தெளி

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

எஸ்ஸார்சி



அவன் அச்சக வேலையாய் சிதம்பரம் போகவே கடலூர் புதிய பேருந்து நிலையம் சென்றுகாத்துக்கொண்டிருந்தான் சிதம்பரம் என்று எழுதி உறுமி நிற்கின்ற .பேருந்து ஒன்றையும் காணோம். அவனுக்கு இது வரை கிடைத்த அந்த ஒரே வெளியீட்டாளர் கன தயவோடு மூன்று சிறுகதைத்தொகுப்புகள், இரண்டு குயுக்திப் புதினங்கள், கோணல்கட்டுரைகள்,வல்லிக்கண்ணன் முன்னுரையோடு ரெண்டு கவிதைநூல், மொழிபெயர்ப்பு, என எதெதுவோ சூரத்தனமாய் எழுதிப்பார்த்தும் ஆன கதை ஒன்றுமில்லை ..தமிழ் மண்ணில் அங்கொன்றும் இங்கொன்றும் என பரிசுகள் கொடுத்தும் இருக்கிறார்கள் .யார்தான் அதை இல்லைஎன்று சொல்லமுடியும். அவனும் கெளரவம் பாராமல், அசட்டுத்தனமாய் கிடைத்த இடுக்குகளில்; முடிந்தவரையில் வழிந்தது ஒன்றும் வீண் என்ற படிக்கு ஆகிவிடவில்லை. அவனுக்கு வரும்பரிசுத்தொகைகளும் ஏதேனும்னொருசெலவுக்கு உதவுகின்றன. எதையும் ஆமாம் இது சாதரணம் என்று அலட்சியம் செய்துவிட முடிகிறதா. காசு பெரியது. இரண்டு முறை சொல்லிக்கொள்ளலாம். தப்பில்லை.

அவன் தேடிய அந்த சிதம்பரம் பேருந்து அது எப்போதும் நிற்குமிடத்து வந்து முறைத்தபடி நிற்கவே அதனில் ஏறி இருக்கை தேடினான். ஒரே சீட்டிலொரு இருக்கை மட்டும் காலியாய்த் தெரிந்தது.
‘வாங்க வாங்க சார்’
‘யார் அது’
‘பாத்தே நாளாச்சி’
அருகில் அமர்ந்து கொண்டான். அதுவேறு யாருமில்லை. அவன் நண்பன்.
உள்ளூர் கல்லூரியிலே ஆசிரியராக வேலை பார்க்கிறவன்.
எங்க இவ்வளவு தூரம்
சும்மா செதம்பரம் வரைக்கும்
ஒரு நண்பரை ப்பார்க்குணும்
சரிதான்.
அச்சக வேலையாய் போவதைச்சொல்ல மனம் வராமல் மறைத்துக்கொண்டான். எழுதுவதும் அதைத்தூக்கிகொண்டு அல்லாடுவதும் பெருமையா இல்லை சிறுமையா யாருக்குத்தெரியும். இது ஒன்றும் புதிதும் இல்லை. இன்னும் எவ்வளவோ உண்டு இந்த ரகத்தில்.

