தேவதேவன் கவிதைகள் — 6 குடும்பம்

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

தேவதேவன்


1]மாற்றப்படாத வீடு
==============

நெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்று
எந்ன செய்ய
இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே
சைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி
நகர எல்லையிலிருக்கும் என் ஸ்கூலுக்கு
அதனருகே ஒரு வீடும் கட்டிமுடித்துள்ளேன்
குடிவர மறுக்கின்றனர் என் வீட்டார்
ரிக்ஷா செலவே சம்பளத்தில்பாதியாகிவிடும்
என பயமுறுத்துகிறாள் என் மனைவி
உண்மையும்தான் இதற்காகவேதான்
கல்யாணமான உடனே நச்சரித்தேன் சைக்கிள் ஓட்டப்படி என்று.

அவளுக்கு அவள் ஸ்கூள் பக்கம் ஊருக்குள்ளேயே
அப்பாவுக்கு ஆபீஸ் பக்கம்
[வயதான காலத்தில் பஸ் ஏறி இறங்க வேண்டியதில்லை ]
அம்மாவுக்கு கோயில்பக்கம் மேலும் உறவினர்கள்
[வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடையவேண்டாமா ?]
தம்பிதங்கைகளுக்கு அவரவர் ஸ்கூல்கள் பக்கம்
எனவேதான்
இந்தவீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
என்றாலும்
நான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன் .

2]உதயம்
=====
முன் நடக்கும் பெண்ணணங்கின்
நீலவானக் கொண்டையின் கீழ்
நிலப்பூவே மதுரக்
கழுத்தாய் சரிந்த தோள்வரையாம்
என் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்
கைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக
இவ்வுலகம் எனக்காக

3]தீ
==
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்
என் பத்தினி இவள் காயப்போட்ட
சிவந்த சேலைபற்றி
எரிந்துகொண்டிருந்தது வேலி

4]வேலிப்பூக்கள்
===========

வேலிப்படலை
திறந்துபோட்டுவந்து
உட்கார்ந்திருப்பேன்
சுதந்திரமாய்
கன்றுவந்து
பன்னீர்பூமேய்கிற
அழகினைபார்த்துக் கொண்டு

நீ வருவாய்

காலியிளம் வெயிலில்
கன்றாக மேய
குளித்து முடித்த
உன் ஈரச்சேலையை
என் வேலிமீதே காயப்போட

காதல்
வேலிமீறும்
பூவாய் தன்னைத்தான்
சிம்மாசனமேறிக் கொலுவிருக்கும்
அவளுக்கும் அவனுக்கும்
குறுக்கே வந்து
மார்புவரை மறைக்கும்
சவக்கல்வேலிக்குமேலே
பூக்கும் ரோஜாத்தொட்டி
கைகள் கண்டால்
முட்களுடன்

5]ஆண் பெண்
========
ஒரே படுக்கையில்
உடன் படுக்கை கொண்டு
நாம் ஒருவரை ஒருவர்
இழுத்து அணைத்துக் கொள்வதன்
பொருள் என்ன ?

ஆண் பெண் என பிரிந்த
இரட்டைத்தன்மையை மறந்து
இணைய வேட்கும் ஆவேசம்

குழந்தைபசி விழித்து அழ
முலையுடன்
பெண் என நாமம் ஏற்று
என்னை பிரிந்து செல்லும்
ஒருமுனை புரிகிறது
மற்றொரு முனையில்
தனித்து விடப்பட்ட
என் பிரிவின் நோக்கமென்ன ?

சிசு பேணும் முலையவளே
மீண்டும் மீண்டும் வந்து
என்னை ஆலிங்கனிக்கும்
உன்னை விலக்கி
என்னை
தனித்துத் தியானிக்கவைக்கும்
உயிரிீன் நோக்கம்
தனித்து தியானித்திருந்தது

6]மணமாயிற்று
===========

தாழ்பாளிட்ட கதவு திறந்து
திரைச்சீலை
மணிபர்ஸில் வந்து உட்கார்ந்துகொண்டது
மனைவியின் புகைப்படம்
படிப்பறை படுக்கையறையாயிற்று
இவனை சங்கிலியின் ஒருகண்ணியாக்கிவிட
சதி நடக்கும் இடமாயிற்று அது
விடுதலை நோக்கி வாய்திறந்த கதவுகள்
படுக்கையை காவல்காக்கும்
ஊமைகளாகி விட்டன
இடைமறிக்கப்பட்டோ
இடை தளர்ந்தோ
இடை புகுந்ததுதைந்திரிய வீழ்ச்சி
வீழ்ச்சியின் கருவில்
உதித்தது
இன்னொரு முயற்சிக்கு ஓர் மனித உரு
வீழ்ச்சியிலும் முயற்சித்தொடரிலுமே
ஜீவித்துவரும் மனிதகுலம்
ஆழ்ந்து உறங்குகிறது இவனருகே
அவளாக

7]சீட்டாட்டம்
=========
இடையறாத இயக்கத்தின் மடியில்
[உண்பதற்கும் கழிப்பதற்கும் மட்டுமே
இடம் பெயர்ந்தோம் ]
இரவு பகலற்ற விழிப்பில்
ஆறு இதயங்களுக்கிடையே
ஓர் உரையாடல்

அகாலத்திலிருந்து காலத்துக்கு
சீட்டுகளை இறக்கினோம்
காலமோ விலகி எங்கள் விளையாட்டை
கவனித்துக் கொண்டிருந்தது
காபி போட்டுதந்தது
சோறு சாப்பிட அநை¢த்தது
ஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்தது
வெறுமையின் மீது

காலாதீத பிரமிப்புடன் சீட்டுக்கள்
எங்கள் சொற்களாயின
எனினும் வெல்ல வெல்ல என துடித்தன
ஒவ்வொருவர் கைகளுக்குமாய்
அவை கழன்று விழுந்தவுடன்
எனினும்
என்னை வெல்லு என்று
தோற்று கலையவே துடித்தன.
ஒவ்வொருவரிடமிருந்தும்
அவை கழன்று விழுந்தவுடன்

அப்போது இப்போது என்று
சுட்டமுடியாத ஒருபோது
என்றோ புதைந்து
துயில் கொண்டிருந்த ஒரு விதை
திடேரென்று வளர்ந்து
ஒரு மலர் காம்பை நீட்டியது
அங்கே
சீட்டாடும் அறுவர்
ஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்.

8]சந்திப்பு
=====

என்னதான் ஆனாலும்
நீ ஒரு சுயம்பு
நான் ஒரு சுயம்பு
உன்போக்கில் நீ
என் போக்கில் நான்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இருபுள்ளிகள்

நம் சந்திப்பு அதாவது
புரிந்துகொள்ளல் அன்பு முதலானவை
எங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?

சம எடையுள்ள இரண்டுக்கும்
சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்
தன் செம்மத்திக்காய்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி

9 ] குடும்பம்
======

சமூகம் வழங்கும் செளகரியங்களும் குரூரமுமாய்
எனது தந்தை இருந்தார்
மனிதன் வழங்கும் அன்பும் கருணையுமாய்
எனது தாயும் இருந்தார்கள்

எனது தந்தைக்கோர் பெரும் பேர் உண்டு
நியாயவான் நாட்டுக்குழைப்பவன் நல்லவன் என்றெல்லாம்
எனது தாய்க்கும் பேர் உண்டு
பாவம் பைத்தியக்காரி ஒன்றுமறியாதவள்

இத்தோடு இந்தப் புவி முழுக்க வினியோகிக்க
போதுமான பெருந்தன்மை எனும் சரக்கு
எங்கள் வீட்டில் இருந்ததென்னவோ
மறுக்க முடியாத உண்மை

என் தாயிடம் நான் கண்டிருந்தேன்
என் தந்தையின் மூர்க்கங்களை எல்லாம்
எப்போதும் மன்ன்னித்து நிற்பதுபோன்ற ஒரு பெருந்தன்மையை
எனது தந்தையிடம் கண்டிருந்தேன்
எனது தாயின் அறிவீனங்களை எல்லாம்
எப்போதும் சகித்துக் கொண்டு முறுவலிப்பதுபோன்ற
ஒரு பெருந்தன்மையை

ஒருநாள் -இல்லை திடார் திடாரென்று-
தந்தை உதைத்தார் தாயின்மீது எகிறி
தாய் சபித்தாள் தந்தை மீது கதறி
நான் முழித்தேன் பார்வையாளனாய்

யார் நிகழ்த்துகிறார் இந்த நாடகத்தை என
நான் கேட்டேன் எனக்குள் நெளிபவனிடம்

தற்செயலாய் ஒருநாள் சந்தித்தேன்
அந்த நாடக இயக்குநரை
என்னைத்தான் தேடிக் கொண்டிருந்தாராம் அவர்
தன் நாடகத்துக்கு இரு பாடல்களை இயற்றித் தரணுமாம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவுதற்கோர் டூயட் பாட்டும்
அன்னவர் கீரியும் பாம்புமாயிருக்கையில்
ஒலிப்பதற்கோர் பின்னணிப்பாட்டும்

‘ ‘ கவனம் இப்பாடல்களின் பொருளை
உம் நடிகர்கள் புரிந்துகொண்டால்
உம் நாடகம் அம்பேல் ‘
என்ற எச்சரிக்கையுடன் வழங்கினேன்
எனது இரு பாடல்களை அவரிடம்.

10 ] தொடுதல்
======

ஒளியின் சிறகுகள் உதைத்து வெளிப்படுகையில்
தெறித்து அறுகிறது தொப்புள் கொடி

தேவதைகளின்கண்களின் மின்னுகின்றன
உடலெனப்படுவதன் கன்னிமையும்
உளமெனப்படுவதன் குழந்தைமையும்
உயிரெனப்படுவதன் ஆனந்தமும்

அனாதியிலிருந்து
ஓடிவரும் குருதி துறுதுறுக்கும்
விரல் தொட்டு
‘அணைகிறது ஒளி ‘
எனப் பதறாதே
விரல் தொடுகையில்
கரியும் சிறகுகளின் வெப்பத்தில்
பெறுகின்றன
கன்னிமை தாய்மையை
குழந்தைமை அறிவை
ஆனந்தம் துக்கத்தை

பதறாதே பொறு விரலை எடுக்காதே
அந்த ஒளி உன் விரல் வழியாக புகுந்து
உன்னுள் இயற்றப்படும் வரை பொறு
அப்புறம் கைவந்துவிடும் அந்தக்கலை

பாதம் பதிக்காமல் உலவுதற்கும்
கைகள் விரியாமல் அணைப்பதற்கும்
விரல்களில்லாமல் தொடுவதற்கும்
இதழ்பதிக்காமல் முத்தமிடுவதற்கும்
சொற்களில்லாமல் பேசுவதற்கும்
இல்லாமலே இருப்பதற்குமான கலை .

=========================================================

தேவதேவன் கவிதைகள் தொடர்பு
———————————————
http://www.thinnai.com/ar0812023.htm
வீடு http://www.thinnai.com/pm0812024.html
மரம் http://www.thinnai.com/pm0819028.html
பறவை http://www.thinnai.com/pm0825025.html
கடவுள் http://www.thinnai.com/pm0902029.html
வானும் ஒளியும் http://www.thinnai.com/pm09090212.html
தேவதேவன் மின்னஞ்சல் devadevan@marutham.com
==================================================

Series Navigation