதும் உருவாகிப் பரவி வரும் ஒப்பிலக்கிய ஆய்வு நெறியியலை அடித்தளமாகக் கொண்டு, பழந்தமிழ் இலக்கியத் தொகைநூல்களை ஆராய்ந்து, புதிய கருதுகோள்களையும் முடிபு நிறுவுதல்களையும் ஆய்வுண்மைச் சுட்டுகளையும் உலகத் தமிழ் ஆய்வாளர்முன் ‘தொகை இயல்’ மூலம் முன்வைத்துள்ளார் பாண்டுரங்கன்.

இந்தியப் புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் உயர்தமிழாய்வு நிறுவனத்தின் தமிழிலக்கியப் புலத்தின் தலைவராக இருந்து, பரப்புரைகளைத் தவிர்த்த உண்மையான உழைப்புடன் மெய்யான ஆய்வுகள் செய்தவர் பேராசிரியர் முனைவர் அ. பாண்டுரங்கன்.

‘தொகை இயல்’ என்னும் இந்த ஆராய்ச்சி நூலில் எட்டு இயல்கள் உள்ளன. இவற்றுள் ‘தமிழ் ஆராய்ச்சி,’ ‘சி.வை. தாமோதரம் பிள்ளை: பதிப்புப் பணி’ என்ற ஆய்வுக் கட்டுரைகள் இரண்டும் இலங்கைக் கொழும்பிலிருந்து வெளிவரும் ‘பண்பாடு’ என்ற இதழில் 1997இல் வெளிவந்தவை.

‘தமிழில் தொகைநூல்கள்’ ‘எட்டுத் தொகைநூல்கள் – தொகுப்பு நெறிகள்’ ‘திணைக் கோட்பாடு’ ஆகிய இயல்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ‘தமிழியல்’ என்னும் ஆய்விதழில் வெளிவந்தவை.

‘நெய்தல் திணை’ என்னும் இயல் ‘தமிழ் ஞாலம்’ என்னும் ஆய்விதழில் 2004 மே மாதம் வெளியான கட்டுரை.

‘தொகைநூல்கள்: தொகுப்புகளின் காலம்’ ‘தொகைநூல் பாடல்கள்: பாடப்பட்ட காலம்’ என்ற இயல்கள் இரண்டும் – 2004 முதல் இந்நூல் அச்சியற்றப் பெறும்வரை ஆராய்ச்சி செய்ததன் விளைவாக, இந்நூலில் மட்டுமே புதிதாக வெளிவந்துள்ளவை.

”நெய்தல் திணை’ பற்றிய கட்டுரை மிக நுண்ணிதாக அந்த இலக்கிய நிலை உள்ளடக்கங்களுக்குள்ளே செல்கின்றது” என்று மொழிந்துள்ளார் கார்த்திகேசு சிவத்தம்பி.

‘தமிழ் ஆராய்ச்சி ‘ இயலில் சில கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அவை:

சைவத் திருமுறைகளில், திருஞானசம்பந்தர் தேவாரம் ஏன் முதலில் வைக்கப்பட்டுள்ளது?
[கால அடைவுப்படித் தொகுத்திருந்தால் அப்பர் பாடல்களல்லவா முதலில் வைக்கப்பெற்றிருக்கும்!]

திருஞானசம்பந்தருக்குக் காலத்தால் முற்பட்டவராகக் கருதப்பெறும் திருமூலருடைய திருமந்திரம் பத்தாம் திருமுறையாகப் பின்வைக்கப்பட்டதேன்?

திருப்பதிகங்கள் பாடுவதில் நாயன்மார்கள் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த காரைக்கால் அம்மையாரின் பதிகங்கள் ஏன் பதினோராம் திருமுறைக்குக் கொண்டுபோய் அடைவு செய்யப்பட்டன?

இந்தக் கேள்விகளுக்கும் இவைபோலும் பிற கேள்விகளுக்கும் ‘தொகை இயல்’ தெளிவான விடைகள் அளித்துச் செல்கிறது.

மேலே நான் சொன்னதற்குச் சான்று ஒன்று:

தமிழ் ஆராய்ச்சியின் வரலாற்றில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பெற வேண்டிய முக்கியமான பொருள் எது?

– என்ற கேள்விக்குத் ‘தொகை இயல்’ கூறும் விடைவிளக்கம்:

தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயங்களுள் ஒன்று, நூலின் வரலாறு குறித்து(history of the text) ஆராய்வது ஆகும். மேலை நாடுகளில் Hermeneutics என்னும் பெயரில் இது வளர்ந்து வருகிறது. உதாரணமாகச் சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால், நூலைப் பாடியவர் வேறு, பதிகத்தைப் பாடியவர் வேறு என அறிய முடிகின்றது. காதைகளின் இறுதியில் உள்ள வெண்பாக்களைப் பாடியவரும் இளங்கோவடிகள் அல்லர் எனத் தெரிகின்றது. ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும் கட்டுரைப் பகுதிகள் உள்ளன. இவையும் நூலாசிரியருடைய எழுத்துகள் அல்ல என்று உணர்கிறோம். ஆனாலும், இன்றைய சிலப்பதிகாரம், இவை அனைத்தும் சேர்ந்ததுதான்! காலத்தின் தேவைகளை ஒட்டி இவை அவ்வப்போது சேர்க்கப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் மூல நூலை விளங்கிக் கொள்வதுதான் நூலின் வரலாறு ஆகும். பண்டை இலக்கியங்களையும் இடைக்கால இலக்கியங்களையும் இவ்வாறு நாம் வரலாற்று வளர்ச்சி அடிப்படையில் விளக்க இயலும்.

தமிழ் ஆராய்ச்சியின் வரலாறு, விரிவாகப் பல தளங்களிலிருந்தும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றாகும். வரலாறு தொல்லியல் சமூகவியல் மானிடவியல் மொழியியல் ஒப்பியல் திறனாய்வியல் இலக்கிய வரலாற்றியல் எனப் பலதுறைகளோடு ஊடாடிக் கருத்துகள் திரட்டப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமான பணி. எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இன்றைய உலகில் தமிழின் பெறுமதி என்ன என்று காண்பதற்குத் தமிழ் ஆராய்ச்சி வரலாறு பெருந்துணை புரியும்.(பக்.12-13)

அடுத்ததாக, சிலர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களின் பதிப்புப் பணியைக் குறித்து, “உ.வே.சா. உடன் ஒப்பிடும்போது, சி.வை.தா. மரபுவழியான தமிழ்ப் புலமை வாய்ந்தவரா?” என்று எழுப்பிய ஐயம். அதற்குப் பாண்டுரங்கன் அவர்களின் தெளிவு:

“சி.வை.தா.வின் கல்வி பற்றி பண்டிதமணி சி. கணபதி பிள்ளை கூறியிருப்பது இங்கு எண்ணத் தக்கது:

தாமோதரம் பிள்ளை பிரசித்தி பெற்ற சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயரிடம் தமிழும் வட்டுக்கோட்டைக் கல்லூரியில் ஆங்கிலமும் படித்தவர். 1852-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாமோதரம் பிள்ளை தமது இருபதாம் வயதில் வட்டுக்கோட்டைக் கல்லூரியிற் படிக்கத் தக்கவையாயிருந்த – எல்லாப் பாடங்களிலும் முதல்வராகத் தேறி வெளியேறினார்.(இலக்கிய வழி, 1981:129)

சி.வை.தா.வின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய த,.இராஜரத்தினம் பிள்ளையின் நூலிலிருந்து சி.வை.தா. சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயரிடம் கந்த புராணம் கற்றார் என்று மனோன்மணி சண்முகதாஸ் குறிப்பிடுவதும்(1983:9) இங்கு இணைத்து நோக்கத் தக்கது. எனவே, உ.வே.சா. அவர்களைப் போன்றே சி.வை.தா. அவர்களும் தமிழ் இலக்கண இலக்கியங்களை வரன்முறையாகக் கற்றிருந்தார் எனத் தெரிகிறது. இக்கல்வி ஐயருக்கு வாய்த்தது போன்று, ஆசிரியர் மாணவர் (குரு-சிஷ்ய) பரம்பரையாக அவருக்கு வாய்க்கவில்லை என்றாலும், பண்டைத் தமிழ் நூல்கலைப் பதிப்பிப்பதற்குத் தேவையான அளவுக்கு அவரிடம் தமிழ்ப் புலமை நிரம்பிக் கனிந்திருந்தது என்பது அவருடைய பதிப்புரைகளிலிருந்தே தெளிவாகின்றது.(ப.18)

‘சி.வை.தாமோதரம் பிள்ளை – பதிப்புப் பணி’ என்னும் இயல், ஆய்வுநூல் படித்தால் உணர்வு கிளர்ந்தெழாது என்ற வழமையைப் பகடி செய்கின்றது. திட்டமிட்டு மறைக்கப்பட்ட சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களின் பதிப்புப் பணி தொடர்பான உண்மைகளை இந்த இயல் பிட்டுப் பிட்டு வைக்கிறது.

மேற்கோள் சான்றுகள் ஓரிரண்டு:

“மூன்று விரலைக் காட்டிக் கட்டிலிற் கால் போல் பஞ்ச பாண்டவரையும் ஆறு கோணத்தில் நிறுத்துக என்பான் தொகை விபரீதத்தோடு விரலை வாலென்றும் கட்டிலைக் கடாலென்றும் பஞ்ச பாண்டவரைப் பிஞ்சுப் பாகற்காய் என்றும் மாற்றி எழுதி வைத்தால் அம்மொழியைச் சரிப்படுத்தல் இலேசாகுமா?”

“என் சிறு பிராயத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தாலன்றோ தெரிய வரும்! ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகின்றது; கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகின்றது; ஒன்றைப் புரட்டும்போது துண்டாய்ப் பறக்கிறது. இனி, எழுத்துகளோவென்றால் வாலுந் தலையுமின்றி நாலுபுறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது.(சி.வை.தா. கலித்தொகைப் பதிப்பு 1887. பக்.26-27, 46)

சி.வை.தா. அவர்கள், அக்காலத் தமிழ்ப் பெரும்புலவர்கள் தம் பதிப்புப் பணிக்கு இடையூறு செய்தமையை உ.வே.சா. போன்று பதிவு செய்யவில்லை. உ.வே.சா. அவர்கள் தன் வரலாறான ‘என் சரித்திர’த்தில்(1990:583) புரசப்பாக்கம் அட்டாவதானம் சபாபதி முதலியார் தான் முனைந்து மேற்கொண்ட சீவக சிந்தாமணிப் பதிப்பு முயற்சியை மட்டம் தட்டிய விதத்தைப் பதிவு செய்துள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது.

தவிர இந்த ஆய்வுநூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் சிலவற்றை சுருங்கக் காணலாம்.

1. ஆய்வு, அறிவியல் நோக்கில் காய்தல் உவத்தல் அற்று நேர்மையுடன் செய்யப்பெறல் வேண்டும்.

2. அயல்நாட்டறிஞர்கள் தமிழர் ஆய்வுப்பணிக்கு வழங்கிய கொடை, புறநிலை ஆராய்ச்சி ஆகும்.

3. தேவாரமும் நாலாயிரமும் கால அடைவில் தொகுக்கப் பெறவில்லை.

4. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் தமிழில் இலக்கிய வரலாறு நூலை ஒட்டி, தமிழ் ஆராய்ச்சியின் வரலாறு பல தளங்களில் நின்று நிகழ்த்தப்பெறல் வேண்டும்.

5. நூலின் பிரதி குறித்த வரலாற்று உணர்வு மிகவும் தேவை.

6. அக்காலச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி சி.வை.தாமோதரம் பிள்ளை. தமிழ் இலக்கியப் பதிப்புப் பணிக்கு இவரே முன்னோடியாக விளங்கியவர். அரசு ஊழியராக இருந்தும் பனை ஓலைச் சுவடிகளில் தேங்கியிருந்த இலக்கியங்களை அரும்பாடுபட்டு அச்சு வடிவுக்குக் கொண்டுவந்தவர். இவருக்குப் பின்வந்த உ.வே.சா. அவர்களைப் போற்றும் தமிழ் உலகு, இவரை மறந்துவிட்டது. தமிழ் ஆய்வாளர்கள் வேண்டுமென்றே அவருக்கு வர வேண்டிய புகழை மறைத்து இருட்டடிப்பு செய்து விட்டனர்.

7. புலவர்களின் படைப்புகளைத் தொகுக்கும் வழக்கத்தில் இறையனார் களவியல் உரையும் திருவிளையாடல் புராணக் கதைகளும் உதவுகின்றன.

8. சங்கப் பாடல்கள் ஏன் தொகுக்கப்பெற்றன? இனக்குழு நிலையில் இருந்து அரசுகளாகவும் பேரசுகளாகவும் தமிழர் மாற்றம் கொண்டதால்.

9. பத்து, நூறு என்ற அளவுகளில் நூல்கள் தொகுக்கப்பட்டதற்கான முதன்மைக் காரணம் தெரியவில்லை.(காட்டு: பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் எழுபது)

10. குறுந்தொகை 4-8, நற்றிணை 9-12, அகநானூறு 13-31 என்று பாடல் அடிகலை நோக்கும்பொழுது தொகுப்பு முயற்சி பலரால் அல்லது ஓரிருவரால் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

11. சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப் பெற்று வெளியிடப்பட்டதாலேயே தமிழரிடை மொழிப்பற்றும் வரலாற்றுணர்வும் தோன்றின. தமிழ்மொழி வரலாற்றை வரையும் முயற்சி தோன்றியது. தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. மொழி வளர்க்கும் பொருட்டு, தமிழமைப்புகள் பல உருவாகின.

12. திணை மயக்கம் என்பது இலக்கணக் கோட்பாடு மட்டு அன்று. சமூக வரலாறு.

மேற்கண்ட பதிவுகளின் சுருக்கத்தை அனைத்து வாசகர்களுக்காகத் தந்தேன். மற்றபடி, எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பெற்ற வரலாற்றைப் பேராசிரியர் பாண்டுரங்கன் மிகவும் விரிவாக ஆய்வதையும்; திணைப் பாகுபாடு, திணைமயக்கம் குறித்து மிக நுட்பமாக ஆய்வதையும் படித்துப்பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும். கடைசி இரண்டு கட்டுரைகளில் தொகைநூல்களைக் குறித்து விரிவாக ஆராய்வதும் அத்தகையதே.

இந்த நூலின் திட்டவட்டமான முறையியல்(methodology) – வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கே ஆகும். வரலாற்றைப் போலவே ஆய்வும் ஒரு தொடர் நிகழ்வுதான் என்றும்; எனவே தன் கருத்துகளும் மீளாய்வுக்கு உரியவையே என்றும் அதனால்தான் அவர் தெளிவாகக் கூறுகிறார்.

இந்த நூலை வாசிப்பதால் தமிழ்ச் சமூகத்தின் மிகவும் தொன்மையான காலகட்டத்தை இந்திய நாட்டு வரலாற்றுப் பின்புலத்தில் அழுத்தமான சான்றுகளுடன் அறிந்து கொள்ளலாம்.

பேராசிரியர் கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி, செம்பகலட்சுமி ஆகியோர் கைக்கொண்ட ஆய்வியல் அணுகுமுறைகளையும்; எச்.எம்.சாட்விக், சி.எம்.பெளரா போன்றோரின் ஒப்பியல் இலக்கிய ஆய்வு முறைகளையும் முனைவர் அ. பாண்டுரங்கன் தெளிவாகப் பின்பற்றியுள்ளமையை இளம் ஆய்வாளர்கள் ஓர்ந்துணர்ந்து தாமும் தம் ஆய்வுகளில் பின்பற்றலாம்.

வெளியீட்டாளர் முகவரி:

தமிழரங்கம்,
30, 19ஆவது குறுக்குத் தெரு,
அவ்வை நகர்,
இலாசுப்பேட்டை,
புதுச்சேரி- 605008.

‘தொகை இயல்’ முதற் பதிப்பு, ஜூன் 2008.
பக்கங்கள்: 234+xxxviii(டெமி 1/8 அளவு)
விலை: ரூ.200/-

********
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்