தைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது? (உப்புத் தண்ணீர்)

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

மதுமிதாகடல்நீர் முன்னொரு காலத்தில் இனிப்பாகவே இருந்தது. பிறகு எப்போது எப்படி உப்புநீராக மாறியது? அதையே இந்தக் கதை சொல்கிறது.

ஹோகாய் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய தந்தை இறந்துவிட்டார். அவனும் அவனுடைய தாயாரும் ஏழ்மையில் வாடினர். தினமும் அவன் மலையிலிருந்து மரம் வெட்டிக் கொண்டுவந்து, அதை விற்று, அந்தப்பணத்தில் உணவு உண்டு வாழ்க்கைநடத்தினர்.

ஒருநாள் மரத்தை வெட்டிக்கொண்டிருந்தபோது களைப்பால் ஹோகாய் அசந்து தூங்கிவிட்டான். உறக்கத்தில் ஒரு கனவு கண்டான். ஒரு நரைத்தமுடிக் கிழவன் அவனை எழுப்பி,” ஹோகாய்! நீ நல்லவன். உழைப்பாளி. உனக்கு உதவி செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். உனக்கு இந்த உப்பை அரைக்கும் இயந்திரத்தைக் கொடுக்கிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ‘அரை’ என்று மூன்று முறை சொல். அது நிறுத்தாமல் அரைக்கும். அது அரைப்பதை நிறுத்த வேண்டுமானால், ‘நிறுத்து’ என்று மூன்று முறை சொல்” இதைச் சொல்லிவிட்டு கிழவன் புகைவடிவில் மறைந்துவிட்டான்.

ஹோகாய் விழித்தெழுந்தான் அருகில் ‘அரைக்கும் இயந்திரம்’ இருப்பதைப் பார்த்தான். நடுக்கத்துடனும், ஆவலுடனும் கிழவன் கூறியதைப்போல் செய்ய முயன்றான். உப்பு அரைக்கும் இயந்திரம் ‘அரை’ என்றால் அரைத்தது. ‘நிறுத்து’ என்றவுடன் அரைப்பதை நிறுத்தியது.

ஹோகாய் மிகவும் மகிழ்ந்து இயந்திரத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினான். அப்போது போதுமான அளவில் உப்பு இல்லாமல், உப்பின் தேவை அதிகமான காலமாக இருந்தது. ஹோகாய் இயந்திரம் அரைத்த உப்பை விற்று கொஞ்சம் மேலான வாழ்க்கை நிலைக்கு உயர்ந்தான்.

ஹோகாயின் இந்த அதிர்ஷ்டக்கதை வெளியே விரைவாய் பரவியது. பேராசை கொண்ட அவனுடைய மாமன் அஹ்காய் இதனைக் கேள்விப்பட்டான். எங்கிருந்து உப்பு கிடைக்கிறது என்று பார்க்க ஹோகாயின் இடத்திற்கே வந்துவிட்டான்.

ஹோகாய் மாமனின் நோக்கம் அறியாமல், மாமனிடம் நம்பிக்கையுடன் அரைக்கும் இயந்திரம் குறித்த முழுகதையையும் சொல்லிவிட்டான். எப்படி இயந்திரம் இயங்குகிறது என்பதையும் மாமனுக்குக் காட்டினான்.

பொறாமை கொண்ட மாமன் லாபம் சம்பாதிக்க எண்ணி குயுக்தியாய் ஒரு திட்டம் தீட்டினான். ஒரு அமாவாசை இரவில் பதுங்கிச் சென்று ஹோகாய்-யின் வீட்டிலிருந்து இயந்திரத்தை, மாமன் திருடிச் சென்று விட்டான்.

உப்பு விற்று செல்வந்தனாகும் நோக்கில், வேறு நகரத்துக்குச் செல்ல கடற்கரையில் மாமன் அஹ்காய் ஒரு படகு செய்தான். படகில் ஏறியதும் பொறுமையின்றி தானே இயந்திரத்தை இயக்க ஆசை கொண்டு,”அரை! அரை! அரை! ஹா! ஹா! ஹா! எனக்கு இன்னும் வேண்டும்! எனக்கு இன்னும் அதிகமாய் உப்பு வேண்டும்!” என்றான் அஹ்காய்.

இயந்திரமோ அதிகமான உப்பை வேக வேகமாய் அரைத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தது. அஹ்காய் மகிழ்ச்சியில் மூழ்கிக்
கிடந்தபோது படகில் உப்பின் சுமை அதிகமாகி, அஹ்காயுடனும் இயந்திரத்துடனும், படகு நீரில் மூழ்க ஆரம்பித்தது. கடலின் அடியிலிருந்து இயந்திரம் இன்னும் உப்பை அரைத்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறது.

இதனாலேயே கடல் நீர் உப்பானது.

madhuramitha@gmail.com

அன்புடன்
மதுமிதா

Series Navigation

மதுமிதா

மதுமிதா