தெய்வ மரணம்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

எஸ். ஜெயலட்சுமி”எழுகடல் மணலை அளவிடின் அதிகம்
எனதிடர் பிறவி அவதாரம்”

என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.ஏழுகடலின் மணலை அளவிட்ட.¡லும் கூட அதைவிட நமது பிறவிகள் அதிகமாம்.
”புல்லாகிப் பூடாய் புழுவாய் மரம் ஆகி
பல் விருகம் ஆகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்”

என்கிறார் மணிவாசகர்.இப்படி எத்தனை எத்தனையோ பிறவிகள்தாண்டி அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறாள்.ஒளவை மூதாட்டி.கிடைப்பதற்கறிய மனிதப் பிறவியில் எத்தனை பேர் பெயெர் சொல்லும்படி வாழ்ந்து மடிகிறார்கள்?.ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழ்கிறவர்களே பலர்.

தெய்வ மரணம்
”தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

என்கிறார் வள்ளுவர்.சிலர், பிறக்கும் போதே இன்னருடைய மகன்,இன்னாருடைய பேரன் என்ற புகழோடு பிறக்கிறார்கள்.சிலர் இந்த உலகை விட்டுப் போகும் போது புகழோடு போவார்கல்.அவர்கள் செய்த செயலால் புகழை நாட்டி விட்டு பூத உடம்பு அழிந்தாலும் புகழுடம்போடு வாழ்வார்கள்.ஒரு லக்ஷியத்துக்காகவே வாழ்ந்து அல்லது உயர்ந்த நோக்கத்துக்காகத் தன்னுயிரையும் ஈந்து புகழ் பெறுவார்கள். தாய் நாட்டிற்காகவும்,உயர்ந்த கண்டு பிடிப்புக்களுக்காகவும், மனிதகுல மேன்மைக் காகவும் தங்கள் இன்னுயிரையும் பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள்.சில வருடங்களுக்குமுன் ஒரு விமானம் கடத்தப் பட்டபொழுது அதில் இருந்த அத்தனை பயணிகளையும் காப்பாற்றிவிட்டுக் கடைசியில் கடத்தல்காரன் ஒருவனால் சுடப்பட்டு மரணமடைந்த விமான பணிப்பெண் தன் இளவயதிலேயே தன்னைத் தியாகம் செய்யவும் தயங்கவில்லை.அவர்களுடைய மரணம்”தெய்வமரணம்” என்று போற்றப்படுகிறது. மற்றவர்கள் தேடிவைத்த புகழோடு வாழ்வதை விட தானே தன் செயலால் புகழடைவதே சிறப்பாகும். மற்றவர்கள் தன்னை வணங்கும்படி எவன் செயல் புரிகிறானோ அவனே போற்றத்தக்கவன்.ஒரு உயர்ந்த நோக்கதிற்காக ஒரு பெண்ணின் மானம் காப்பதற்காகத் தன் இன்னுயிரையும் தியாகம் செய்கிறது ஒரு பறவை.அந்த மரணத்தை,அந்தத் தியாகத்தை”தெய்வ மரணம்” என்று போற்றுகிறான் கம்பனது ராமன்.

யானை பிழைத்தவேல்.
ஒரு காடு.இருவீரர்கள் வருகிறார்கள்.இருவரும் குறி பார்க்கிறார்கள்.ஒருவன் யானையைக் குறி வைக் கிறான்.இரண்டாமவன் முயலைக் குறிவைக்கிறான்.முயலைக் குறிவைத்தவன் அம்பெய்து முயலைக் கொன்றுவிடுகிறான். யானையைக் குறிவைத்தவனுடைய குறி சிறிது தவறி விடுகிறது.இவ்விருவரில் யார் சிறந்த வீரர்? வள்ளுவர் சொல்கிறார்
”கானமுயல் எய்த அம்பினில்
யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது”

ஏனென்றால் யானையைக் குறிவைத்தவன் நோக்கம் பெரிது,முயற்சி பெரிது.இராவணனோடு போரில் சீதையைக் காப்பாற்ற முடியவில்லை என்றலும் அந்தத் தள்ளாதவயதிலும் தான் ஒருவனாக நின்று சீதையைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு
“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் உடைய’