‘இண்ணைக்கு தேவலாம். மெதுவாய் சொல்லிக்கொண்டார்.’
ஏன்
‘நான் நேற்றும் வந்தேன். இன்னும் நாலு நாளு சிதம்பரம் வர்ர வேலை இருக்கு. பரீட்சை பேப்பரு திருத்தற வேலெ. அந்த அண்ணாமலைலதான்’
‘அது சரி சார் ஏதோ தேவலாம்னு,,,,, அவன் இழுத்து விட்டுக்கொண்டான்.
‘ஆமாம் சார் நேத்து ஒரு இவன் என் பக்கத்துல வந்து உக்காந்துகிட்டான்.
டிரைவர். லாரி டிரைவர். கொஞ்சம் குடி வேற’
சிதம்பரம் என்று சொல்லிப் பேராசிரியருக்கும் சேர்த்து அவன் டிக்கட் வாங்கினான்.
‘நான் வாங்குறேன் சார்.’
ஏன் நான் வாங்கிடுறேனே.
‘ இருக்கட்டும் சார் . வையுங்க. இன்னொரு நாளைக்கு நீங்க வாங்குங்க’
‘நேற்று அந்த குடிகாரனுக்கு நான் தான் சார் சீட்டு வாங்கினேன்.’
அவனுக்கு முகத்தில் அறைந்த மாதிரி இருந்தது. இது எல்லாம் ஒரு பேரசிரியரிடமிருந்து அவனுக்குத் தேவை இல்லை. என்ன செய்வது. ராசி பலன்கள் தம் வேலையைச் செய்து
முடிக்கின்றனதான்.
வண்டி சிப்காட் தாண்டிக்கொண்டிருந்தது. மூக்கை இறுக்கி ப்பிடித்துக்கொண்டு வீசுகின்ற ரசாயன நாற்றங்களிலிருந்து பிரயாணிகள் தம்மை காத்துகொள்வதாய் பாவ்லா காட்டிக்கொண்டிருந்தனர்.
‘அப்பறம் அந்த குடிக்காரன் சேதிய வுட்டுட்டேனே’ என்று பேராசிரியர் சொல்லிக்கொண்டே போனார்.
அதாகப்பட்டது. அந்த’ குடிகாரன் சொன்னபடிக்கு’ பேராசிரியர் கூறிய விஷயம் பின் வருமாறு.
‘வண்டில ஏறினதும் என்னை கண்ரேட்டரு மொறச்சாரு. கசமாலத்த வண்டில ஏத்துனா வண்டி என்னா ஆவுறதுன்னு அந்த டிரைவரு என் இனந்தான் நீட்டா பாடுனாரு. வண்டில குந்தி இருந்தவன் ஒத்தன் கூடம் ரவ வெடம் குடுக்குலே. மேலபாக்குறான். இல்ல கீழ பாக்குறான். சாரு சாரு மொதல்ல நா யாருண்ணு சொல்லிபுடுணும். கடலூரு துறைமுகத்துலேந்து அந்த பம்பாயிக்கு உசுறு மீனுவ அய்சு வச்சி லாரில ரொப்பி கொண்டும்போறவன். நம்பூரு லட்டு மீனுவ பம்பாயில பாப்பார சனம் கூடம் சாப்புடும். சும்மா இல்ல ஒரு நாப்பத்தெட்டு மணி நேரத்துல சரக்க கொண்டும்போயி பம்பாயி சேக்கலேண்ணா லாரி மீனுவ மொத்தமா நாறி பூடும். மீனுவ நாறுனா குப்பைல கூடம் கொட்ட வுடமாட்டனுவ. தெறித்தி அடிப்பானுவ பம்பாயில. ரூவா அஞ்சாயிரத்தை என் கைல குடுத்து லாரி செமயோட கடலூரு பாயி அனுப்புனா போவன். வருவன். லட்டு மீனு பணம் மொத்தம் பாயிக்கி நேரா வந்துடும். நமக்கு அதுல சோலி இல்லே. போவுற வழில என்னா செலவு என்னா சேதி எல்லாம் நம்பளோட. கடலூருல டீசெலு ஒரு டாங்கு போட்டு பாயி லாரிய கெளப்பி வுட்டாருண்ணா அத்தோட நம்ப பாடு. மெட்ராசு போலீசு ஆந்த்ரா போலீசு, கர்நாடகா போலீசு பம்பாயி போலீசு இதே கணக்குல அங்கங்க செக்கு போச்டுவ குறுக்கு நெடுக்க சீப்புல வர்ர செக்கிங்னு இன்னும் பலானவிசயம்ங்க எத்தினியோ இருக்கு எல்லாத்துக்கும் மாமுலு குடுத்து அப்புறம் சிந்துற மீனுவ போட்டுகிணும் போவுணும். வரக்குள்ள வெத்து வண்டியா திரும்புணும் .பம்பாயி போவ நாப்பத்தெட்டு மணி நேரம்ங்கிறதுதான் எல்லாத்திலேயும் ரெம்ப ரெம்ப முக்கியம். உசுரு கையில புடிச்சிகினு போவுணும்.. நம்ப சோறு டீ இன்னும் அது இது செலவு இருக்கு. ஒரு தட போனா ரூவா ரெண்டு ரெண்டாயிரம். மின்ன பின்ன இறுக்கும் மீறும். அதோட ஊருக்கு போயி என் பொண்டாட்டி புள்ளிவுள பாத்து ரூவா குடுத்துட்டு திரும்பிடுவேன். தே இப்ப ரவ தண்ணி போட்டன். இல்லேங்குலேதப்புதான். என்னா செய்வே சாரு பாக்குற சோலி. ஆருக்கும் பீச கைய மோந்து பாத்தா நாருந்தா. அதுக்கு என்னா செய்வே.’
அவ்வளவுதான் போங்க அந்த டிரைவர் சொன்னது என்று பேராசிரியர் அவனிடம் சொல்லிமுடித்து கைவசமிருந்த தண்ணீர் பாட்டிலைத்திறந்து இரண்டு வாய் குடித்து முடித்தார்.
‘எப்பிடி சார் தத் ரூபமா சொல்றீங்க’
‘அவன் இன்னும் அழகா சொன்னான். எனக்குத்தான் சொல்ல வரல்ல. இத ஒரு கதை கிதைன்னு எழுதறவன்கிட்ட சொல்லி இருக்கனும். அப்பிடியே ஒரு நல்ல படைப்பா கூடம் மாத்தி இருப்பான். என்னா செய்ய. நீங்கதான் எனக்கு ஆப்டீங்க.’ பேராசிரியர் அடக்கமாய்ச் சொல்லிக்கொண்டார். பதிலுக்கு அவன்
அர்த்தமே இல்லாமல் ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்தான்.
சிதம்பரம் கீழ வீதிதேரடி நிறுத்தம் வரவே அவன் வண்டியிலிருந்து இறங்கி க்கொண்டான்.
‘நான் பேருந்து நிலையம் போறன்’
‘எதுக்கும் சீட்டு கையில வச்சிகிங்க செக்கிங் வந்தா என்னா செய்வீங்க’ சொல்லிப் பயணச் சீட்டை எடுத்து பேராசிரியரிடம் கொடுத்து முடித்தான்.
வண்டி நகரவே அவனுக்கு எத்தனையோ ஆண்டுகளாய் வாடிக்கை ஆகிப்போன அந்த சுபம் அச்சகம் நோக்கி எதிர்த்திசையில் நடக்க ஆரம்பித்தான்.


essarci@yahoo.com

Series Navigation