தசமுகனோடு சண்டையிட்ட வீரத்தையும்,கருணையையும் பாராட்டத் தான் வேண்டும்.ராமகாதையின் ஆறு காண்டங்களில் நாம் ஜடாயுவைக் காண்பது இரு படலங்களில் மட்டுமே என்றாலும் காப்பியத் தலைவியாம் சீதையைக் காப்பாற்றும் முயர்ச்சியில் தன் உயிரையும் தியாகம் செய்கிறான் ஜடாயு. ஜடாயுவின் தியாகத்தை சீதை,இராமன்,அனுமன்,சுக்ரீவன் முதலானோர் பாராட்டுகிறார்கள்.
அயோத்தி வேந்தனான இராமன் வனவாசத்தில் வேடுவனான குஹனையும் வானரனான சுக்ரீவனையும்,
அரக்கனான விபீஷணனையும் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான்.இந்தப் பண்பு எங்கிருந்து எப்படி வந்தது என்றால் அவன் தந்தை தசரதனிடமிருந்து என்பதைப் பார்க்கலாம்.தந்தை தசரதன் பறவையான ஜடாயுவை நண்பனாகக் கொண்டிருந்தான். சூரியனின் சாரதியான அருணனின் மகன் ஜடாயு.சம்பாதியின் இளைய சகோதரன்.ஒரு சமயம் சம்பாதியும் ஜடாயுவும் பறந்து கொண்டிருந்த நேரத்தில் சூரிய மண்டலத்தை நெருங்கி விட்டார்கள்.தம்பியைக் காக்கும் பொருட்டு ஜடாயுவுக்கும் மேலே பறந்து சென்று தம்பிக்கு நிழல் கொடுத்தான் சம்பாதி.ஆனால் அவன் இறகுகள் தீய்ந்து போய்க்கீழே விழுந்துவிடவே ஜடாயு கழுகரசனாக பறவைகள் சாம்ராஜ்யத்தின் மன்னனாக விளங்கி வருகிறான்.
ஜடாயு இராமன் சந்திப்பு.
வனவாசத்தில் இராமன்,சீதை, இலக்குவன் மூவரும் ஒரு குன்றின்மீது ஜடாயுவைப் பார்க்கிறார்கள்.சூரியனே ஒரு பறவை உருக்கொண்டு அமர்ந்திருக்கிறானோ என்று நினைக்கிறார்கள்.இல்லை ஒரு அரக்கன் தான் இவ்வாறு பேருருக்கொண்டிருக்கிறானோ என்றும் சந்தேகப் படுகிறார்கள்.அதேபோல ஜடாயுவும் இவர்களைப் பார்க்கிறான்.ஒரு பெண்ணோடு காட்டில் வரும் இவர்கள் யார் என்று எண்ணுகிறான்.இவர்களைப் பார்த்தால் தவசியர்கள் போல் இருக்கிறார்கள்.ஆனால் கையில் வில்லோடு காட்சியளிக்கிறார்களே என்றும் நினைக்கிறான்.பறவைகளுக்கே பார்வை நன்றாகத்தெரியும்.கழுகுக்கண் என்று சொல்கிறோம் அல்லவா?இராம இலக்குவர்கள் இன்னும் கொஞ்சம் நெருங்கி வருகிறார்கள்.இப்பொழுது அவர்கள் அழகு தெரிகிறது. மும்மூர்த்திகள் எவெரும் இவர்களுக்கு ஈடாக மாட்டார்கள்.மன்மதன் எரிந்து சாம்பலாவதற்குமுன் பார்த்திருக்கிறேன்.அழகில் அவனும் இவர்கள் கால் தூசிக்கும் நிகராக மாட்டார்கள்.

இவர்கள் மூன்று உலகங்களையும் ஜயித்து தன் வசப்படுத்தும் துறனுடையவர்கள். கருமலையும் செம்மலையும் ஒத்த இவர்கள் மஹாலக்ஷ்மி பொன்ற ஒரு பெண்ணுடன் வருகிறார்களே இவர்கள் யாராக இருக்களாம் என்று வியந்து பார்க்கிறான்.இதற்குள் இராம இலக்குவர்கள் இன்னும் கொஞ்சம் நெருங்கி வருகிறார்கள்.இவர்களுடைய முகச்சாயலையும் உருவ அமைப்பையும் பார்த்தால் என் நண்பன் தசரதனைப் போல் இருக்கிறதே என்று யோசனை செய்கிறான்.”என் மக்கள் போல்வீர் யாவிர் நீர்”?என்று கேட்கிறான். அரக்கனோ என்று சந்தேகித்த இராம இலக்குவர்கள் இதைக் கேட்டதும்”நாங்கள் தசரதனின் புதல்வர்கள்” என்றனர்.தசரதன் என்ற சொல்லைக் கேட்டதுமே ஆனந்தமாக இறங்கி வருகிறான் ஜடாயு.
ஜடாயுவின் துயரம்

”தந்தை நலமாக இருக்கிறாரா”? என்று கேட்ட ஜடாயுவுக்கு மன்னன் உம்பர் உலகு அடைந்தான் என்று கேட்டதும் அப்படியே மூர்ச்சித்து விடுகிறான். இருவருன் மூர்ச்சை தெளிவிக்க எழுந்த்ததும் புலம்பி அழுகிறான்
”புரவலர் தம் புரவலனே!பொய்ப்பகையே!மெய்க்கணியே!புகழின் வாழ்வே!
இரவ·லரும் நல்லறமும் யானும் இனி என்பட நீத்து ஏகினாயே”

என்று புலம்புகிறான்”தசரதா, அன்று சம்பராசுரப் போரில் இருவரும் சேர்ந்து போர்செய்து யிர்வற்றி பெற்றோம்.அப்பொழுது “ஜடாயு, நீ உயிர்,நான் உடல் என்று சொன்னாய்.உயிராகிய நான் இருக்க உடலாகிய உன்னை எப்படியப்பா அந்தக் கூற்றுவன் கொண்டு போனான்?அத்தனை தேவர்கள் முன் நீ சொன்னது எப்படிப் பொய்யானது?நீ சத்திய சந்தனல்லவா? நீ வார்த்தை தவறலாமா’?என்று கதறுகிறான்.
பின் ஒருவாறு மனம் தேறி ”ஓத்த உத்தம நண்பர்களில் ஒருவர் உயிர் துறந்தால் மற்றவரும் உயிர் துறப்பார்.செய்தி அறியாமலேயே கூட உயிர் விடுவார்கள்.செய்தி அறிந்ததும் தாமாகவே உயிர் துறப்பார்கள். இப்பொழுது நானும் எரி வளர்த்து என் உயிரை விடுவேன்.உங்கள் கையால் எனக்கும் ஈமக்கடன்களைச் செய்து விடுங்கள். ”என்கி றான்.இதைக்கேட்ட இராம இலக்குவர்கள் ”எங்கள் தந்தை தான் எங்களை விட்டுவிட்டுச் சென்று விட்டார்.நீங்களாவது எங்களுக்குத் தந்தை போலிருந்து வழி காட்டக் கூடாதா”? என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார்கள்.ஒருவாறு மனம் தெளிந்து”குழந்தைகளே நான் இருப்பது உங்களுக்கு உதவியாக இருக்குமென்றால் உங்களுக்காக உயிர் வாழ்கிறேன் என்று சம்மதிக்கிறான்.இதன் பின் அயோத்தியில் நடந்ததையெல்லாம் இலக்குவன் மூலம் அறிந்து கொள்கிறான்.இராம இலக்குவர் களைத் தன் புதல்வர்களாகவும் சீதையைத் தன் மருமகளாகவும் பாவித்து அவர்களைத் தாய்ப்பறவைதன் குஞ்சுகளைப் பாது காப்பது போல் தன் சிறகுகளின் நிழலில் பாதுகாத்து வருகிறான்.அன்புமயமான வாழ்க்கை ஆனந்தமாகப் போகிறது.
[தொடரும்]


vannaijaya@hotmail.com

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி